என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூர் அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான போலீசார் கோவிந்தபுத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கோவிந்தபுத்தூர் மேலத்தெரு பகுதியை சேர்ந்த ராமர் மனைவி பூங்கொடி(வயது 37) என்பவர் வீட்டில் சோதனை செய்தனர். இதில் அவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து பூங்கொடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    அரியலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 381 பேர் பாதிக்கப்பட்டிருந்ததில், 363 பேர் சிகிச்சை பெற்று மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பினர். மீதமுள்ள 18 பேரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்ட எருதுகாரன்பட்டியை சேர்ந்த 64 வயதுடைய முதியவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ஒரு வாலிபருக்கும், ராஜபுரத்தை சேர்ந்த 35 வயதுடைய ஒரு வாலிபருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதில் 2 பேர் திருச்சி அரசு மருத்துவமனையிலும், ஒருவர் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 143 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி பெரம்பலூர், திருச்சி, சென்னை, அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் சிகிச்சை பெற்று, குணமடைந்த 141 பேர் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 2 பேர் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் இருந்து பெரம்பலூர் வந்த குன்னம் தாலுகா அசூர் கிராமத்தை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்.
    ஆண்டிமடம், மீன்சுருட்டியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.
    ஆண்டிமடம்:

    ஆண்டிமடம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கோதண்டராமன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ஆண்டிமடம், ஓலையூர், பாப்பாகுடி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான ஆண்டிமடம், விளந்தை, கவரப்பாளையம், பெரியகிருஷ்ணாபுரம், வரதராஜன்பேட்டை, அகரம், அழகாபுரம், சிலம்பூர், திராவிடநல்லூர், சிலுவைச்சேரி, காட்டாத்துர், அய்யூர், காங்குழி, கூவத்தூர், குளத்தூர், ராங்கியம், பெரியகருக்கை, நாகம்பந்தல், ஸ்ரீராமன், ஓலையூர், விழுதுடையான், பெரியாத்துகுறிச்சி, மேலணிக்குழி, பாப்பாகுடி, காடுவெட்டி, மீன்சுருட்டி, பிள்ளையார்பாளையம், குலோத்துங்கநல்லூர், தென்னவநல்லூர், வேம்புக்குடி, அழகர்கோவில், சலுப்பை, வெத்தியார்வெட்டு, இருதயபுரம், இளையபெருமாள்நல்லூர், கங்கைகொண்டசோழபுரம், வீரபோகம், காட்டுக்கொல்லை, நெட்டலக்குறிச்சி, வீரசோழபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 
    அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை அருகே ரூ.45.34 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
    அரியலூர்:

    அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை அருகே ரூ.45.34 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலம், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் சுத்தமல்லி கிராமத்தில் ரூ.1.23 கோடி மதிப்பில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    தொடர்ந்து ரெயில்வே மேம்பாலம் மற்றும் சுத்தமல்லி உயர்மட்ட பாலத்தினை அரசு தலைமைக்கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், மாவட்ட கலெக்டர் ரத்னா பார்வையிட்டு பாலத்தில் போக்குவரத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    அப்போது அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் கூறுகையில், இந்த ரெயில்வே பாலம் திறக்கப்படுவதால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள வாலாஜாநகரம், பளுவூர், ஆத்தூர், வாரணவாசி, அம்மாகுளம், தாமரை குளம், மேத்தால் போன்ற கிராமங்களும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், அல்லிநகரம் , மேலமாத்தூர், மருதையான்கோவில், கூத்தூர், கொளக்காநத்தம், புதுவேட்டக்குடி போன்ற பகுதிகளும் பயன்பெறும்.

    இப்பாலத்தினால் சுற்று வட்டாரத்திலுள்ள ஏறக்குறைய 2.20 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள். இதே போல் தா.பழூர் ஊராட்சி ஒன்றியம் சுத்தமல்லி ஊராட்சியில் ரூ.1.23 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தினால் சுற்று வட்டார பகுதி மக்கள் பயன்பெறுவார்கள் என்றார் .

    நிகழ்ச்சிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் சந்திரசேகர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பழனிசாமி, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் அசோகன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் தஞ்சாவூர் சத்தியபிரகாஷ், கோட்டப்பொறியாளர் சர்புதீன், ராமச்சந்திரன், உதவி கோட்டப்பொறியாளர் ராஜா, நடராஜன், உதவிப் பொறியாளர் எழிலரசன், நடராஜன், ஆர்.டி.ஓ. பாலாஜி, தாசில்தார் சந்திரசேகர், ஊராட்சி ஆணையர் குமரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரேம்குமார், சிவா, கூட் டுறவு பால் சொசைட்டி துணை தலைவர் பாஸ்கர், நகர வங்கி தலைவர் சங்கர், கோவிந்தபுரம் கூட்டுறவு வங்கி தலைவர் செல்வராஜ், நகர செயலாளர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    திருமானூர் அருகே தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரபா கொரோனா நோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களின் வீடு, வீடாக சென்று முகக்கவசம், சானிடேசர் மற்றும் உணவு பொருட்கள் வழங்கினார்

    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அண்ணிமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரபா கொரோனா நோய் விழிப்புணர்வுஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களின் வீடு, வீடாக சென்று மாஸ்க் , சானிடேசர் மற்றும் உணவு பொருட்கள் வழங்கினார்

    மேலும் அந்த கிராமத்தில் உள்ள தூய்மைபணியாளர்களுக்கும் துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் நிவாரண உணவு பொருட்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவி தமிழரசி தலைமை வகித்தார்.

