என் மலர்tooltip icon

    அரியலூர்

    அரியலூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரியலூர்:

    பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை கண்டித்து அரியலூர் காமராஜர் சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை ஆகியவற்றின் விலையை குறைக்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்களின் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    முன்னதாக அக்கட்சியினர் ஒற்றுமைத்திடலில் இருந்து சைக்களில் ஊர்வலமாக சென்று பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜர் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார். 

    மாநில துணைத் தலைவர் ராஜேந்திரன் கண்டன உரையாற்றினார். மாவட்ட பொதுச்செயலர் சேகர், நகரதலைவர் சந்திரசேகர், வட்டாரதலைவர் சீனிவாசன், பழனிசாமி செய்தித்தொடர்பாளர் சிவக்குமார், உட்பட பலர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர்.

    கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத 9 வணிக நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.4,500-ம், முககவசம் அணியாத 4 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
    ஜெயங்கொண்டம்:

    ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி உத்தரவின்பேரில், சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் கடைவீதிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத 9 வணிக நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.4,500-ம், முககவசம் அணியாத 4 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. அப்போது அவர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் கடை ஊழியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா மூன்றாம் அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு கூறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது நகராட்சி வருவாய் உதவி ஆய்வாளர் சரஸ்வதி மற்றும் பலர் உடனிருந்தனர்.
    திருமானூர் அருகே பட்டதாரி வாலிபர் வீட்டில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குலமாணிக்கம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மனைவி செந்தில்ராணி. இந்த தம்பதியின் மூத்த மகன் ரஞ்சித்குமார்(வயது 32). சி.ஏ. பட்டதாரி. இவர்கள் வசிக்கும் வீடு அருகே அவர்களுக்கு சொந்தமான மற்றொரு வீடு உள்ளது. இரவில் அந்த வீட்டிற்கு சென்று ரஞ்சித்குமார் தூங்குவது வழக்கம்.அதன்படி நேற்றுமுன்தினம் இரவும் வழக்கம்போல் அந்த வீட்டிற்கு தூங்கச்சென்றார். ேநற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் எழுந்து வராததால், மற்றொரு வீட்டில் இருந்த அவரது பெற்றோர், அங்கு சென்று பார்த்தனர். அப்போது ரஞ்சித்குமார் மர்மமான முறையில் இறந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த ரஞ்சித்குமாரின் பெற்றோர் கதறி அழுதனர். மேலும் இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அரியலூர் உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு மதன், வெங்கனூர் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் வரவழைக்கப்பட்டு, கைரேகைகள், தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

    பின்னர் ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் ரஞ்சித்குமார் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது ஏதாவது பிரச்சினையில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது உடல்நலக்குறைவல் உயிரிழந்தாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வீட்டில் பட்டதாரி வாலிபர் பிணமாக கிடந்த சம்பவம் குலமாணிக்கம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மீன்சுருட்டி அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மீன்சுருட்டி:

    அணைக்கரை கீழணை கொள்ளிடம் ஆற்றில் அரசு அனுமதியின்றி சிமெண்டு சாக்குகளில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக தகவல் அறிந்த மீன்சுருட்டி அருகே உள்ள கொல்லாபுரம் கிராம நிர்வாக அலுவலர் ராஜசேகர் கொடுத்த புகாரின்பேரில், மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணவாளன், குலோத்துங்கன் நல்லூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தி விசாரித்தபோது, அவர் தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள ஆச்சால்புரம் மணியார் தெருவை சேர்ந்த சதாசிவம்(வயது 30) என்பதும், அணைக்கரை கீழணை கொள்ளிடம் ஆற்றில் இருந்து அனுமதியின்றி சிமெண்டு சாக்குகளில் மணல் அள்ளி கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து 5 மணல் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    டாக்டர் உதவியின்றி கருக்கலைப்பு செய்த இளம்பெண் உயிரிழந்தது குறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்: 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர்  கிருஷ்ணவேணி. விருத்தாச்சலம் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். 

    இந்நிலையில் மருத்துவமனைக்கு பரிசோதனை செய்ய வந்த பெண்ணாடம், கொத்தட்டை கிராமத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் பழக்கமாகி உள்ளார்.

    இதில் சுப்புலட்சுமி திருமணமாகாத நிலையில் கர்ப்பமாக இருந்ததால் அதை கலைப்பதற்கு கிருஷ்ணவேணி மூலம் ஆண்டிமடம் அருகே உள்ள அன்னகாரகுப்பம் பகுதியில் உள்ள பொற்செல்வி என்பவர் வீட்டில் வைத்து கருகலைப்பு செய்வதாக கூறியுள்ளார்.

