search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதலியார்குப்பம் படகு குழாம் ரூ.1½ கோடி செலவில் மேம்படுத்தப்படும்- அமைச்சர் தகவல்
    X

    கோப்பு படம்


    முதலியார்குப்பம் படகு குழாம் ரூ.1½ கோடி செலவில் மேம்படுத்தப்படும்- அமைச்சர் தகவல்

    • கல்பாக்கம் அருகே உள்ளது முதலியார்குப்பம் படகு குழாம். இங்கிருந்து சுமார் 4 கி.மீட்டர் தூரத்தில் கடற்கரைத் தீவு உள்ளது.
    • இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டுக்குதான் அதிக அளவில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் விரும்பி வருகை தருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    கல்பாக்கம் அருகே உள்ளது முதலியார்குப்பம் படகு குழாம். இங்கிருந்து சுமார் 4 கி.மீட்டர் தூரத்தில் கடற்கரைத் தீவு உள்ளது.

    படகுகள் மூலம் இந்த கடற்கரை தீவுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இது சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது.

    இந்த நிலையில் முதலியார்குப்பம் படகு குழாமினை அமைச்சர் ராமச்சந்திரன், சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் சந்தீப்நந்தூரி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டுக்குதான் அதிக அளவில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் விரும்பி வருகை தருகின்றனர்.

    தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அதிக அளவில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்து உள்ளதால், ஆண்டு தோறும் வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலாப் பயணிகளுக்கு நினைவில் நீங்காத அனுபவத்தை தரும் வகையில், படகு குழாம்களான முட்டுக்காடு, முதலியார் குப்பம், ஊட்டி, பைக்காரா, கொடைக்கானல், ஏற்காடு, பிச்சாவரம், கோவை மாவட்டம் வாலாங்குளம் மற்றும் குற்றாலம் ஆகிய 9 இடங்களில் செயல்படுத்தி வருகின்றது.

    முதலியார்குப்பம் மிகவும் இயற்கையான சூழலில் அமையப் பெற்றது. பறவைகளைப் பார்வையிடுவோர்களின் சொர்க்கமாகவும் மற்றும் சுற்றுலாப் பயணிகள் புத்துணர்வு பெறும் தலமாகவும் விளங்குகிறது.

    ஓடியூர் ஏரியை ஒட்டியுள்ள வண்ணமயமான கடற்கரை தீவிற்கு எந்திர படகு மூலம் சென்று வர ஏற்பாடு செய்து தரப்படுகின்றது. சுற்றுலாப் பயணிகள் இந்த தீவில் சில மணி நேரம் தங்கி இயற்கை சூழலை கண்டுகளிக்க வசதி உள்ளது இந்த படகு குழாமின் சிறப்பம்சமாகும்.

    படகில் பயணிக்கும் போது புலம்பெயர் பறவைகளை கண்டுகளித்தும் மற்றும் படகு குழாம் உணவகத்தில் சுவையான கடல் உணவுகளை உண்டு சுவைத்தும் மகிழலாம்.

    நீர் விளையாட்டு வசதிகள் கொண்ட முதலியார்குப்பம் படகு குழாமில் விசைப்படகு, மிதிப்படகு, ஓரிருக்கை படகு, வாழைப் பழ வடிவிலான படகு, வாட்டர் ஸ்கூட்டர், எந்திர படகு, அதிகவேக ஜெட்ஸ்கி போன்ற படகுகள் உள்ளன.

    மேலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வண்ணம், சுற்றுச் சூழலுக்கு உகந்த நீர் விளையாட்டுகள் அமைக்கப்பட்டு முதலியார்குப்பம் படகு குழாமானது தனித்துவமான பொழுது போக்கு தலமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

    முதலியார்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×