என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • செங்கல்பட்டு டவுன் போலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • கத்தியுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு ராட்டிணங்கிணறு பகுதியில் செங்கல்பட்டு டவுன் போலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பலை தடுத்து நிறுத்தி அவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் கத்தி, அரிவாள் இருப்பதை கண்டறிந்த போலீசார் அவர்களை போலீஸ்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் செங்கல்பட்டு காமராஜர் நகர் 3-வது தெருவை சேர்ந்த ஜனா என்ற ஆகாஷ் (20), சென்னை குடிசை பூதூர் கே.கே. நகர் பகுதியை சேர்ந்த மோனிஷ் (19), பெரம்பலூர் மாவட்டம் ஆதனூர் மேட்டுத்தெருவை சேர்ந்த சரத்குமார் (24), சென்னை கிண்டி அம்பாள் நகரை சேர்ந்த கிருஷ்ணகுமார் (20), செங்கல்பட்டு வேதாசலநகர் காண்டீபன் தெருவை சேர்ந்த பொற்காலன் (20) என்பது தெரியவந்தது.

    மேலும் அவர்கள் சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு கையில் கத்திகளுடன் சென்ற போது பிடிபட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

    • செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் அனைத்து சாலைகளிலும் மாடுகள் சுற்றித்திரிவது தொடர் கதையாக உள்ளது.
    • கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில் நடுவில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன.

    கூடுவாஞ்சேரி:

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பலமுறை எச்சரிக்கை விடுத்தும் இதனை சிறிதளவும் கண்டுகொள்ளாமல் மாடுகளை வளர்க்கும் உரிமையாளர்கள் நடந்து கொள்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் அனைத்து சாலைகளிலும் மாடுகள் சுற்றித்திரிவது தொடர் கதையாக உள்ளது.

    உள்ளாட்சி நிர்வாகங்கள் ஏதோ கலெக்டர் உத்தரவு போட்ட காரணத்தால் ஒரு சில இடங்களில் மட்டும் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை உள்ளாட்சி அமைப்புகள் பிடித்து அபராதம் விதித்து வருகிறது. ஆனால் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகள் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிப்பதும் கிடையாது. இதனால் தொடர்ந்து மாடுகளை வளர்க்கும் உரிமையாளர்கள் அலட்சிய போக்கு காட்டி வருவதாலும் உள்ளாட்சி அமைப்புகள் அதனை கண்டும் காணாமல் இருப்பதால் மாடுகளை வளர்க்கும் நபர்கள் தங்களது மாடுகளை வீட்டில் கட்டி வைத்து வளர்ப்பது இல்லை என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில் நடுவில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. அங்கேயே படுத்து கொள்கிறது. அதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் உத்தரவுகளை உள்ளாட்சி அமைப்புகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வண்டலூர் ஊராட்சிக்குட்பட்ட ஜெய் நகர் பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஊராட்சிக்குட்பட்ட ஜெய் நகர் பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு மதுவிலக்கு போலீசார் விரைந்து சென்று பார்த்த போது அங்கு திருட்டுத்தனமாக அதிக விலைக்கு மது விற்று கொண்டிருந்த சிவகங்கை பகுதியை சேர்ந்த வெங்கடேஸ்வரன் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து கூடுவாஞ்சேரி மதுவிலக்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளால் 2 ஆண்டுகளுக்கு பிறகு பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பழைய நிலைக்கு திரும்பி உள்ளது.
    • பூங்காவில் புதிதாக திறக்கப்பட்டு உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் வெகுவாக கவர்ந்துள்ளதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

    வண்டலூர்:

    வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. வெள்ளைப் புலிகள், வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு, காண்டா மிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

    கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளால் 2 ஆண்டுகளுக்கு பிறகு பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. தினமும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கம். தற்போது பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால் வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்து உள்ளது.

    தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாட்களாக பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 17ஆயிரத்தை தொட்டு உள்ளது. இதற்கு முன்பு கொரோனா பரவலுக்கு முந்தைய காலகட்டத்தில் விடுமுறை நாட்களில் இதேபோல் பார்வையாளர்கள் வந்து சென்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின்பு 17 ஆயிரம் பார்வையாளர்கள் வந்து சென்றுள்ளதாக வண்டலூர் பூங்கா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    பூங்காவில் புதிதாக திறக்கப்பட்டு உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் வெகுவாக கவர்ந்துள்ளதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர். பார்வையாளர்கள் வருகை திடீரென அதிகரித்ததால் வண்டலூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால் ஏராளமான கார்கள் சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • மாமல்லபுரம் அருகே உள்ள வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் முதலைப் பண்ணை உள்ளது.
    • குஜராத்தில் உள்ள தனியார் உயிரியல் பூங்காவுக்கு 1000 முதலைகளை இடமாற்றம் செய்ய மத்திய உயிரியல் பூங்கா அனுமதி அளித்தது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அருகே உள்ள வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் முதலைப் பண்ணை உள்ளது. இங்கு சுமார் 1200-க்கும் மேற்பட்ட முதலைகள் பராமரிக்கப்பட்டு வந்தன.

    கொரோனா கால கட்டத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக இங்குள்ள முதலைகளை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து நிர்வாகத்தினர் பண்ணையில் உள்ள முதலைகளை வேறு இடத்துக்கு மாற்ற திட்டமிட்டனர்.

    இதைத் தொடர்ந்து குஜராத்தில் உள்ள தனியார் உயிரியல் பூங்காவுக்கு 1000 முதலைகளை இடமாற்றம் செய்ய மத்திய உயிரியல் பூங்கா அனுமதி அளித்தது. இதையடுத்து இதுவரை சுமார் 400 முதலைகள் குஜராத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

    மீதமுள்ள முதலைகள் தொடர்ந்து நெம்மேலியில் உள்ள பண்ணையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    தினமும் ஏராளமான பார்வையாளர்கள் வந்து முதலைகளை பார்த்து செல்கின்றனர். இரவிலும் முதலைளை பார்க்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் பண்ணையில் குழந்தைகளை மிகவும் கவர்ந்த ராக்ஸ்டார் மற்றும் சூப்பர் ஸ்டாராக இருந்த 'ஆலி' என்று செல்லமாக அழைக்கப்பட்ட முதலை திடீரென இறந்தது. இது அதனை பராமரித்தவர்கள் மற்றும் பண்ணைக்கு வரும் பார்வையாளர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    இறந்து போன முதலை கடந்த 2003-ம் ஆண்டு பிறந்து உள்ளது. இதற்கு 'ஆலி' என்று செல்லமாக பெயரிட்டு பராமரிப்பாளர்கள் அழைத்து வந்தனர்.

    இந்த முதலை சுமார் 30 கட்டளைகளை பின்பற்றி அதன்படி நடந்து உள்ளது. தண்ணீரில் அது இருக்கும் போது வெளியே வர அழைத்தால் உடனடியாக வந்து விடும். செல்ல நாய்க்குட்டி போல் ஆலி முதலை இருந்ததாக அதனை பராமரித்தவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    ஆலி முதலை பெண் இனம் ஆகும். கடந்த 2003-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து வந்த முதலைகளுக்கு பிறந்தது. குழந்தை பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. அதன் பெயரை சொல்லி, வெளியே வா, உட்காரு, திரும்பி வா என்பது உள்ளிட்ட 30 கட்டளைகளுக்கு ஏற்ப நடந்தது. அமெரிக்க முதலை 50 ஆண்டுகள் வரை வாழக்கூடியது.

    முதலைகளும் மனிதர்களை போன்றதுதான். ஒவ்வொன்றுக்கும் ஒரு திறமை உண்டு. இங்குள்ள 6 முதலைகள் கட்டளைக்கு ஏற்ப நடந்தாலும் 'ஆலி'யின் திறமை போல் வராது. அதைப் போல வேறு இருக்க முடியாது. ஆலியின் இறப்பு எங்களுக்கு மிகவும் கடினமானது. பண்ணையில் உள்ள அனைத்து முதலைகளுக்கு இதே போல் கட்டளைக்கு கீழ்படிய பயிற்சி அளிக்க திட்டமிட்டு உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆலி முதலைக்கு கடந்த 2008 முதல் 2010-ம்ஆண்டு வரை பயிற்சி அளித்த சோகம் முகர்ஜி என்பவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டு உள்ளார். அதில், "ஆலியின் மரணத்தை அறிந்து மனம் உடைந்தேன். அதனை மிகவும் இழக்கிறேன். முதலைகளின் நடத்தை பற்றி அறிய முக்கிய பங்கு ஆற்றியது. அதனுடன் உணர்வுப் பூர்வமான தொடர்பு இருந்தது. அதனுடன் நேரத்தை செலவழித்ததால் நான் மன அழுத்தத்தை சமாளித்தேன்" என்று குறிப்பிட்டு உள்ளார்.

