என் மலர்tooltip icon

    அரியலூர்

    • அரியலூரில் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் வாகன பிரசார இயக்கம் நடைபெற்றது
    • ஊதியக்குழுவில் விடுபட்ட ஊதியத்தை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்

    அரியலூர்:

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தமிழகத்தின் ஏழு முனைகளில் இருந்து நடைபெறுகின்ற பிரசார பயண வாகனம் புதுக்கோட்டையில் துவங்கி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. நேற்று அரியலூர் மாவட்டத்திற்கு வந்தது.

    அங்கு ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வாகனப் பிரசார இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பஞ்சாபிகேசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் வேல்முருகன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சத்துணவு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் மலர்விழி, அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் அம்சராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் முருகானந்தம், மாவட்ட செயலளர் சிவகுமார், மாவட்ட துணைசெயலாளர் தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

    புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்திட வேண்டும், சத்துணவு ஊழியர்கள், கிராம உதவியாளர்கள், எம்ஆர்பி செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சாலை பணியாளர்களின் பணி நீக்கம் காலமான 41 மாத காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும்,

    அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பி, ஊழியர்களின் பணிச்சுமையை குறைத்திட வேண்டும், ஊதியக்குழுவில் விடுபட்ட ஊதியத்தை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

    சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜவேம்பு, மாநில செயற்குழு உறுப்பினர் செல்வி, அனுசுயா, ரேடியோகிராபர் சங்க மாநில அமைப்பு செயலாளர் இளங்கீரன், எம்ஆர்பி செவிலியர் சங்க மாவட்ட தலைவர் செல்வி, மாவட்ட செயலாளர் ராகவன், கிராம உதவியாளர் சங்க வட்ட தலைவர் மதியழகன் மற்றும்ஜெயங்கொண்டம்,

    ஆண்டிமடம் வட்டத்தைச் சேர்ந்த அனைத்து துறை அரசு ஊழியர்களும் அரசு ஊழியர் சங்க மாவட்ட, வட்ட நிர்வாகிகளும் துறைவாரி சங்கங்களின் இதர மாவட்ட, வட்ட நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். முடிவில் சாலை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் காமராஜ் நன்றி கூறினார்.

    • ஜமாபந்தி நிறைவு நாள் விழா நடைபெற்றது.
    • 1,224 மனுக்கள் தீர்வு காணப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய பகுதிகளில் ஜமாபந்தி நடைபெற்றது. கடந்த 14-ந்தேதி தொடங்கிய ஜமாபந்தி நிறைவு நாள் விழா அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

    அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 4,160 மனுக்கள் பெறப்பட்டது, 215 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 2,721 மனுக்கள் சம்பந்தப்பட்ட துறையில் விசாரணையில் உள்ளது. 1,224 மனுக்கள் தீர்வு காணப்பட்டது, என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், கலெக்டர் அலுவலக மேலாளர் முத்துலட்சுமி, தாசில்தார் குமரய்யா, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ், மண்டல துணை தாசில்தார் பாஸ்கர், வருவாய் ஆய்வாளர் சாமிதுரை, சர்வே பிரிவு அலுவலர் வெற்றிச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர்கள் நந்தகுமார்,

    உமாசங்கர், சீனிவாசன், முருகேசன், கோவிந்தராஜ், பிரசன்னா, உட்பட வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் விவசாயிகள் குடிகள் மாநாடு நடைபெற்றது, இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • பள்ளி, கல்லூரி மற்றும் நீதிமன்றங்களில் உலக யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.
    • நீண்ட நாள் உயிர் வாழலாம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மற்றும் நீதிமன்றங்களில் உலக யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் யோகா பயிற்சி நடைபெற்றது.

    இதில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவருமான எஸ்.மகாலட்சுமி, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி கர்ணன், குடும்ப நல நீதிபதி செல்வம், மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் சரவணன், சார்பு நீதிபதி ஜெயசூரியா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலர் அழகேசன், வழக்குரைஞர்

    சங்கத் தலைவர் மனோகரன், மாவட்ட நீதிமன்ற முதன்மை நிர்வாக அலுவலர் சௌந்தர்ராஜன் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். யோகா பயிற்றுநரும், இயற்கை மருத்துவருமான முத்துக்குமார் கலந்து கொண்டு யோகா பயிற்சியளித்தார்.

    சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற யோகா பயிற்சிக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்து, யோகாவானது மனிதனின் உள்ளார்ந்த நல்வாழ்வுக்கான அறிவியல் அணுகுமுறையை உருவாக்குவதற்கான ஒருவகையான அடித்தளமாகும் என்றார்.

    மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக கலோரிகள் உள்ள உணவை உட்கொண்டு உடலுழைப்பு இல்லாததால் மன அழுத்தம், இதய நோய், மனச்சோர்வு, உடல் பருமன், படபடப்பு போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர்.

