என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    மறைமலைநகர் அருகே பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் நூதன முறையில் 10½ பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
    வண்டலூர்:

    சென்னை பெருங்குடி ராஜீவ் நகர் 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கமலா (வயது 46). இவர் வீட்டில் இருந்த நகைகளை பையில் எடுத்துக்கொண்டு மதுராந்தகத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் மதுராந்தகத்தில் இருந்து பஸ் மூலம் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது புலிப்பாக்கம் டோல்கேடில் பஸ்சில் 6 வாலிபர்கள் ஏறி உள்ளனர். இந்த வாலிபர்கள் பஸ்சில் இருந்த கமலாவிடம் கீழே சில்லரை காசு விழுந்துவிட்டது அதனை எடுத்து தரும்படி கூறியுள்ளனர். கமலா கீழே கிடந்த சில்லரையை எடுத்து அந்த வாலிபர்களிடம் கொடுத்து உள்ளார். பின்னர் பஸ் காட்டாங்கொளத்தூர் அருகே வந்தபோது கமலா தனது கையில் வைத்திருந்த நகை பையை காணவில்லை என்று கூறியுள்ளார். அந்த பையில் 10½ பவுன் தங்க நகை, ரூ.15 ஆயிரம் ஆகியவை இருந்ததாக தெரிவித்தார்.

    இது குறித்து கமலா மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். இது சம்பந்தமாக மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 57). இவர் தனது வீட்டில் இருந்து ரூ.5 லட்சம் பணத்தை தனது மோட்டார் சைக்கிள் சீட்டுக்கு அடியில் வைத்துக்கொண்டு சிங்கப்பெருமாள்கோவிலில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக சென்றார். அப்போது வங்கியில் கூட்டமாக இருந்ததால் அருகில் உள்ள கூரியர் நிறுவனத்திற்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வண்டியில் இருந்த ரூ.5 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் 30 ஓட்டல் நிர்வாகிகளை அழைத்து போட்டி நடக்க இருக்கும் அரங்கில் வைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் நடக்க இருக்கும் சர்வதேச “செஸ் ஒலிம்பியாட்” போட்டியில் கலந்து கொள்வதற்கு 150 நாடுகளில் இருந்து 2 ஆயிரம் வீரர்கள் வருகிறார்கள்.

    “செஸ் ஒலிம்பியாட்” போட்டிக்காக பணிகளை கண்காணித்து அதை செயல்படுத்த தலைமை செயலாளர் தலைமையில் குழு ஒன்றை அரசு அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில் மாவட்ட கலெக்டர் மற்றும் சுற்றுலா, தொல்லியல், தமிழ் வளர்ச்சி, கலை-கலாச்சாரம், விளையாட்டு, வருவாய், நெடுஞ்சாலை, மின்சாரம், காவல் போன்ற முக்கியத்துறை அதிகாரிகள் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புராதன சின்னங்கள் பகுதியில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும், கடற்கரை சாலையை ஒழுங்கு படுத்தவும், சாலையோர பழைய மின் விளக்குகளை அகற்றி புதிய மின் விளக்குகள் அமைக்கவும், நகரவீதி சாலைகளை சீர் செய்யவும், சுவர்களில் தமிழ் பாரம்பரிய கலை, கலாச்சார நிகழ்வு சித்திரங்கள் வரையவும், திட்டமிட்டு அரசுக்கு அறிக்கை அனுப்ப தயாராகி வருகிறது.

    சர்வதேச சுற்றுலா தலமாக மாமல்லபுரம் இருப்பதால் வீரர்கள் நகரையும், அங்குள்ள புராதன சின்னங்களான அர்ச்சுனன்தபசு, வெண்ணை உருண்டை, கடற்கரை கோயில், புலிக்குகை போன்ற பகுதிகளையும் சுற்றி பார்க்க செல்வார்கள். இதனால் போட்டி நடக்கும் அரங்கத்தில் இருந்து மாமல்லபுரம் வரும் 2 கி.மீ தூரத்திற்கு நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும், வழிப்பாதைகளை சுத்தமாக வைத்து, சாலையோரத்தை பசுமையாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரம் வந்தபோது உலகளவில் மாமல்லபுரம் சிறப்பு கவனம் பெற்றது. தற்போது சர்வதேச “செஸ் ஒலிம்பியாட்” போட்டி மூலம் மீண்டும் சிறப்பு கவனம் பெற துவங்கி உள்ளது.

