என் மலர்tooltip icon

    அரியலூர்

    ஆண்டிமடம் பகுதியில் 2¾ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 7 பேரை கைது செய்தனர்.
    ஆண்டிமடம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவனுக்கு விளந்தை பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி அந்தப் பகுதிக்கு போலீசாருடன் சென்றார். அப்போது போலீசாரை கண்டு தப்பி ஓட முயன்ற 2 பேரை பிடித்து சோதனை செய்ததில், அவர்கள் சுமார் 200 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆண்டிமடம் தெற்கு தெருவைச் சேர்ந்த சதீஷ்ராஜ் (வயது 24), அழகாபுரம் காலனி தெருவைச் சேர்ந்த சிந்தனை ராஜா (18) என்பது தெரியவந்தது.

    இதேபோல் ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி ஆண்டிமடம் அருகே அழகாபுரம் கிராமத்திற்கு சென்று, 3 பேரை பிடித்து சோதனை செய்ததில் 7 பொட்டலங்கள் கஞ்சா இருந்தது. இதில் சுமார் 1,400 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்ததில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் மெயின் ரோட்டை சேர்ந்த விக்னேஷ் (24), கடலூர் மாவட்டம் பாசிகுளம் புதுக்காலனி தெருவைச் சேர்ந்த கருப்புசாமி (38), அழகாபுரம் காலனி தெருவைச் சேர்ந்த பகத்சிங் (19) என்பது தெரியவந்தது.

    இதேபோல் ஆண்டிமடம் பஸ் நிலையத்தில் 2 பேரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் பிடித்து விசாரித்ததில், அவர்களிடம் சுமார் 1,200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் வைத்ததும், அவர்கள் ஆண்டிமடம் சிவலிங்கபுரத்தை சேர்ந்த ரஞ்சித் (30), சூரக்குழி காலனி தெருவைச் சேர்ந்த சக்திவேல் (22) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 7 பேரும் வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து, 7 பேரையும் போலீசார் கைது செய்து ஜெயங்கொண்டம் சிறையில் அடைத்தனர்.
    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் உள்ள நாகமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    வி.கைகாட்டி:

    அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் உள்ள நாகமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்களை டாக்டர் காயத்ரி பரிசோதித்தார். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன், உதவி திட்ட அலுவலர் வெங்கடேசன், நாகமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தஜோதி பூராசாமி, செயலாளர் திருநாவுகரசு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும்.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் உடையார்பாளையம், ஆண்டிமடம் தாலுகாவை சேர்ந்த மருந்துக்கடை உரிமையாளர்களுடன் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அமர்நாத் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர், மருத்துவரின் பரிந்துரை சீட்டுடன் வருபவர்களுக்கு மட்டுமே மருந்து வழங்க வேண்டும். காய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும். வாடிக்கையாளர்களிடம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்று கூறினார்.

    கூட்டத்தில் மீன்சுருட்டி வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன், மருந்து வணிகர் சங்க மாவட்டத் தலைவர் கருணாகரன், பொருளாளர் கார்த்திகேயன், மொத்த விற்பனை மருந்து வணிகர் சங்க தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்த் நன்றி கூறினார்.
    அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 106 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 106 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 6,573 ஆக உயர்ந்துள்ளது. இதில் 54 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். 5,895 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 624 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    வருகிற 17-ந்தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் காதலி வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியை சேர்ந்தவர் நிஷாந்த் (வயது 30). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்டசோழபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். அவர்களின் காதலை இருவீட்டாரும் ஏற்றுக்கொண்டனர்.

    இதையடுத்து அவர்களுக்கு, இரு வீட்டார் சம்மதத்துடன் வருகிற 17-ந்தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் கொரோனா 2-வது அலை காரணமாக நிஷாந்த் வேலை பார்த்த அலுவலகத்திற்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து திருமணம் நிச்சயிக்கப்பட்ட அந்த பெண் வீட்டிற்கு நிஷாந்த் வந்துள்ளார்.

    அங்கு அவருக்கு மீன் குழம்பு வைத்து சாப்பாடு கொடுத்துள்ளனர். அதனை சாப்பிட்ட நிஷாந்த், சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார். உடனடியாக அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே நிஷாந்த் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து நிஷாந்தின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து நிஷாந்தின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயங்கொண்டத்தில் கொட்டித்தீர்த்த கன மழை காரணமாக வெப்பம் தணிந்து பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஜெயங்கொண்டம்:

    அக்னி நட்சத்திரம் காரணமாக கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து, அனல் காற்று வீசி பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது.