    அரியலூர் அருகே தொகுப்பு வீடு இடிந்து 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சுத்தமல்லி புளியங்குடி கிராமம் இருளர் தெருவை சேர்ந்தவர் செல்வராசு. இவரது மகன் பாண்டியன் (வயது 29), கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. அவரது மனைவி தேவி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். அரசு சார்பில் கட்டி கொடுக்கப்பட்ட தொகுப்பு வீட்டில் அவர்கள் வசித்து வந்தனர்.

    நேற்றிரவு பாண்டியனுக்கும், உறவினர் குமார் என்பவரின் மகன் கருப்புசாமி (16) என்பவருக்கும் உணவு பரிமாறி விட்டு பாண்டியன் மனைவி வெளியே சென்று விட்டார்.

    அப்போது வீட்டின் கான்கிரீட் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் பாண்டியன், கருப்பு சாமி 2 பேரும் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக்கொண்டனர். பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.

    அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு 2 பேரையும் மீட்டனர். அப்போது கருப்புசாமி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானது தெரிய வந்தது.

    இதையடுத்து பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக சுத்தமல்லி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். பாண்டியன் மனைவி வீட்டில் இருந்து வெளியே சென்றதால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இல்லையென்றால் அவரும் பலியாகி இருப்பார். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொகுப்பு வீடு இடிந்து 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மீன்சுருட்டி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த விவசாயி மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள காடுவெட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 58). விவசாயி. இவர் கடந்த 22-ந் தேதி மாலை தனது வீட்டின் பின்புறம் உள்ள மாமரத்தில் ஏறி மாங்காய் பறித்தபோது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவரது உறவினர் ராசு (38) கொடுத்த புகாரின் பேரில், மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வளையாபதி வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
    செந்துறை பகுதியில் உள்ள நீர் வழித்தடங்களில் சிமெண்டு ஆலை லாரி நிர்வாகம் அமைத்து இருந்த பாதைகளை ஊராட்சி மன்ற தலைவர்கள் அதிரடியாக அகற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தில் ஒரு தனியார் சிமெண்டு ஆலையின் சுண்ணாம்புக்கல் சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்திலிருந்து சுண்ணாம்புக்கல் ஏற்றிச்செல்வதற்காக மற்றொரு பாதைக்காக அனுமதி பெற்று சுரங்கம் தோண்டினர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே மாற்றுப்பாதையில் சென்று வந்தனர். இந்த நிலையில் அவர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவே அவர்கள் நல்லாம்பாளையம், இலங்கைச்சேரி உள்ளிட்ட விவசாய நிலங்கள் மற்றும் நீர் வழித்தடம் ஆகியவற்றை ஆக்கிரமித்து லாரிகளை இயக்க முயற்சி செய்தனர்.

    இதனை அப்பகுதி விவசாயிகள் கடந்த 2015-ம் ஆண்டு முதல் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி தடுத்து வந்த நிலையில், விவசாயிகளை மிரட்டி அத்துமீறி லாரிகளை இயக்கி வந்தனர். கடந்த மார்ச் மாதம் இப்பகுதியில் ஆய்வுக்கு வந்த மத்திய நீர்வள ஆய்வு விஞ்ஞானி ராஜ்கிஷோர்முகந்தியிடம் விவசாயிகள் புகார் செய்தனர். அதனை தொடர்ந்து நேரில் வந்து ஆய்வு செய்த விஞ்ஞானி மாவட்ட கலெக்டர் கூட்டத்தில் சிமெண்டு ஆலைகளுக்கான லாரிகளின் அத்துமீறல் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்றார். ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை.

    இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களையும், அனைத்து துறை அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து விவசாயிகள் சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஊராட்சி மன்ற தலைவர்களிடம் அப்பகுதி பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். மேலும் கிராம சபை கூட்டங்களில் அதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதனை தொடர்ந்து அதிரடியாக செந்துறை ஊராட்சி மன்ற தலைவர் செல்லம், கடம்பன் நல்லாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கொளஞ்சிநாதன், ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் அதிரடியாக சிமெண்டு ஆலை லாரி நிர்வாகங்கள்நீர் வழித்தடங்களில் பாதை அமைத்து லாரிகளை இயக்கி வந்த பாதைகளை பொக்லைன் எந்திரம் மூலம் துண்டித்தனர். மேலும் இனிமேல் இந்த பாதையில் சிமெண்டு ஆலை லாரிகளை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர்களின் இந்த அதிரடி நடவடிக்கையால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்க பட்டு உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    அரியலூர் நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள்,பருப்பு,சமையல் எண்ணை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை திருமாவளவன் எம்.பி. வழங்கினார்.

