என் மலர்
அரியலூர்
விக்கிரமங்கலம் அருகே மது விற்ற பெண் கைதான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் கீழநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி கீழநத்தம் மெயின்ரோட்டை சேர்ந்த தேவகி(வயது 55) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மது விற்றது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவகியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மீன்சுருட்டி அருகே பாதை பிரச்சினையில் தந்தை- மகன்களை கத்தியால் குத்தியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ள உடையார் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 62). விவசாயியான இவரது வீடும், அதே தெருவை சேர்ந்த தங்கசாமியின் மனைவி ராமாமிர்தத்தின்(70) வீடும் அருகருகே உள்ளது. மேலும் அவர்களுக்கு இடையே பாதை தொடர்பாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று காலை சுப்பிரமணியன் மற்றும் அவரது மகன்கள் சக்திவேல்(30), வீரசந்துரு(21) ஆகியோர் தங்களது நிலத்திற்கு உரம் போடுவதற்காக டிராக்டரில் எரு குப்பைகளை எடுத்துக்கொண்டு, ராமாமிர்தம் வீட்டின் முன்புள்ள பாதை வழியாக வந்துள்ளனர். அப்போது ராமாமிர்தம், அவரது மகன் சேகர்(55), பேரன் தர்மசீலன்(30) ஆகியோர், சக்திவேல் மற்றும் சுப்பிரமணியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஆத்திரம் அடைந்த சேகர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சக்திவேலின் முதுகில் குத்தியதாகவும். அதை தடுக்கச்சென்ற சுப்பிரமணியத்தையும், வீரசந்துருவையும், தர்மசீலன் கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த சுப்பிரமணியன், சக்திவேல், வீரசந்துரு ஆகியோர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வீரசந்துரு கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) குணசேகரன் வழக்குப்பதிவு செய்து சேகர் மற்றும் தர்மசீலனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல் மீன்சுருட்டி போலீசில் சேகரின் மனைவி கலையரசி கொடுத்த புகாரில், தர்மசீலன், சேகர் ஆகியோர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை சுப்ரமணியனின் மகன் வீரசந்துரு எரித்து விட்டதாகவும், மேலும் தகாத வார்த்தைகளால் திட்டி, ேசகரை உருட்டுக்கட்டையால் தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முசிறி, துறையூர், சமயபுரம், துவரங்குறிச்சி பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்ற 11 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
துவரங்குறிச்சி:
முசிறி - தா.பேட்டை சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள பெட்டிக்கடையில் முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக கடை உரிமையாளர் மோகன் (வயது 45) என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து முசிறி அருகே தும்பலம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (35), சிட்டிலரை கிராமத்தை சேர்ந்த முருகவேல் (42) ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் புகையிலை பொருட்களை நாமக்கல் பகுதியில் மொத்தமாக வாங்கி வந்து கடைகளில் சில்லறை விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சிட்டிலரை மற்றும் தும்பலம் ஆகிய பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.2 லட்சம் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மோகன், செல்வம், முருகவேல் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் புகையிலை பொருட்களை விற்க கொண்டு செல்வதற்கு பயன்படுத்திய சொகுசு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
இதுபோல் துறையூர் ஆலமரம் சந்தில் உள்ள கடைகளில் துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன் குமார் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சுரேஷ்(46) கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கிருந்து 105 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடை ஊழியர் பிரேம்குமாரை (26) போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சுரேைச போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் இனாம் சமயபுரத்தில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த ரங்கசாமியை(63) சமயபுரம் போலீசார் கைது செய்து 20 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதுபோல் துவரங்குறிச்சி பஸ்நிலையம் பகுதியில் உள்ள 3 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்றதாக முனியப்பன் (41), நாகப்பன் (61), ஜெகநாதன் (51) ஆகியோரை துவரங்குறிச்சி போலீசாரும், வளநாடு பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற அழகப்பன்(45), சந்திரசேகர்(35), பாலாஜி(25) ஆகியோரை வளநாடு போலீசாரும் கைது செய்தனர். அவா்களிடம் இருந்து 33 புகையிலை பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்:
