என் மலர்tooltip icon

    அரியலூர்

    • வாகன விபத்துகளில் 22 பேர் உயிரிழந்தனர்.
    • பொதுமக்களிடையே போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு வகையில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் தாமரைக்குளம்: 22 பேர் சாவு அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான கால கட்டத்தில் அதிவேகம், மது போதை, அஜாக்கிரதை மற்றும் கவன குறைவு காரணமாக இதுவரை 27 இருசக்கர வாகன விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதில் 21 விபத்துகளில் அதிவேகம் மற்றும் வாகனம் கட்டுப்பாடின்றி தானாக கீழே விழுந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆகும். மீதமுள்ள 6 விபத்துகளில் சிக்கியவர்கள் காயம் மற்றும் படுகாயம் அடைந்தனர்.

    அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி போக்குவரத்து போலீசார் அரியலூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்றும் வகையில் பல்வேறு போக்குவரத்து சீர் நடவடிக்கைகள், வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொதுமக்களிடையே போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    எனவே பொதுமக்கள் இருசக்கர வாகனத்தை இயக்கும்போது ஹெல்மெட் அணிந்து, சாலை விதிகளை முறையாக பின்பற்றி பாதுகாப்பாக பயணிக்குமாறும், அரியலூர் மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று அரியலூர் மாவட்ட போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு மாதிரி தேர்வு நடைபெற்றது.
    • 7-ந்தேதி 'நீட்' தேர்வு நடைபெறுகிறது

    அரியலூர்:

    மருத்துவ படிப்பிற்கான 'நீட்' தேர்வு வருகிற 7-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்காக நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளும் 'நீட்' தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளனர். தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவ-மாணவிகள் பயிற்சி மையங்களில் சேர்ந்து 'நீட்' தேர்வுக்கான பயிற்சி பெற்று வருகின்றனர்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளுக்கு 'நீட்' தேர்வு எழுத தமிழக அரசின் பள்ளக்கல்வித்துறை மூலம் அந்தந்த மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஏற்பாட்டில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற 7-ந்தேதி 'நீட்' தேர்வு நடைபெறுவதால், நேற்று அந்த மாணவ-மாணவிகளுக்கு 'நீட்' மாதிரி தேர்வு நடத்தப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

    • வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் விழா நடந்தது.
    • வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்

    அரியலூர்:

    அரியலூர் பெரிய கடை தெருவில் ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அம்மனின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நேற்று பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்தனர். மாலையில் மலர்களால் ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சுவாமி திருவீதி உலா நடந்தது. பெரிய கடைத்தெரு, சின்ன கடைத்தெரு, வெள்ளாளர் தெரு, சத்திரம் வழியாக சுவாமி வந்தபோது வீடுகள் தோறும் பக்தர்கள் வாசலில் கோலமிட்டு அம்மனை வழிபட்டனர்.


    • விக்கிரமங்கலம் அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி விக்கிரமங்கலத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மீண்டும் பள்ளியை அடைந்தது.

    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய பேரணி விக்கிரமங்கலத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மீண்டும் பள்ளியை அடைந்தது. பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் ஏந்திய பதாகைகளுடன் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி சென்றனர் .இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அறிவழகன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா முன்னிலை வகித்தார். முன்னதாக விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியை , ஆசிரியர்கள் மாணவ , மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யபட்டனர்
    • அவர்களிடம் இருந்து பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பருக்கல் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் எழிலரசன் (வயது 43), தர்மராசு (33), சந்திரகாசன் (61), குமார் (45) ஆகிய 4 பேரும் பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.




    • ரெயிலில் அடிபட்டு பெண் பலியானார்
    • இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலுப்பையூர் ரெயில்வே கேட் நல்ல அறிக்கை சாலையில் உள்ள ரெயில்வே கேட் தெற்கே சுமார் 100 மீட்டர் தொலைவில் 2 ரெயில் செல்லக்கூடிய தண்டவாளங்களுக்கு இடையே உள்ள காலி இடத்தில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் ரெயிலில் அடிபட்டு மூளை சிதறி கை, கால்கள் நொறுங்கிய நிலையில் புதர்கள் நிறைந்த பகுதியில் கிடந்தது. இதையடுத்து, ரெயில்வே போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • பயிர் காப்பீடு திட்டத்தில் முந்திரியை சேர்க்க வேண்டும் என அரியலூரில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலிறுத்தினர்
    • இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.அதன்படி அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் செங்கமுத்து பேசும் போது, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், ஏரி, வாரிகளை அளந்து தூர்வார வேண்டும்.

    ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நில அளவீடு செய்யும் நில அளவையர்கள், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் கொடுக்கும் மனுக்களை சீனியார்ட்டி பதிவேடு வைத்து பராமரிக்க வேண்டும் என்றார்.காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் தூத்தூர் தங்க.தர்மராஜன் பேசும் போது, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தற்போது விவசாயிகளிடம் பணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதனை ஆட்சியர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், தானியங்களை விற்பனை செய்யும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் காலம் கடந்து பணம் செலுத்தப்படுகிறது என்றார். எனவே ஒரிரு நாள்களில் பணம் செலுத்த நடவடிக்கை எடுக்கை எடுக்க வேண்டும் என்றார்.விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட அமைப்பாளர் பாலசிங்கம் பேசும் போது, அரியலூர் மாவட்டத்தில் 60சதவீத முந்திரி சாகுபடி நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை காப்பீடு திட்டத்தில் முந்திரியை சேர்க்கப்படவில்லை.

    இதனால் விவசாயிகள் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர்.தற்போது பருவம் தவறி பெய்த மழையால் முந்தரி சாகுபடியில் பூ கருகி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் மற்ற பயிர்களுக்கு காப்பீடு செய்து இழப்பீடு வழங்குவது போல் முந்திரியையும் காப்பீடு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றார்.தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், அவைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    • பெரியநாகலூர், மைக்கேல்பட்டியில் ஓடை தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது
    • அமைச்சர் சிவசங்கர் தொடக்கி வைத்தார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், பெரியநாகலூர் மற்றும் மைக்கேல்பட்டி ஊராட்சிகளில் உள்ள ஓடைகள் தூர்வாரும் பணியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடக்கி வைத்தார். அப்போது அவர் தெரிவித்தாவது:- அரியலூர் மாவட்டத்தில் மருதையாறு வடிநிலக்கோட்டம், திருச்சி கட்டுப்பாட்டில் உள்ள வரத்து வாய்க்கால்கள், பாசன வாய்க்கால்கள், உபரி நீர் வாய்க்கால்கள், ஓடை மற்றும் வடிகால்கள் தூர்வாரும் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    அதற்காக ரூ.3.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அரியலூர் ஒன்றியம், பெரியநாகலூர் ஊராட்சியில், நீர்வளத்துறையின் சார்பில் சிறப்பு தூர்வாரும் பணிகள் திட்டத்தின் கீழ் 3.30 கி.மீ நீளத்துக்கு பெரியநாகலூர் ஓடை ரூ.27 லட்சம் மதிப்பீட்டிலும், தா.பழூர் ஒன்றியம், மைக்கேல்பட்டி ஊராட்சி அருகேயுள்ள சிந்தாமணி ஓடை 5 கி.மீ நீளத்திற்கு ரூ.29 லட்சம் மதிப்பீட்டிலும் தூர்வாரும் பணிகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

    பின்னர் அமைச்சர் சிவசங்கர் தா.பழூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு சென்று அங்கு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களிடம், கிராம ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்து, நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இந்நிகழ்வுகளில் கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்தார். இதில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி செயற்பொறியாளர் சாந்தி, உதவி பொறியாளர்கள் தினகரன், தியாகராஜன், மருதமுத்து மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் தேர்பவனி நடைபெற்றது
    • இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம், திருக்காவலூர் எனும் ஏலாக்குறிச்சியில் புகழ் பெற்ற புனித அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. 1716 ஆண்டு வீரமாமுனிவரால் கட்டப்பட்டு, தமிழக அரசின் ஆன்மீக சுற்றுலா தளங்களில் ஒன்றான இந்த பழமை வாய்ந்த ஆலயத்தில் 53 அடி உயரமுள்ள பித்தளையிலான மாதா சொரூபம், ஜெபமாலை பூங்கா அமைந்து உள்ளது தனிச்சிறப்பு. இந்த ஆலயத்தின் 292-ம் ஆண்டு திருவிழா கடந்த ஏப்ரல் 22 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது. இதற்காக மாலை 7 மணிக்கு கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் தேர்திருவிழா சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பங்குதந்தை அதிபர் தங்கசாமி மின்விளக்குகளுடன் அலங்கரிக்கபட்ட அலங்கார தேரை மந்திரித்து தேர்பவனியை தொடங்கி வைத்தார். வாணவேடிக்கை , வாத்தியங்கள் முழங்க தேர்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

    தேர்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் வேண்டுதலாக ஆடு, கோழி, விளை நிலங்களில் விளைந்த விளைபொருட்களை காணிக்கையாக செலுத்தினர். திருவிழா குறித்து பங்குத்தந்தை கூறுகையில், ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

    மேலும் பக்தர்கள் தங்களின் உடல் நோயை தீர்க்க, மந்திரிக்கப்பட்ட மாதா எண்ணையையும், மாதா குளத்து மண்ணையும் பெற்று செல்கின்றனர், இன்று இரவு 7 மணிக்கு உய்யகொண்டான் திருமலை பங்குதந்தை அம்புரோஸ் தலைமையில் தேர்திருப்பலியும் தேர்பவனியும் நடைபெறும். மே1-ந்தேதி காலை 6 மணிக்கு பங்குதந்தை தங்கசாமி மற்றும் உதவி பங்குதந்தை ஞான அருள்தாஸ் ஆகியோரால் கொடி இறக்கம் நடைபெற்று திருவிழா நிறைவடைய உள்ளது என்று கூறினார்.

