என் மலர்
செங்கல்பட்டு
- மீனவர்கள் சமுதாய கூடங்களில் அமர்ந்து வலைகளை பழுது பார்த்து, புதிய வலைகளை மீன்பிடிக்க தயார் செய்து வருகின்றனர்.
- மேல்மருவத்தூர் கோயிலுக்கு செல்லும் வெளிமாநில செவ்வாடை பக்தர்கள் மழையால் சிரமப்பட்டனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்தது. இதனால் கடலோர பகுதிகளான வெண்புருஷம், கொக்கிலமேடு, தேவநேரி, சூலேரிக்காடு பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் அப்பகுதி சமுதாய கூடங்களில் அமர்ந்து வலைகளை பழுது பார்த்து, புதிய வலைகளை மீன்பிடிக்க தயார் செய்து வருகின்றனர்.
மேல்மருவத்தூர் கோயிலுக்கு செல்லும் வெளிமாநில செவ்வாடை பக்தர்கள் மாமல்லபுரம் வந்து கடலில் குளித்து விட்டு கோயிலுக்கு செல்லும் வழக்கம் உள்ளது. இன்று அதிகாலை மாமல்லபுரம் வந்த அவர்களும் சாரல் மழையால் திறந்த வெளியில் சமைத்து சாப்பிட சிரமப்பட்டனர்.
- பல்வேறு வளர்ச்சி பணிகளை மேலாண்மை இயக்குனர் கந்தசாமி தொழில் செய்யும் இடத்திற்கே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் பயனாளிகளின் இடத்திற்கு சென்று பார்வையிட்டு கடன் உதவி குறித்து அவர் கேட்டறிந்தார்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேலாண்மை இயக்குனர் கந்தசாமி தொழில் செய்யும் இடத்திற்கே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், சிங்கபெருமாள் கோவில் பகுதியில் பயனாளிகளின் இடத்திற்கு சென்று பார்வையிட்டு கடன் உதவி குறித்து அவர் கேட்டறிந்தார். அப்போது தாட்கோ மாவட்ட மேலாளர் உடன் இருந்தார்.
- நீச்சல் தெரியாததால் ஆழமான பகுதிக்கு சென்ற ஸ்ரீநாத் தண்ணீரில் மூழ்கினார். அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
- அணைக்கட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியாக மதுராந்தகம் ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் கிளியாற்றின் வழியாக பாய்ந்து கடலில் கலக்கும்.
தொடர் மழை காரணமாக கிளியாற்றில் தற்போது அதிக அளவில் தண்ணீர் செல்கிறது. இந்த நிலையில் செய்யூர் அருகே சாமந்திபுரம் பகுதியில் உள்ள கிளியாற்றில் சென்னை ஓட்டேரியை சேர்ந்த ராஜாராமன் என்பவரது மகன் ஸ்ரீநாத் (வயது 20) குளித்தார்.
நீச்சல் தெரியாததால் ஆழமான பகுதிக்கு சென்ற ஸ்ரீநாத் தண்ணீரில் மூழ்கினார். அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
இதுகுறித்து அணைக்கட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்துக்கு பின்னர் ஸ்ரீநாத்தை பிணமாக மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. பலியான ஸ்ரீநாத் புதூர் கிராமத்தில் உள்ள பாட்டியின் வீட்டிற்கு சென்று இருந்தார் அங்குள்ள நண்பர்களுடன் கிளியாற்றில் குளித்தபோது ஸ்ரீநாத் தண்ணிரில் மூழ்கி பலியாகி உள்ளார்.
இது குறித்து அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வெண்ணெய் உருண்டை பாறை வளாகத்தில் உள்ள வழுக்கு பாறை பகுதியில் சிறுவர்கள் பலர் சறுக்கி விளையாடினர்.
- பள்ளிகள் திறக்கும் வரை உள்நாட்டு பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கக் கூடும்.
மாமல்லபுரம்:
சென்னையை அடுத்த மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. ஆயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர்.