    இதற்கு உதவியாக சுப்புலட்சுமி தனது நண்பர் ஒருவருடன் ஆண்டிமடம், அன்னங்காரகுப்பம் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது தகுந்த மருத்துவர் பரிந்துரை இன்றி அவருக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து ஆண்டிமடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு உள்ள பரிசோதனை செய்ததில் ஆபத்து கட்டத்தில் இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

    இதனையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அங்கு சரியான முறையில் முகவரி தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.  அதிக உதிரப்போக்கு காரணமாக உடனிருந்தவர் அந்த பெண்ணை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதற்கிடையே சுப்புலட்சுமியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் இறந்துவிட்டதாக கூறினர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரை  பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மீன்சுருட்டி அருகே கோவில் உண்டியலின் பூட்டை உடைத்து பணம் திருட்டு போயுள்ளது. இந்த கோவிலில் 3 ஆண்டுகளுக்கு பின் மர்மநபர்கள் மீண்டும் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.


    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே முத்துசேர்வாமடம் பெரிய தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில், ராமசாமி (வயது 50) என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பூஜை முடிந்த பின்னர் இரவு 8 மணி அளவில் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில் கோவிலின் முன்பு உள்ள கேட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கு பின்னர் கிராம முக்கியஸ்தர்கள் கோவில் உண்டியலை திறந்து பார்க்கவில்லை. இதனால் கோவில் உண்டியலில் சுமார் ரூ.1 லட்சம் இருந்திருக்கும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    இந்த திருட்டு குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி, உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு இதே கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பாக உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச்சென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது மர்ம நபர்கள் மீண்டும் இந்த கோவிலில் கைவரிசையை காட்டியுள்ளனர்.

    தா.பழூர் அருகே இடியும் நிலையில் உள்ள மதகை சீரமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன போராட்டம் நடைபெற்றது.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. டெல்டா பாசன பகுதியான தா.பழூர் விவசாய நிலங்களுக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து பொன்னார் பிரதான பாசன வாய்க்கால் மூலம் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்பட்டு இப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

    கடந்த மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், கல்லணை வழியாக கொள்ளிடம் ஆற்றில் கீழணை பகுதிக்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து சமீபத்தில் தூர்வாரப்பட்ட பொன்னார் பிரதான வாய்க்காலில் குருவாடி தலைப்பு பகுதியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்நிலையில் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே சோழமாதேவி ஊராட்சி குறிச்சி கிராமத்தில் உள்ள 4-ம் எண் கிளை பாசன வாய்க்கால் மதகு மற்றும் அதன் சுற்றுச்சுவர்கள், தடுப்பு சுவர்கள் பழுதடைந்து மிகவும் பலவீனமாக உள்ளன. எனவே இந்த மதகை தண்ணீர் வருவதற்குள் சீரமைத்து அல்லது புதிதாக கட்டித்தர வேண்டும் என்று அரசுக்கு இப்பகுதி விவசாயிகள், அதிகாரிகள் மூலமாக கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் மதகை சீரமைக்கும் பணி குறித்து இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

    இந்நிலையில் மதகு சரி செய்யப்படாததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அப்பகுதி இளைஞர்கள் நேற்று ஒன்று திரண்டு, விவசாயிகளுடன் இணைந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மண்சட்டியில் சேற்று மண்ணை எடுத்து வந்து, பழுதடைந்த மதகில் விரிசல் உள்ள இடங்களில் மண் கலவையை பூசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து இளைஞர்கள் கூறுகையில், பழுதடைந்த மதகு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. 4-ம் எண் கிளை வாய்க்காலின் மூலம் பாசனம் பெறும் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்படும் சம்பா நெல் சாகுபடி முற்றிலும் அழியும் ஆபத்து உள்ளது. இதன் காரணமாக விவசாயிகளின் உழைப்பு வீணாகும். எனவே உடனடியாக ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழுதடைந்த மதகை அரசு அகற்றிவிட்டு, புதிய மதகு அமைத்து தர வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர்.

