search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் ரிசார்ட்
    X
    மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் ரிசார்ட்

    செஸ் ஒலிம்பியாட் போட்டியால் மாமல்லபுரம் புதுப்பொலிவு பெறுகிறது- சாலையோரத்தை பசுமையாக்க திட்டம்

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் 30 ஓட்டல் நிர்வாகிகளை அழைத்து போட்டி நடக்க இருக்கும் அரங்கில் வைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் நடக்க இருக்கும் சர்வதேச “செஸ் ஒலிம்பியாட்” போட்டியில் கலந்து கொள்வதற்கு 150 நாடுகளில் இருந்து 2 ஆயிரம் வீரர்கள் வருகிறார்கள்.

    “செஸ் ஒலிம்பியாட்” போட்டிக்காக பணிகளை கண்காணித்து அதை செயல்படுத்த தலைமை செயலாளர் தலைமையில் குழு ஒன்றை அரசு அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில் மாவட்ட கலெக்டர் மற்றும் சுற்றுலா, தொல்லியல், தமிழ் வளர்ச்சி, கலை-கலாச்சாரம், விளையாட்டு, வருவாய், நெடுஞ்சாலை, மின்சாரம், காவல் போன்ற முக்கியத்துறை அதிகாரிகள் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புராதன சின்னங்கள் பகுதியில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும், கடற்கரை சாலையை ஒழுங்கு படுத்தவும், சாலையோர பழைய மின் விளக்குகளை அகற்றி புதிய மின் விளக்குகள் அமைக்கவும், நகரவீதி சாலைகளை சீர் செய்யவும், சுவர்களில் தமிழ் பாரம்பரிய கலை, கலாச்சார நிகழ்வு சித்திரங்கள் வரையவும், திட்டமிட்டு அரசுக்கு அறிக்கை அனுப்ப தயாராகி வருகிறது.

    சர்வதேச சுற்றுலா தலமாக மாமல்லபுரம் இருப்பதால் வீரர்கள் நகரையும், அங்குள்ள புராதன சின்னங்களான அர்ச்சுனன்தபசு, வெண்ணை உருண்டை, கடற்கரை கோயில், புலிக்குகை போன்ற பகுதிகளையும் சுற்றி பார்க்க செல்வார்கள். இதனால் போட்டி நடக்கும் அரங்கத்தில் இருந்து மாமல்லபுரம் வரும் 2 கி.மீ தூரத்திற்கு நவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும், வழிப்பாதைகளை சுத்தமாக வைத்து, சாலையோரத்தை பசுமையாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரம் வந்தபோது உலகளவில் மாமல்லபுரம் சிறப்பு கவனம் பெற்றது. தற்போது சர்வதேச “செஸ் ஒலிம்பியாட்” போட்டி மூலம் மீண்டும் சிறப்பு கவனம் பெற துவங்கி உள்ளது.

    இதற்கிடையே வீரர்கள் தங்குவதற்காக பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள நான்கு, ஐந்து நட்சத்திர ஓட்டல், ரிசார்ட்களில் 1,850 அறைகளும் பிற நட்சத்திர ஓட்டல்களில் 550 அறைகளும் தேவைப்படுகிறது.

    அரசு சார்பில் ஆன்- லைன் வழியாக பதிவு செய்ய முயற்சி செய்த போது, அன்றைய தேதியில் ஏற்கனவே முன் பதிவுகள் இருப்பதும், போதுமான அறைகள் இல்லை என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் 30 ஓட்டல் நிர்வாகிகளை அழைத்து போட்டி நடக்க இருக்கும் அரங்கில் வைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

    கூட்டத்தில் பங்கேற்ற ஓட்டல் நிர்வாகிகள் ஏற்கனவே அந்த தேதியில் முன்பதிவு செய்துள்ளதை திடீரென நாங்களே ரத்து செய்தால், சட்ட சிக்கல் வரும் என்பதை எடுத்துக்கூறினர். அதற்கு அரசு சார்பில் நாங்களும் ஒத்துழைப்பு தருகிறோம் என கலெக்டர் கூறினார்.

    Next Story
    ×