என் மலர்
செங்கல்பட்டு
- கொளப்பாக்கம் மெயின் ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஒட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெபஸ்டினை கைது செய்து அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கொளப்பாக்கம் மெயின் ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தில் பார்த்தபோது, அங்கு சந்தேகப்படும்படி சுற்றிக் கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்த போது, அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தார். போலீசார் தொடர்ந்து விசாரித்த போது கொளப்பாக்கம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ஜெபஸ்டின் (வயது 23), என்பது தெரியவந்தது.
இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெபஸ்டினை கைது செய்து அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
- டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கூடுவாஞ்சேரி:
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ரெயில்வே ஸ்டேசன் ரோடு அருகே உள்ள ஒரு டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று டீக்கடையில் சோதனை செய்தபோது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து டீக்கடைக்காரர் சுந்தர் (வயது 64), என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கேளம்பாக்கத்தை அடுத்த படூர் பழைய மாமல்லபுரம் சாலையில் பாழடைந்த கட்டிடம் உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்போரூர்:
கேளம்பாக்கத்தை அடுத்த படூர் பழைய மாமல்லபுரம் சாலையில் பாழடைந்த கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் கேளம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது அங்கு சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் இறந்து கிடந்தார். உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது. அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. மர்ம நபர்கள் அவரை கடத்தி கொலை செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தி.மு.க. ஆட்சியில் நகரங்களில் ஒருத்தரும் புதிதாக கடை வைக்க முடியாது.
- அம்மா இருந்தபோது எப்படி இருந்தது தமிழகம். இதே காவல்துறையை வைத்து தானே அன்றைக்கு ஆட்சியை நடத்தினோம்.
செங்கல்பட்டு:
ஜெயலலிதா தோழி சசிகலா செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது பல இடங்களில் நடந்த கூட்டங்களில் அவர் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் நகரங்களில் ஒருத்தரும் புதிதாக கடை வைக்க முடியாது. அப்படி வைத்தால் தி.மு.க.வினர் வந்து மிரட்டுவதுதான் வேலை.
ஒரு சிறிய வீடு கட்டுவதற்கு மணலோ, ஜல்லியோ வைத்தால் பணம் கொடு என்று தி.மு.க.வினர் பொதுமக்களை மிரட்டுகிறார்கள். பணம் கொடுத்தால்தான் வீடு கட்ட முடியும் என்ற நிலை. இதற்கெல்லாம் காரணம் உங்கள் பதவி படுத்தும் பாடு. அந்த பதவியை எடுத்தால் எல்லாம் சரியாகி விடும்.
அம்மாவின் ஆட்சி வந்தால் மீண்டும் பழைய நிலைக்கு வரும். அது மட்டுமல்ல தி.மு.க. கவுன்சிலர்களை முதலில அடக்கி வைக்க வேண்டும். என்ன காரணம் என்றால், ஒவ்வொருத்தரையும் போன் செய்து மிரட்டுவதுதான் வேலை.
இப்போது கூட்டணி கட்சிகள் எல்லாம் உன்னுடன் இருப்பதால் அவர்கள் வாயை அடைக்கலாம். ஆனால் என்னுடைய வாயை அடைக்க முடியாது. இந்த மக்களுக்காக என் உயிர் உள்ளவரை தட்டிக்கேட்பேன். ஏன் என்றால் நாங்கள் அப்படிதான் வளர்ந்திருக்கிறோம். 30 வருட அரசியலில் நாங்கள் இதைத்தான் செய்திருக்கிறோம்.
அம்மா இருந்தபோது எப்படி இருந்தது தமிழகம். இதே காவல்துறையை வைத்து தானே அன்றைக்கு ஆட்சியை நடத்தினோம். இப்போது தி.மு.க.வால் ஏன் நடத்த முடியவில்லை. என்ன காரணம் என்பதை யோசித்து பாருங்கள். மக்களை தாக்குவதற்கோ, மிரட்டுவதற்கோ யாருக்கும் உரிமை கிடையாது.
