search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trichy Central Jail"

    திருச்சி மத்திய சிறையில் மாநகர போலீஸ் உதவி கமி‌ஷனர், சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 50 பேர் கொண்ட குழு இன்று அதிரடியாக சோதனை நடத்தினர். #PuzhalJail #TrichyCentralJail
    திருச்சி:

    சென்னை புழல் சிறையில் கைதிகள் சிறை அறையில் டி.வி. மெத்தை, செல்போன் வசதியுடன் சிறப்பு உணவு தயாரித்து சாப்பிட்டு சொகுசு வாழ்க்கை நடத்தியது கண்டு பிடிக்கப்பட்டது.



    சிறை அதிகாரிகள் உதவியுடன் கைதிகள் இந்த சொகுசு வாழ்க்கை நடத்தியதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சொகுசு வாழ்க்கை நடத்திய கைதிகள் 4 பேரும் அவர்களுக்கு உதவிய ஜெயில் வார்டன்கள் 8 பேரும் அதிரடியாக வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.

    இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 6.30 மணிக்கு திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு திருச்சி மாநகர போலீஸ் உதவி கமி‌ஷனர் சிகாமணி, சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு நிகிலா ராஜேந்திரன் தலைமையில் ஆயுதப்படை போலீசார் மற்றும் சிறை வார்டன்கள் அடங்கிய 50 பேர் கொண்ட குழு அதிரடியாக திருச்சி சிறையில் சோதனை நடத்தினர்.

    ஒவ்வொரு பிளாக்குகளாக சென்று சோதனை நடந்தது. கைதிகள் பயன்படுத்திய கழிவறைகளிலும், மணல் பகுதி, மரங்கள், சமையல் அறைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

    அப்போது சிறைச்சாலைக்குள் தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா, பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் உள்ளதா என சோதனை நடந்தது. சுமார் 2 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது. ஆனால் இதில் எந்தவிதமான பொருளும் சிக்கவோ, கைப்பற்றப்படவோ இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதே போன்று திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள திருச்சி மத்திய பெண்கள் சிறையிலும் இன்று காலை வெளியிலிருந்து போலீசார் சென்று சோதனை நடத்தினர். அப்போது பெண் கைதிகளிடமும் பெண் போலீசார் சோதனை செய்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பெண்கள் சிறையில் ஒரு மணி நேரம் சோதனை நடைபெற்றது. திருச்சி மத்திய ஆண்கள் சிறையில் 1,300 கைதிகள் உள்ளனர். இதில் சுமார் 800 பேர் ஆயுள் தண்டனை கைதிகள் ஆவர். சிறையில் ரவுடிகள் மற்றும் கொலை வழக்கு கைதிகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டனர். #PuzhalJail #TrichyCentralJail
    ×