என் மலர்
செங்கல்பட்டு
- தாம்பரம் பஸ் நிலையத்தில் மதுவிலக்கு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
- கைதான 2 பேரையும் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தாம்பரம்:
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகர போலீஸ் எல்லைப்பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் தாம்பரம் பஸ் நிலையத்தில் மதுவிலக்கு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு விற்பனைக்காக கஞ்சா கொண்டு வந்திருந்த திரிபுரா மாநிலத்தை சேர்ந்த உதய் சர்கார்(வயது 27), ஜாகிர் உசேன்(29) ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 9 கிலோ கஞ்சா மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 2 பேரையும் தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் சிறுவன் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டில் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. இங்கு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைதாகும் சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சுமார் 40-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தற்போது சீர்திருத்தப் பள்ளியில் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி தாம்பரம் பகுதியில் ரெயில்வே பொருட்களை திருடியதாக தாம்பரம் அடுத்த குப்பைமேடு, கண்டபாளையத்தை சேர்ந்த பழனி என்பவரது மகன் கோகுல் ஸ்ரீ (வயது17) யை தாம்பரம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவரை மறுநாள் (30-ந்தேதி) செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். இந்த நிலையில் சீர்திருத்தப் பள்ளியில் இருந்த போது கோகுல் ஸ்ரீக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கோகுல் ஸ்ரீ இறந்து போனார். இதுபற்றி அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுவன் கோகுல்ஸ்ரீ எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. சீர்திருத்தப்பள்ளியில் சிறுவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் செங்கல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் சிறுவன் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மண்ணிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுநகர், குறிஞ்சிப்பூ தெருவில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- ஓட்டேரி சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுநகர், குறிஞ்சிப்பூ தெருவில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக நேற்று முன்தினம் ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு திருட்டுத்தனமாக மதுவிற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த அன்னபூரணி என்கிற பில்லா (வயது 34), என்ற பெண்ணை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 5 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து ஓட்டேரி சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- தங்கதுரை, மணிராஜனை போலீசார் கைது செய்தனர்.
- குட்கா எப்படி கிடைக்கிறது? எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வண்டலூர்:
ஊரப்பாக்கம், ரேவதிபுரத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த தங்கதுரை, மணி ராஜன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்கா, கார் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களுக்கு குட்கா எப்படி கிடைக்கிறது? எங்கிருந்து கடத்தி வரப்படுகிறது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் புத்தாண்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
- ஆன்மிக குரு பங்காரு அடிகளார் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் புத்தாண்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
புத்தாண்டு தினத்தை வரவேற்கும் விதமாக மங்கள இசை வாசிக்கப்பட்டு பக்தர்களின் கர ஒலியுடன் புத்தாண்டை வரவேற்று ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
சித்தர் பீடம் வந்த ஆன்மிக குரு பங்காரு அடிகளாருக்கு கர்நாடக மாநில ஆன்மிக இயக்க பொறுப்பாளர்கள் பாத பூஜை செய்து வரவேற்றனர்.
இந்த புத்தாண்டையொட்டி ரூ.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆன்மிக குரு பங்காரு அடிகளார் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பெங்களூர் ஜெய் தேவி மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் மருத்துவ நிதியுதவி, சங்கரா புற்றுநோய் நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம், 9 நபர்களுக்கு மடிக்கணினி, 18 நபர்களுக்கு தையல் இயந்திரம், 18 நபர்களுக்கு அறுவை சிகிச்சை எந்திரங்கள், 3 நபர்களுக்கு ஆட்டோக்கள், மருத்துவ மனைகளுக்கு நன்கொடைகள், சிறப்பு குழந்தைகளுக்கான அன்னை இல்லத்திற்கு ரூபாய் 2 லட்சம் நிதி உதவிக்கான காசோலை உள்ளிட்ட ரூ.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ், வழக்கறிஞர் அகத்தியன் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கும் நிகழ்ச்சியை ஆன்மிக இயக்க துணை தலைவர் கோ.ப.செந் தில் குமார் தொடங்கி வைத்தார்.
- மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் முதலை பண்ணை உள்ளது.
