என் மலர்tooltip icon

    அரியலூர்

    மணல் கடத்திய 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.
    விக்கிரமங்கலம்:

    விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் அரங்கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரங்கோட்டை மெயின் ரோட்டின் வழியாக வந்த 2 மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். இதில் மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த 2 பேர், மாட்டு வண்டிகளை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீசார், மாட்டு வண்டிகளை சோதனை செய்தபோது அரங்கோட்டை கொள்ளிடம் ஆற்றுப் படுகை பகுதியில் இருந்து ஸ்ரீபுரந்தான் பகுதிக்கு மணல் கடத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.
    ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு 94 வழக்குகள் பதிவு செய்து, அவர்களிடம் இருந்து 94 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு 144 தடை உத்தரவை மீறி வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பாஸ்கரன் மேற்பார்வையில் மாவட்டத்தில் போலீசார், ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு 94 வழக்குகள் பதிவு செய்து, அவர்களிடம் இருந்து 94 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும் முக கவசம் அணியாமல் வந்த 81 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    மின்மோட்டார் பழுதடைந்ததால் தண்ணீர் கிடைக்காத கிராம மக்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று வேறுபகுதியில் இருந்து குடிநீர் எடுத்து வருகின்றனர்.
    ஆண்டிமடம்:

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தாலுகா, கவரகொளப்படி கிராமத்தில் பாரதியார் நகர் உள்ளது. இங்கு, 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதி மக்களுக்கு பொது நிதி திட்டத்தின் கீழ் 2013-14-ம் ஆண்டில் ரூ.3½ லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் நிரப்பி பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 4 மாதமாக ஆழ்துளை கிணறு மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டதால் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியவில்லை. இதனால், குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    இதுகுறித்து விளந்தை ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளிக்கப்பட்டதன்பேரில், மின் மோட்டாரை பழுது பார்க்க வந்தவர்கள் ஆள்துளை கிணற்றில் மணல் இறங்கி உள்ளதாக கூறி சென்று விட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    தற்போது வெயில் கடுமையாக இருப்பதால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். வேறு வழியின்றி இங்கிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சென்று விவசாய நிலங்களில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பெண்கள் மிகவும் சோர்வடைகின்றனர். ஆகவே, இப்பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 230 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,525 ஆக உயர்ந்துள்ளது.
    அரியலூர்:

    அரியலூரில் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 34, 80, 74, 80, 60, 55 ஆகிய வயதுடைய 6 ஆண்களும், 60, 20, 85 ஆகிய வயதுடைய 3 பெண்களும் என மொத்தம் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே மாவட்டத்தில் 111 பேர் கொரோனாவுக்கு பலியாகியிருந்தனர். இதனால் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் நேற்று மாவட்டத்தில் மொத்தம் 230 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,525 ஆக உயர்ந்துள்ளது. இதில் 8,876 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,529 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ஆண்டிமடம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆண்டிமடம்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள கூவத்தூர் கிராமம் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் சின்னப்பன்(வயது 52). கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த சில மாதங்களாக நுரையீரல் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நோயின் பாதிப்பு அதிகமாக இருந்ததால் மன உளைச்சலில் இருந்த சின்னப்பன், சம்பவத்தன்று வீட்டில் பந்தல் கட்டும் கயிரால் தூக்கில் தொங்கினார். அதை பார்த்த அவரது மகன் ஜோசப் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து சின்னப்பனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சின்னப்பனின் அண்ணன் அடைக்கலசாமி ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    அரியலூர் மாவட்டத்தில் மேலும் 266 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் அரியலூர் நகராட்சி பகுதியில் 18 பேரும், ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் 14 பேரும், அரியலூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் 32 பேரும், திருமானூர் ஒன்றிய பகுதியில் 43 பேரும், செந்துறை ஒன்றிய பகுதியில் 20 பேரும், தா.பழூர் ஒன்றிய பகுதியில் 41 பேரும், ஆண்டிமடம் ஒன்றிய பகுதியில் 40 பேரும், ஜெயங்கொண்டம் ஒன்றிய பகுதியில் 57 பேரும், வெளி மாவட்டத்தில் இருந்து வசிப்பவர்களில் ஒருவருக்கும் என மொத்தம் 266 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 11,303 ஆக உயர்ந்துள்ளது. இதில் 111 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 8,550 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,612 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்த மொத்தம் 59 பகுதிகள், தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அந்த பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 1,261 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று 1,152 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியும், 196 பேருக்கு கோவேக்சின் கொரோனா தடுப்பூசியும் என மொத்தம் 1,348 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    உடையார்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் தேவையின்றி சுற்றித்திரிந்த 12 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் வந்தவர்களின் இருசக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். இதில் உடையார்பாளையத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்(வயது 28), ராம்குமார்(24), ராமு(24), தா.பழூரைச் சேர்ந்த கரண்(26) உள்ளிட்ட 12 பேர் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி ேதவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து 12 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
    செந்துறை பகுதியில் கட்டுப்பாடுகளை மீறி சுற்றிய வாலிபர்களின் மோட்டார்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. ஆயிரம் பேருக்கு மேல் தொற்று பரவிய நிலையில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கொரோனா பரவலை தடுக்க தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இளைஞர்களும், பொதுமக்களும் கட்டுப்பாடின்றி சுற்றித்திரிகின்றனர். 

    இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், தீவிர வாகன சோதனையில் ஈடுபட செந்துறை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் காலை முதல் செந்துறை பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

    அப்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சுற்றித்திரிந்த வாலிபர்களிடம் இருந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 20-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நேற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தி 10 வாகனங்களை பறிமுதல் செய்தனர். வயதானவர்கள் மற்றும் பெண்களை எச்சரித்து அனுப்பினர். இதனைக் கண்ட பொதுமக்கள், உடனடி நடவடிக்கை எடுத்த போலீஸ் சூப்பிரண்டுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்தனர்.

    ஆண்டிமடம் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு, வாகன ஓட்டிகள் வலம் வருகின்றனர்.
    ஆண்டிமடம்:

    கொரோனா பரவலை தடுக்க தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கடைவீதி பகுதிகளில் வாகனங்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளன. ஆண்டிமடம் பகுதியில் வயது வித்தியாசம் இல்லாமல் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    இதில் சிலர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பி வருகின்றனர். இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர்கள் என வயது வித்தியாசமின்றி பலரும் உயிரிழக்கும் நிலை உள்ளது.

    தற்போது தமிழக அரசு முழு ஊரடங்கை வருகிற 7-ந் தேதி வரை நீட்டித்ததோடு, பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க காய்கறி, பழம் மற்றும் மளிகை பொருட்களை வீடுகளுக்கே நேரில் கொண்டு சென்று விற்பனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு, வாகன ஓட்டிகள் ஆண்டிமடம் கடைவீதி பகுதிகளில் வலம் வருகின்றனர்.

    கடைவீதிக்கு வாகனங்களில் வருபவர்களை போலீசார் நிறுத்தி விசாரிக்கும்போது மருந்து வாங்க வந்தேன், உணவு வாங்க வந்தேன் என்று பொய்யான காரணங்கள் கூறுகின்றனர். வெளியே வருவதால் கொரோனா தொற்று ஏற்பட்டால், பாதிக்கப்படுவது தாங்கள்தான் என்ற எண்ணமின்றி, வாகன ஓட்டிகள் பொய் காரணங்களை கூறி அவர்களையே ஏமாற்றிக்கொள்ளும் நிலை உள்ளது.

    மேலும் போலீசார், வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர். ஆனாலும் சிலர் இருசக்கர வாகனத்தில் வருவதை நிறுத்தவில்லை. வெளியே சுற்றுபவர்களை நிறுத்தி தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா? என்று விசாரணை செய்து, சுகாதாரத்துறையினர் அங்கேயே ஒரு முகாம் அமைத்து, அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
    செந்துறை அருகே சாராயம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொட்டவெளி கிராமத்தை சேர்ந்தவர் குருநாதன்(வயது 36). இவர் தனது வீட்டில் சாராயம் விற்பதாக செந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது வீட்டில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒன்றரை லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து, குருநாதனை கைது செய்தனர். பின்னர் அவரை செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் சாராயம் காய்ச்சிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் இருந்தும் செந்துறை பகுதியில் இளைஞர்களும், பொதுமக்களும் கட்டுப்பாடின்றி சுற்றித்திரிகின்றனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. ஆயிரம் பேருக்கு மேல் தொற்று பரவிய நிலையில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆனால், கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் இருந்தும் செந்துறை பகுதியில் இளைஞர்களும், பொதுமக்களும் கட்டுப்பாடின்றி சுற்றித்திரிகின்றனர். இதனால் செந்துறையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து மேலும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வெளியே தேவையின்றி சுற்றித்திரிபவர்களை தடுக்க போலீசார், சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பெண்களே அதிக அளவில் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ராயம்புரம் கிராமத்தில் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கொரோனோ தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பெண்களே அதிக அளவில் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
    ×