    இதற்கிடையே வீரர்கள் தங்குவதற்காக பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள நான்கு, ஐந்து நட்சத்திர ஓட்டல், ரிசார்ட்களில் 1,850 அறைகளும் பிற நட்சத்திர ஓட்டல்களில் 550 அறைகளும் தேவைப்படுகிறது.

    அரசு சார்பில் ஆன்- லைன் வழியாக பதிவு செய்ய முயற்சி செய்த போது, அன்றைய தேதியில் ஏற்கனவே முன் பதிவுகள் இருப்பதும், போதுமான அறைகள் இல்லை என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் 30 ஓட்டல் நிர்வாகிகளை அழைத்து போட்டி நடக்க இருக்கும் அரங்கில் வைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

    கூட்டத்தில் பங்கேற்ற ஓட்டல் நிர்வாகிகள் ஏற்கனவே அந்த தேதியில் முன்பதிவு செய்துள்ளதை திடீரென நாங்களே ரத்து செய்தால், சட்ட சிக்கல் வரும் என்பதை எடுத்துக்கூறினர். அதற்கு அரசு சார்பில் நாங்களும் ஒத்துழைப்பு தருகிறோம் என கலெக்டர் கூறினார்.

    மதுராந்தகம் அருகே சாலையோர மரத்தில் கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுராந்தகம்:

    திருவாரூர் மாவட்டம் விக்கிரபாண்டியனூரை சேர்ந்தவர் கலைமணி செல்வம் (வயது 22). இவர் வெளிநாட்டில் இருந்து வருகை தர உள்ள உறவினரை அழைத்து வருவதற்காக காரில் உறவினர்களுடன் சென்னை விமான நிலையத்துக்கு சென்றார். காரை டிரைவர் ராஜேஷ் ஓட்டிச்சென்றார்.

    கார் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மதுராந்தகம் அடுத்த சின்னகெள்ளம்பாக்கம் என்ற இடத்தில் செல்லும்போது நிலைதடுமாறி சாலையோர மரத்தில் மோதியது.

    இதில் கலைமணி செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் டிரைவர் உள்ளிட்ட உறவினர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி்க்கப்பட்டனர்.

    இதுகுறித்து படாளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியவாணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    திருப்போரூர் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ரவுண்டான பகுதியில் பாதாளச் சாக்கடை பணிகள் நடைபெற உள்ளதால், பழைய மாமல்லபுரம் சாலையில் குறிப்பிட்ட நாட்களில் இரவு நேரத்தில் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    திருப்போரூர்:

    திருப்போரூர் பேரூராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டப்பணி ரூ.42 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.

    திருப்போரூர் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ரவுண்டான பகுதியில் பாதாளச் சாக்கடை பணிகள் நடைபெற உள்ளதால், பழைய மாமல்லபுரம் சாலையில் குறிப்பிட்ட நாட்களில் இரவு நேரத்தில் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 24-ந்தேதி வரை சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி வரும் வாகனங்கள், இரவு 8 மணி முதல் காலை 7 மணிவரை இள்ளலூர் இணைப்பு சாலை பகுதியில் இருந்து கிரிவலப்பாதை வழியாகச் செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரம் செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல், மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் வாகனங்கள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை, நகர எல்லையில் உள்ள சான்றோர் சாலை வழியாகச் சென்று தெற்கு மாட வீதி வழியாக ஓ.எம்.ஆர். சாலையில் இணைந்து, சென்னைக்குச் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே திருப்போரூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிப்பது சம்பந்தமான கலந்தாய்வு கூட்டம் திருப்போரூர் பேரூராட்சியில் நடைபெற்றது.

