என் மலர்tooltip icon

    அரியலூர்

    • இந்திய தர நிர்ணய குழு கூட்டம் நடைபெற்றது.
    • மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இந்திய தர நிர்ணய குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் (பொறுப்பு) இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிமணி முன்னிலை வகித்தார். மதுரை இந்திய தர நிர்ணய அமைப்பு உயர் அதிகாரி சிவக்குமார் மற்றும் அறிவியல் அறிஞர் ரமேஷ் ஆகியோர் இந்திய தர நிர்ணய குழு கூட்டத்தில் குழு அமைப்பு பணி, நிறுவனம் பற்றியும், காகித உற்பத்தி பற்றியும் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துக்கூறினர், ஐ.எஸ்.ஐ. மற்றும் ஹால்மார்க் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தனர். மேலும், பொருளின் தரம் பற்றி மாணவர்களுக்கு எடுத்து கூறியதுடன், ரொட்டி தயாரித்தல் பற்றியும், அதன் தரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் விளக்கினர். பொருட்களை வாங்கும்போது முத்திரை பார்த்து வாங்குவது, சந்தையில் தரமான பொருட்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கி எழுதும் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக இந்திய தர நிர்ணய கழகம் வழிகாட்டி ஆசிரியர் இளஞ்செழியன் வரவேற்றார். முடிவில் முதுகலை ஆசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • தேசிய ஊட்டச்சத்து மாத உணவு பொருள் கண்காட்சி நடைபெறுகிறது
    • அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாத உணவு பொருள் கண்காட்சியினை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, எம்.எல்.ஏ.கள் சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் "ஊட்டச்சத்து மாத விழாவிற்காக ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல்" என்ற தலைப்பில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் இன்றைய தினம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத உணவுப் பொருள் கண்காட்சியினை போக்குவரத்துத் துறை அமைச்சர் துவக்கி வைத்து பார்வையிட்டார். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்த சோகை பற்றிய விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினையும் கொடியசைத்து துவக்கி வைத்து, பொதுமக்கள் அனைவரும் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவில் ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வை பெற்று நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி, துணைத்தலைவர் கலியமூர்த்தி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பரசி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், திட்ட உதவியாளர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அரியலூரில் விஜயநகர பேரரசு கால முறையில் பாரம்பரிய முறைப்படி மணமக்களுக்கு திருமண விழா நடைபெற்றது
    • மணமகன் வெள்ளை குதிரையில் பட்டு உடுத்தி வாளும் கேடயமுமாக உற்றார் உறவினர்களுடன் ஊர்வலமாக வந்தார். மணப்பெண் திரைச்சீலை மூடிய சந்தன பல்லக்கில் அழைத்து வரப்பட்டார்

    அரியலூர்:

    இன்றைய திருமணங்கள் அவரவர் சமய, சம்பிரதாயங்களின்படி நடத்தப்பட்டாலும் ஏதோ ஓரிடத்தில் மேற்கத்திய, வடக்கத்திய கலப்பு இடம் பெற்று விடுகிறது. பண்டைக்கால நடைமுறைகள் பலவற்றை தற்போதைய திருமண நிகழ்வுகளில் பார்க்க இயலாது.

    முந்தைய காலத்தில் மணமக்கள் மீது அருகம் புல்லை தூவி ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, மூங்கில் போல் சுற்றம் சூழ வாழ்வாங்கு வாழ்க என வாழ்த்தி வந்தனர். அருகம்புல் படரும் இடங்களில் எல்லாம் வேரூன்றி விடும். மழை இல்லாமல் மேல்பகுதி வாடி நின்றாலும் மீண்டும் மழை பொழியும்போது தழைக்கத் தொடங்கும்.

    கஷ்டங்கள் வந்தாலும் அதைத் தாங்கி மீண்டும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதை குறிப்பதற்காகவே அருகம்புல்லை மணமக்கள் மீது தூவி வாழ்த்தி வந்தனர். இப்போது வாக்கிங் செல்பவர்கள் அருகம்புல் ஜூஸ் குடிப்பதைத்தான் நாம் பார்த்திருக்கின்றோம். பல திருமண வீடுகளில் மணமக்கள் மீது அருகம் புல்லுக்கு மாறாக மஞ்சள் கலந்த அரிசியை தூவுகின்றனர். இது வட மாநில கலப்பாகும். மேலும் பெரும்பாலானவர்கள் மலர் தூவி வாழ்த்துகின்றனர்.

    இது அரிசியைவிட உத்தமமானது என்கிறார்கள். இவ்வாறு காலப்போக்கில் பல மாற்றங்கள் சமூகத்தில் ஏற்றுக் கொள்ள ப்பட்டுள்ளன. இன்றைய இளைய தலைமுறையினர் புதுமையான திருமணங்களை பார்க்கும் வாய்ப்பு அவ்வப்போது கிடைக்கின்றன. ஆனால் அரியலூர் நகரவாசிகளுக்கு விஜயநகர பேரரசர்களின் சந்திர வம்சத்து திருமண வைபவத்தை பார்க்கும் அரிதான வாய்ப்பு இன்றைய தினம் கிடைக்கப்பெற்றது.

    அரியலூர் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள கீதா மஹாலில் பா.பாண்டியராஜ் -ரஞ்சிதா ஆகியோரின் திருமணம் மன்னர் கால திருமணத்தை நினைவூட்டுவதாக அமைந்தது. மணமகன் வெள்ளை குதிரையில் பட்டு உடுத்தி வாளும் கேடயமுமாக உற்றார் உறவினர்களுடன் ஊர்வலமாக வந்தார்.

