என் மலர்tooltip icon

    அரியலூர்

    • ஒரே நாளில் 21,030 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
    • 34-வது சிறப்பு முகாம்கள் இன்று நடந்தது

    அரியலூர்:

    தமிழகத்தில் மீண்டும் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்க அரசின் உத்தரவின்படி, அரியலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான 34-வது சிறப்பு முகாம்களை இன்று நடத்தியது. முகாம்களில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 21,030 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    • 2 சிறுமிகள் நீரில் மூழ்கி பலியாயினர்.
    • வாய்க்காலில் குளித்த போது நடந்த சம்பவம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெற்றியூர் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகள் மகாலட்சுமி(வயது 17). இவர் 12-ம் வகுப்பு படித்துள்ளார். கரைவெட்டி கிராமத்தைச் சேர்ந்த குமரவேல் மகள் திவ்யபிரியா(14). இவர் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் 2 பேரும் உறவினர்கள் ஆவர்.

    இந்த நிலையில் வெற்றியூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு திவ்யபிரியா வந்துள்ளார். இதையடுத்து நேற்று மகாலட்சுமி, திவ்யபிரியா உள்பட அதே பகுதியை சேர்ந்த 6 சிறுமிகள் கள்ளூர் பாலம் அருகே உள்ள புள்ளம்பாடி பாசன வாய்க்காலில் குளிப்பதற்காக சென்றனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக மகாலட்சுமியும், திவ்யபிரியாவும் நீரில் அடித்துச்செல்லப்பட்டனர். இதனை கண்ட உடன் வந்த சிறுமிகள் கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து வாய்க்காலில் குதித்து இருவரையும் தேட ஆரம்பித்தனர். சில மணி நேர தேடலுக்கு பின் 2 சிறுமிகளையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்து பரிசோதனை செய்ததில் இருவருமே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழப்பழுவூர் போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பசுபதீஸ்வரர் கோவில் லிங்கத்தின்மேல் சூரியஒளி விழுந்த அபூர்வ காட்சி நேற்று நிகழ்ந்தது.
    • பக்தர்கள் கண்டு பரவசம் அடைந்தனர்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே காரைக்குறிச்சி சவுந்தரவல்லி தாயார் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. ஆண்டுக்கு 2 முறை கோவில் கருவறையில் உள்ள லிங்க திருமேனி மீது சூரியன் தனது கதிர்களை பாய்ச்சி வழிபடுவது இந்த கோவிலின் சிறப்பு அம்சமாகும்.

    இந்த ஆண்டு சித்திரை மாத சூரிய வழிபாடு நடைபெற்ற முடிந்த நிலையில் ஆவணி மாத சூரிய வழிபாடு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 18-ந் தேதி லேசாக சூரிய கதிர்கள் திருமேனி மீதுபட்டது. அடுத்த இரண்டு நாட்கள் மேகமூட்டமாக இருந்ததால் சூரிய வழிபாடு நடைபெறவில்லை. இன்று காலை 6 மணி 5 நிமிடத்திற்கு சூரிய பகவான் தனது ஆயிரம் கரங்களை நீட்டி காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் பாதங்களை சரணாகதி அடைந்த நிகழ்வு நடந்தேறியது. அடுத்த ஐந்து நிமிடங்களில் சிறிது சிறிதாக லிங்கத் திருமேனி மீது முழுவதும் சூரிய கதிர்கள் படர்ந்து லிங்க திருமேனி தங்கத்தை உருக்கி ஊத்தியது போல் தகதகவென மின்னியது. இந்த அதிசய நிகழ்வை திரளான பக்தர்கள் கண்டு வழிபட்டு வருகின்றனர்."

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாலி கிளினிக் ஆரம்பம்
    • எம்.எல்.ஏ. கண்ணன் தொடங்கி வைத்தார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய பாலி கிளினிக்கை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ க.சொ.க.கண்ணன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார்.

