என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்தவர் நவநீத கோபாலகிருஷ்ணன்.
    • தனது கார் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வண்டலூர்:

    சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்தவர் நவநீத கோபாலகிருஷ்ணன் (வயது 35), இவர் குடும்பத்தினருடன் வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு காரில் வந்தார். காரை வண்டலூர் உயிரியல் பூங்கா வாகனம் நிறுத்துமிடத்தில் டோக்கன் வாங்கிய பிறகு நிறுத்திவிட்டு பூங்காவை சுற்றி பார்த்துவிட்டு வாகன நிறுத்தும் இடத்திற்கு மீண்டும் வந்தார். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது கார் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து நவநீத கோபாலகிருஷ்ணன் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் ராஜி கம்பியால் பார்த்திபனை குத்தியதாக தெரிகிறது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜியை தேடி வந்தனர்.

    உத்திரமேரூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் நரசிம்மன் நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 35). டிரைவர். முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் ராஜி (31) கம்பியால் பார்த்திபனை குத்தியதாக தெரிகிறது. இதில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜியை தேடி வந்தனர். இந்த நிலையில் உத்திரமேரூர் அடுத்த கடல்மங்கலம் ராமகிருஷ்ணா பள்ளி அருகே பதுங்கி இருந்த ராஜியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    • பக்கிங்காம் கால்வாய் பகுதியில் முனுசாமி மர்மமாக இறந்து கிடந்தார்.
    • கேளம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்போரூர்:

    கோவளத்தை அடுத்த குன்னுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி (வயது 46). மீனவரான இவர் பக்கிங்காம் கால்வாயில் படகுமூலம் மீன், இறால், நண்டு ஆகியவற்றைப் பிடித்து வந்தார். நேற்று காலை மீன்படிக்க சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் பக்கிங்காம் கால்வாய் பகுதியில் முனுசாமி மர்மமாக இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து கேளம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வண்டலூர் பூங்காவில் ஒப்பந்த ஊழியர்களின் போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது.
    • தொழிலாளர்களின் போராட்டத்தால் பூங்காவில் பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

    வண்டலூர்:

    வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவேடு வைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கு ஒப்பந்த ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பயோமெட்ரிக் முறையை, ரத்து செய்ய வேண்டும், தொழிலாளர்களை அவமரியாதையாக நடத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்யும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வண்டலூர் பூங்காவில் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் துணை இயக்குனர் காஞ்சனா, உதவி இயக்குனர் மணிகண்ட பிரபு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் முடிவு எட்டப்படவில்லை.

    இந்த நிலையில் வண்டலூர் பூங்காவில் ஒப்பந்த ஊழியர்களின் போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்து வருகிறது. உயிரியல் பூங்கா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சங்க பொதுச்செயலாளரும், ஏ. ஐ சி. யூ. டி.யூ மாநில சிறப்புத் தலைவருமான இரணியப்பன் தலைமையில் ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தொழிலாளர்களின் இந்த போராட்டத்தால் பூங்காவில் பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. போராட்டம் குறித்து பூங்கா ஊழியர்கள் கூறும்போது, பூங்காவில் உள்ள நிரந்தர ஊழியர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால் ஒப்பந்த ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் முறை உள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும் என்றனர்.

    • கடற்கரையோரங்களுக்கு வரும் ஆமைகள் குறித்து கணக்கெடுத்து அதனை பாதுகாத்து வருகின்றனர்.
    • திமிங்கலம் மற்றும் அதன் குட்டி அங்கேயே மணலில் புதைக்கப்பட்டது.

    மாமல்லபுரம்:

    சென்னை நீலாங்கரையில் செயல்படும் 'டிரி பவுண்டேசன்' தொண்டு நிறுவனம் ஆமைகள் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கடற்கரையோரங்களுக்கு வரும் ஆமைகள் குறித்து கணக்கெடுத்து அதனை பாதுகாத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த அமைப்பை சேர்ந்த கடல் ஆமைகள் பாதுகாப்பு காவலர்களான பாண்டியன் மற்றும் சுதாகர் ஆகியோர் அதிகாலையில் கல்பாக்கம் அருகே உள்ள பெருந்துரவு கடற்கரை பகுதியில் கண்காணித்தனர்.