    அரியலூர்:

    அரியலூர் நகராட்சியில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் சிதம்பரம் மக்களவை உறுப்பினரும்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் கலந்து கொண்டு,தனது சொந்த நிதியில் இருந்து அரியலூர் நகராட்சியில் பணியாற்றும் 250 தூய்மைப் பணியாளர்களுக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறிகள்,பருப்பு,சமையல் எண்ணை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    செந்துறை அருகே 2 விவசாயிகளின் மோட்டார் சைக்கிள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பெரும்பாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வராஜ் மற்றும் ஆதிமூலம். இவர்கள் 2 பேரும் நேற்றுமுன்தினம் பெரும்பாண்டி நமங்குணம் சாலையில் உள்ள தங்களது வயலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் 2 மோட்டார் சைக்கிளையும் சாலையோரம் நிறுத்திவிட்டு வயலுக்கு சென்று களை எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    பின்னர் வேலைமுடிந்ததும் வீட்டிற்கு செல்லரோட்டிற்கு வந்து தங்களதுமோட்டார் சைக்கிளை பார்த்த போது அவைகள் மர்மநபர்களால் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அவர்கள் 2 பேரும் செந்துறை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    இதேபோன்று செந்துறை பகுதிகளில் ஏராளமான இடங்களில் வயல் வேலைகளில் ஈடுபடும் விவசாயிகளின் இருசக்கர வாகனங்களை குறிவைத்து மர்மகும் பல் திருடி வருகிறது இதனால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். ஆகையால் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலையிட்டு இந்த திருட்டு கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் ரெயில் நிலைய 1வது நடைமேடையில் எஸ்.ஆர்.எம்.யு, ஏ.ஐ.ஆர்.எப் ஆகியதொழிற் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அரியலூர்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் ரெயில் நிலைய 1வது நடைமேடையில் எஸ்.ஆர்.எம்.யு, ஏ.ஐ.ஆர்.எப் ஆகியதொழிற் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.ஆர்.எம்.யூ சங்கத்தின் திருச்சி கோட்ட உதவி செயலர் செல்வகுமார் தலைமை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில், ரெயில்வே துறையை தனியார்மய மாக்குவதை கைவிட வேண்டும், விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடியைக்காரணம் காட்டி 18 மாதத்துக்கான பஞ்சப் படியை நிறுத்துவதை கைவிட வேண்டும், தொழிலாளர்கள் நல லேபர் கோடு என்ற பெயரில் போராடிபெற்ற தொழிலாளர்கள் நல உரிமையை பறிக்கக்கூடாது, இதற்கு முன்னர் இருந்த தொழிலாளர் நலச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    அரியலூர் மாவட்டத்தில் மத்திய குழுவினர், கலெக்டர் ரத்னா தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
    அரியலூர்:

    கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளை ஆய்வு மேற்கொள்ள மத்திய குழு தமிழகம் வந்துள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்துள்ள புதுச்சேரி ஜிப்பர் மருத்துவக்கல்லூரி டாக்டர் தினேஷ்குமார் தலைமையிலான மத்திய குழுவினர், கலெக்டர் ரத்னா தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியில் அரசு நடைமுறைப்படுத்தி வரும் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறதா? என்பது குறித்தும் மத்திய குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் பொது மக்களிடம் விழிப்புணர்வு உள்ளதா? என பொதுமக்களிடம் கேட்டறிந்தனர். மேலும் டாக்டர் தினேஷ்குமார் அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு நேரடியாக சென்று, அங்கு நோய் தொற்று உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் பற்றியும், அவர்களுக்கு எந்த வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன என்பதையும் கேட்டறிந்தார். பரிசோதனை நிலையம், காய்ச்சல் வார்டு ஆகிய இடங்களிலும் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செந்துறை தாலுகா பெரியாக்குறிச்சி கிராமத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார். மேலும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து டாக்டர்களிடமும், மருத்துவ பணியாளர்களிடமும் கேட்டறிந்தார். அப்பகுதிகளில் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டு வரும் பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை பார்வையிட்டு, அனைத்து பாதுகாப்பு நடவடிக்கை பணிகளும் நடைபெற்று வருகிறது என்றார்.

    ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர் ரவிசங்கர், டாக்டர்கள் ரமேஷ், முகமது ரியாஷ், மணிகண்டன், தாசில்தார்கள் சந்திரசேகரன், முத்துகிருஷ்ணன் மற்றும் மருத்துவப்பணியாளர்கள், செவிலியர்கள் உள்பட பலர் உடனிருந்தனர். 
    ×