    இந்த பாலி கிளினிக்கில் திங்கள் கிழமையன்று பொது மருத்துவமும், செவ்வாய் அன்று மகப்பேறு மருத்துவமும், புதன்கிழமை அன்று குழந்தை நல மருத்துவமும், வியாழக்கிழமை அன்று கண் மருத்துவமும், வெள்ளிக்கிழமை அன்று பல் மருத்துவமும், சனிக்கிழமை அன்று மனநல மருத்துவமும் என மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை பார்க்கப்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட சுகாதார துணை இயக்குனர் மருத்துவர் கீதாராணி தெரிவித்தார்.

    இதில் வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன், நகர்மன்ற தலைவர் சுமதி சிவக்குமார், அனைத்து மருத்துவர்களும், மாநில திமுக சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், மாவட்ட துணை செயலாளர் கணேசன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகர நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

    • விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைக்க வேண்டும் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.
    • பிரதம மந்திரி கவுரவ நிதியுதவி திட்டத்தில் பயன்பெறும்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி கவுரவ நிதியுதவி திட்டத்தில் பயன்பெ––றும் விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைக்க வேண்டும் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறி–ப்பில் கூறியிப்பதாவது :

    அரியலூர் மாவட்டத்தில், பிரதம மந்திரி கவுரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் 1,04,055 விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில், விவசாயி–களுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஒரு ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    இத்தொகையானது, விவசாயிகளின் வாழ்வா–தாரத்திற்காக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை 10 தவணைகள் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்ப–ட்டுள்ளது. தற்போது 11வது தவணை தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது. இனிவருங்காலங்களில் விவசாயிகள் 12 ஆவது தவணைத் தொகையை பெறுவதற்கு தங்களது ஆதார் விபரங்களை சரிபார்த்தல் மற்றும் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பது அவசியம் ஆகும்.

    தங்களது ஆதார் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரி கவுரவ நிதியுதவி திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து, ஓ.டி.பி மூலம் சரிபார்த்துக் கொள்ள–லாம்.

    ஆதார் எண்ணுடன், கைப்பேசி எண்ணை இணைக்காத விவசாயிகள் அருகில் உள்ள இ-சேவை மையங்களை அணுகி, பிரதம மந்திரி கவுரவ நிதியுதவி திட்ட வலைதளத்தில் தங்க–ளது ஆதார் எண் விபர–ங்களை உள்ளீடு செய்து, தங்களது விரல் ரேகையை பதிவு செய்து, விபரங்களை சரிபார்த்து கொள்ளலாம்.

    இதற்கான கட்டணமாக ரூ.15 இசேவை மையங்களுக்கு செலுத்த வேண்டும். இந்த இருமுறைகளில் ஏதேனும் ஒரு முறையில் பயனாளிகளான விவசாயிகள் தங்களது ஆதார் விவரங்களை திட்ட வலைதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் தாங்கள் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு சென்று ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்த்து, இணை–க்கப்படவில்லை எனில் 12 ஆவது தவணை பெறுவதற்கு முன்னர் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர்ரமண சரஸ்வதி தகவல் தெரிவித்துள்ளார்.

    • நல்லதங்காள் கோவிலில் கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • கலசம், மணி ஆகியவை வயல்காட்டில் கிடந்துள்ளது.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் அகரம்சீகூர் அருகே உள்ள சித்தளி கிராமத்தில் நல்லதங்காள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புதிதாக கோபுரம் கட்டப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து மண்டல பூஜையும் நடைபெற்று நிறைவடைந்தது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல பூஜைகளை முடித்துவிட்டு கோவில் பூசாரி கோவிலின் கதவுகளை சாத்திவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். நள்ளிரவு சுமார் 1 மணியளவில் கோவிலின் பின் பகுதியில் மர்ம நபர் ஒருபர் பதுங்கி இருப்பதை சித்தளி கிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ரவி (48) என்பவர் பார்த்து சத்தம் போட்டுள்ளார்,

    இதையடுத்து அந்த மர்ம நபர் கோவில் பின்பகுதியில் உள்ள வயல்காட்டு பகுதிக்குக்கு ஓடிவிட்டார். ரவி சந்தேகமடைந்து கோவிலின் தர்மகர்த்தா பழனிசாமிக்கு தகவல் தெரிவித்தார். மர்ம நபர் ஒடிய திசையில் சென்று பார்த்தபொழுது கோவிலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட கலசம், மணி ஆகியவை வயல்காட்டில் கிடந்துள்ளது.

