என் மலர்tooltip icon

    அரியலூர்

    ஜெயங்கொண்டம் அருகே காடுவெட்டி குருவின் மகன், மருமகன் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குரு என்ற குருநாதன். மாநில வன்னியர் சங்க தலைவர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர் கடந்த 2018-ம் ஆண்டு மே 25-ந்தேதி உடல்நலக் குறைவால் இறந்தார். 

    அவரது இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊடரங்கு அமலில் இருப்பதால் காடு வெட்டி குருவின் சமாதி மற்றும் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்த பா.ம.க.வினர், வன்னியர் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

    இதற்கிடையே நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணிக்கு காடுவெட்டியில் உள்ள குருவின் சமாதியில் அவரது மகன் கனலரசன், குருவின் தாய் கல்யாணி, மருமகன் மனோஜ், இவரது அண்ணன் மதன் ஆகியோர் மட்டும் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர்.

    ஊரடங்கு அமலில் இருந்தபோதும் வன்னியர் சங்கத்தினர், பா.ம.க.வினர் ஏராளமானோர் வந்து அவ்வப்போது அஞ்சலி செலுத்தினர். நேற்று இரவு வரை ஒவ்வொருவராக வந்த வண்ணம் இருந்தனர். அதே போல் வெளியூரை சேர்ந்த அருண்குமார் என்பவர்  இருசக்கர வாகனத்தில் காடுவெட்டி கிராமத்தில் இருந்து சென்று கொண்டிருந்தார்.

    நள்ளிரவில் 12.30 மணியளவில் ஊர் எல்லையில் அவரை 7 பேர் கும்பல் மறித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை சரமாரியாக தாக்கிய கும்பல் அவரது வாகனத்தையும் பறித்துக் கொண்டது. அவர்களிடம் இருந்து தப்பிய அருண்குமார் காடுவெட்டி குருவின் மகன் கனலரசனிடம் சென்று தெரிவித்தார்.

    உடனே கனலரசன், மனோஜ், மதன் ஆகிய 3 பேரும் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்றனர். அங்கிருந்த 7 பேரும் சேர்ந்து கனலரசனை அரிவாளால் வெட்ட பாய்ந்தனர். தடுத்த போது அவருக்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும் மனோஜ், மதன் ஆகியோரையும் அந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர்.

    தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பின்னர் அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த 3 பேரும் ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    நள்ளிரவில் அங்கு விரைந்து வந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. மோகன்தாஸ், மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து காடுவெட்டி குருவின் தாய் கூறுகையில், பா.ம.க.வினரின் தூண்டுதலால்தான் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. என் மகனை அழித்தது போல் எனது குடும்பத்தையும் அழிக்க பார்க்கிறார்கள். தாக்குதல் நடத்திய 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
    செந்துறை அருகே தாறுமாறாக ஓடிய லாரி மோதி 2 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் வேல்முருகன், கலையரசன், தங்கவேலு, கொளஞ்சிநாதன். விவசாயிகளான இவர்கள் 4 பேரும் அங்குள்ள டீக்கடை அருகே நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு ஒட்டக்கோவில் பகுதியில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலைக்கு லாரி வந்து கொண்டிருந்தது.

    லாரியை சிதம்பரம் அருகே உள்ள வையூர் கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஓட்டி வந்தார். லாரி மருவத்தூர் மாரியம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்த போது லாரி தாறுமாறாக ஓடி வருவதை சாலையோரம் பேசிக்கொண்டிருந்த வேல்முருகன் கவனித்து விட்டார். உஷாரான அவர் உடனடியாக அருகில் நின்று கொண்டிருந்த கலையரசனை தள்ளி விட்டு விட்டு அருகில் நின்ற கொளஞ்சி நாதன், தங்கவேல் ஆகியோரின் சட்டையை பிடித்து இழுத்து காப்பாற்ற முயன்றார். ஆனால் அதற்குள் கண் இமைக்கும் நேரத்தில் அந்த லாரி 2 விவசாயிகள் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதனை கண்ட கிராம மக்கள் விரட்டி சென்று லாரியை மருவத்தூர் முனியப்பா கோவில் அருகே வழிமறித்து சிறைபிடித்தனர். அதன் பின்னர் செந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்து லாரியையும் ஓட்டுநரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் செந்தில் குமாரை கைது செய்தனர்.

    கடந்த ஒரு வாரமாக அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் நேற்று ஒருவர் பாதிக்கப்பட்டதன் மூலம் மாவட்டத்தில் வைரசால் பாதித்தோர் எண்ணிக்கை 356 ஆக உயர்ந்துள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 355 ஆக இருந்தது. இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் இருந்து அரியலூர் மாவட்டம் செந்துறைக்கு வந்த 45 வயதான ஆண் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.

