search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எரிந்த நிலையில் காணப்படும் மருந்து குப்பிகள்.
    X
    எரிந்த நிலையில் காணப்படும் மருந்து குப்பிகள்.

    தா.பழூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே மருத்துவ கழிவுகள் எரிக்கப்படுவதால் சுகாதார கேடு - பொதுமக்கள் அவதி

    தா.பழூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே மருத்துவ கழிவுகள் எரிக்கப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. மேலும் புகையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூரில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. 30 படுக்கைகள் கொண்ட இந்த சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. தற்போது கொரோனா சிறப்பு வார்டும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஒரு பகுதியில் இயங்கி வருகிறது.

    இந்த சுகாதார நிலையத்தில் உபயோகப்படுத்தப்பட்ட பல்வேறு மருத்துவ கழிவுகள், சுகாதார நிலைய வளாகத்தின் தென்கிழக்கு மூலையில் சுற்றுச்சுவரை ஒட்டிய ஒரு குழியில் கொட்டி வைக்கப்படுகிறது. ஆனால் சுற்றுச்சுவரை ஒட்டிய பகுதி குடியிருப்பு பகுதியாக விளங்குகிறது. இங்கு நூற்றுக்கும் அதிகமான வீடுகள் உள்ளன.

    இந்நிலையில் பல்வேறு மருத்துவ கழிவுகளின் துர்நாற்றம் அந்த பகுதியில் காற்றின் மூலம் பரவி, பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. பல சமயங்களில் மருத்துவ கழிவுகள் மாலை நேரங்களில் இருள் சூழ்ந்த சூழ்நிலையில் தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் குடியிருப்பு பகுதி முழுவதும் புகையால் சூழப்படுகிறது. அங்கு அதிக அளவில் குழந்தைகளும், முதியவர்களும் வசித்து வருகின்றனர்.

    இந்தப் புகை மண்டலத்தால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் கொரோனா வார்டில் பயன்படுத்தப்படும் மருத்துவ கழிவுகளும் இதே முறையில்தான் கையாளப்படுகிறது. எனவே மருத்துவ கழிவுகளை சுகாதார நிலைய வளாகத்துக்குள் எரிக்காமல் மனித நடமாட்டமற்ற சூழ்நிலையில் பாதுகாப்பான முறையில் எரியூட்ட வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    மேலும் இது போன்ற மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த அரசு சரியான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். மருத்துவ கழிவுகள் எரிக்கப்படுவதால் பாதிப்புகள் ஏற்பட்டு விபரீதம் ஏற்படும் முன்பு, அப்பகுதியில் குடியிருப்பவர்களின் பாதுகாப்பை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×