- வடநெம்மேலி பண்ணையில் இரவு நேரத்திலும் டார்ச்லைட் வெளிச்சத்தில் முதலைகளை பார்க்க வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் முதலை பண்ணை உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வகை முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளின் தேர்வில் சிறந்த இடமாக இந்த முதலை பண்ணை உள்ளது. தினந்தோறும் பல்வேறு இடங்களில் இருந்து வரும் பார்வையாளர்கள் இங்குள்ள முதலைகளை பார்த்து ரசித்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் வடநெம்மேலி பண்ணையில் இரவு நேரத்திலும் டார்ச்லைட் வெளிச்சத்தில் முதலைகளை பார்க்க வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
குறைந்தது 10 நபர்கள் குழுவாக ஆன்லைன் மூலம் தலா ரூ.900 கட்டணம் செலுத்தினால் இரவில் டார்ச்லைட் வெளிச்சத்தில் முதலைகளை பார்க்கும் இரவு உலா வசதிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. பகலிலும் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் முதலைகளை காணலாம் என்று முதலை பண்ணை நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறும்போது, வடநெம்மேலி பண்ணையில் பார்வையாளர்கள் இரவு நேரத்திலும் டார்ச்லைட் வெளிச்சத்தில் முதலைகளை ரசிக்கும் வசதி செய்யப்பட்டு உள்ளது.இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகளை பெரிதும் கவர்ந்த சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்பட்ட "ஆலி" என்ற முதலை இறந்தது.இது பராமரிப்பாளர்களின் கட்டளையை ஏற்று செயல்படும்.
கடந்த ஆண்டும் இதே போன்று 'ஜாஸ்' என்ற முதலை இறந்தது. அரசிடம் உரிய அனுமதி பெற்று முதலையின் எலும்பு கூடு பதப்படுத்தப்பட்டு பண்ணையில் காட்சி பொருளாக வைக்கப்பட்டு உள்ளது என்றனர்.
- கூவத்தூர் போலீசார் விரைந்து வந்து தப்பி ஓட முயன்ற பிரகாஷை சுற்றி வளைத்து பிடித்தனர்.
- கைதான பிரகாசை போலீசார் திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
மாமல்லபுரம்
கூவத்தூர் அடுத்த ஆயப்பாக்கம் அருகே உள்ள நத்தம்பகுதியில் பாலாற்றில் தொடர்ந்து மணல் கடத்தல் நடந்து வருகிறது. ஆட்டோ மற்றும் லாரிகள் மூலம் தொடர்ந்து மணல் திருட்டு நடக்கிறது.
இந்த மணல் கடத்தல் குறித்து அதே பகுதியை சேர்ந்த சாதிக்பாஷா என்பவர் போலீசுக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி போலீசார் விசாரித்து வந்தனர். இதற்கிடையே சாதிக்பாஷா கூவத்தூர் பழைய ஆற்று பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் திடீரென அரிவாளால் வெட்டினார். இதில் அதிஷ்டவசமாக சாதிக் பாஷா லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
தகவல் அறிந்ததும் கூவத்தூர் போலீசார் விரைந்து வந்து தப்பி ஓட முயன்ற பிரகாஷை சுற்றி வளைத்து பிடித்தனர்.
மணல் கடத்தல் குறித்து போலீசுக்கு தெரிவித்ததால் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை முயற்சி நடந்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கைதான பிரகாசை போலீசார் திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
- கடந்த 8 நாட்களில் வண்டலூர் பூங்காவுக்கு ஒரு லட்சம் பேர் வருகை தந்துள்ளனர்.
- மாமல்லபுரத்திலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சென்னை :
சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,382 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு கடந்த 8 நாட்களில் வண்டலூர் பூங்காவுக்கு ஒரு லட்சம் பேர் வருகை தந்து பூங்காவை சுற்றி பார்த்து சென்றனர்.
நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வருகை தந்ததால் பூங்கா நுழைவாயில் பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. நேற்று ஒரே நாளில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 25 ஆயிரம் பார்வையாளர்கள் வருகை தந்து பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகள், ஊர்வனங்கள் போன்றவற்றை குடும்பத்துடன் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர்.
பூங்காவில் உள்ள 20 டிக்கெட் கவுண்ட்டர்களில் 10 டிக்கெட் கவுண்ட்டர்கள் மட்டுமே திறந்து இருந்தது. இதனால் பூங்காவை சுற்றி பார்ப்பதற்காக வந்த பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு டிக்கெட்டுகளை பெற முயன்றனர். பூங்கா ஊழியர்களும் பூங்காவுக்கு வருகை தந்த பொதுமக்களுக்கு டிக்கெட் வழங்க முடியாமல் திணறினார்கள்.
இதனால் அவ்வப்போது நுழைவு டிக்கெட் வழங்கும் இடத்தில் சலசலப்புகளும், பரபரப்பும் ஏற்பட்டு கொண்டே இருந்தது. இதனால் குடும்பத்துடன் பூங்காவை சுற்றி பார்க்க வந்த பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள்.
அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி படப்பையைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆங்கில புத்தாண்டையொட்டி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு மாநகர போக்குவரத்து மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பூங்காவில் ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இது குறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
எதிர்பார்த்ததைவிட நேற்று கூட்டம் அலைமோதியது. பூங்காவுக்கு ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட் பதிவு செய்யும் வசதி ஏற்கனவே உள்ள காரணத்தால், 10 கவுண்ட்டர்கள் மட்டுமே டிக்கெட் வாங்குவதற்காக திறந்து வைத்திருந்தோம்.
ஆனால் ஆன்லைனில் டிக்கெட் பெறும் வசதி பற்றி பலருக்கு தெரியாததால் பூங்காவில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்களில் கூட்டம் அதிகரித்தது. எனவே இனிவரும் காலங்களில் ஆன்லைன் மூலமாக வண்டலூர் பூங்காவுக்கு டிக்கெட் வழங்கப்படுவது பற்றி பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த பூங்கா நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல் புத்தாண்டு விடுமுறையையொட்டி மாமல்லபுரத்திலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அர்ச்சுனன் தபசு, கணேசரதம், வெண்ணை உருண்டைக்கல், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களுக்கு குடும்பம், குடும்பமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள சிற்பங்களை சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
நேற்று காலையில் பனி மூட்டத்தால் குளிர் நிலவிய சூழலில், பகலில் வெயில் அதிகமாக வாட்டி வதைத்ததால் பலர் புராதன சின்ன வளாகத்தில் உள்ள மரத்தடி நிழலில் அமர்ந்து ஓய்வு எடுத்தனர்.
அர்ச்சுனன் தபசு சிற்ப வளாகத்தில் உள்ள உயரமான பாறைக்குன்று மீது ஏறிய வாலிபர்கள் ஆபத்தை உணராமல் செல்பி எடுத்தனர். அவர்களை தொல்லியல் துறை பாதுகாவலர்கள் எச்சரித்து அனுப்பினர்.
நேற்று சுற்றுலா பயணிகள் அதிகமானோர் மாமல்லபுரத்தில் திரண்டதால் மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய சாலைகளில் சுற்றுலா வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அவை ஒன்றன்பின், ஒன்றாக மெதுவாக ஊர்ந்து சென்றன. போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
சுற்றுலா பயணிகள் வருகை நேற்று அதிகமாக இருந்ததால் மாமல்லபுரம் பஸ் நிலையம் தற்காலிகமாக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பல்லவன் சிலை அருகே மாற்றப்பட்டது. மாலை 5 மணி முதல் மாமல்லபுரம் புறவழிச்சாலையில் பஸ்கள் வராததால் சுற்றுலா வந்திருந்த பொதுமக்கள் பல மணி நேரம் பஸ்சுக்காக காத்திருந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை மாமல்லபுரம் போலீசார் சமாதானப்படுத்தினர். பின்னர் ஒவ்வொரு பஸ்சாக வந்தது. அதில் ஏறி பொதுமக்கள் புறப்பட்டு சென்றனர்.
- இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- கார்களில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்கள் போலியானது என்பது தெரியவந்தது.
மாமல்லபுரம்:
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று இரவு மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் போலீசார் தடுப்புகளை அமைத்து சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனர். டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பிரபல ஊடகம், பத்திரிகை என ஸ்டிக்கர் ஒட்டி வந்த 4 கார்களை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில், அது போலியானது என்பதும், அவர்கள் அங்கு பணி புரியவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 4 கார்களுக்கும் 21 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். கார்களில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களையும் அகற்றினர். பின்னர் அவர்களின் உறவினர்களிடம் தொலைபேசியில் பேசி, அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
- மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று மாலை முதலே களை கட்டியது.
- செங்கல்பட்டு, தாம்பரம், திருவான்மியூர், கோயம்பேடு செல்லும் பயணிகள் நீண்டநேரம் காத்து கிடந்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் நேற்று மாலை முதலே களை கட்டியது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதேபோல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் விடுதியில் நேற்று மாலை 6 மணியில் இருந்தே விளையாட்டு போட்டிகள், நடனம், பேஷன்ஷோ, உணவுத் திரு விழா போன்ற நிகழ்ச்சிகள் நள்ளிரவு 12 மணிவரை நடத்தபட்டது.
இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதி. வெளியூர், வெளிமாநில பயணிகள் ஏராளமானோர் கட்டணம் செலுத்தி கலந்து கொண்டனர். நள்ளிரவு புத்தாண்டு பிறந்ததும் அவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் வாழ்த்துக்களை பரிமாரிக் கொண்டனர்.