    கடந்த ஒரு வாரமாக அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏதும் இல்லாத நிலையில் நேற்று ஒருவர் பாதிக்கப்பட்டதன் மூலம் மாவட்டத்தில் வைரசால் பாதித்தோர் எண்ணிக்கை 356 ஆக உயர்ந்துள்ளது.

    செந்துரை அருகே மாற்றுத்திறனாளி வாகனம் மீது மோதிய லாரியை கண்டுபிடிக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங் குழி கிராமத்தைச்சேர்ந்தவர் கருப்பன் மகன் கருணாநிதி. இவர் உடல் ஊனமுற்றவர். இவர் தனது மூன்று சக்கர மொபட்டில் அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று வண்டியை ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி விட்டு காலைக்கடன் கழித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது செந்துறையில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வந்த சிமெண்ட் லாரி அந்த மூன்று சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஜெயங்கொண்டம் செந்துறை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக்காரர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். லாரியை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் செந்துறை ஜெயங்கொண்டம் சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஜெயங்கொண்டம் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆண்டிமடம்:

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் மற்றும் போலீசார் தஞ்சாவூரான்சாவடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அப்பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமம் ரோட்டுத்தெருவை சேர்ந்த ரமேஷ்குமார்(வயது 28) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம் அருகே ஆட்டோ டிரைவரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை(வயது 62). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று தான் வளர்த்து வரும் கோழிகளை காணவில்லை என அப்பகுதிகளில் தேடிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் லோகநாதன் மகன் கார்த்திக்(23), குமார் மகன் தேவராஜ்(19) ஆகிய 2 பேரும் சேர்ந்து முன்விரோதம் காரணமாக பிச்சைபிள்ளையை தகாதவார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர்.

    இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் பிச்சைபிள்ளை புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இலந்தைகூடத்தில் காவலாளி கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் காந்திநகரை சேர்ந்தவர் பிரான்சிஸ்(வயது 41). இவர் இலந்தைகூடம் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்றும் வழக்கம்போல் பணிக்கு சென்றுள்ளார். நேற்று நெல் பிடிக்கும் பணி எதுவும் நடக்காததால் பிரான்சிஸ் மட்டும் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் அங்கு பணி புரியும் ஒருவர் நெல் கொள்முதல் நிலையத்திற்குள் சென்று பார்த்தார். அப்போது பிரான்சிஸ் மின் வயரில் தூக்கில் தொங்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து உடனே வெங்கனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரான்சிஸ்சின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் பிரான்சிஸ் உயிரிழந்ததை கேட்டு அங்கு வந்த அவரது குடும்பத்தினர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரான்சிஸ்கும், நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை பார்த்த சுமை தூக்குபவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. அவர்கள்தன் என் மகனை அடித்து தூக்கில் தொங்க விட்டுள்ளனர். எங்களுக்கு இந்த சாவில் மர்மம் உள்ளது. சுமைதூக்குபவர்களை கைது செய்து விசாரியுங்கள் என போலீசாரிடம் கூறி கதறி அழுதனர். இதுகுறித்து வெங்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    விக்கிரமங்கலம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள முனியன்குறிச்சி மேல தெருவை சேர்ந்தவர் முருகேசன்(வயது 39). இவரது மனைவி பரிமளா(35). அதே ஊரை சேர்ந்தவர் பரிமளாவின் தங்கை லட்சுமி. இவர்களின் இருவர் குடும்பத்திற்கும் இடையே பாதை பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பரிமளாவும், இவரது கணவர் முருகேசனும் பிரச்சினைக்குரிய இடத்திற்கு அருகே கழிவறை கட்டுவதற்கு சென்றுள்ளனர். அப்போது பரிமளாவின் தங்கை லட்சுமி கழிவறை கட்டக்கூடாது என்று கூறியுள்ளார்.

