என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூரில் ஒரேநாளில் 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பெரம்பலூரில் 14 பேர் பாதிக்கப்பட்டனர்.
    பெரம்பலூர்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 22 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,036 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கனவே 49 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 4,824 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 163 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 14 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,384 ஆக உயர்ந்துள்ளது. இதில் 22 பேர் ஏற்கனவே உயரிழந்துள்ளனர். 2,309 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 53 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    மதுவில் விஷம் கலந்து குடித்து லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மீன்சுருட்டி:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கொழை அருகே உள்ள நிசங்கன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45). லாரி டிரைவர். இவருடைய மனைவி உமா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உமா இறந்துவிட்டார். 3 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. மேலும் ராஜேந்திரன், முத்துலெட்சுமி என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணவன், மனைவி இடையே கடந்த 8 மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக இருந்து வந்தனர்.

    இந்நிலையில் ராஜேந்திரன் நேற்று முன்தினம் மாலை மீன்சுருட்டி அருகே பாப்பாக்குடி ஆஞ்சநேயர் கோவில் அருகில் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

    இது குறித்து ராஜேந்திரனின் அண்ணன் சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்குப்பதிவு செய்து, ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
    விக்கிரமங்கலம் அருகே கர்ப்பிணி மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கீழநத்தம் கிராமத்தில் உள்ள மேலத்தெருவை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 33). இவரது மனைவி இந்துமதி(24). இவர்கள் இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து, 2½ வயதில் மித்திரன் என்ற மகன் உள்ளான். மேலும் தற்போது இந்துமதி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்துமதிக்கும், பிரபாகரனுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டில் மர்மமான முறையில் கீழ நத்தத்தில் உள்ள வீட்டில் பிணமாக தூக்கில் தொங்கினார்.

    இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார், இந்துமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் இந்துமதியின் தந்தை ராஜேந்திரன் கொடுத்த புகாரின்பேரில், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இந்துமதி எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் அமர்நாத் விசாரணை நடத்தி வருகிறார்.

    உடையார்பாளையம் அருகே மதுபாட்டிலில் பாம்பு குட்டி கிடந்தது. அந்த மதுவை குடித்த விவசாயி மயக்கம் அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உடையார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம் :

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது மகன் சுரேஷ் (வயது 36). விவசாயியான இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டு.

    இந்தநிலையில் இவர் சுத்தமல்லி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று மதியம் மது வாங்கி கொண்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் பாட்டிலை திறந்து ஒரு டம்பளரில் பாதி அளவு மதுவை ஊற்றி குடித்தார்.

    தொடர்ந்து அவர் மீதமுள்ள மதுவை குடிப்பதற்காக டம்பளரில் ஊற்றும்போது மது பாட்டிலில் பாம்பு குட்டி ஒன்று இறந்து கிடந்ததை கண்டு அவர்அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையே அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது.

    உடனடியாக அவர் இது குறித்து தனது குடும்பத்தினரிடம் தகவலை தெரிவித்தார். உடனடியாக அவர்கள் சுரேசை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக உடையார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மது பாட்டிலில் பாம்பு குட்டி இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி குடிமகன்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    அரியலூர் அருகே ரெயிலில் அடிபட்டு பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள சில்லக்குடி- கல்லகம் ெரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன்தினம் இரவு ஒரு பெண் ெரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அந்த பெண்ணுக்கு சுமார் 45 வயது இருக்கலாம். சேலை அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இது பற்றி அருகில் உள்ள கிராமத்தில் விசாரணை நடத்தினர். பின்னர் இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ெதாடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிமடத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பனைமரத்தில் கள் இறக்கி மயக்க மருந்து கலந்து விற்றவரை கைது செய்தனர்.
    ஆண்டிமடம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் போலீசாருக்கு கூவத்தூர் கிராமத்தில் பனை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். 

    கூவத்தூர் கிராமத்தில் சென்றபோது போலீசாரை கண்டு 2 பேர் தப்பி ஓட முயன்றனர். அதில் ஒருவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடி விட்டார். பிடிபட்டவரிடம் விசாரித்தபோது, அவர் அதே பகுதியை சேர்ந்த வில்லியம் ஜோசப்(வயது 45) என்பதும், தப்பி ஓடியவர் டேவிட் (40) என்பதும், வீட்டின் அருகில் உள்ள பனை மரத்தில் கள் இறக்கி விற்றதும், மேலும் கள்ளில் போதைக்காக மயக்க மருந்துகள் கலந்து விற்றதும் தெரியவந்தது. 