அரியலூர் போலீசார் நகரில் பல இடங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர். இதில் பெருமாள் கோவில் தெருவில் முருகானந்தம் என்பவரது கடையில் 5.5 கிலோ, கபிரியேல் தெருவில் சாமுவேல் என்பவரது கடையில் 10 கிலோ, விளாங்காரத் தெருவில் சங்கர் என்பவரது கடையில் 2.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கைப்பற்றினர். மேலும் அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான போலீசார் ஆண்டிமடம் கடைவீதியில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.15,160 மதிப்பிலான புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் குமாரவேலை(வயது44) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் போலீசார் ஜெயங்கொண்டம், சின்னவளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மளிகைக் கடைகள், பெட்டிக்கடைகள் உள்ளிட்டவற்றில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக ராஜஸ்தானை சேர்ந்த கலாராமிடம் இருந்து புகையிலை பொருட்கள் அடங்கிய 1,650 பாக்கெட்டுகளையும், சின்னவளையம் பகுதியில் சிவகுருநாதனிடம் இருந்து புகையிலை பொருட்கள் அடங்கிய 870 பாக்கெட்டுகளையும், அதே பகுதியில் குமார் என்பவரது கடையில் இருந்து புகையிலை பொருட்கள் அடங்கிய 300 பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து புகையிலை பொருட்கள் விற்றதாக கலாராம்(26), சிவகுருநாதன் (52), குமார்(52) ஆகியோர் மீது வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசார் நேற்று அப்பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சோழங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ரகுபதி(48), சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்த நீலமேகம் (53), சபாபதி (63), தத்தனூர் கீழவெளியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (39), தத்தனூர் மாந்தோப்பைச் சேர்ந்த செல்வம் (45) ஆகியோர் தங்களது கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தா.பழூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் காலனி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 58). விவசாயக் கூலி தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்றுவலி அதிகமானதால், அதை தாங்க முடியாத மணிகண்டன் வீட்டில் தூக்குப்போட்டு தொங்கினார். இதைக்கண்ட உறவினர்கள், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மணிகண்டன் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து மணிகண்டனின் மனைவி வளர்மதி தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
தா.பழூர் அருகே மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடி கிராம நிர்வாக அதிகாரி ராஜ்குமார் தனது உதவியாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியில் மாட்டு வண்டிகளில் சிலர் வருவதை பார்த்து, அவற்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது, கார்குடி சுத்தமல்லி ஓடையில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாட்டுவண்டி தொழிலாளர்களான வேணாநல்லூர் கிராமத்தை சேர்ந்த சின்னதம்பி(வயது 65), கார்குடி கிராமத்தை சேர்ந்த காசிநாதன்(52), கோட்டியால் கிராமத்தை சேர்ந்த பழனிராசு(46), பெரியசாமி(48), சுரேஷ்குமார் (40) ஆகியோரையும், மாட்டு வண்டிகளையும் தா.பழூர் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் ஒப்படைத்து, புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தார். அவர்கள் 5 பேரும் ஜெயங்கொண்டம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். 5 மாட்டு வண்டிகளும் மணலோடு பறிமுதல் செய்யப்பட்டன.
மீன்சுருட்டி அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜதுரை மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மீன்சுருட்டி அருகே உள்ள உட்கோட்டை காலனி தெருவை சேர்ந்த குமார்(வயது 45), வீரசோழபுரம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து குமாரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 3 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்தூர் அருகே விவசாயி கொலை வழக்கில் தந்தை- மகன்கள் உள்பட மேலும் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தூத்தூர் அருகே உள்ள வைப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது 46). விவசாயி. இவருடைய மனைவி சுலோச்சனா. இந்த தம்பதிக்கு கவியரசன், அரவிந்த் என 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் காதல் விவகாரம் தொடர்பாக கண்ணன் குடும்பத்திற்கும், அதே ஊரை சேர்ந்த நாகராஜனின் மகன் அஜித்தின்(19) குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கண்ணன்-சுலோச்சனா தம்பதி, பாதுகாப்பு கேட்டு தூத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் உறவினர்களோடு வைப்பூரில் உள்ள மீன் குட்டையில் மீன் வாங்க சென்ற கண்ணனை, அஜித்குமாரின் அண்ணன் அருண்மோகன்(27) கத்தியால் குத்தியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தூத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அருண்மோகனை தா.பழூர் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் மேலும் 5 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தா.பழூர் செல்லியம்மன் கோவில் மற்றும் எமனேரி பகுதிகளில் 2 குழுக்களாக பிரிந்து சுற்றிக் கொண்டிருந்த நாகராஜன்(56), அவருடைய மகன்கள் வினோத்குமார் (31), விஜய் (21), அஜித், உறவினர் பரமசிவம் மகன் முத்து (31) ஆகியோரை தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம் அருகே திடீரென பெய்த மழையை தொடர்ந்து, வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் திரண்டன. இதைத் தொடர்ந்து திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இதில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமப்பகுதியில் சுமார் அரை மணி நேரமாக மழை கொட்டித்தீர்த்தது.
