search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாரச்சந்தையில் பெண்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததையும் படத்தில் காணலாம்.
    X
    வாரச்சந்தையில் பெண்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததையும் படத்தில் காணலாம்.

    அரியலூரில் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படாததால் அதிகரிக்கும் கொரோனா தொற்று

    அரியலூரில் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படாததால் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    அரியலூர்:

    கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ந் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இதில் பொதுமக்கள் ஒரு இடத்தில் அதிகமாக கூடக்கூடாது, பொருட்கள் வாங்கும்போது சமூக இடைவெளியை கடைபிடித்து வாங்க வேண்டும், முக கவசம் அணிய வேண்டும், நெருக்கமாக குறுகிய இடங்களில் உள்ள கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    ஆனால் அரியலூரில் எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்காமல், கொரோனா பரவலுக்கு முன்பு இருந்ததைப்போலவே பொதுமக்கள் தங்களது பணிகளை மேற்கொள்கின்றனர். நகரில் உள்ள காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரத்தை தவிர மற்ற சில்லறை வியாபார கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்படவில்லை. பஸ் நிலையம், மார்க்கெட் தெரு உள்பட பல இடங்களில் அதிக அளவில் தரைக்கடைகள் வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பொதுமக்கள் முக கவசம் அணிந்து வருவதில்லை. அதனை வியாபாரிகளும் கண்டுகொள்வதில்லை.

    மாவட்ட விளையாட்டு அரங்கில் காலை, மாலை இருவேளையும் நூற்றுக்கணக்கானோர் நடைபயிற்சி செய்கின்றனர். அவர்களில் பலர் முக கவசம் அணிவதில்லை. இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வருபவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். ஆனால் பொது இடங்களில் அரசு உத்தரவை மீறுபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. கட்டுப்பாடுகளை கடைபிடிக்காததால் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

    மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொரோனாவால் சுமார் 4,500 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 49 பேர் இறந்துள்ளனர். பலர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த நான்கு நாட்களில் கொரோனாவால் 80 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேநிலை தொடர்ந்தால் அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் பொதுமக்களில் 10 சதவீதம் பேருக்கு தொற்று உள்ளதாகவும், பலர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாகவும் டாக்டர்கள் கூறுகின்றனர்.

    இதுபற்றி டாக்டர்கள் கூறுகையில், கடந்த ஆண்டு நோய்த் தொற்றுக்கு கொடுத்த எதிர்ப்பு மருந்துகள் தற்போது பயன்தரவில்லை. நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. பொதுமக்களிடையே விழிப்புணர்வு இல்லை. தடுப்பூசி போட வேண்டிய அவசியத்தை கூட அவர்கள் உணரவில்லை. மருந்துகள் கிடைக்காததை பொதுமக்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. இதே நிலை நீடித்தால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உயரும். குறைந்தபட்சம் 15 நாட்களுக்காவது எந்தவித தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தி மக்கள் நடமாட்டத்தை குறைத்தால்தான் நோய் தொற்று பரவுவது குறையும், என்று கூறினார்கள்.
    Next Story
    ×