search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் விடுமுறை: 2-வது முறையாக வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தொட்டது
    X

    தொடர் விடுமுறை: 2-வது முறையாக வண்டலூர் பூங்காவில் பார்வையாளர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தொட்டது

    • கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளால் 2 ஆண்டுகளுக்கு பிறகு பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பழைய நிலைக்கு திரும்பி உள்ளது.
    • பூங்காவில் புதிதாக திறக்கப்பட்டு உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் வெகுவாக கவர்ந்துள்ளதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

    வண்டலூர்:

    வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. வெள்ளைப் புலிகள், வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு, காண்டா மிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

    கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளால் 2 ஆண்டுகளுக்கு பிறகு பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. தினமும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூங்காவுக்கு வந்து செல்கின்றனர். வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கம். தற்போது பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால் வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்து உள்ளது.

    தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாட்களாக பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 17ஆயிரத்தை தொட்டு உள்ளது. இதற்கு முன்பு கொரோனா பரவலுக்கு முந்தைய காலகட்டத்தில் விடுமுறை நாட்களில் இதேபோல் பார்வையாளர்கள் வந்து சென்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின்பு 17 ஆயிரம் பார்வையாளர்கள் வந்து சென்றுள்ளதாக வண்டலூர் பூங்கா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    பூங்காவில் புதிதாக திறக்கப்பட்டு உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் வெகுவாக கவர்ந்துள்ளதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர். பார்வையாளர்கள் வருகை திடீரென அதிகரித்ததால் வண்டலூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால் ஏராளமான கார்கள் சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    Next Story
    ×