    இதையடுத்து வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் அறிவித்து இருந்தது.

    இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கடந்த சில நாட்களாகவே சுட்டெரித்த வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்த நிலையில், நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. இதைத்தொடர்ந்து மதியம் சுமார் 3 மணி அளவில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்ய தொடங்கியது. மிதமாக பெய்ய தொடங்கிய மழை, பின்னர் இடியுடன் கூடிய பலத்த மழையாக மாறி சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. அப்போது காற்றும் வீசியது.

    கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் பொதுமக்களை வாட்டி வதைத்த நிலையில் ஜெயங்கொண்டத்தில் கொட்டித்தீர்த்த கன மழை காரணமாக வெப்பம் தணிந்து பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    திருச்சி மாவட்டம் திருப்பட்டூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜனின் மகன் பிரபாகரன்(வயது 30). இவர் நேற்று முன்தினம் அரியலூர் மாவட்டம் அருங்கால்பாளையத்தில் இருந்து செம்மந்தக்குடி கிராமத்தில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது வழியில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி எதிரே இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த பிரபாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர் மாவட்டம் குருவாலப்பர் கோவில் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் குருவாலப்பர் கோவில் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் கிராம மக்கள் 34 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் வைஜெயந்திமாலா தலைமை தாங்கினார். இதில் ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்த், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்(பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானம், குருநாதன், ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி பலியானார்.
    மீன்சுருட்டி:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குழவடையான் கிராமத்தின் அருகே சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வேம்பங்குடி கிராம நிர்வாக அலுவலர் ஷேக் அப்துல்லா, சம்பவ இடத்தை பார்வையிட்டபோது, மூதாட்டி உடல் அருகே ஒரு வாகனத்தின் நம்பர் பிளேட் கிடந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியின் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
    அரியலூர் மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை மீறி அனைத்து கடைகளும் மதியம் வரை திறந்திருந்தன. முககவசம் அணியாத, சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.
    அரியலூர்:

    கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக தமிழக அரசு அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதில் பால், மளிகை, காய்கறி, மருந்து கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்திருக்கலாம், மற்ற அனைத்து கடைகளும் வருகிற 20-ந் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால் அரியலூரில் அரசு அறிவித்த புதிய கட்டுப்பாடுகளை வணிகர்களும், பொதுமக்களும் கடைபிடிக்கவில்லை.

    அரியலூர் நகரில் நேற்று வழக்கம்போல் அத்தியாவசிய பொருட்கள் விற்பதற்கு அனுமதிக்கப்பட்ட கடைகள் மற்றும் நகை, ஜவுளி, புத்தகங்கள், காலனி, பாத்திரம், வீட்டு உபயோக பொருட்கள் உள்பட அனைத்து கடைகளும் திறந்து இருந்தன. மார்க்கெட் தெருவில் வழக்கமாக இருக்கும் தரை கடைகளை விட நேற்று அளவுக்கு அதிகமான கடைகள் இருந்தன. பஸ்களில் வழக்கம்போல் பயணிகள் பயணம் மேற்கொண்டனர். ஆட்டோ, கார் போன்ற வாகனங்களும் இயங்கின. ஆனால் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை.

    அரியலூரில் ஒரு சில பெரிய ஓட்டல்களை தவிர மற்ற அனைத்து கடைகள், டீக்கடைகளில் பொதுமக்கள் அமர்ந்து உணவு சாப்பிட்டதை காண முடிந்தது. பஸ் நிலையத்தில் கட்டுமான வேலைக்கு சென்றகள் மற்றும் பயணிகள் என பலர் முக கவசம் அணியாமல் கூட்டம், கூட்டமாக நின்று பேசிக்கொண்டும், வெற்றிலை பாக்கை போட்டு கண்ட இடங்களில் துப்பியவாறும் இருந்தனர். சாலையோரம் உள்ள தட்டுக்கடை, தள்ள வண்டி கடைகளை திறந்து மூடுவதற்கு காலதாமதமானது. இதையடுத்து அரியலூர் கோட்டாட்சியர் ஏழுமலை தலைமையில் தாசில்தார், நகராட்சி ஆணையர் மனோகர் மற்றும் போலீசார் நகர் முழுவதும் ஒலிபெருக்கி மூலம் கடைகளை மூடச்சொல்லி எச்சரிக்கை செய்தனர்.