    அப்போது சுமார் 7 அடி நீளமுள்ள அரியவகை திமிங்கலம் ஒன்று காயத்துடன் கரை ஒதுங்கி கிடந்ததை பார்த்தனர். இது குறித்து அவர்கள் வண்டலூர் பூங்கா அதிகாரிகளுக்கும வனத்து றையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து திமிங்கலத்தின் உடலை அங்கேயே பரிசோதித்தனர். அப்போது அந்த திமிங்கலத்தின் வயிற்றில் குட்டி திமிங்கலம் இறந்த நிலையில் இருந்தது.

    அதன் மூக்கு மற்றும் உடல் பகுதியில் பலத்த காயம் இருந்தது. இதனால் இது இறந்து இருக்கலாம் என்று தெரிகிறது. பின்னர் அந்த திமிங்கலம் மற்றும் அதன் குட்டி அங்கேயே மணலில் புதைக்கப்பட்டது.

    இது குறித்து டிரி பவுண்டேசன் அமைப்பை சேர்ந்த முனைவர் சுப்ரஜா தாரணி கூறும்போது, 'கல்பாக்கம் அருகே உள்ள பெருந்துரவு கடற்கரை பகுதியில் வயிற்றில் குட்டியுடன் திமிங்கலம் இறந்து கிடந்தது. அதன் உடலில் காயம் இருந்தது.

    மீனவர்களின் வலையில் சிக்கியதால் அல்லது படகுகள் மோதியதில் காயம் அடைந்து இருக்கலாம். மற்ற திமிங்கலத்தை விட இது சிறியதாக இருக்கிறது. இது அரியவகை ஆகும்' என்றார்.

    • திருப்போரூரை அடுத்த காலவாக்கத்தில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • பஸ் டிரைவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த காலவாக்கத்தில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம் (வயது 55 ) உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இந்ந நிலையில் சாலை அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கும்போது தொழிலாளி சண்முகம் இயற்கை உபாதை கழிக்க சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது வேகமாக வந்த தனியார் பஸ் திடீரென சண்முகம் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்து போனார்.

    தகவல் அறிந்ததும் திருப்போரூர் போலீசார் விரைந்து வந்து பலியான சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக பஸ் டிரைவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இட்லி, தோசையை விரும்பி சாப்பிடுவதாக பேட்டி அளித்தனர்.
    • சமையல் கலைஞருடன் நடமாடும் ஓட்டல்போன்று ஒரு வேனும் உடன் வருகிறது

    மாமல்லபுரம் :

    நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டம் நகரை சேர்ந்தவர் கரோலின் வேன்டிஸ் (வயது 61). இவர் தன்னுடன் பள்ளிப்படிப்பு படித்த நெதர்லாந்து நாட்டு தோழிகள் 10 பேரை சேர்த்து ஒரு கல்வி அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார். பல்வேறு நாடுகளுக்கு சென்று மக்களின் வாழ்தார நிலைமை, அங்குள்ள குழந்தைகளின் கல்வி முறைகள் பற்றி விசாரித்து அடித்தட்டு நிலையில் உள்ள குழந்தைகளை தேடி கண்டுபிடித்து கல்வி உதவி செய்து வருகிறார்.

    இவர்கள் அந்த நாட்டில் டாக்டர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், தொழில் நுட்ப வல்லுனர்களாகவும் உள்ளனர். நெதர்லாந்து தோழிகள் 10 பேருக்கும் திருணமாகி கணவன், மகன், மகள்கள், பேரக்குழந்தைகள் என ஒரு குடும்பமாக அந்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

    உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடாக சென்று சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் தமிழகத்தை தேர்வு செய்த நெதர்லாந்து தோழிகள் சென்னை வந்தனர். பிறகு சென்னையில் இருந்து சைக்கிள் மூலம் பயணம் சென்றால்தான் மக்களின் வாழ்வாதார நிலைகளை அறியவும், பொழுதுபோக்கு மையங்களை கண்டுரசிக்க முடியும் என்று எண்ணிய தோழிகள் 10 பேரும், சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சைக்கிள் பயணத்தை தொடங்கி, மாமல்லபுரம் வந்தனர்.