எந்த சமயத்தில் தி.மு.க.விற்கு பாடம் புகட்ட வேண்டுமோ அந்த சமயத்தில் மக்கள் சரியாக செய்ய வேண்டும். அம்மா மிகவும் கஷ்டப்பட்டு நல்ல நிலைக்கு தமிழகத்தை கொண்டு வந்து வைத்தால், தி.மு.க. ஆட்சி இப்போது செய்வதை பார்த்தால் எனக்கு ஒருநாள் கூட நிம்மதியாக தூக்கம் என்பதே வருவதில்லை. என்ன இப்படி கொடுமை செய்கிறார்களே என்று எனக்கு கஷ்டமாக இருக்கிறது.
அராஜகம் செய்யும் தி.மு.க.வினர் 4 பேரை கைது செய்தால் தானே மற்றவர்கள் செய்யாமல் இருப்பார்கள். அதை செய்வதற்கு தி.மு.க. பயப்படுவது ஏன்? அது போன்று பயப்படுபவர்கள் எல்லாம் பதவிக்கு வரக்கூடாது. பயந்தால் எப்படி காவல்துறையை வைத்து பணிகளை செய்ய முடியும்? நானும் பலமுறை நடவடிக்கை எடுங்கள் என்று சொல்லி விட்டேன். தமிழக மக்களே நீங்கள் எல்லாம் புரிந்து கொள்ளுங்கள். இந்த ஆட்சிக்கு என்ன பாடம் புகட்ட வேண்டும் என்பதை மனதில் வைத்து அதற்கான தக்க சமயம் வரும்போது மக்கள் தெளிவாக பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாட்டு, சிலம்பம், இசை நாற்காலி, நடனம் என பல்வேறு கேளிக்கை விளையாட்டுகள் விளையாடி அறுசுவை உணவு விருந்து வைத்தனர்.
- முன்னாள் ஆசிரியர்கள் சந்திரசேகர், பாலேஸ்வரி, உதயசூரியன் ஆகியோரை கௌரவித்து பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர்.
மாமல்லபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 1996- 97ல் படித்த மாணவர்கள் 40க்கும் மேற்பட்டோர், அப்பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் ஒன்று கூடி சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினார்கள்.
அவர்களுக்கு பாடம் எடுத்த முன்னாள் ஆசிரியர்கள் சந்திரசேகர், பாலேஸ்வரி, உதயசூரியன் ஆகியோரை கௌரவித்து பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர்.
பின்னர் பாட்டு, சிலம்பம், இசை நாற்காலி, நடனம் என பல்வேறு கேளிக்கை விளையாட்டுகள் விளையாடி அறுசுவை உணவு விருந்து வைத்தனர்.
அனைவரும் ஒன்று கூடி குழு போட்டோ எடுத்த பின்னர் பிரியாவிடை பெற்றனர். சரவணன், ஜலால் சலீம், செல்வம், தட்சிணாமூர்த்தி, ஸ்டாலின், பாம்பினோ சீனு உள்ளிட்டோர் இவ்விழாவை ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.
- கார் திடீரென ஷேர் ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது.
- ஷேர் ஆட்டோ பலத்த சேதம் அடைந்து தலைகுப்புற கவிழ்ந்தது
மாமல்லபுரம்:
கல்பாக்கத்தில் இருந்து வாயலூர் நோக்கி ஷேர் ஆட்டோ ஒன்று சென்று கொண்டு இருந்தது.
அதில் கல்பாக்கம் அருகே உள்ள அணைக்கட்டு பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சேகர் (வயது.60), வாயலூர் பொம்ம ராஜபுரம் பகுதியை சேர்ந்த பட்டு (59) உள்ளிட்ட 7 பேர் பயணம் செய்தனர்.
வாயலூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டு இருந்த போது சென்னை நோக்கி வந்த கார் திடீரென ஷேர் ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ஷேர் ஆட்டோ பலத்த சேதம் அடைந்து தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த சேகர், பட்டு உள்ளிட்ட 7 பேர் படுகாயம் அடைந்தனர். காரில் இருந்த 4 பேர் காயமின்றி தப்பினர். காரின் முன்பகுதி மட்டும் சேதம் அடைந்து இருந்தது.