    இதில் திருப்போரூர் எம்.எல்.ஏ.பாலாஜி , பேரூராட்சி தலைவர் தேவராஜ், துணைத்தலைவர் பரசுராமன், பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் ரகுபதி, குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் பாலு, நெடுஞ்சாலை துறை உதவி செயற்பொறியாளர் சந்திரசேகர், செங்கல்பட்டு மாவட்ட மாசு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பொறியாளர் வாசுதேவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இதில் ஓ.எம்.ஆர். சாலையில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் அனைத்தும் ஏப்ரல் 5-ஆம் தேதிக்குள் முடித்து நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைப்பது. ஓரிரு மாதங்களில் புதிய சாலை அமைப்பது. வருகிற செப்டம்பர் 30-ந் தேதிக்குள் பேரூராட்சியில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை முழுமையாக முடிப்பது, பணிகள் விடுபட்ட வார்டுகளில் திட்ட அறிக்கை தயார் செய்து புதிய டெண்டர் கோரப்பட்டு அடுத்த வருடம் செப்டம்பர் மாதத்துக்குள் முடிப்பது என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
    செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து, கைப்பந்து, கடற்கரை குழு விளையாட்டு போட்டிகள் மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே கடற்கரையில் நடந்தது.

    மாமல்லபுரம்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து, கைப்பந்து, கடற்கரை குழு விளையாட்டு போட்டிகள் மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே கடற்கரையில் நடந்தது. இதில் 250க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜகதீஸ்வரன் வீரர்களை அறிமுகம் செய்து விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த அணியினருக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ், கோச்சர்கள் ஆணந்த், தாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கொள்ளை முயற்சி நடந்த மதுக்கடை அருகே கொள்ளையர்கள் விட்டு சென்ற 2 மோட்டார் சைக்கிள்களை போலீசார் கைப்பற்றினர். அதன் பதிவு எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அடுத்த கருங்குழி அருகே உள்ள கீழவளத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. நேற்று இரவு விற்பனை முடிந்ததும் வழக்கம்போல் கடையை மூடிவிட்டு சென்றனர்.

    இந்தநிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் மதுராந்தகம் போலீஸ்காரர்கள் ராஜேஷ், சதீஷ் ஆகியோர் இரவு ரோந்து பணியில் இருந்தனர்.

    அவர்கள் மதுக்கடை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது 5 பேர் கும்பல் மதுக்கடை முன்பு கும்பலாக நின்று ‌ஷட்டர் பூட்டை உடைத்து கொண்டு இருந்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீஸ்காரர்கள் ராஜேஷ், சதீஷ் ஆகிய 2பேரும் விசாரித்தபடி மர்ம கும்பலை பிடிக்க முயன்றனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் திடீரென போலீஸ்காரர்கள் ராஜேஷ், சதீஷ் ஆகியோரை இரும்பு கம்பிகளால் தாக்கி கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் போலீஸ்காரர்கள் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து அவர்கள் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் கொள்ளைகும்பல் தாக்குதலில் காயம் அடைந்த 2 போலீசாரையும் மீட்டு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    கொள்ளை முயற்சி நடந்த மதுக்கடை அருகே கொள்ளையர்கள் விட்டு சென்ற 2 மோட்டார் சைக்கிள்களை போலீசார் கைப்பற்றினர். அதன் பதிவு எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுக்கடையில் நேற்று சுமார் ரூ.1½ லட்சம் வரை மது விற்பனை நடந்து உள்ளது. அந்த பணத்தை ஊழியர்கள் கொண்டு சென்றுவிட்டதாக தெரிகிறது. மதுக்கடையில் அதிக அளவு பணம் இருப்பதை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் வந்துள்ளனர். சரியான நேரத்தில் போலீசார் வந்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    போலீஸ்காரர்களை தாக்கி கொள்ளையர்கள் தப்பி சென்ற சம்பவம் மதுராந்தகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் கொள்ளையர் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ஏரியாவில் யார் செல்வாக்கு மிக்கவர் என்பது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் வாலிபரை கொலை செய்ய முயற்சி செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
    சென்னை:

    நன்மங்கலத்தை சேர்ந்தவர் விஷ்ணு ப்ரியன் (21). இவர் கோவிலம்பாக்கம், சத்யாநகர் 3-வது தெருவில் உள்ள பிளைவுட் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் விஷ்ணுவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    பலத்த காயம் அடைந்த விஷ்ணுபிரியன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த சோலை ராஜா, சந்தோஷ்குமார், சக்திவேல், ஆதம்பாக்கத்தை சேர்ந்த மணிமாறன் மற்றும் 8 வயதுக்குட்பட்ட சிறுவன் என மொத்தம் 5 பேரை கைது செய்தனர்.

    ஏரியாவில் யார் செல்வாக்கு மிக்கவர் என்பது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் விஷ்ணுவை கொலை செய்ய முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்தது.

