என் மலர்
செய்திகள்

புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடந்தபோது எடுத்த படம்.
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தீவிரம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
வரதராஜன்பேட்டை:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா கவரகொளப்படி கிராமத்தில் உள்ள பாரதியார் நகரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு பொது நிதியின் கீழ் 2013-14-ம் ஆண்டில் ரூ.3.50 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு, ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் நிரப்பி வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
ஆழ்துளை கிணறு, மின் மோட்டார் பழுது ஏற்பட்டதால் கடந்த 5 மாதமாக தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாமல் இருந்து வந்தது. இதனால் தண்ணீர் கிடைக்காமல் சிரமமடைந்த அப்பகுதி பெண்கள் சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று விவசாய நிலங்களில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். இது குறித்து தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர் ஆகியோர் பாரதியார் நகருக்கு வந்து பழுதடைந்த ஆழ்துளை கிணற்றை ஆய்வு செய்து புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் என்று உறுதியளித்து சென்றனர். இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பழைய ஆழ்துளை கிணறு சாக்கால் மூடப்பட்டுள்ளது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், உரிய நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் நன்றி தெரிவித்தனர்.
Next Story