இதுபற்றி அறிந்ததும் சதுரங்கபட்டிணம் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சேகர்,பட்டு ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தால் சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மன உளைச்சலில் இருந்த பாலமுருகன் நேற்று முன்தினம் கடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட திருக்கச்சூர் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 45). தையல் தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.
மன உளைச்சலில் இருந்த பாலமுருகன் நேற்று முன்தினம் கடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கி கொண்டிருந்த பாலமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த ஒரு ஆட்டோ சரஸ்வதி மீது மோதியது.
- சரஸ்வதி பர்சை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை இது குறித்து சரஸ்வதி கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார்.
கூடுவாஞ்சேரி:
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கிளாம்பாக்கம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 42). இவர் நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பின்னர் திண்டுக்கல்லில் இருந்து தனியார் பஸ் மூலம் ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலை மேம்பாலம் அருகே வந்து இறங்கினார். பின்னர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த ஒரு ஆட்டோ சரஸ்வதி மீது மோதியது.
இதில் சரஸ்வதி கையில் வைத்திருந்த 6பவுன் நகை இருந்த பர்ஸ் கீழே விழுந்தது.
சரஸ்வதி பர்சை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை இது குறித்து சரஸ்வதி கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். கீழ விழுந்த நகை இருந்த பர்சை திருடிச் சென்றவர்கள் யார்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நூதன முறையில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
- பரனூர் சுங்கச்சாவடி வழியாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன.
- இருசக்கர வாகனங்கள் செல்லும் சாலையில் இருபுறமும் தொடர்ந்து 3 வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி வழியாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. தென்மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வாகனங்கள் சென்னைக்கு வருகை தருகிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இங்கு சுங்ககட்டணம் வசூலிக்கும் நடைமேடைகள் தவிர சென்னை நோக்கி மற்றும் செங்கல்பட்டு நோக்கி என இருபுறமும் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ போன்ற 3 சக்கர வாகனங்கள் செல்ல சாலை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த சாலையில்தான் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இதற்கிடையே திடீரென இருசக்கர வாகனங்கள் செல்லும் சாலையில் இருபுறமும் தொடர்ந்து 3 வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வேகத்தடைகளை கடக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்லக்கூடியவர்கள் வேகத்தடையை கடக்க முடியாமல் தட்டுத்தடுமாறி கீழே விழுவதும் பதறுவதுமாகவும் இருந்து வருகின்றனர்.
வேகத்தடை என்ற பெயரில் விபத்துமேடை அமைத்திருப்பதாக அந்த வேகத்தடையை கடக்கும் ஒட்டுமொத்த வாகன ஓட்டிகளின் கருத்தாக உள்ளது. மேலும் அந்த வேகத்தடையை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மகேந்திரா சிட்டி, சிங்கப்பெருமாள் கோவில் உள்பட பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
- போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் அடிக்கடி மோட்டார் சைக்கிள் திருடும் சம்பவம் நடக்கிறது.
மறைமலைநகர்:
தாம்பரம் மாநகர காவல் ஆணையகரத்திற்கு உட்பட்ட மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மறைமலைநகர், பொத்தேரி, காட்டாங்கொளத்தூர், செட்டிபுண்ணியம், மகேந்திரா சிட்டி, சிங்கப்பெருமாள் கோவில் உள்பட பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் தங்களது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது குறித்து தொடர்ந்து புகார்கள் அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-
தினந்தோறும் மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் உட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடப்படுகின்றன. போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் அடிக்கடி மோட்டார் சைக்கிள் திருடும் சம்பவம் நடக்கிறது.
எனவே தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் உடனடியாக மறைமலைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருடும் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க தனி கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- கூட்டுறவு சார்பதிவாளர்கள் உள்ளடக்கிய நடமாடும் கண்காணிப்பு குழுவும் நியமிக்கப்பட்டு உள்ளது.
