search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கல்பட்டு புத்தக திருவிழாவில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள்
    X

    செங்கல்பட்டு புத்தக திருவிழாவில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள்

    • புத்தக திருவிழாவில் மொத்தம் 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
    • முதல் நாளிலேயே ஏராளமான மாணவ-மாணவிகள் வந்து தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதி மன்றம் இணைந்து நடத்தும் புத்தக திருவிழா செங்கல்பட்டு சி.எஸ்.ஐ. அலிசன் காசி மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது.

    இந்த கண்காட்சியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தொலைக்காட்சி மற்றும் செல்போன் காரணமாக புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. இதனால் நூலகத்தில் படிக்க வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. ஒரு காலத்தில் நூலகத்தில் இடம் இல்லாமல் நூலகத்துக்கு வெளியே அமர்ந்தபடியும் பலர் புத்தகம் வாசித்தனர். இப்போது அந்த பழக்கம் குறைந்து விட்டது.

    புத்தகம் வாசிப்பவர்களுக்கு மன அழுத்தம் வராது. தீய பழக்கத்தை நாடி மனம் செல்லாது. நினைவாற்றலையும் வளர்த்துக் கொள்ள முடியும். நல்ல ஒழுக்கம், நல்ல சிந்தனை, நல்ல நடத்தை வளரும். புத்தகம் படிப்பது மட்டுமே மனிதனை வாழ வைக்கும்.

    அறிவு உலகத்தை புத்தகம் வழியாகத்தான் காண முடியும். தொடர்ந்து புத்தகம் வாசிக்கும்போது நினைவாற்றல் பெருகும் என்பதால் மாணவர்கள் புத்தகம் வாசிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த புத்தக திருவிழாவில் மொத்தம் 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. முதல் நாளிலேயே இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் வந்து தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

    இந்த புத்தக திருவிழா வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தக கண்காட்சி திறந்திருக்கும். தினமும் மாலையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

    சிந்தனையை தூண்டும் சிறப்பு பேச்சாளர்கள் காளீஸ்வரன், ஞானசம்பந்தம், பர்வீன் சுல்தானா, நெல்லை ஜெயந்த், இமயம், சண்முக வடிவேல், பாரதி கிருஷ்ணகுமார், பாரதி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

    புத்தக கண்காட்சி தொடக்க விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். இதில் செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாலாஜி, வரலட்சுமி, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×