search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுவன் சர்வேசுக்கு பதக்கம் அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கிய முதலமைச்சர்
    X
    சிறுவன் சர்வேசுக்கு பதக்கம் அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கிய முதலமைச்சர்

    700 கி.மீ. தூரம் தொடர் ஓட்டமாக ஓடி சென்னை வந்த சிறுவன்- பாராட்டி பதக்கம் வழங்கிய முதலமைச்சர்

    கன்னியாகுமரியில் இருந்து 700 கி.மீ. தூரம் தொடர் ஓட்டமாக ஓடி சென்னை வந்த சிறுவன் சர்வேசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதக்கம் அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
    தாம்பரம்:

    தாம்பரத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் சர்வேஷ். தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    கடந்த ஆண்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட பெண்மணி ஒருவரின் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பார்த்தான்.

    தானும் அதேபோல் சாதிக்க வேண்டும் என்று தந்தை விசுவிடம் கூறினான். விசு இதுகுறித்து சர்வேஷ் படிக்கும் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தார். அதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதி அளித்தது.

    இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் இணைந்து உருவாக்கிய பசி, பட்டினியின்மை, நல்ல ஆரோக்கியம், தரமான கல்வி, நிலையான வளர்ச்சி உள்ளிட்ட 17 வகையான உலகளாவிய இலக்குகளை 2030-ம் ஆண்டுக்குள் அடைய வேண்டும் என்ற குறிக்கோளோடு சிறுவன் சர்வேஷ் தொடர் ஓட்டத்தை தொடங்கினான்.

    கடந்த 2-ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையில் இருந்து சென்னை வள்ளுவர் கோட்டம் வரை 700 கிலோ மீட்டர் தொடர் ஓட்ட பயணத்தை தொடங்கினான்.

    நாளொன்றுக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வரை தொடர் ஓட்டத்தில் ஈடுபட்டான்.

    இந்த நிலையில் நேற்று சிறுவன் சர்வேஷ் தாம்பரம் வந்தடைந்தான். தாம்பரத்தில் அவனுக்கு எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, ஸ்ரீ சாய்ராம் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து, தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    கல்லூரி மாணவர்கள் சாலை ஓரம் நீண்ட வரிசையில் நின்று மாணவனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் வள்ளுவர் குருகுலம் பள்ளி அருகே மாணவனுக்கு சமூக நீதி மாணவர் இயக்க பொருளாளர் அன்சாரி வரவேற்பு அளித்தார்.

    சிறுவன் சர்வேசுக்கு பதக்கம் அணிவித்த முதலமைச்சர்

    குரோம்பேட்டை பகுதிக்கு வந்த மாணவனை பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, ஜோசப் அண்ணாதுரை மற்றும் தி.மு.க.வினர் வரவேற்றனர்.

    தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொண்ட சர்வேஷ் இன்று வள்ளுவர் கோட்டம் வந்து அடைந்தான்.

    700 கிலோ மீட்டர் தூரத்தை 14 நாளில் ஓடி கடந்து வந்துள்ளான். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சிறுவன் சர்வேசுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறுவன் சர்வேசுக்கு பதக்கம் அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.


    Next Story
    ×