    இதனால் மனமுடைந்த பரிமளா கடந்த 17-ந் தேதி தனது வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டை பூட்டி கொண்டு வீட்டினுள்ளே தூக்குப்போட்டு கொண்டார். இதை அறிந்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கதவை உடைத்து பரிமளாவை காப்பாற்றி சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பரிமளா பின்பு மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பரிமளா சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் பரிமளாவின் தந்தை கோவிந்தராஜ் அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    உடையார்பாளையம் அருகே விவசாயியை தாக்கிய அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் பொட்டகொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது 62). விவசாயியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த எழிலரசன்(50) என்பவருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த எழிலரசன் மற்றும் அவரது அண்ணன் விஸ்வநாதன்(65) ஆகிய 2 பேரும் சேர்ந்து ராமலிங்கத்தை தாக்கியுள்ளனர். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் ராமலிங்கம் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எழிலரசன், விஸ்வநாதன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மீன்சுருட்டி அருகே போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக 25 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மீன்சுருட்டி:

    கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தடையை மீறி அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள வீர சோழபுரம் கடைவீதியில் வீரசோழபுரம் கிராமத்தை சேர்ந்தவர்களும், அருகில் உள்ள காமராஜ் நகர் தெருவை சேர்ந்தவர்களும் பொது மக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக கபிலன்(வயது 25), வீரபாண்டியன் (37), சுபாஷ்(19), அரள்வேந்தன்(22), சந்தோஷ்குமார்(19), ராஜசேகர்(24), சின்னசாமி (21),  ஹரிபிரசாத்(27) உள்பட 25 பேர் அடங்கிய இரு தரப்பினர் மீது மீன்சுருட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் 25 பேரையும் உடையார்பாளையம் கோட்டாட்சியர் விசாரணைக்கு அனுப்பி வைத்தனர்.
    கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் சாராயம் தயாரிக்க ஊறல் போட்ட 6 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில், மாவட்ட மது விலக்கு அமலாக்கபிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) கண்ணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சில்லக்குடி கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் சாராயம் தயாரிக்க ஊறல் போட்ட வடுகபாளையத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 35), சில்லக்குடி தெற்கு தெருவை சேர்ந்த கலியமூர்த்தி (52), கந்தசாமி (27), தஞ்சாவூர் மாவட்டம் அம்மன்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணி (48) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 லிட்டர் சாராய ஊறல், 3 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். ஆண்டிமடம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆண்டிமடம்-விருத்தாச்சலம் சாலையில் உள்ள அரசு மருத்துவமனையின் பின்புறம் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த குரவன் குட்டையை சேர்ந்த ரமேஷ் (50), சுப்புராஜ் (23) ஆகிய 2 பேரை ஆண்டிமடம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 837 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அந்த 6 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அவர்கள் தொடர்ந்து இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதால் சிறையில் இருக்கும் 6 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் துணை சூப்பிரண்டுகள் கண்ணன் (மதுவிலக்கு பிரிவு), மோகன்தாஸ் (ஜெயங்கொண்டம் சரகம்) ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் பரிந்துரை செய்தனர். அவர்களின் பரிந்துரையை ஏற்ற போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் இது தொடர்பாக கலெக்டரிடம் மேற்பரிந்துரை செய்தார். கலெக்டர் ரத்னாவும் கைது செய்யப்பட்ட 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் இருந்த சுரேஷ், கலியமூர்த்தி, கந்தசாமி, சுப்பிரமணி, ரமேஷ், சுப்புராஜ் ஆகிய 6 பேரிடம் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்காக உத்தரவின் நகலை காண்பித்து, அவர்களிடம் கையெழுத்து வாங்கினர். ஏற்கனவே சாராயம் காய்ச்சிய வழக்கில் அரியலூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட 27 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.
    ஜெயங்கொண்டம் அருகே மகன் சாலையில் விழுந்தது கூட தெரியாமல் போதையில் தந்தை மோட்டார் சைக்கிள் ஓட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 38). இவரது மகன் அன்பு அமுதன்(4). நேற்று செல்வம் மோட்டார் சைக்கிளில் மகன் அன்பு அமுதனுடன் கடாரங்கொண்டான் கிராமத்தில் உறவினர் நினைவுநாள் நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கு மது அருந்திய அவர் மகனுடன் ஊருக்கு புறப்பட்டார். சிதம்பரம்-ஜெயங்கொண்டம் சாலை புதுச்சாவடி அருகே சென்றபோது செல்வத்திற்கு போதை தலைக்கேறவே சுய நினைவை இழந்து வாகனத்தை ஓட்டினார்.

    அப்போது முன்னால் அமர்ந்திருந்த அன்பு அமுதன் தவறி கீழே விழுந்தான். அது கூட தெரியாமல் போதை மயக்கத்தில் செல்வம் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார். அந்த வழியாக சென்ற சின்ன வளையம் கிராமத்தை சேர்ந்த ராஜா, அன்பு அமுதனை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். செல்வம் வீடு திரும்பாததால் அவரை தேடியபோது, குழந்தை விழுந்த அரை கிலோ மீட்டர் தூரம் தள்ளி முட்புதரில் நினைவிழந்து கிடந்தார். அவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
    ×