    ஜெயங்கொண்டம் கிளை சிறையில் இருந்து 35 கைதிகள் திருச்சி மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, ஆண்டிமடம், விக்கிரமங்கலம், உடையார்பாளையம், தா.பழூர் போன்ற போலீஸ் நிலையங்களின் கட்டுப்பாட்டு பகுதிகளில் சாராயம், மது பாட்டில்கள் விற்பனை போன்ற பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தற்போது கொரோனா தொற்று 2-ம் அலை பரவல் காரணமாகவும், கிளைச் சிறையில் போதிய இடவசதி இல்லாத காரணத்தாலும் கைதிகள் மூலம் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதால், அவர்களை திருச்சி மத்திய சிறைக்கு மாற்ற மத்திய சிறை சூப்பிரண்டு செல்வமணி மற்றும் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் உத்தரவிட்டனர்.

    அதன்படி ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன், தலைமை காவலர் மகேஸ்குமார், போலீஸ்காரர் முருகேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 35 கைதிகளை உரிய கொரோனோ பரிசோதனை செய்து, டாக்டரின் ஆலோசனையின்படி திருச்சி மத்திய சிறைக்கு போலீஸ் வேனில் அழைத்துச்சென்றனர்.
    ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    வரதராஜன்பேட்டை:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா கவரகொளப்படி கிராமத்தில் உள்ள பாரதியார் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு பொது நிதியின் கீழ் 2013-14-ம் ஆண்டில் ரூ.3.50 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு, ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் நிரப்பி வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    ஆழ்துளை கிணறு, மின் மோட்டார் பழுது ஏற்பட்டதால் கடந்த 5 மாதமாக தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாமல் இருந்து வந்தது. இதனால் தண்ணீர் கிடைக்காமல் சிரமமடைந்த அப்பகுதி பெண்கள் சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று விவசாய நிலங்களில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். இது குறித்து தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

    இதையடுத்து ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர் ஆகியோர் பாரதியார் நகருக்கு வந்து பழுதடைந்த ஆழ்துளை கிணற்றை ஆய்வு செய்து புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் என்று உறுதியளித்து சென்றனர். இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பழைய ஆழ்துளை கிணறு சாக்கால் மூடப்பட்டுள்ளது.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், உரிய நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் நன்றி தெரிவித்தனர்.
    ஜெயங்கொண்டம் அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்துள்ள தா.பழூர் அருகே உள்ள பிள்ளையார்குளம் காலனி தெருவை சேர்ந்தவர் டேவிட் என்ற செந்தமிழ்ச்செல்வன். கூலித்தொழிலாளியான இவர், 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபா விசாரணை நடத்தினார். இதையடுத்து செந்தமிழ்ச்செல்வனை மருத்துவ பரிசோதனைக்கு போலீசார் உட்படுத்தினர். மேலும் இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்தமிழ்ச்செல்வனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    விக்கிரமங்கலம் அருகே அரசின் உதவித்தொகை பெற லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார்.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகனும், கல்லூரி மாணவருமான வசந்தகுமார்(வயது 22) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    முருகேசன் விவசாயி என்பதால், வசந்துக்கு தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.22,500-ஐ பெற்றுத் தருவதற்கு அவரது குடும்பத்தினர் கடம்பூர் கிராம நிர்வாக அதிகாரியான மாரிமுத்துவை(51) அணுகினர்.

    அதற்கு கிராம நிர்வாக அதிகாரி, உதவித்தொகை பெற்றுத்தர ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத வசந்தின் உறவினரான அருள்ஜோதி (40) இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தார்.

    அந்த புகாரின் அடிப்படையில், அருள்ஜோதியிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கொடுத்தனர். அந்த ரூபாய் நோட்டுக்களை கிராம நிர்வாக அதிகாரி மாரிமுத்துவிடம் அவரது சொந்த ஊரான சாத்தாம்பாடிக்கு சென்று அருள்ஜோதி கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர் தலைமையிலான போலீசார் மாரிமுத்துவை கையும்- களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசை கண்டித்து மாவட்ட செயலாளர் காமாலுதீன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசை கண்டித்து மாவட்ட செயலாளர் காமாலுதீன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சாகுல்ஹமீது முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் தஸ்தகீர், மாநில பொருளாளர் விழி அபுல்பசல் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர். முன்னதாக ஜெயங்கொண்டம் ஜூப்ளி ரோட்டில் உள்ள பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக இருசக்கர வாகனங்களை தள்ளிக்கொண்டு சென்றனர். பின்னர் கட்சி கொடி ஏந்தி கோஷமிட்டனர். இதைத்தொடர்ந்து விருத்தாசலம் சாலையில் உள்ள காந்தி பூங்கா முன்பு தள்ளுவண்டியில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாகவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றும் கூறி மனிதநேய மக்கள் கட்சியினர் 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    ×