search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காயம் அடைந்த நபர்கள்
    X
    காயம் அடைந்த நபர்கள்

    காடுவெட்டி குருவின் மகன், மருமகன் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு

    ஜெயங்கொண்டம் அருகே காடுவெட்டி குருவின் மகன், மருமகன் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குரு என்ற குருநாதன். மாநில வன்னியர் சங்க தலைவர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர் கடந்த 2018-ம் ஆண்டு மே 25-ந்தேதி உடல்நலக் குறைவால் இறந்தார். 

    அவரது இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊடரங்கு அமலில் இருப்பதால் காடு வெட்டி குருவின் சமாதி மற்றும் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்த பா.ம.க.வினர், வன்னியர் சங்கத்தினர், அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

    இதற்கிடையே நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணிக்கு காடுவெட்டியில் உள்ள குருவின் சமாதியில் அவரது மகன் கனலரசன், குருவின் தாய் கல்யாணி, மருமகன் மனோஜ், இவரது அண்ணன் மதன் ஆகியோர் மட்டும் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர்.

    ஊரடங்கு அமலில் இருந்தபோதும் வன்னியர் சங்கத்தினர், பா.ம.க.வினர் ஏராளமானோர் வந்து அவ்வப்போது அஞ்சலி செலுத்தினர். நேற்று இரவு வரை ஒவ்வொருவராக வந்த வண்ணம் இருந்தனர். அதே போல் வெளியூரை சேர்ந்த அருண்குமார் என்பவர்  இருசக்கர வாகனத்தில் காடுவெட்டி கிராமத்தில் இருந்து சென்று கொண்டிருந்தார்.

    நள்ளிரவில் 12.30 மணியளவில் ஊர் எல்லையில் அவரை 7 பேர் கும்பல் மறித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை சரமாரியாக தாக்கிய கும்பல் அவரது வாகனத்தையும் பறித்துக் கொண்டது. அவர்களிடம் இருந்து தப்பிய அருண்குமார் காடுவெட்டி குருவின் மகன் கனலரசனிடம் சென்று தெரிவித்தார்.

    உடனே கனலரசன், மனோஜ், மதன் ஆகிய 3 பேரும் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்றனர். அங்கிருந்த 7 பேரும் சேர்ந்து கனலரசனை அரிவாளால் வெட்ட பாய்ந்தனர். தடுத்த போது அவருக்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும் மனோஜ், மதன் ஆகியோரையும் அந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர்.

    தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. பின்னர் அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த 3 பேரும் ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    நள்ளிரவில் அங்கு விரைந்து வந்த அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. மோகன்தாஸ், மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து காடுவெட்டி குருவின் தாய் கூறுகையில், பா.ம.க.வினரின் தூண்டுதலால்தான் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. என் மகனை அழித்தது போல் எனது குடும்பத்தையும் அழிக்க பார்க்கிறார்கள். தாக்குதல் நடத்திய 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
    Next Story
    ×