    இதையடுத்து வில்லியம் ஜோசப்பை கைது செய்த போலீசார் கள்ளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய டேவிட்டை வலைவீசி தேடி வருகின்றனர்.
    அரியலூரில் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படாததால் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    அரியலூர்:

    கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ந் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இதில் பொதுமக்கள் ஒரு இடத்தில் அதிகமாக கூடக்கூடாது, பொருட்கள் வாங்கும்போது சமூக இடைவெளியை கடைபிடித்து வாங்க வேண்டும், முக கவசம் அணிய வேண்டும், நெருக்கமாக குறுகிய இடங்களில் உள்ள கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    ஆனால் அரியலூரில் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்காமல், கொரோனா பரவலுக்கு முன்பு இருந்ததைப்போலவே பொதுமக்கள் தங்களது பணிகளை மேற்கொள்கின்றனர். நகரில் உள்ள காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரத்தை தவிர மற்ற சில்லறை வியாபார கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்படவில்லை. பஸ் நிலையம், மார்க்கெட் தெரு உள்பட பல இடங்களில் அதிக அளவில் தரைக்கடைகள் வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பொதுமக்கள் முக கவசம் அணிந்து வருவதில்லை. அதனை வியாபாரிகளும் கண்டுகொள்வதில்லை.

    மாவட்ட விளையாட்டு அரங்கில் காலை, மாலை இருவேளையும் நூற்றுக்கணக்கானோர் நடைபயிற்சி செய்கின்றனர். அவர்களில் பலர் முக கவசம் அணிவதில்லை. இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வருபவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். ஆனால் பொது இடங்களில் அரசு உத்தரவை மீறுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. கட்டுப்பாடுகளை கடைபிடிக்காததால் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

    மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொரோனாவால் சுமார் 4,500 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 49 பேர் இறந்துள்ளனர். பலர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த நான்கு நாட்களில் கொரோனாவால் 80 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேநிலை தொடர்ந்தால் அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் பொதுமக்களில் 10 சதவீதம் பேருக்கு தொற்று உள்ளதாகவும், பலர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர்.

    இதுபற்றி டாக்டர்கள் கூறுகையில், கடந்த ஆண்டு நோய்த் தொற்றுக்கு கொடுத்த எதிர்ப்பு மருந்துகள் தற்போது பயன்தரவில்லை. நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. பொதுமக்களிடையே விழிப்புணர்வு இல்லை. தடுப்பூசி போட வேண்டிய அவசியத்தை கூட அவர்கள் உணரவில்லை. மருந்துகள் கிடைக்காததை பொதுமக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. இதே நிலை நீடித்தால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உயரும். குறைந்தபட்சம் 15 நாட்களுக்காவது எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தி மக்கள் நடமாட்டத்தை குறைத்தால்தான் நோய் தொற்று பரவுவது குறையும், என்று கூறினார்கள்.
    ஆண்டிமடம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆண்டிமடம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பெரியகருக்கை கிராமம் பாலம் அருகே டிராக்டர் டிப்பரில் ஒருவர் ஆற்று மணலை ஏற்றிக்கொண்டிருந்ததை கண்ட ஆத்துக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன், ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் மணல் ஏற்றிக் கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் பெரிய கருக்கை கிராமத்தை சேர்ந்த செந்தில்ராஜா(வயது 25) என்பதும், அனுமதியின்றி மணல் அள்ளியதும் தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து, செந்தில்ராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம் பகுதியில் வணிக நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மற்றும் அங்கு வந்து சென்ற பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    கொரோனா வைரஸ் தொற்று 2️-வது அலையாக தற்போது அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள வணிக நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தொழிலாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

    இதையடுத்து சுகாதாரத்துறை சார்பில் நடமாடும் கொரோனா தடுப்பு பரிசோதனை குழுவினர் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வணிக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் மற்ற வணிக நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் உள்ளிட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சளி மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

    இதேபோல் வணிக நிறுவனங்களுக்கு வந்து சென்ற பொதுமக்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் பரிசோதனை நடத்தப்படும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