பள்ளி மாணவர்களுக்கு நேற்று முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது. எனவே விடுமுறை தினத்தையொட்டி பொழுதை கழிப்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து தங்கள் பெற்றோர்களுடன் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் மாமல்லபுரம் வந்ததால் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை போன்ற புராதன பகுதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்பட்டது.
புராதன சின்னங்கள் முன்பு பலர் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். வெண்ணெய் உருண்டை பாறை வளாகத்தில் உள்ள வழுக்கு பாறை பகுதியில் சிறுவர்கள் பலர் சறுக்கி விளையாடினர்.
குடும்பம், குடும்பமாக வந்த பல பயணிகள் கட்டுச்சோற்றை கட்டி வந்து புராதன சின்னங்களில் உள்ள புல்வெளிகளில் அமர்ந்து உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
மேலும் பயணிகள் வருகை அதிகரிப்பால் நேற்று கிழக்கு ராஜ வீதி, கோவளம் சாலை, கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை போன்ற சாலைகளில் சுற்றுலா வாகனங்களால் மாமல்லபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் அந்த சாலையில் பயணித்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக ஊர்ந்து சென்றன.
இதனால் சாலையில் சென்ற வாகனங்களை நெரிசலில் சிக்கிவிடாமல் இருக்க மாமல்லபுரம் போலீசார் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
இதற்கிடையில் சுற்றுலா வந்த பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய பஸ்கள் இயக்கப்படாததால் மாமல்லபுரம் பஸ் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் தங்கள் ஊர்களுக்கு திரும்ப மணிக்கணக்கில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.
பள்ளிகள் திறக்கும் வரை உள்நாட்டு பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கக் கூடும். அரையாண்டு விடுமுறை தினம் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக மாமல்லபுரத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் மாமல்லபுரத்தில் அதிகளவில் இருந்தது.
- சென்னை சரஸ்வதி பரத நாட்டிய வித்யாலயா, ஸ்ரீகலாரங்கா குழுவினரின் பரதநாட்டியம் நடைபெற்றது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் 2022ம் ஆண்டிற்கான, இந்திய நாட்டிய விழாவை நேற்று அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தனர். சுற்றுலாத்துறை முதன்மை செயலர் சந்திரமோகன், இயக்குனர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இன்று விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் மாமல்லபுரத்தில் அதிகளவில் இருந்தது. நாட்டிய விழாவின் இரண்டாம் நாளான இன்று திண்டிவனம் கலைசுடர்மணி பரமசிவத்தின் கழைக்கூத்து, சென்னை சரஸ்வதி பரத நாட்டிய வித்யாலயா, ஸ்ரீகலாரங்கா குழுவினரின் பரதநாட்டியம் நடைபெற்றது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் அனைவரையும் வரவேற்றார்.
- நகர இளைஞர் அணி அமைப்பாளர் எம்.வி.மோகன்குமார் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது
- காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக பொருளாளர், நகர கழக செயலாளர் வெ.விசுவநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் நகர தி.மு.க இளைஞர் அணி சார்பில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நகர இளைஞர் அணி அமைப்பாளர் எம்.வி.மோகன்குமார் தலைமையில், மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்றது.
இதில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு 250 இளைஞர்களுக்கு உயிர் காக்கும் தலைகவசம் (ஹெல்மெட்), பெண்களுக்கு தையல் மிஷின், கிறிஸ்தவர்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக பொருளாளர், நகர கழக செயலாளர் வெ.விசுவநாதன், காஞ்சிபுரம் எம்.பி க.செல்வம், பையணூர் சேகர், ரமேஷ், பூபதி, கார்த்திக், பிரபு, சிகாமணி, உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணிகளை மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் கண்காணித்தார்.
- இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் பரிந்துரை செய்தார்.
- இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேற்று உத்தரவிட்டார்.
