என் மலர்
அரியலூர்
துப்புரவு பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாமரைக்குளம்:
கொரோனா 2-வது அலை தடுப்பு பணியில் அரியலூர் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், துப்புரவு பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், நகராட்சி துப்புரவு பணியாளர்களை முன் களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டதை போல் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கும் கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும்.
கொரோனா தொற்றால் உயிரிழக்கும் துப்புரவு தொழிலாளர் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும். சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும். தொற்றால் பாதிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு அதற்கான சிகிச்சை தொகை முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். தரமான முகக்கவசம், கையுறை, சோப்பு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திரளான துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
குருவாலப்பர் கோவில் கிராமத்தில் நெடுஞ்சாலையில் உள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குருவாலப்பர் கோவில் கிராமத்தில் வீரநாராயண பெருமாள் கோவில் செல்லும் சாலையின் அருகே திருச்சி- சிதம்பரம் இருவழிச்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. வீரநாராயண பெருமாள் கோவில் செல்லும் பஸ் நிறுத்தம் உள்ள இடத்தில் மாநில நெடுஞ்சாலையின் குறுக்கே சுமார் ஒரு அடிக்கு மேலாக பள்ளம் உள்ளது.
இந்த சாலையின் வழியாகவே பஸ், கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வந்தன. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியூரில் இருந்து ஏராளமான வாகன ஓட்டிகள் வந்து சென்றனர்.
தற்போது ஊரடங்கின் காரணமாக இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் சில கனரக வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்றன. இந்த வழியாக இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகி மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
இதேநிலை நீடித்தால் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் ஒரு அடிக்கு மேலாக உள்ள பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 193 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 193 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,892 ஆக உயர்ந்துள்ளது.
இதில் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 144 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று 10,698 பேர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது மொத்தம் 2,050 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சையிலும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனர்.
நேற்று மொத்தம் 1,110 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா பாதித்த மொத்தம் 59 பகுதிகள், தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அந்த பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். 186 பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
வாகனங்களில் முககவசம் அணியாமல் வந்தவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் என 10-க்கும் மேற்பட்டோருக்கு போலீசார் அபராதம் விதித்து, எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் தலைமையில் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஊரடங்கு விதிமுறைகளை மதிக்காமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் விதிமுறைகளை மீறி வெளியே வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர். வாகனங்களில் முககவசம் அணியாமல் வந்தவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் என 10-க்கும் மேற்பட்டோருக்கு போலீசார் அபராதம் விதித்து, எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
ஜெயங்கொண்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே சுற்றிய 30 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் தலைமையிலான போலீசார், ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், ஷகிராபானு (போக்குவரத்து), சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்த், காதர்கான் உள்ளிட்ட போலீசார் 4 ரோடு, கடைவீதி, திருச்சி ரோடு, விருத்தாச்சலம் ரோடு, தா.பழூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனை நடத்தி, ஊரடங்கு விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
இதில் கடந்த 2 நாட்களில் 30-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர். 36-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. லாரிகள், இலகுரக வாகனங்களில் சமூக இடைவெளியின்றி ஆட்களை ஏற்றி வந்த டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தா.பழூர் அருகே ‘லிப்ட்’ கேட்டு லாரியில் சென்று டிரைவரின் கழுத்தில் கத்தியை வைத்து வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தா.பழூர்:
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள சித்தலூர் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி மகன் அருள்ராஜ்(வயது 27). லாரி டிரைவர். இவர் உளுந்தூர்பேட்டையில் இருந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாளுக்கு நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றி வந்தார்.
நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஜெயங்கொண்டம்- தா.பழூர் சாலையில் கழுவந்தொண்டி அருகே உள்ள தனியார் கல்லூரிக்கு அருகில் அந்த லாரி வந்தபோது, 2 பேர் லாரியை மறித்து கும்பகோணம் செல்வதற்கு ‘லிப்ட்’ கேட்டுள்ளனர். டிரைவர் அருள்ராஜ் மனமிறங்கி, அவர்களை லாரியில் ஏற்றிக்கொண்டு கும்பகோணம் நோக்கி லாரியை ஓட்டிச் சென்றுள்ளார்.