    திருப்போரூர் அருகே தொழிலாளர்களை தாக்கி ரூ.20ஆயிரம் கொள்ளை மர்மகும்பல் துணிகரம்


    திருப்போரூர்-மாமல்லபுரம் சாலையில் உள்ள தண்டலம் பகுதியில் கடைகள் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் அங்கேயே தங்கி வேலை செய்து வருகின்றனர்.

    நேற்று இரவு வேலை முடிந்து அனைவரும் தூங்க சென்றனர். 11.30 மணி அளவில் 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் கும்பல் இரவு திடீரென அங்கு வந்தனர்.

    அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களை எழுப்பி இரும்பு கம்பியால் சரமாரியாக தாங்கினர். பின்னர் அவர்களை மிரட்டி ரூ.20 ஆயிரம், ஒரு செல்போனை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டனர்.

    கொள்ளையர்கள் தாக்கியதில் பிரேம் (வயது30) என்ற கொத்தனாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லில்லி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கல்பாக்கம் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் பகுதியை சேர்ந்த 17 வயது, 15 வயதுடைய 2 சிறுமிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை பதிவிட்டு வெளியிட்டனர். அதில் அவர்கள் அழுதபடி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து பேசினர்.

    அந்த வீடியோவில் சிறுமிகள் பேசும்போது, ‘ஊரை விட்டு தங்களை ஒதுக்கி வைத்திருப்பதாகவும், வீட்டுடன் சேர்த்து எரித்து கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகிறார்கள்.

    போலீசில் புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம்’ என்று கண்ணீருடன் தெரிவித்து இருந்தனர்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது பற்றி விசாரணை நடத்த செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவிட்டார்.

    விசாரணையில் வீடியோ வெளியிட்ட சிறுமிகள் தந்தையை இழந்து தாயுடன் வசித்து வருவதும், அதே பகுதியை சேர்ந்த சிலர் அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததும் தெரிந்தது. சாலையில் நடந்து சென்ற போது அவர்கள் கடுமையான தொல்லையை அனுபவித்து உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த போது சிலர் ஆபாசமான வார்த்தைகளை கூறி உள்ளனர்.

    மேலும் சிறுமி தனது தாயுடன் நடந்து சென்ற போது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து இருக்கிறார்கள்.

    இது தொடர்பாக சிறுமிகள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து இருப்பதும் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததும் தெரியவந்தது. இதன் பின்னரே தாங்க முடியாமல் தவித்த சிறுமிகள் வீடியோ வெளியிட்டு கதறி அழுது உள்ளனர்.

    இதையடுத்து நேற்று மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் சமூக நலத்துறை அதிகாரிகள், மாமல்லபுரம் மகளிர் போலீசார் சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களுக்கு பாலியல் ரீதியான தொல்லை நடந்து இருப்பது உறுதியானது. இதையடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதே பகுதியை சேர்ந்த தினேஷ், எல்லப்பன், கோபாலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    போக்சோ சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் தினேஷ் கிழக்கு கடற்கரை சாலையில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளார். மேலும் அரசியல் கட்சியிலும் உள்ளார். கைதான 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் கூறும்போது, ‘சிறுமிகளின் புகார் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்படும். அவர்களது வீடியோக்களை சமூக வலைதளங்களில் யாரும் பகிர வேண்டாம். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

    இதற்கிடையே சிறுமிகளின் சகோதரர் மீதும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமிகள் கொடுத்த புகாருக்கு எதிர்ப்பு தெரிவித்து பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது பற்றியும் போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பழைய பெருங்களத்தூரில் சாப்பாட்டுக்கு ‘பன்னீர் பட்டர் மசாலா’ வாங்கித்தராததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாம்பரம்:

    பழைய பெருங்களத்தூர் பாரதி நகரை சேர்ந்தவர் வசுந்தரா. ரெயில்வேயில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ஹெனாக்ரஸ் (வயது 18). தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு ஹெனாக்ரஸ் தனது தங்கையிடம் சாப்பாட்டுக்கு தனக்கு பிடித்தமான பன்னீர் பட்டர் மசாலா வாங்கி வரும் படி கூறினார். ஆனால் அவர் வாங்கி கொடுக்க மறுத்தார். இதனால் ஹெனாக்ரஸ் மனவேதனையில் இருந்தார்.