    • புத்தக திருவிழாவில் மொத்தம் 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
    • முதல் நாளிலேயே ஏராளமான மாணவ-மாணவிகள் வந்து தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதி மன்றம் இணைந்து நடத்தும் புத்தக திருவிழா செங்கல்பட்டு சி.எஸ்.ஐ. அலிசன் காசி மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது.

    இந்த கண்காட்சியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தொலைக்காட்சி மற்றும் செல்போன் காரணமாக புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. இதனால் நூலகத்தில் படிக்க வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. ஒரு காலத்தில் நூலகத்தில் இடம் இல்லாமல் நூலகத்துக்கு வெளியே அமர்ந்தபடியும் பலர் புத்தகம் வாசித்தனர். இப்போது அந்த பழக்கம் குறைந்து விட்டது.

    புத்தகம் வாசிப்பவர்களுக்கு மன அழுத்தம் வராது. தீய பழக்கத்தை நாடி மனம் செல்லாது. நினைவாற்றலையும் வளர்த்துக் கொள்ள முடியும். நல்ல ஒழுக்கம், நல்ல சிந்தனை, நல்ல நடத்தை வளரும். புத்தகம் படிப்பது மட்டுமே மனிதனை வாழ வைக்கும்.

    அறிவு உலகத்தை புத்தகம் வழியாகத்தான் காண முடியும். தொடர்ந்து புத்தகம் வாசிக்கும்போது நினைவாற்றல் பெருகும் என்பதால் மாணவர்கள் புத்தகம் வாசிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த புத்தக திருவிழாவில் மொத்தம் 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் நாளிலேயே இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் வந்து தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

    இந்த புத்தக திருவிழா வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தக கண்காட்சி திறந்திருக்கும். தினமும் மாலையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

    சிந்தனையை தூண்டும் சிறப்பு பேச்சாளர்கள் காளீஸ்வரன், ஞானசம்பந்தம், பர்வீன் சுல்தானா, நெல்லை ஜெயந்த், இமயம், சண்முக வடிவேல், பாரதி கிருஷ்ணகுமார், பாரதி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

    புத்தக கண்காட்சி தொடக்க விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். இதில் செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாலாஜி, வரலட்சுமி, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வடகடம்பாடி மேடகுப்பம் பகுதியில் உள்ள கிணற்றில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்
    • போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி மேடகுப்பம் பகுதியில் உள்ள கிணற்றில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவருக்கு சுமார் 65 வயது இருக்கும். அவர் எதற்காக இங்கு வந்தார்? எப்படி கிணற்றில் விழுந்தார்? கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வரி பாக்கி உள்ள நிறுவனங்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டது.
    • வரிபாக்கி உள்ள தனியார் நிறுவனத்தின் கட்டிடங்களை நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக ஜப்தி செய்தனர்.

    வண்டலூர்:

    மறைமலைநகர் நகராட்சி பகுதிகள் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் ஏராளமான தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் பெருகி வருகின்றன.

    இந்தநிலையில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி பாக்கி அதிக அளவில் உள்ளது. அதனை வசூலிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    வரி பாக்கி உள்ள நிறுவனங்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டது. எனினும் வரி பாக்கி தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இதற்கிடையே ரூ.1 கோடியே 10 லட்சம் வரி பாக்கி உள்ள தனியார் ஓட்டல் மற்றும் ரூ.21 லட்சம் வரிபாக்கி உள்ள கல்வி நிறுவனத்தின் கட்டிடம் ரூ.19 லட்சம் வரிபாக்கி உள்ள தனியார் நிறுவனத்தின் கட்டிடங்களை நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக ஜப்தி செய்தனர். இதற்கான அறிவிப்பு நோட்டீசும் அங்கு ஒட்டப்பட்டது.