அணைக்குடம் கிராமம் அருகே லாரி வந்தபோது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் இயற்கை உபாதை கழிப்பதற்காக லாரியை நிறுத்தும்படி கேட்டுள்ளனர். அதற்கு அருள்ராஜ், வழியில் எங்காவது டீ இருந்தால் அங்கே நிறுத்துவோம் என்று கூறியுள்ளார். ஆனால் அவசரமாக இயற்கை உபாதை கழிக்க வேண்டும், உடனடியாக லாரியை நிறுத்துங்கள் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்குள் லாரி 2 கிலோ மீட்டர் தூரம் கடந்து கோடங்குடி - சிந்தாமணி கிராமங்களுக்கு இடையே வந்தது. அங்கு அருள்ராஜ் சாலை ஓரமாக லாரியை நிறுத்தி, அவர்களை இறக்கிவிட முயன்றுள்ளார். அப்போது அவர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை, அருள்ராஜின் கழுத்தில் வைத்து பணம், செல்போன் போன்றவற்றை கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து அருள்ராஜ் செல்போனையும், தனது சட்டைப்பையில் வைத்திருந்த ரூ.300-ஐயும் அவர்களிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர்கள் லாரியில் இருந்து இறங்கி ஓடினர். அப்போது அருள்ராஜ், அருகில் இருந்த வீடுகளுக்கு ஓடிச்சென்று அங்கிருந்தவர்களிடம் தன் கழுத்தில் கத்தியை வைத்து வழிப்பறி செய்தது பற்றி கூறியுள்ளார். இதையடுத்து அங்கிருந்த சிலர் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடிய திசையில் தேடிச்சென்றனர். அப்போது சிந்தாமணிக்கும், கோடங்குடிக்கும் இடையில் உள்ள ஒரு கடையின் பின்புறம் அவர்கள் 2 பேரும் பதுங்கி இருந்தனர்.
இதுபற்றி உடனடியாக தா.பழூர் போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பதுங்கி இருந்த 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், ஜெயங்கொண்டம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த செல்வராசுவின் மகன் தமிழ்ச்செல்வன் (20), மற்றொருவர் 16 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. இது குறித்து தா.பழூர் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து, ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். ‘லிப்ட்’ கேட்டு லாரியில் சென்றவர்கள் டிரைவரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூரில், வியாபாரம் குறைந்ததால் வீணாகும் காய்கறிகளை வியாபாரிகள் குப்பையில் கொட்டுகின்றனர்.
அரியலூர்:
கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மளிகை, காய்கறி உள்ளிட்ட கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து கடந்த 15 நாட்களாக காய்கறிகளை வாகனங்களில் ஏற்றிச்சென்று வீதி வீதியாக வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
இதில் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்கு அதிக அளவில் தக்காளி, வெங்காயம், கேரட், பீட்ரூட், கத்திரிக்காய், வாழைக்காய் மற்றும் வாழை இலைஆகியவை கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. ஆனால் எதிர்பார்த்த அளவு வியாபாரம் நடைபெறவில்லை.
பல கிராமங்களுக்கு காய்கறிகள் லாரிகளிலும், இருசக்கர வாகனங்களிலும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவதால் அரியலூரில் வியாபாரம் மிகவும் குறைந்து போனது. இதனால் தினசரி தக்காளி, வாழை இலை மற்றும் விரைவில் கெட்டுப் போகும் காய்கறிகளை வியாபாரிகள் குப்பையில் கொட்டி வருகின்றனர். அவை மாடுகளுக்கு உணவாகின்றன.
மேலும் அதிகாலை 5 மணியில் இருந்து காலை 7 மணி வரை மொத்த விற்பனை செய்யப்படும் நிலையில், காலநேரம் குறைவாக உள்ளதால் பொருட்களை விற்க முடியாமல் வியாபாரிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
தப்போது வருகிற 14-ந் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் காய்கறி மொத்த விற்பனையை நகராட்சிக்கு சொந்தமான காந்தி மார்க்கெட்டில் நடத்துவதா? அல்லது அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடத்துவதா? என்று வியாபாரிகள் குழப்பத்தில் உள்ளனர். நாளை (திங்கட்கிழமை) சரியான வழிகாட்டுதலை நகராட்சி நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என்று காய்கறி வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஆண்டிமடம் அருகே அதிக போதைக்காக சாராயத்தில் மாத்திரை கலந்து விற்றவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 80 லிட்டர் ஊறலை அழித்தனர்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் போலீசாருக்கு கொளத்தூர் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.
இதில் கொளத்தூர் கிராமத்தில் உள்ள தைலமரக்காடு பகுதியில் இருந்த ஒருவர், போலீசாரை பார்த்து தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் பிடித்து விசாரித்ததில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த ரகுபதி (வயது 31) என்பதும், அவர் அந்த பகுதியில் 80 லிட்டர் சாராய ஊறல் போட்டு இருந்ததும், விற்பனை செய்வதற்காக 5 லிட்டர் கேனில் 3 லிட்டர் சாராயம் வைத்திருந்ததும் தெரியவந்தது.