    பின்னர் கோவில் மண்டப அறையில் அதனை எடுத்து வைத்துள்ளனர். இதையடுத்து தர்மகத்தா பழனிசாமி (59), கோவில் பூசாரி அய்யாசாமி (62) மற்றும் பொதுமக்கள் கோவிலுக்கு உள்ளே சென்று பார்த்த போது ராஜகோபுர செம்பு கலசம், கருவறை கலசம், மணி உள்ளிட்ட பொருட்கள் திருடு போயிருந்தது தெரிந்தது.

    இது குறித்து தர்மகர்த்தா அளித்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார். தப்பி ஓடிய மர்ம நபரையும் வலை வீசி போலீசார் தேடி வருகிறார்கள்.

    • நகைகளை வாங்கிக்கொண்டு மகளை கணவருடன் பெற்றோர் அனுப்பிவைத்தனர்
    • வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இடையாறு கிராமம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன் என்பவரது மகன் அறிவழகன் (வயது 23). இவர் சென்னை பல்லாவரம் பகுதியில் தனியார் பர்னர் தயாரிப்பு கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார்.

    இதற்காக அவர் கோவிலம்பாக்கம் காந்திநகர் ராஜேஸ்வரி 4-வது தெருவில் வாடகை வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த வேலு மகள் மகேஸ்வரி (18) என்பவருக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் இவர்களது காதல் விஷயம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்ததால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கண்டித்துள்ளனர். இதற்கிடையே சென்னை கோவிலம்பாக்கத்தில் இருந்த மகேஸ்வரியை அறிவழகன் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இடையாறு கிராமத்திற்கு அழைத்து வந்து உடையார்பாளையம் வேலப்ப செட்டி ஏரி அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் வைத்து கடந்த 18-ந்தேதி திருமணம் செய்து கொண்டார்.

    இருந்தபோதிலும் பெண் வீட்டார் பிரச்சினை செய்வார்கள், அவர்களால் ஆபத்து ஏற்படும் என்று உணர்ந்து காதல் ஜோடி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது. இதுகுறித்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி பெண்ணில் பெற்றோர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவித்து இருவரையும் அழைத்து விசாரித்துள்ளனர்.

    அப்போது நாங்கள் இருவரும் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதாகவும் காதல் ஜோடி தெரிவித்துள்ளது. பெண்ணின் பெற்றோர்கள் திருமணத்தில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்றும் இனிமேல் எங்களுக்கும் மகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தனர்.

    இதையடுத்து மகள் அணிந்திருந்த கம்மல், தோடு, கொலுசு உள்ளிட்டவர்களை பெற்றுக்கொண்டு ஊர் திரும்பிவிட்டனர். தொடர்ந்து புதுமண தம்பதியினருக்கு போலீசார் அறிவுரைகள் வழங்கி அறிவழகனின் பெற்றோர்களுடன் இடையாறு கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    • டாஸ்மாக் கடையில் இருசக்கர வாகனம் திருட்டு சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் வெங்கட்ரமணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராசு. இவர் நேற்று மதியம் அரியலூரில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையில் தனது இரு சக்கர வாகனத்தை திருத்திவிட்டு மது அருந்த சென்றுள்ளார்.