    வரி பாக்கி வைத்துள்ளவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி கமிஷனர் லட்சுமி எச்சரித்து உள்ளார்.

    • குடியிருப்புக்கு மத்தியில் உள்ள இந்த மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அங்குள்ள குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    • அடுத்தடுத்து நடந்த கொலை மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்ததை தொடர்ந்து மதுக்கடை மூடப்பட்டது.

    செங்கல்பட்டு:

    கல்பாக்கம் நெடுஞ்சாலையில் புதிதாக அரசு மதுக்கடை புதிதாக திறக்கப்பட்டு உள்ளது. குடியிருப்புக்கு அருகில் இந்த மதுக்கடை திறக்க ஏற்கனவே பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனினும் மதுக்கடை திறக்கப்பட்டது.

    இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள், பெண்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    'குடியிருப்புக்கு மத்தியில் உள்ள இந்த மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அங்குள்ள குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளை சந்தித்தும் மனு அளிக்க திட்டமிட்டு உள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஏற்கனவே வல்லம் பகுதியில் மதுக்கடை இருந்தது. பின்னர் அடுத்தடுத்து நடந்த கொலை மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்ததை தொடர்ந்து மதுக்கடை மூடப்பட்டது.

    தற்போது மீண்டும் இங்கு மதுக்கடை திறந்து உள்ளனர். இதனை வேறு இடத்துக்கு உடனடியாக மாற்ற வேண்டும்' என்றார்.

    • வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
    • வண்டலூர் உயிரியல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    வண்டலூர்:

    சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வாரம் தோறும் வழக்கமாக செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும், ஆனால் இன்று (செவ்வாய்க்கிழமை) வண்டலூர் உயிரியல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    இந்த தகவலை வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.
    • நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி உட்பட்ட பகுதியில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து நகராட்சி அலுவலகத்தில் கட்டி வைத்தனர்.

    கூடுவாஞ்சேரி:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் மாடுகளை வளர்க்கும் உரிமையாளர்கள் தங்களது மாடுகளை சாலையில் சுற்றி திரியாமல் தங்களது வீடுகளில் கட்டி வளர்க்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி உட்பட்ட பகுதியில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து நகராட்சி அலுவலகத்தில் கட்டி வைத்தனர்.

    பிடிக்கப்பட்ட மாடுகளை 24 மணி நேரத்தில் மாட்டின் உரிமையாளர்கள் மீட்கவில்லை என்றால் பொது ஏலம் விடப்படும் என்று ஏற்கனவே நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கழிப்பறை ரெடியாகி பல மாதங்கள் ஆகியும் இன்னும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கோவில் நிர்வாகம் திறக்கவில்லை.
    • பக்தர்கள் கழிப்பறையின் சுவர் ஏறி குதித்து உள்ளே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் வளாகத்தில் கழிப்பறை வசதிகள் இல்லாததால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், வளாகத்தின் திறந்தவெளி பகுதியை பயன்படுத்தி அசுத்தம் செய்து வந்தனர். இதனால் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் கோவில் வளாகத்தின் தென் கிழக்கு பகுதியில் கடந்த ஆண்டு பல லட்சம் ரூபாய் செலவு செய்து நவீன கழிப்பறை கட்டி அதை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தது.

    கழிப்பறை ரெடியாகி பல மாதங்கள் ஆகியும் இன்னும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கோவில் நிர்வாகம் திறக்கவில்லை. பக்தர்கள் கழிப்பறையின் சுவர் ஏறி குதித்து உள்ளே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து அறநிலையத்துறை இணை ஆணையர் வானதியிடம் கேட்டபோது, எங்கள் அனுமதியும், தொல்லியல்துறை அனுமதியும் இல்லாமல் கட்டியுள்ளனர் என்றார். கோவில் வளாகத்தில் பல மாதங்கள் நடைபெற்ற கட்டுமான பணிகள் எப்படி இணை ஆணையருக்கு தெரியாமல் இருக்கும் என்ற கேள்வி தற்போது பக்தர்களிடம் எழுந்துள்ளது.

    ×