என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
- குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- புகார் செய்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள விளந்தை பகுதியில் தெற்குதெரு, மேலத்தெரு, தோப்பு தெரு, ஜெயலலிதா நகர் உள்ளிட்ட நான்கு தெருக்களுக்கும் விளந்தை ஆஞ்சநேயர் கோயில் அருகிலுள்ள போர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்மோட்டார் பழுதானதால் முறையாக குடிநீர் வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய அலுவலகத்தில் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 40 பெண்கள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் ஜெயங்கொண்டம்-விருத்தாசலம் சாலையில் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அருகில் இருந்த ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணசாமி (கிராம ஊராட்சி) வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த மறியலால் விருத்தாச்சலம்-ஜெயங்கொண்டம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிள் கூறுகையில், அடிக்கடி மின் மோட்டார் பழுது ஏற்பட காரணம் என்ன என பரிசோதித்ததில்,
அந்த போர் வீணாகி போனதாக தெரியவந்துள்ளது. மேலும் குடிநீர் பிரச்சினையை போக்க போர் புதிதாக போட அனுமதி கோரப்பட்டுள்ளது.
அதற்கான அனுமதி வந்தவுடன் புதிய போர் அமைத்து தடையின்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். மேலும் தற்போது தற்காலிகமாக குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர்.