மாமல்லபுரம் கடற்கரையில் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட வந்த சுற்றுலா பயணிகளுக்கு இரவு நேரத்தில் போதிய அளவில் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.
இதனால் செங்கல்பட்டு, தாம்பரம், திருவான்மியூர், கோயம்பேடு செல்லும் பயணிகள் நீண்டநேரம் காத்து கிடந்தனர். வரும் பஸ்களில் குழந்தைகளுடன் முண்டியடித்து ஏறும் நிலை ஏற்பட்டது.
- கல்பாக்கம் அருகே உள்ளது முதலியார்குப்பம் படகு குழாம். இங்கிருந்து சுமார் 4 கி.மீட்டர் தூரத்தில் கடற்கரைத் தீவு உள்ளது.
- இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டுக்குதான் அதிக அளவில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் விரும்பி வருகை தருகின்றனர்.
செங்கல்பட்டு:
கல்பாக்கம் அருகே உள்ளது முதலியார்குப்பம் படகு குழாம். இங்கிருந்து சுமார் 4 கி.மீட்டர் தூரத்தில் கடற்கரைத் தீவு உள்ளது.
படகுகள் மூலம் இந்த கடற்கரை தீவுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இது சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது.
இந்த நிலையில் முதலியார்குப்பம் படகு குழாமினை அமைச்சர் ராமச்சந்திரன், சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப்நந்தூரி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டுக்குதான் அதிக அளவில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் விரும்பி வருகை தருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அதிக அளவில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்து உள்ளதால், ஆண்டு தோறும் வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலாப் பயணிகளுக்கு நினைவில் நீங்காத அனுபவத்தை தரும் வகையில், படகு குழாம்களான முட்டுக்காடு, முதலியார் குப்பம், ஊட்டி, பைக்காரா, கொடைக்கானல், ஏற்காடு, பிச்சாவரம், கோவை மாவட்டம் வாலாங்குளம் மற்றும் குற்றாலம் ஆகிய 9 இடங்களில் செயல்படுத்தி வருகின்றது.
முதலியார்குப்பம் மிகவும் இயற்கையான சூழலில் அமையப் பெற்றது. பறவைகளைப் பார்வையிடுவோர்களின் சொர்க்கமாகவும் மற்றும் சுற்றுலாப் பயணிகள் புத்துணர்வு பெறும் தலமாகவும் விளங்குகிறது.
ஓடியூர் ஏரியை ஒட்டியுள்ள வண்ணமயமான கடற்கரை தீவிற்கு எந்திர படகு மூலம் சென்று வர ஏற்பாடு செய்து தரப்படுகின்றது. சுற்றுலாப் பயணிகள் இந்த தீவில் சில மணி நேரம் தங்கி இயற்கை சூழலை கண்டுகளிக்க வசதி உள்ளது இந்த படகு குழாமின் சிறப்பம்சமாகும்.
படகில் பயணிக்கும் போது புலம்பெயர் பறவைகளை கண்டுகளித்தும் மற்றும் படகு குழாம் உணவகத்தில் சுவையான கடல் உணவுகளை உண்டு சுவைத்தும் மகிழலாம்.
நீர் விளையாட்டு வசதிகள் கொண்ட முதலியார்குப்பம் படகு குழாமில் விசைப்படகு, மிதிப்படகு, ஓரிருக்கை படகு, வாழைப் பழ வடிவிலான படகு, வாட்டர் ஸ்கூட்டர், எந்திர படகு, அதிகவேக ஜெட்ஸ்கி போன்ற படகுகள் உள்ளன.
மேலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வண்ணம், சுற்றுச் சூழலுக்கு உகந்த நீர் விளையாட்டுகள் அமைக்கப்பட்டு முதலியார்குப்பம் படகு குழாமானது தனித்துவமான பொழுது போக்கு தலமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.
முதலியார்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொது மக்கள் லாரி டிரைவரை மடக்கி பிடித்து கடுமையாக தாக்கினர்.
- விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாம்பரம்:
தாம்பரத்தை, அடுத்த முடிச்சூர் சாலை பழைய பெருங்களத்தூர் பார்வதி நகர் அருகே சாலையில் சுற்றித்திரிந்த 5 மாடுகளின் மீது அவ்வழியாக வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 மாடுகள் பலியானது. ஒரு மாடு உயிருக்கு போராடி வருகிறது.
இதை பார்த்த பொது மக்கள் லாரி டிரைவரை மடக்கி பிடித்து கடுமையாக தாக்கினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பீர்கன் காரனை போலீசார் டிரைவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் லாரியை ஓட்டியது மணிகண்டன் என்பவர் என்பது தெரியவந்தது. விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