    மேலும் ஜெயங்கொண்டம் நடமாடும் மருத்துவ குழு வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன் தலைமையில் டாக்டர் உமா, சுகாதார ஆய்வாளர் பிரவின்குமார், செவிலியர் மேகலா ஆகியோர் கொண்ட குழுவினரால் சீனிவாசன் நகர், மலங்கண்குடியிருப்பு, மேலக்குடியிருப்பு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    அப்போது பொதுமக்கள் விழிப்புடனும், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது உள்ளிட்டவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
    அரியலூர் அருகே லாரி மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(வயது 51). கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு சைக்கிளில் சென்றபோது எதிரே வந்த லாரி மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையத்தில் கோவிலுக்கு சென்றபோது, பால்வேன்- ஆட்டோ மோதிக்கொண்டதில் 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியை அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன். இவருடைய மனைவி சந்திரா(வயது 50). இவர் அப்பகுதியில் பழக்கடை நடத்தி வந்தார். இவர்களுடைய மகன் மணிகண்டன்(24). ஆட்டோ டிரைவர். காசிநாதன் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் சந்திரா, தனது மகன் மணிகண்டனுடன் வசித்து வந்தார்.

    நேற்று காலை சந்திரா, மணிகண்டன் மற்றும் அவர்களுடைய பக்கத்து வீட்டை சேர்ந்த பவுனம்மாள்(65), மணிகண்டனின் நண்பர் செட்டித்திருக்கோணத்தை சேர்ந்த நித்தியானந்தம்(54) ஆகியோர் வி.கைகாட்டியில் இருந்து உடையார்பாளையம் பெரிய கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக ஆட்டோவில் சென்றனர். ஆட்டோவை டிரைவர் சுண்டக்குடி கிராமத்தை சேர்ந்த சிற்றரசு(28) ஓட்டினார்.

    உடையார்பாளையம் புதிய பஸ் நிலையம் அருகே சென்றபோது, உடையார்பாளையத்தில் கடைகளுக்கு பால் இறக்கிவிட்டு வந்த வேனும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் ஆட்டோவில் பயணம் செய்த சந்திரா, பவுனம்மாள் ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

    மணிகண்டன், நித்தியானந்தம், சிற்றரசு மற்றும் வேன் டிரைவர் உடையார்பாளையத்தை சேர்ந்த ரஞ்சித்(27) ஆகியோர் படுகாயமடைந்தனர். வேன், ஆட்டோ சேதமடைந்தன. மேலும் வேன் கவிழ்ந்தது.

    இது பற்றி தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையிலும், வேன் டிரைவர் ரஞ்சித் அரியலூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாசக்கரவர்த்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
    இல்லற வாழ்க்கையை ஒன்றாக வாழ்ந்து மறைந்த தம்பதி பற்றி அறிந்திருக்கிறோம், ஆனால் நட்பால் இணைந்து, சாவிலும் பிரியாதவர்கள் பற்றி இப்போதுதான் அறிகிறோம்.
    ஜெயங்கொண்டம்:

    உண்மையான நட்பு என்பது விலைமதிக்க முடியாத பரிசு, அதை மதிப்பிட வேண்டும், எந்த நேரத்திலும் இழக்க கூடாது. அப்படி ஒரு நட்பு நமக்கு கிடைத்தால் இந்த உலகில் நாம் தான் சிறந்த அதிர்ஷ்டசாலி. நட்பு என்பது எப்போதும் தன்னலமற்ற உதவியை வெளிப்படுத்துகிறது. அந்த நட்பானது பல ஆண்டு காலம் பிணைப்பை உறுதிப்படுத்துகிறது.

    பரஸ்பர புரிதலும், மரியாதையையும் இக்காலம் முதல் எக்காலமும் கொண்டு செல்லும் உன்னதம் வாய்ந்தது நட்பு. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு என்ற வள்ளுவரின் குறள் முகம் மலரும் படியாக நட்பு செய்வதைவிட, நெஞ்சம் மலரும் படியாக உள்ளன்போடு கூடிய நட்பே சிறந்தது என்கிறது.

    அதற்கு இலக்கணமாய் கடந்த 40 ஆண்டு காலம் வாழ்ந்ததோடு, ஒன்றாகவே மறைந்த நண்பர்கள் இன்று அனைவராலும் பேசப்படும் நபர்களாகி உள்ளனர். இதேபோல் நட்புக்கு இலக்கணம் வகுத்தவர்கள் எத்தனையோ பேர் இருந்தாலும் மதம் கடந்த இவர்களின் நட்பு சாலச்சிறந்தது.

    அரியலூர் அருகே இரு வேறு மதத்தைச் சேர்ந்த இணைபிரியாத நண்பர்கள் இறப்பிலும் ஒன்றாக இறந்தது பெரும் சோகத்தையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஜூபிலி ரோட்டில் அல்லா கோவில் அருகே வசித்து வருபவர் மகாலிங்கம் (வயது 78). இவர் அதே பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். மன திருப்திக்காக பூசாரியாகவும், வயிற்று பிழைப்புக்காக சிறிய டீக்கடை ஒன்றையும் நடத்தி வந்தார்.