    சிறிது நேரம் கழித்து மதுபான கடையை விட்டு வெளியே வந்த நிலையில் அவர் நிறுத்தி இருந்த பைக்கை காணாததை கண்ட ராசுவுக்கு அடித்த போதை முற்றிலும் தெளிந்துவிட்டது.

    பின்னர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது வெள்ளை சட்டை அணிந்து வந்த மர்ம நபர் நீண்ட நேரம் பைக் அருகில் நின்று கொண்டிருந்ததும், அப்போது மதுக்கடைக்கு வந்த மற்றொருவரிடம் சாவி வாங்கி பைக்கை ஆன் செய்து மீண்டும் சாவி அவரிடம் கொடுத்துவிட்டு திருடிய பைக்கோடு கிளம்பி சென்றதும் தெரியவந்தது.

    இதுகுறித்து ராசு போலீசில் புகார் அளித்துள்ளார். அரசுக்கு வருமானம் தரக்கூடிய டாஸ்மாக் கடைகளில் இருசக்கர வானங்கள் திருட்டுப் போவதை தடுக்க போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று ராசுவும், மது பிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.
    • அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருங்கூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கடந்த ஆவணி 1-ந் தேதி தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் மகாபாரத கதைகளும், அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. நேற்று காலை கிராமத்தின் ஏரிக்கரையில் அரவான் கடபலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தீ மிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. திரவுபதி அம்மன் தீக்குழி முன்பு எழுந்தருளினார். பின்னர் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    • சொத்து தகராறில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
    • முன்விரோதம் இருந்து வந்தது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தை சேர்ந்தவர் தன்ராஜ் மகன் சிவசங்கர். அதே பகுதியில் வசிக்கும் அவரது பெரியப்பா ராமு என்பவருடைய மகன் ராமகிருஷ்ணன்(வயது 41). இவர்கள் இருவருக்கும் இடையில் சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக உடையார்பாளையம் கோட்டாட்சியரிடம் மனு செய்து, மூன்று முறை கோட்டாட்சியர் முன்பு ஆஜராகி விசாரணை நடைபெற்றது. இதன்பிறகு சிவசங்கரின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன் சம்பவத்தன்று இரவு சிவசங்கரையும், அவரது சித்தப்பா மற்றும் சித்தப்பாவின் மகன்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து கேட்ட சிவசங்கரை, ராமகிருஷ்ணன் தனது வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து வந்து கைகளால் தள்ளி வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்ததையடுத்து, கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சிவசங்கர் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் ராமகிருஷ்ணன் மீது சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.

    • பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் கைப்பேசி செயலி தொடக்கவிழா நடைபெற்றது
    • அமைச்சர் சிவசங்கா் தொடங்கிவைத்தார்

    அரியலூா்:

    அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் மாணவா்கள், பணியாளா்களின் வருகையை முக அங்கீகார முறையில் பதிவு செய்யும் கைப்பேசி செயலி தொடக்கவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து செயலியைத் தொடக்கி வைத்த போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் பேசியது:

    நான் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சராக இருந்தபோது மாவட்ட நிா்வாகத்துக்கு அறிவுறுத்தியதன்பேரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலியானது மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 32 விடுதிகளில் மாணவா்கள், பணியாளா்களின் வருகையை பதிவு செய்யும் என்றாா்.

    • விஷம் குடித்த மாணவர் உயிரிழந்தார்
    • 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

    அரியலூா்:

    அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே நரசிங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கா்ண மகாராஜன் மகன் அருள்முருகன் (வயது15). இவா் வெற்றியூா் கிராமத்திலுள்ள பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் நண்பா்களுடன் விளையாடிக் கொண்டிருந்த அருள்முருகனை, அவரது தாய் கண்டித்ததால் விரக்தியடைந்த அவா் பூச்சி மருந்தை குடித்து மயங்கிக் கிடந்தாா்.

    இதையடுத்து அரியலூா் அரசு மருத்துவமனையிலும், பின்னா் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட அருள்முருகன் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். கீழப்பழுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்

    ×