    பின்னர் மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி, சேலம் வழியாக மதுரையில் தங்கள் பயணத்தை முடிக்கின்றனர்.

    வழி நெடுகிலும் மக்களின் வாழ்வாதார நிலைகளையும், அவர்களின் குழந்தைகளின் கல்வி முறைகள் குறித்து விசாரிக்கிறார்கள். அடித்தட்டு நிலையில், கல்வி பயில முடியாத வசதியற்ற ஏழை குழந்தைகளை கண்டறிகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய உள்ளதாகவும், தற்போதுதான் முதன் முதலாக தமிழகத்திற்கு வந்துள்ளதாகவும் அவர்கள் கூறினார்கள். தமிழக மக்களின் கலாசாரம் பண்பாடு போன்றவற்றை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் சொன்னார்கள். இங்குள்ள சுற்றுலா தலங்களில் உள்ள புராதன சின்னங்கள், பொழுதுபோக்கு மையங்கள் ரசிப்பதற்கும், பார்ப்பதற்கும் மிக அழகாக உள்ளதாகவும், தமிழகம் வந்தது நல்ல வாய்ப்பாகும் என்றும் நெதர்லாந்து பெண்கள் தெரிவித்தனர்.

    நெதர்லாந்து தோழிகள் 10 பேரும் 50 வயதை கடந்தாலும் அவர்கள், 18 வயது இளம்பெண்கள் போல மிடுக்கான ஆடை அணிந்து சுறுசுறுப்பாக காணப்படுகின்றனர்.

    ஒரு நாளைக்கு 100 கிலோ மீட்டருக்கு சைக்கிள் ஓட்டுவோம். எங்களுக்கு களைப்பு என்பதே வராது. ஓட்டல்களில் சாப்பிட்டு எங்கள் உடல்நலத்தை கெடுத்து கொள்ள விரும்பவில்லை. அதனால்தான் உணவுப்பொருட்கள், கியாஸ் சிலிண்டர்கள், சமையல் கலைஞருடன் நடமாடும் ஓட்டல்போன்று ஒரு வேனும் உடன் வருகிறது என்றனர்.

    வழியில் ஏதாவது ஒரு விடுதியில் தங்கும் அவர்களுக்கு நடமாடும் சமையல் வேனில், இருந்து சமையல் கலைஞர் ஒருவர் இட்லி, பூரி, பொங்கல, தோசை என விதவிதமாக தமிழக உணவுகளை சமைத்து கொடுக்கிறார். அதனை தாங்கள் விரும்பி சாப்பிடுவதாக நெதலர்லாந்து தோழிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

    • கேளம்பாக்கம் அருகே படூர் கிராமத்தில் சாலையோரத்தில் ஏராளமான வடமாநில வாலிபர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • எப்படி தமிழகத்திற்கு வந்தனர்? அவர்களை இங்கு அழைத்து வந்தது யார்? என்ன வேலை செய்து வந்தனர்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    திருப்போரூர்:

    கேளம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஜி20 மாநாடு நடைபெற திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

    இதையடுத்து கேளம்பாக்கம், தாழம்பூர், கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்கி உள்ள வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குறித்து கடந்த சில நாட்களாக போலீசார் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கேளம்பாக்கம் அருகே படூர் கிராமத்தில் சாலையோரத்தில் ஏராளமான வடமாநில வாலிபர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அங்கிருந்த 16 வாலிபர்களை பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது இந்தி மற்றும் உருதுமொழி மட்டும் பேசினர். அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. அவர்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை.

    இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்கள் எப்படி தமிழகத்திற்கு வந்தனர்? அவர்களை இங்கு அழைத்து வந்தது யார்? என்ன வேலை செய்து வந்தனர்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    இது குறித்து உருது தெரிந்த போலீசார் மூலம் தீவிரமாக ரகசிய விசாரணை நடத்தி வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கோவில் குளத்தில் தேடியும் ஞானசேகரனை கண்டுபிடிக்க முடியவில்லை.
    • இன்று அதிகாலை கோவில் குளத்தில் ஞானசேகர் உடல் பிணமாக மிதந்தது.

    திருப்போரூர்:

    திருப்போரூரை சேர்ந்தவர் ஞான சேகரன் (வயது27). இவர் அங்குள்ள முருகன் கோவிலில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தும் மண்டபத்தில் தற்காலிகமாக மொட்டை அடிக்கும் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு முதல் ஞானசேகரன் திடீரென மாயமானார். அவரது துணி மட்டும் கோவில் குளக்கரை படிக்கட்டில் இருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த கோவில் ஊழியர்கள் இது குறித்து திருப்போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கோவில் குளத்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை கோவில் குளத்தில் ஞானசேகர் உடல் பிணமாக மிதந்தது.

    தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ஞானசேகரன் கோவில் குளத்தில் மூழ்கி இறந்து இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து திருப்போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரை ஓட்டி வந்த புதுச்சேரியை சேர்ந்த அந்துவானா பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    • மதுபாட்டில்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டு மதுராந்தகம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மதுராந்தகம்:

    புதுச்சேரியில் இருந்து மதுராந்தகம் அருகே சூனாம்பேடு வழியாக காரில் அதிக அளவு மது பாட்டில்கள் கடத்தி வருவதாக மத்திய புலனாய்வு நுண்ணறிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் இனயத் பாஷா தலைமையில் சூனாம்பேடு அருகே உள்ள வேலூர் கிராமம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. மொத்தம் 1248 மது பாட்டில்கள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    இதையடுத்து காரை ஓட்டி வந்த புதுச்சேரியை சேர்ந்த அந்துவானா பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் புதுச்சேரியில் இருந்து சட்டவிரோதமாக சூனாம்பேடு பகுதிக்கு மதுபாட்டில்களை கடத்தி சென்றதாக தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து மதுபாட்டில்கள், கார் பறிமுதல் செய்யப்பட்டு மதுராந்தகம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    • மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல் நினைவு பரிசு கொடுத்து வரவேற்றார்.
    • சுற்றுலா பயணிகளை ராம்நாத் கோவிந்த் அருகில் அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

    மாமல்லபுரம்:

    முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல் பாறை உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தார். முன்னதாக கடற்கரை கோயில் நுழைவுவாயில் பகுதியில் மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், அவருக்கு நினைவு பரிசு கொடுத்து வரவேற்றார்.

    சுற்றுலா பயணிகள் யாரையும் தடுத்து நிறுத்தாமல் ராம்நாத் கோவிந்த், மக்களோடு மக்களாக புராதன சின்னங்களை சுற்றி பார்த்தார்.

    அவரை அடையாளம் கண்ட வடமாநில சுற்றுலா பயணிகள் சிலர் அவருடன் நின்று புகைப்படம் எடுக்க விரும்பினார்கள். அவர்களை அருகில் அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், வருவாய்த்துறை மற்றும் தொல்லியல்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சாலையில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். உள்ளது.
    • வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம். மையத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சாலையில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏ.டி.எம். மையம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கடந்த ஒரு மாத காலமாக சுற்றி திரிந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை மனநலம் பாதிக்கப்பட்ட அந்த நபர் திடீரென ஏ.டி.எம்.மில் புகுந்து எந்திரத்தை உடைக்க முயன்றதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகளை கண்காணிப்பு கேமராவில் பார்த்த வங்கி அதிகாரிகள் ஏ.டி.எம். மையத்துக்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது ஏ.டி.எம். அருகே நின்று கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை வங்கி அதிகாரிகள் காலால் எட்டி உதைத்தும், ரப்பர் கயிறு மூலமாக தொடர்ந்து கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த காட்சியை அங்கு கூடியிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்தனர். இதையடுத்து இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தலங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை கடுமையாக தாக்கிய வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×