திருக்கழுக்குன்றம்:
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மற்றும் சதுரங்கபட்டினம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நெய்குப்பி பகுதியை சேர்ந்த இளங்கோவன் என்கிற சதீஷ் (வயது 29) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் (28) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் பரிந்துரை செய்தார். அதன் பேரில் அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேற்று உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்க்கான ஆவணத்தை சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கினர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலேரிபாக்கம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. 6 வீடுகள் கட்டியும், விவசாயம் செய்தும் ஆக்கிரமித்து வந்ததை தொடர்ந்து இந்த இடத்தில் இருந்து வெளியேற பல முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று 30-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறையினர் 2 பொக்லைன் எந்திரம் உதவியுடன் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் வீடுகளை இடித்து தள்ளி விவசாய நிலங்களை மீட்டனர்.
60 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.90 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பகுதியில் காவல்துறை பயிற்சி பள்ளி கட்டிடம் கட்ட இருப்பதால் ஆக்கிரமிப்பில் இருந்த இடம் மீட்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- கோவிலுக்கு தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள்.
- திருச்சி- சென்னை, சென்னை- திருச்சி சாலையின் இருபுறமும் வாகனங்கள் ஸ்தம்பித்தது.
மதுராந்தகம்:
மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்திகோவில் பிரசித்தி பெற்றது. தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள்.
இந்த கோவிலில் இருமுடி செலுத்தும்விழா ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத இறுதியில் தொடங்கி பிப்ரவரி மாதம் முதல் வாரம் வரை நடைபெறும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு இருமுடி செலுத்த வருவது வழக்கம்.
இந்த ஆண்டு இருமுடி செலுத்தும்விழா இன்று (23-ந்தேதி) தொடங்கியது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பக்தர்களின் வருகை குறைவாக இருந்தது. தற்போது கட்டுப்பாடுகளில் தளர்வுகள் உள்ளதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு இடங்களில் இருந்து விரதம் இருந்து இருமுடி செலுத்த பஸ், வேன், கார்களில் இன்று அதிகாலை முதலே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் குவிந்தனர்.
இதனால் மேல்மருவத்தூர் பகுதியே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் வந்த வாகனங்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரங்களிலும் மற்றும் பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களிலும் நிறுத்தப்பட்டு இருந்தது.
இதனால் இன்று அதிகாலை 5 மணி முதல் மேல்மருவத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை 9 மணிவரை சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேல்மருவத்தூர் முதல் 4 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் நீண்ட வரிசையாக நின்றன. திருச்சி- சென்னை, சென்னை- திருச்சி சாலையின் இருபுறமும் வாகனங்கள் ஸ்தம்பித்தது. காலை 9 மணிக்கு பின்னரே வாகனங்கள் மெல்ல மெல்ல சீரானது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, 'மேல்மருவத்தூர் கோவிலுக்கு பக்தர்களின் வருகையையொட்டி போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
40 நாட்களுக்கு மேலாக நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் இனிவரும் நாட்களில் கூடுதலான போலீசாரை நியமித்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- மோட்டார்சைக்கிளில் வந்த 3 சிறுவர்கள் திடீரென கருத்தபாண்டியை கத்தியை காட்டி மிரட்டி அவரது செல்போனை பறித்து சென்றனர்.
- நாட்டு வெடிகுண்டுடன் சிக்கிய மாணவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிற்பக்கல்லூரி மாணவர் கருத்தபாண்டி. இவர் அதேபகுதியில் சாலையோரம் நின்று செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த 3 சிறுவர்கள் திடீரென கருத்தபாண்டியை கத்தியை காட்டி மிரட்டி அவரது செல்போனை பறித்து சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பூஞ்சேரி கூட்டு ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக வந்த 3 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் சிற்பகல்லூரி மாணவர் கருத்த பாண்டியிடம் செல்போனை பறித்து தப்பி வந்தது தெரிய வந்தது. மேலும் அவர்கள் திருவான்மியூர் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் என தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தபோது கத்தி, நாட்டு வெடிகுண்டு இருந்தன. அவர்களுக்கு நாட்டு வெடிகுண்டு கிடைத்தது எப்படி? அவர்களின் பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாட்டு வெடிகுண்டுடன் சிக்கிய மாணவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார்சைக்கிள், கத்தி, நாட்டு வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த 17-18ம் தேதிகளில் ஜெய்பூரில் தேசிய அளவில் மிஸ் இந்தியா அழகி போட்டி நடைபெற்றது.
- பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 75 பேர் பங்கேற்றனர். இதில் கட்டிட தொழிலாளியின் மகளான ரக்சயா 2ம் இடத்தை பிடித்தார்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் நால்வர் கோயில் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மனோகர். கட்டிட தொழிலாளியான இவரது மகள் ரக்சயா (வயது.20) கல்லூரி படிப்பை முடித்துள்ளார். தன்னுடைய சிறு வயது முதல், தான் அழகிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்தோடு, குடும்ப வறுமையையும் பொருட்படுத்தாமல் தனது சொந்த முயற்சியில் பகுதி நேர வேலை செய்து தன்னை தயார்படுத்திக்கொண்டார்.
கடந்த 2018-ம் ஆண்டு நடந்த மோனோ ஆக்டிங் நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்று அரசு சார்பில் மலேசியா அழைத்து சென்று கெளரவித்தனர். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி ஜெய்பூரில நடந்த மாநில அளவிலான அழகி போட்டியில் மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றார்.
தொடர்ந்து ஜெய்பூரில் கடந்த 17-18ம் தேதிகளில் ஜெய்பூரில் தேசிய அளவில் மிஸ் இந்தியா அழகி போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 75 பேர் பங்கேற்றனர். இதில் கட்டிட தொழிலாளியின் மகளான ரக்சயா 2ம் இடத்தை பிடித்தார். திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
- தபால் நிலையத்தில் பணியாற்றியபோது பொதுமக்களுக்கு வரும் ஓய்வு ஊதியம் பணத்தை தானே எடுத்துக் கொண்டு மோசடி செய்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
- தபால் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் ரூ.1 கோடி வரை மோசடி செய்துள்ளார்.
தாம்பரம்:
சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 61). இவர், தாம்பரம் தபால் நிலையத்தில் பணியாற்றியபோது பொதுமக்களுக்கு வரும் ஓய்வு ஊதியம் (பென்ஷன்) பணத்தை தானே எடுத்துக் கொண்டு மோசடி செய்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர் தபால் துறையில் பணியாற்றுவது போல், தபால் துறை பனியனுடன் சுற்றி வந்த அவர், வேலை தேடி வருபவர்களை குறிவைத்து அவர்களுக்கு தபால் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் ரூ.1 கோடி வரை மோசடி செய்து விட்டார்.
இதில் ரூ.4 லட்சம் கொடுத்து ஏமாந்த வெங்கடேசன், ரூ.15 லட்சம் கொடுத்து ஏமாந்த பொன்னம்பலம், ரூ.6.30 லட்சம் கொடுத்து ஏமாந்த தனுஷ், ரூ.3.50 லட்சம் கொடுக்க ஏமாந்த மூர்த்தி உள்பட சிலர் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று தாம்பரத்தில் ரவியை கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
இந்த தகவலறிந்து அவரால் ஏமாற்றப்பட்ட சுமார் 15-க்கும் மேற்பட்டோர் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் திரண்டனர்.
தங்களிடம் வாங்கிய பணத்தை திருப்பி கேட்டபோது, மோசடி செய்த பணத்தை அனைத்தையும் சூதாட்டத்தில் இழந்து விட்டதாகவும், தன்னிடம் தற்போது எந்த பணமும் இல்லை எனவும் ரவி கூறினார். பின்னர் கைதான ரவியை போலீசார் சிறையில் அடைத்தனர்.