    இவர் வீட்டின் எதிர் புறம் வசித்து வருபவர் ஜெய்லா புதீன் (66). இவர் அதே தெருவில் ஒரு ரைஸ்மில் நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக இணை பிரியாத நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

    ஓய்வு நேரங்களில் மகாலிங்கம் நடத்தி வந்த டீக்கடைக்கு வருகை தரும் ஜெய்லாபுதீன், தங்களது நட்புக்கு அடித்தளமிட்டனர். 12 வயது மூத்தவராக இருந்தபோதிலும் மகாலிங்கம் உறவை மீறிய நட்பு கிடைத்த மகிழ்ச்சியில் உறவுக்காரர்களிடம் கூட பேச தயங்கிய வி‌ஷயங்களை ஜெய்லாபுதீனிடம் பகிர்ந்து மன ஆறுதல் அடைந்தார். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பே தோளில் கை போட்டவாறு பேசத் தொடங்கிய அவர்களின் நட்பை பார்த்து வியக்காதவர்களே கிடையாது.

    காலப்போக்கில் அவர்களின் நட்பானது இருவீட்டாரையும் இணைய வைத்தது. மகாலிங்கம் வீட்டில் சுப காரியங்கள் நடந்தாலும் பண்டிகை காலங்களாக இருந்தாலும் ஜெய்லாபுதீன் கலந்து கொள்வார். அதேபோல் ஜெய்லாபுதீன் வீட்டில் சுபகாரியங்கள் பண்டிகை காலங்களிலும் மகாலிங்கம் கலந்து கொண்டு உணவு பதார்த்தங்களை பரிமாறிக்கொள்வார்கள்.

    வயது முதிர்வால் முன்பு போல இருக்க முடியவில்லையே என்று ஏங்கித்தவித்த மகாலிங்கத்திற்கு நான் இருக்கிறேன், உனக்கு ஒன்றும் ஆகாது என்று கூறியதோடு, நமது நட்பை இந்த உலகம் பாராட்டும் என்று அடிக்கடி கூறி வந்துள்ளார். வாழ்க்கையோ, தொழிலோ எதுவாக இருந்தாலும் இருவரும் ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுதான் இன்றளவும் நடந்துள்ளது.

    நகமும், சதையுமாக இருந்த அவர்களது நட்புக்கு எமனாக இருவருக்குமே உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஜெயங்கொண்டம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். பிரிவு என்பது மருத்துவமனையில் கூட இருக்கக்கூடாது என்ற அவர்களது அன்பு வேண்டுகோளுக்கு இணங்க அருகருகே இருந்த படுக்கையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தநிலையில் ஜெய்லாபுதீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மகாலிங்கம் அடுத்த 10 நிமிடத்திற்குள் உயிரிழந்தார்.

    இல்லற வாழ்க்கையை ஒன்றாக வாழ்ந்து மறைந்த தம்பதி பற்றி அறிந்திருக்கிறோம், ஆனால் நட்பால் இணைந்து, சாவிலும் பிரியாதவர்கள் பற்றி இப்போதுதான் அறிகிறோம்.

    இதுகுறித்து இருவரின் மகன்களும் கூறுகையில் “எங்களின் தாத்தா முதல் தலைமுறை, தந்தை இரண்டாம் தலைமுறை. இதை தொடர்ந்து நாங்களும் மூன்றாவது தலைமுறையாக இதேபோல் ஒற்றுமையாக இருக்கிறோம். அவர்கள் கற்றுத்தந்த வாழ்வியல் பாடங்கள் ஏராளம். அவை அனைத்தும் எங்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளது. இனிவரும் காலங்களில் உற்றார் உறவினர்களை போல் சுப, துக்க காரியங்களில் ஒன்றிணைந்து மதங்களை கடந்து நாங்கள் நட்புடன் தொடர்வோம். எங்களின் தாத்தா தந்தை ஆகியோரின் ஆசையும் அது தான்” என்று பெருமையுடன் கூறினர்.

    உறவுகளிடம் கூட நிலைக்காத நட்பு நண்பர்களிடத்து நங்கூரமாக நிற்கிறது. அந்த வகையில் வாழ்ந்து மறைந்த ஜெய்லாபுதீன், மகாலிங்கம் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
    ×