- பொது மக்கள் புகார்களை தெரிவிப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:
தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பண்டிகைக்கான ரொக்க பரிசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கும் பணிகளை கண்காணிப்பதற்காக, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பொதுமக்கள் புகார்களை தெரிவிப்பதற்காக தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி, செங்கல்பட்டு வண்டலூர் வட்டங்கள் மற்றும் காட்டாங்கொளத்தூர் வட்டாரத்துக்கு செங்கல்பட்டு சார் ஆட்சியர் (9445000414) அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதே போல், மதுராந்தகம் வட்டம், அச்சிறுப்பாக்கம் வட்டாரத்துக்கு மதுராந்தகம் கோட்டாட்சியர் (9445000415), செய்யூர் வட்டம், சித்தாமூர் வட்டாரத்துக்கு செங்கல்பட்டு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் (99447 25575), செய்யூர் வட்டம் இலத்தூர் வட்டாரத்துக்கு மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (9725307555), திருக்கழுங்குன்றம் வட்டத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் (9500959938), திருப்போரூர் வட்டத்துக்கு கலால் உதவி ஆணையர் (9444939212) ஆகியோர் சிறப்பு கண் காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஒவ்வொரு வட்டத்துக்கும் வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள் உள்ளடக்கிய நடமாடும் கண்காணிப்பு குழுவும் நியமிக்கப்பட்டு உள்ளது.
பொங்கல் பரிசுகளை வழங்கும் போது, ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல்களை தவிர்ப்பதற்காக நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும், பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பணத்தை ரேஷன் கடைகளில் பெற்று கொள்ளலாம். பொங்கல் பரிசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டதும் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு குறுஞ் செய்தி அனுப்பப்படும்.
இது தவிர பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பணம் வழங்கும் பணிகளை கண்காணிக்கவும், பொது மக்கள் புகார்களை தெரிவிப்பதற்காக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 044-27427414, 27427412 ஆகிய எண்களிலும், வட்டங்கள் வாரியாக புகார்களை தெரிவிக்க செங்கல்பட்டு வட்டம்-8637616667, மதுராந்தகம்-82482 12994, செய்யூர்-9597373617, திருக்கழுக்குன்றம்- 9940624877, திருப்போரூர்- 99443 36339, வண்டலூர்- 7708931572 கட்டணமில்லா தொலைபேசி எண். 1967 மற்றும் 18004255901 ஆகிய எண்களிலும் புகார்களை தெரிவிக்கலாம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரிசி பெறும் 3,93,204 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் ரூ.1000 ரொக்கப்பணம் வருகிற 9-ந்தேதி முதல் வழங்கப்பட உள்ளது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு சம்பந்தப்பட்ட தகவல், புகார் ஏதேனும் இருப்பின் அதனை 044-27238225, 9043046100 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
- பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அரிவாளுடன் சென்று மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஞானசேகரன் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
போரூர்:
சென்னை நெற்குன்றம் அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன். பா.ம.க வட்ட துணை செயலாளர்.
இவர் கடந்த மாதம் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரிடம் அவசர தேவைக்காக ரூ.20 ஆயிரம் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். அதை தினசரி ரூ.200 வீதம் கட்டி வருகிறார்.
இந்த நிலையில் ஞானசேகரன் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று விட்டதால் கடந்த ஒரு வாரமாக வெங்கடேசுக்கு பணம் கட்டவில்லை. இதையடுத்து வெங்கடேஷ் தகாத வார்த்தைகளால் பேசி ஞானசேகரன் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் நேற்று சாலி கிராமம் தசரதபுரம் பகுதியில் உள்ள ஞானசேகரன் அலுவலகத்திற்கு அரிவாளுடன் சென்று 'உடனடியாக பணத்தை கட்ட வேண்டும் என்று கூறி மிரட்டல் விடுத்தார்.
பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அரிவாளுடன் சென்று மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஞானசேகரன் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வெங்கடேசை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.