    இந்த நிலையில் மறுநாள் காலை வீட்டில் இருந்த அனைவரும் அருகில் உள்ள தேவாலயத்திற்கு சென்று விட்டனர். பின்னர் காலை 11.30 மணி அளவில் திரும்பி வந்தபோது ஹெனாக்ரஸ் இருந்த அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரம் ஆகியும் திறக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த தாய் வசுந்தரா அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஹெனாக்ரஸ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து பீர்க்கங்கரணை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவியின் தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் புக்கத்துறை, சாலவாக்கம், திம்மாவரம் பழப்பண்ணை, செங்கல்பட்டு வழியாக திருப்பி விடப்பட்டன.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை அடுத்த மாமண்டூர் பாலாற்றில் 2 பாலங்கள் உள்ளன. சென்னை - திருச்சி மார்க்கத்தில் உள்ள பாலம் 1954-ம் ஆண்டும், திருச்சி - சென்னை மார்க்கத்தில் 1994-ம் ஆண்டும் கட்டப்பட்டன.

    இந்த நிலையில் மேம்பாலங்களில் உள்ள இணைப்புகள் பழுதடைந்தன. இதனையடுத்து இதனை சரிசெய்யும் பணி தொடங்கியது.

    முதல்கட்டமாக கடந்த மாதம் 7-ந் தேதி சென்னை - திருச்சி மார்க்கத்தில் மேம்பாலத்தில் சீரமைப்பு பணி தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

    திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் புக்கத்துறை, சாலவாக்கம், திம்மாவரம் பழப்பண்ணை, செங்கல்பட்டு வழியாக திருப்பி விடப்பட்டன.

    இதனால் வாகனங்கள் சுமார் 15 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது. ஆனால் சென்னை நோக்கி சென்ற வாகனங்கள் அருகில் உள்ள மேம்பாலம் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து கடந்த 27-ந் தேதி மேம்பாலம் சீரமைப்பு பணி முடி வடைந்தது. பின்னர் அருகில் உள்ள திருச்சி - சென்னை மார்க்கத்தில் உள்ள மேம்பாலத்தில் சீரமைப்பு பணி தொடங்கியது.

    சென்னை நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம் போல் வந்தன. சென்னையில் இருந்து சென்ற வாகனங்கள் மட்டும் சீரமைக்கப்பட்ட மேம்பாலம் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் 2-வது மேம்பால சீரமைப்பு பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனை கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    அப்போது மேம்பால பணி விரைந்து முடிக்க போக்குவரத்துக்கு அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

    தற்போது 2-வது மேம்பாலத்தில் சீரமைப்பு பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. வருகிற 17-ந் தேதி யுடன் இந்த பணி முடியும் என்று தெரிகிறது.

    இதையடுத்து வருகிற 18-ந் தேதி முதல் 2 மேம் பாலங்களிலும் போக்கு வரத்துக்கு அனுமதிக்க அதி காரிகள் திடடமிட்டுள்ளனர். மேம்பாலத்தில் போக்கு வரத்து சீரான பின்னரே வாகனங்கள் பயண நேரம் குறையும்.

    ரூ.234 கோடியில் கட்டப்பட்டு வரும் பெருங்களத்தூர் ரெயில்வே மேம்பால பணிகளை அக்டோபர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.

    சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் பஸ் நிலையம், ரெயில் நிலையம் அருகே ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த பகுதியில் ரூ.234.37 கோடி மதிப்பில் ரெயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் அளித்தது.

    அதன்படி, தற்போது இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. செங்கல்பட்டு-சென்னை பாலப்பகுதி, சீனிவாசநகர் பாலப்பகுதி, சென்னை-செங்கல்பட்டு பாலப்பகுதி, கிழக்கு புறவழிச்சாலை பாலப்பகுதி என 4 வகையாக பிரிக்கப்பட்டு இந்த பாலப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    தாங்கு தூண்கள், ஓடுதளம், அணுகுசாலை தாங்கு சுவர்கள் என பல்வேறு பணிகள் 50 சதவீதத்துக்கும் மேல் முடிவடைந்து விட்டன.

    இந்த நிலையில் இந்த பாலப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

    பொதுமக்களின் நலன்கருதியும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் பாலப்பணிகளை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளவாறு 23.10.2022-க்குள் முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது, நெடுஞ்சாலைகள் துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் கோதண்டராமன், தலைமை பொறியாளர் சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் சேகர், கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
    ×