    திருவிழாவை முன்னிட்டு டி.எஸ்.பி. சங்கர்கணேஷ் தலைமையில், திருமானூர் இன்ஸ்பெக்டர் அனிதா ஆரோக்கியமேரி மேற்பார்வையில் 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருமானூர் எஸ் ஐ கட்டுப்பாட்டில் 30 சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்றது. திருமானூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மேகநாதன் தலைமையில் மருத்துவக்குழு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

    • உடையார்பாளையத்தில் இளம்பெண் மாயமானார்
    • இது குறித்து போலீஸ் சிறப்பு எஸ்.ஐ. சுமதி வழக்கு பதிந்து மாயமான ஜனனியை தேடி வருகிறார்.

    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே த.மேலூர் நடு தெருவை சேர்ந்த பழனிமுத்து மகள் ஜனனி(வயது 22). இவர் கூவத்தூர் அரசு ஐடிஐயில் எலக்ரிசன் படித்து முடித்து விட்டு நெய்வேலி என்எல்சி தொழில் பழகுநராக பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விடுப்பில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். வீட்டில் தூங்கி கொண்டிருந்த அவரை காலை காணவில்லை. பின்னர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஜனனி தாய் விஜயா கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சிறப்பு எஸ்.ஐ. சுமதி வழக்கு பதிந்து மாயமான ஜனனியை தேடி வருகிறார்.

    • ஆராய்ச்சி படிப்புகளில் மாணவர்கள் அதிகம் நாட்டம் செலுத்த வேண்டும் என அரியலூர் புத்தக திருவிழாவில் தொல். திருமாவளவன் பேசினார்
    • படிக்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கு எங்கிருந்தாலும் புத்தககம் வீடு தேடி வரும்

    அரியலூர்:

    அரியலூரில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவின் 6-நாம் நாளான இன்று தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது,தமிழக மக்கள், இளைஞர்களிடையே படிக்கும் வேட்கை உருவாகியுள்ளன என்பதை இந்த புத்தகத்திருவிழா உணர்த்துகிறது.ஆகையால் தான் நாவல்கள், சிறுகதைகள் என ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நாள்தோறும் வெளியாகி கொண்டிருக்கிறது. அறிவியல், ஆராய்ச்சி படிப்புகளில் அதிகம் நாட்டம் செலுத்த வேண்டும்.

    படிக்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கு எங்கிருந்தாலும் புத்தககம் வீடு தேடி வரும். படிக்க வேண்டும் என்ற ஈடுபாடு அனைவருக்கும் வேண்டும். புத்தகங்களை படிப்பதால் வீடு மட்டுமன்றி, நாடும் வளர்ச்சி அடையும்.பள்ளிகளில் பாடபுத்தகங்கள் வரையறுக்கப்படுகின்றன. இதற்காக வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்படுகின்றன. பள்ளியில் இதனை தேர்வு செய்து பயிலும் மாணவர்கள் தற்போது அதிகம் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் தான் இந்த மாற்றம் உள்ளது. முன்பெல்லாம் படிப்பு என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளாதது.

    அப்போது, பெற்றோருக்கும் அந்த உந்துதல் இல்லை. படிக்காமல் இருக்கின்றோமே என்ற எண்ணம் ஏற்படவும் இல்லை.ஆனால், தற்போது பள்ளி செல்லவில்லை என்றால் மதிப்பு இல்லை. பாடத்திட்டங்களை தாண்டி படிக்கும் மாணவர்கள் உயர்ந்த நிலையை அடையலாம். பாடத்திட்டங்களை தாண்டி படித்தவர்கள் பெரும் சாதனைகளை படைத்துள்ளனர். அந்த காலக்கட்டத்தில் கலாச்சாரம் எவ்வாறு இருந்தது என்பதை எல்லாம் உணர வரலாறு புத்தகங்களை அனைவரும் படிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • திருமானூர் ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது
    • திருமானூர் ஒன்றியத்தில் முதல் கட்டமாக 56 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சித்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு நடைபெற்று வந்தது.

    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் பள்ளி சாரா மற்றும் வயது முதிர்ந்தோர்களுக்கான புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தின் மூலம் திருமானூர் ஒன்றியத்தில் முதல் கட்டமாக 56 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சித்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு நடைபெற்று வந்தது.இந்த திட்டத்தின் மூலம் ஒன்றிய அளவில் சிறந்த பள்ளியாக அணிமங்கலம் கிராமம் ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி சிறப்பாக பணியாற்றியதை பாராட்டி பள்ளி ஆசிரியர் பிரபாவிற்கு கேடயம் வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜெய பாரதி தலைமை வகித்து தலைமை ஆசிரியருக்கு பாராட்டு சாறுகளை வழங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மேகலா, பயிற்றுனர் மோகன், செந்தில், குமார் மாரிமுத்து, உதவி ஆசிரியர் வெங்கடேசன், தன்னார்வலர்கள் பாலமுதா, பள்ளி மேலாண்மை குழு தலைவி தமிழரசி மற்றும் ஊர் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி தலைமை ஆசிரியர் பிரபா ஏற்பாடு செய்திருந்தார்.


    ×