    தினமும் யோகா பயிற்சி செய்வதால் இத்தகைய நோய்களிலுருந்து விடுதலை பெற்று, உடல் மற்றும் மனம் இரண்டும் ஒருங்கிணைந்து செயல்பட்டு உடல் ஆரோக்கியமாக இருக்கவும் பல நோய்கள் வராமல் தடுக்கவும் வயது மூப்பை தடுத்து நீண்ட நாள் உயிர் வாழலாம் என்றார்.

    பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலக பணியளர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இதே போல், மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.

    • குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • புகார் செய்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை பகுதியில் தெற்குதெரு, மேலத்தெரு, தோப்பு தெரு, ஜெயலலிதா நகர் உள்ளிட்ட நான்கு தெருக்களுக்கும் விளந்தை ஆஞ்சநேயர் கோயில் அருகிலுள்ள போர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்மோட்டார் பழுதானதால் முறையாக குடிநீர் வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 40 பெண்கள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் சாலையில் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அருகில் இருந்த ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணசாமி (கிராம ஊராட்சி) வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இந்த மறியலால் விருத்தாச்சலம்-ஜெயங்கொண்டம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிள் கூறுகையில், அடிக்கடி மின் மோட்டார் பழுது ஏற்பட காரணம் என்ன என பரிசோதித்ததில்,

    அந்த போர் வீணாகி போனதாக தெரியவந்துள்ளது. மேலும் குடிநீர் பிரச்சினையை போக்க போர் புதிதாக போட அனுமதி கோரப்பட்டுள்ளது.

    அதற்கான அனுமதி வந்தவுடன் புதிய போர் அமைத்து தடையின்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். மேலும் தற்போது தற்காலிகமாக குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர்.

    • மத்திய அரசு அக்னி பாதை திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று ரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
    • நல்ல திட்டம் என்றால் அதை எதிர்க்கட்சிகள் வரவேற்கும்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ் மாநில செயலாளர் ரா.முத்தரசன் கூறியதாவது: அ.தி.மு.க.வில் தற்போது ஒற்றைத் தலைமையா? இரட்டைத் தலைமையா? என்கிற பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகிறது. எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்கு பிறகு அ.தி.மு.க. சுதந்திரமாக செயல்படவில்லை.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னி பாதை திட்டம் தேவையற்றது. இந்த திட்டத்தில் பல சதிகள் உள்ளன. இதற்கு பல்ேவறு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் மத்திய அரசு இந்த திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

    நல்ல திட்டம் என்றால் அதை எதிர்க்கட்சிகள் வரவேற்கும்.

    மத்திய அரசு ெதாடர்ந்து மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வருகிறது. கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக மத்திய அரசு செயல்படுகிறது. மக்களுக்காக எந்த ஒரு நல்ல திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

    பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஆளுநர் ரவி தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியை போல பேசுகிறார். தமிழக ஆளுநர் ஆளுநராக செயல்பட வேண்டும். இல்லையென்றால் அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சியிலோ அல்லது ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலோ சேர்ந்து கருத்துக்களை தெரிவிக்கலாம்.

    தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு சாத்தியம் இல்லை என நிதி அமைச்சர் சொன்னதாக செய்திகள் வந்தன. இருப்பினும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசை நாங்கள் வலியுறுத்துவோம்.

    நீண்ட கால போராட்டத்துக்கு பிறகு ஜெயங்கொண்டம் நிலக்கரி மின் திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அறிவித்த தமிழக முதல்வருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நன்றி தெரிவிக்கிறோம் என்றார்.  

    • மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
    • மன உளைச்சலில் இருந்தார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வைத்தியநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சகாதேவன். விவசாயி. இவரது மனைவி வனிதா. இவர் அரியலூர் போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவர்களின் மகள் அபினா (வயது 16).

    இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து பொதுத்தேர்வு எழுதினார். இந்த தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் 600-க்கு 397 மதிப்பெண்கள் பெற்று அபினா தேர்ச்சி அடைந்தார்.

    இந்நிலையில் மதிப்பெண் குறைவாக இருப்பதை கண்டு மன உளைச்சலில் இருந்தார்

    நேற்று காலை பதினோரு மணி அளவில் தனது வீட்டில் தூக்கு மாட்டி உயிரிழந்தார். தகவலறிந்த வெங்கனூர் போலீசார் அபிராமி உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து வெங்கனூர் போலீசார் விசாரணை செய்து வருகி–ன்றனர்.

    • விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து ெகாண்டார்.
    • தீராத வயிற்றுவலி ஏற்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் அருகே உள்ள வாணத்திரையான்பட்டினம் கிராமத்தை ேசர்ந்தவர் காவேரி (வயது 85). இவர் மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

    இந்நிலையில் காவேரிக்கு சம்பவத்தன்று தீராத வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால் வலி தாங்க முடியாமல் அவர் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கியுள்ளார்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மீட்டு ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே காவேரி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வந்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கந்து வட்டியில் பாதிக்கப்பட்டவர் குடும்பத்துடன் வந்து கலெக்டரிடம் மனு அளித்தார்.
    • கந்து வட்டி கொடுமையிலிருந்து காப்பாற்ற வேண்டும்

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம், செந்துறை, சிதம்பரம் நகரைச் சேர்ந்தவர் ஜோதி ராமலிங்கம் மகன் செல்வம் இவர் ஜவுளித் தொழில் செய்து வருகிறார், இந்நிலையில் இவர் தனது குடும்பத்துடன் வந்து கலெகடர் ரமண சரஸ்வதியிடம் மனு ஒன்றை அளித்தார் அதில்,

    தொழிலை மேம்படுத்த ஆதிகுடிக்காடு சங்கர் என்பவரிடம் தலா 25 லட்சம் வீதம் 75 லட்சம் கடனாக பெற்றிருந்தேன், அதனை அடைப்பதற்காக அவரிடம் நான் ரூ.1 கோடி கொடுத்து இனிமேல் நமக்குள் எந்த வரவு செலவும் கிடையாது என்று எழுதி வாங்கிக்கொண்டோம்.

    இந்நிலையில் அவர் மீண்டும என்னை மிரட்டி பணம் கேட்டார். இது தொடர்பாக நான் மாவட்ட போலீஸ் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லாவிடம் கொடுத்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர், ஆனால் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. எனவே இந்த கந்து வட்டி கொடுமையிலிருந்து என்னை காப்பாற்ற வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

    • வரும் 24-ந் தேதி 6-ம் ஆண்டு புத்தக திருவிழா நடைபெற உள்ளது.
    • அமைச்சர்கள் பங்கேற்பு

    அரியலூர் :

    அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அரியலூர் மாவட்ட தமிழ் பண்பாட்டு பேரமைப்பு, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர், இணைந்து அரியலூர் மாவட்ட நிர்வாகத்தினர் உறுதுணையுடன் ஆறாம் ஆண்டு புத்தகத் திருவிழா 24 ஆம் தேதி தூங்குகிறது அடுத்த மாதம் 4-ஆம் தேதி வரை நடைபெறுகின்றது.

    தமிழ் பண்பாட்டு பேரமைப்பு செயலாளர் நல்லப்பன் வரவேற்று பேசுகிறார், தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்,

    மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, மாவட்ட போலீஸ் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா, அரியலூர் எம்எல்ஏ வக்கீல் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சாெ.க.கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இராமன், அண்ணாமலை பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் அரங்க. பாரி, நகராட்சி தலைவர் சாந்தி, தமிழ் பண்பாட்டு பேரமைப்பு தலைவர் பாலகிருஷ்ணன்,

    செயலாளர் ராமசாமி, பொருளாளர் புகழேந்தி, புலவர் இளங்கோவன், செல்லபாண்டியன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் வைரவன், துணைத்தலைவர் மயில்வேலன், எம் ஆர் சி கல்வி நிறுவன தாளாளர் ரகுநாதன், ஆர்.டி.சி குழும தலைவர் அக்பர் ஷெரிப் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர், புத்தகத் திருவிழாவின் சிறப்பு ஏற்பாடுகளை தமிழ் பண்பாட்டு பேரமைப்பினர் செய்து வருகின்றனர்.

    • பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
    • 311 மனுக்கள் பெறப்பட்டது

    அரியலூர் :

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 311 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் பெற்று கொண்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

    மேலும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் இரண்டு மேல்நிலைப்பள்ளிகளில் 2019-2020ம் கல்வியாண்டில் சிறப்பாக பணிபுரிந்த 06 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறைத் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத்திட்ட அலுவலர் சிவக்குமார், மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • திருமணம் செய்து கொண்ட காதல்ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
    • போலீசார் அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சாத்தம்பாடி கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது24).டிப்ளமோ மெக்கானிக்கல் படித்துள்ளார். இவர் அதே பகுதி தெற்கு தெருவைச் சேர்ந்த சக்கரவர்த்தி மகள் விந்தியா (20) (நர்சிங் மாணவி) என்பவரை கடந்த ஒரு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் பெண்ணின் பெற்றோர்களிடம் பெண் கேட்டதாக கூறப்படுகிறது.பெண் கொடுக்க மறுத்ததால் விந்தியாவை பிரசாந்த் கும்பகோணம் அருகே உள்ள வலங்கைமான் மாரியம்மன் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பிறகு இவர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுமதி புதுமணத் தம்பதிகளிடம் விசாரணை செய்து இரு தரப்பு பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்த பெண்ணின் பெற்றோர்கள் தாங்கள் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்ததால் வர மறுத்து விட்டனர். இந்நிலையில் பிரசாந்தின் பெற்றோர்கள் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு வந்தனர். அவர்களிடம் அறிவுரைகள் கூறி காதல் ஜோடியான புதுமண தம்பதிகளை அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.

    • மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அரியலூரில் நாளை நடக்கிறது
    • செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.


    அரியலூர்:

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அரியலூர் கோட்டம் சார்பாக மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் அரியலூர் ராஜாஜி நகர் காலேஜ் ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

    பெரம்பலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர்கள், விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயன்பெறலாம். மேலும் கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.


    ×