    மேலும் எம்.பி கோவில் தெருவில் ஒரு ஜவுளிக்கடை கதவுகள் மூடப்பட்டு 200-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் துணிகள் எடுத்துக் கொண்டிருப்பது தெரிய வந்தவுடன், தாசில்தார் உள்ளிட்டோர் அந்த கடைக்குள் சென்று பார்த்தபோது நூற்றுக்கணக்கானோர் கடையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அனைவரையும் வெளியேற்றி கடைக்கு அபராதம் விதித்தனர். இதுபோன்று தொடர்ந்து கடைகளை திறந்தால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும், என்று எச்சரித்தனர்.

    நேற்று மதியம் 12 மணிக்கு மேலும் மருந்து, பால், ஓட்டல்கள் திறந்து இருந்தன. மற்ற அனைத்து கடைகள், பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் மூடப்பட்டதால் பயணிகள் குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் வாங்க சிரமப்பட்டனர். ஒருசில தனியார் பஸ்கள் மட்டும் ஓடின. அரசு பஸ்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது. ஒரு சில ஆட்டோக்கள் ஓடின. போலீசார் அனைத்து பகுதிகளிலும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அரசு, தனியார் மருத்துவமனைகள், அவசரகால வாகனங்கள் முழுமையாக செயல்பட்டன.

    அரியலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் டாக்டர்களிடம் கொரோனா பரவல் குறித்து கேட்டபோது, கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் நோய்த்தொற்று இரு மடங்காக உயர்ந்து 112 ஆனது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்த சென்ற ஆண்டை போல் எந்தவித தளர்வும் இல்லாமல் போக்குவரத்து உள்பட 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவித்து பொதுமக்கள் யாரும் வெளியில் வராமல் இருந்தால் தான், நோய்த்தொற்று பரவலை ஓரளவு கட்டுப்படுத்த முடியும். இதே நிலை நீடித்தால் வடமாநிலங்களில் சாவு எண்ணிக்கை அதிகரிப்பது போல் தமிழகத்திலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது, என்று கூறினார்கள்.

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில் நேற்று காலை அனைத்து ஜவுளிக்கடைகளும், பல்பொருள் அங்காடிகளும், மளிகை, காய்கறி கடைகளும், இருசக்கர வாகன விற்பனையகமும், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகளும் வழக்கம்போல் திறந்து வைக்கப்பட்டிருந்தன. மதியம் 12 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

    ஆண்டிமடம் கடைவீதியில் நேற்று காலை முதல் அனைத்து கடைகளும் வழக்கம்போல் திறந்திருந்தன. இதையறிந்த ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், ஒலிபெருக்கி மூலம் அனுமதிக்கப்பட்ட கடைகள் தவிர மற்ற கடைகளுக்கு அனுமதி கிடையாது, உடனடியாக மூட வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதையடுத்து அனுமதிக்கப்பட்டிருந்த கடைகள் தவிர மற்ற கடைகளை வியாபாரிகள் உடனடியாக மூடினர். மதியம் 12 மணிக்கு பிறகு மருந்து கடை, பால் கடைகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது. தனியார் பஸ்கள் இயங்கவில்லை. அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கின.

    ஜெயங்கொண்டம் நகரில் பல்வேறு பகுதிகளிலும் மதியம் 12 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டதால் ஜெயங்கொண்டம் கடைவீதி, 4 ரோடு, சன்னதி தெரு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது. வாகனங்கள் மட்டும் சென்று வந்தன. ஜெயங்கொண்டம் நகரில் பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
    செந்துறை அருகே உள்ள சிலுப்பனூர் பகுதி வெள்ளாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சிலுப்பனூர் பகுதி வெள்ளாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தளவாய் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

    அப்போது அனுமதியின்றி டயர் மாட்டு வண்டியில் மணல் அள்ளிய சிலுப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன், பாக்கியராஜ், வைரவன், பூவரசன், விக்னேஷ், தமிழ்ச்செல்வன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். டயர் மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள 2 தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

    தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:-

     அரியலூர்
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    சின்னப்பாமதிமுக 103975
    தாமரை ராஜேந்திரன் அதிமுக100741
    துரை மணிவேல்அ.ம.மு.க.2044
    ஜவகர்இஜக905
    சுகுணா குமார்நாம் தமிழர்12346
     ஜெயங்கொண்டம்
    வேட்பாளர்கள் கட்சிவாக்குகள்
    கண்ணன் திமுக99529
    பாலு பாமக94077
    சிவா அ.ம.மு.க.1560
    சொர்ணலதாஇஜக4700
    மகாலிங்கம்நாம் தமிழர்9956



    ×