தெருக்களில் சரியான முறையில் வடிகால் வசதி இல்லாததால், வெளியேற வழியின்றி கணுக்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியது. மேலும் அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகினர்.
அப்பகுதியில் மழைக்காலங்களில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீர் தேங்கும் நிலை உள்ளதாகவும், இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை சரியான முறையில் நடவடிக்கை இல்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இனிவரும் காலங்களில் அதிகப்படியான மழைப்பொழிவு இருக்கும் என்பதால் தண்ணீர் தேங்கி வீடுகளில் உள்ள சுவர்கள் இடிந்து விழும் அபாய நிலை உள்ளதாகவும், இதனால் வீடுகளில் குழந்தைகளை வைத்துக்கொண்டு மிகவும் அவதிப்படும் நிலை உள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே இப்பகுதியில் உள்ள தெருக்களில் தண்ணீர் வெளியேறுவதற்கான வடிகால் வசதியை உடனடியாக ஏற்படுத்தித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயங்கொண்டம் அருகே கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் காந்தி பூங்கா முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் சங்கபாலன் தலைமை தாங்கினார். விவசாய சங்க மாவட்ட செயலாளர் மகாராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பத்மா ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது, மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாக அணை கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், அரியலூர் மாவட்டத்தில் வீரசோழபுரம், குருவாலப்பர் கோவில். விழப்பள்ளம், சோழங்குறிச்சி, தேவமங்கலம், கரைமேடு ஆகிய இடங்களில் மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தில் சாதிவாரியாக வேலையும், கூலியும், 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வேலை இல்லை என்ற முடிவையும் மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாய சங்க மாவட்ட பொருளாளர் இளவரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தத்தனூர் பொட்டக்கொல்லை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். இதில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்கள் 12 பேரும், 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் 15 பேரும், மாற்றுத்திறனாளிகள் 8 பேரும் என மொத்தம் 35 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
ஜெயங்கொண்டம் அருகே ஏரியில் குளிக்க சென்ற வாலிபர், தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குவாகம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி பாப்பாத்தி. இந்த தம்பதிக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மூன்றாவது மகனான ரமேஷ்(வயது 27), இலையூர் கிராமத்தில் உள்ள இனிப்பு(சுவீட்) கடை ஒன்றில் பலகாரம் செய்யும் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
இவர் வேலை முடிந்த பின் வழக்கமாக இலையூர் பகுதியில் உள்ள வண்ணான் ஏரியில் குளித்துவிட்டு செல்வது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்தபின்னர், ஏரியில் குளிப்பதற்காக கடை உரிமையாளர் கருப்பையாவின் மொபட்டில் சென்றுள்ளார். அங்கு கரையோரம் மொபட்டை நிறுத்திவிட்டு படித்துறையில் ஆடைகளை வைத்துவிட்டு ஏரியில் இறங்கி குளித்துள்ளார். அப்போது அவர் தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது.
இந்நிலையில் ஏரிக்கு குளிக்க சென்றவர், நீண்ட நேரமாகியும் கடைக்கு திரும்பாததால் சந்தேகமடைந்த கருப்பையா, ரமேசின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு அவர் வீட்டிற்கு வந்தாரா? என்று விசாரித்துள்ளார். அவர் வரவில்லை என்று ரமேசின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கருப்பையா உள்ளிட்டோர் ரமேசை ேதடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று காலை வண்ணான் ஏரியில் குளிக்க சென்றவர்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த மொபட்டை கண்டு கருப்பையாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் ஏரிக்கு வந்து பார்த்தபோது ரமேசின் சட்டை, கைலி, செருப்பு உள்ளிட்டவையும் அங்கு இருந்தன. இது பற்றி ஜெயங்கொண்டம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார், ஏரியில் ரமேசை தேடும் பணியில் ஈடுபட்டனர். ரப்பர் படகு மூலம் சென்று நீண்ட நேரமாக அவர்கள் ஏரியில் தீவிரமாக தேடியும் ரமேஷ் கிடைக்கவில்லை. மேலும் அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை ஏரியின் நடுவே தண்ணீரில் ரமேசின் உடல் மிதந்தது. இதையடுத்து அவருடைய பிணத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். போலீசார், ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