மேலும் அதிக போதைக்காக மாத்திரைகளை வாங்கி சாராய ஊறலில் கலந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சாராய ஊறலை கீழே ஊற்றி அழித்து ரகுபதியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
ஜெயங்கொண்டத்தில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன ஓட்டிகளுக்கு தினமும் ஒரு லிட்டர் பெட்ரோல் மட்டுமே வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக பெட்ரோல் பெறுபவர்களின் விவரங்களை சேகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தளர்வுகளற்ற ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மேலும் அரியலூர் மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அரசு விதிமுறைகளை மீறி பலர் வாகனங்களில் சுற்றித்திரிவதால், அவர்கள் வெளியே வருவதை தடுக்க வருவாய்த்துறை, காவல்துறை, நகராட்சி உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இருசக்கர வாகனங்களில் வருபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இந்நிலையில் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் ஒரு நபருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் மட்டுமே வழங்க வேண்டும். மேலும் ஒரு லிட்டருக்கு மேல் பெட்ரோல் தேவை என வலியுறுத்தி பெற்றுச் செல்லும் நபர்களின் பெயர், முகவரி ஆகியவை பெட்ரோல் விற்பனை நிலையத்தினரால் ெபறப்பட்டு, பராமரிக்கப்பட வேண்டும். அந்த விவரத்தை நாள்தோறும் தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கலெக்டர் ரத்னா உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் ஜெயங்கொண்டம் வருவாய் ஆய்வாளர் ஸ்ரீமதி, ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தும், நேரில் சென்று தகவல் தெரிவித்தும் அறிவுறுத்தினார். மேலும் அத்தியாவசிய காரணங்களுக்கு மட்டுமே பெட்ரோல் விற்பனை செய்யப்பட வேண்டும். உள்ளூர் நபர்கள் அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய பணிகளுக்கு சொந்த தேவைக்காக சென்றுவர நாளொன்றுக்கு ஒரு லிட்டர் மட்டுமே பெட்ரோல் விற்பனை செய்யப்பட வேண்டும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தா.பழூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே மருத்துவ கழிவுகள் எரிக்கப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. மேலும் புகையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. 30 படுக்கைகள் கொண்ட இந்த சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. தற்போது கொரோனா சிறப்பு வார்டும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஒரு பகுதியில் இயங்கி வருகிறது.
இந்த சுகாதார நிலையத்தில் உபயோகப்படுத்தப்பட்ட பல்வேறு மருத்துவ கழிவுகள், சுகாதார நிலைய வளாகத்தின் தென்கிழக்கு மூலையில் சுற்றுச்சுவரை ஒட்டிய ஒரு குழியில் கொட்டி வைக்கப்படுகிறது. ஆனால் சுற்றுச்சுவரை ஒட்டிய பகுதி குடியிருப்பு பகுதியாக விளங்குகிறது. இங்கு நூற்றுக்கும் அதிகமான வீடுகள் உள்ளன.
இந்நிலையில் பல்வேறு மருத்துவ கழிவுகளின் துர்நாற்றம் அந்த பகுதியில் காற்றின் மூலம் பரவி, பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. பல சமயங்களில் மருத்துவ கழிவுகள் மாலை நேரங்களில் இருள் சூழ்ந்த சூழ்நிலையில் தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் குடியிருப்பு பகுதி முழுவதும் புகையால் சூழப்படுகிறது. அங்கு அதிக அளவில் குழந்தைகளும், முதியவர்களும் வசித்து வருகின்றனர்.
இந்தப் புகை மண்டலத்தால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் கொரோனா வார்டில் பயன்படுத்தப்படும் மருத்துவ கழிவுகளும் இதே முறையில்தான் கையாளப்படுகிறது. எனவே மருத்துவ கழிவுகளை சுகாதார நிலைய வளாகத்துக்குள் எரிக்காமல் மனித நடமாட்டமற்ற சூழ்நிலையில் பாதுகாப்பான முறையில் எரியூட்ட வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் இது போன்ற மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த அரசு சரியான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். மருத்துவ கழிவுகள் எரிக்கப்படுவதால் பாதிப்புகள் ஏற்பட்டு விபரீதம் ஏற்படும் முன்பு, அப்பகுதியில் குடியிருப்பவர்களின் பாதுகாப்பை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், ஷகிராபானு(போக்குவரத்து), சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்த், காதர்கான் உள்ளிட்ட போலீசார் 4 ரோடு, கடைவீதி, திருச்சி ரோடு, விருத்தாச்சலம் ரோடு, தா.பழூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கண்காணப்பில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் கடந்த 2 நாட்களில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 60-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 264 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 264 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,075 ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 2,262 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.