    மணப்பெண் திரைச்சீலை மூடிய சந்தன பல்லக்கில் அழைத்து வரப்பட்டார். இந்த ஊர்வலத்தில் மரப்பாச்சி பொம்மை, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை வேடமடைந்த கலைஞர்கள், மன்னர் கால அமைச்சரவை சகாக்கள் வேடமடைந்தவர்கள் என வரிசையாக வர ஊர்வலம் களை கட்டியது. மணமக்களின் இந்த ஊர்வல நிகழ்வு மட்டுமே இரண்டு மணி நேரம் நகரை சுற்றி வந்தது. அதன் பின்னர் கீதா மஹாலில் சடங்கு சம்பிரதாயங்கள் நடைபெற்றன.

    ஸ்ரீ வைஷ்ணவ முறைப்படி பொன்னூஞ்சல் கட்டப்பட்டு, ஆண்டாளின் 16 திருவடி வாசகம் பாடி திருமண நிகழ்வுகள் நடந்தேறின. 6 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட திருமலை நாயக்கர் மன்னரின் சிலை முன்பு மணமக்கள் திருமணம் செய்து கொண்டனர். இதில் விஜய நகர பேரரசு கால சடங்குகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்பட்டன.

    இந்த தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நிறுவனத் தலைவர் கே.செந்தில்குமார் நாயுடு தலைமையில் திருமண விழா நடந்தது. இதில் மாநிலத் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், மாநில பொது செயலாளர் வெங்கடேசன், மாநில துணைப் பொதுச் செயலாளர் ரமணன், மாநில பொருளாளர் ராஜசேகரன்,

    அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் மகேஷ் குமார், கார்த்திகேயன், மணிகண்டன், மற்றும் நிர்வாகிகள் பி. ராஜசேகரன், சபரி ராஜன், ராஜேந்திரன், தயாளன், ராம் பிரசன்னா, வினோத், சதீஷ்குமார், நந்து (எ) ஆனந்தன், திருச்சி வெங்கடேஸ்வரா டிரேடிங் கார்ப்பரேஷன் கே.மதன்குமார், மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர் ஹேராம் துளசிராமன்போன்ற முக்கியஸ்தர்கள் பிரபலங்கள் மணமக்களை மனதார வாழ்த்தினர்.

    மன்னர் கால திருமணத்தை கண்டு வியப்படைந்த அரியலூர் நகரவாசி ஒருவர் கூறும்போது, பண்டைக்கால மன்னர்களின் வாழ்வியல் முறைகள் மற்றும் வரலாறுகளை தெரிந்து கொள்ள இதுபோன்ற பாரம்பரிய திருமணங்கள் உதவுகின்றன. சரித்திரத்தை, முன்னோர்களின் தியாகத்தை உள் வாங்கிய சமூகமும், நாடும் வளரும் பாரம்பரிய மற்றும் மன்னர் கால திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும் என்றனர்.

    • ஜெயங்கொண்டத்தில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
    • இந்தநிலையில் அந்த மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிய பிரவீன் அவரை கடத்தி சென்றுள்ளார்

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் பிரவீன் (வயது 19), கூலி தொழிலாளி. இவர் பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் அந்த மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிய பிரவீன் அவரை கடத்தி சென்றுள்ளார்.

    இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் காட்டுமன்னார்குடியில் இருந்தவர்களை அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    இதில் அந்த மாணவியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் பிரவீனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட மன்றத்தில் ஊட்டச்சத்து மாதத்தையொட்டி சமுதாய நல பணியாளர்களுக்கான ரத்தசோகை ஒழிப்பு பற்றிய ஒருநாள் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
    • கூட்ட அரங்கில் இரும்பு சத்துள்ள தானியங்கள், கீரைகள், காய்கறிகள், பழ வகைகள் கண்காட்சியாக வைக்கப்பட்டன.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட மன்றத்தில் ஊட்டச்சத்து மாதத்தையொட்டி சமுதாய நல பணியாளர்களுக்கான ரத்தசோகை ஒழிப்பு பற்றிய ஒருநாள் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

    தா.பழூர் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரளாதேவி தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். அப்போது ரத்தசோகை நோய் தடுப்பது குறித்தும், பயன்படுத்த வேண்டிய ஊட்டச்சத்து உணவு வகைகள் குறித்தும் பேசினார்.

    வட்டார சுகாதார செவிலியர் விஜயராணி பெண்கள் கடைபிடிக்க வேண்டிய தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார். இப்பயிற்சியில் தா.பழூர் வட்டாரத்தை சேர்ந்த சமுதாய நல பயிற்றுனர்கள் 19 பேர் கலந்து கொண்டனர். கூட்ட அரங்கில் இரும்பு சத்துள்ள தானியங்கள், கீரைகள், காய்கறிகள், பழ வகைகள் கண்காட்சியாக வைக்கப்பட்டன.

    பயிற்சியின் முடிவில் ஊட்டச்சத்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. இப்ப பயிற்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் லூர்து சேவியர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • அப்போது பாக்கியராஜ், சின்னதுரை (52) ஆகியோர் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

    அரியலூர் ;

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் லூர்து சேவியர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது தத்தனூர் கீழவெளி காலனி தெருவை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 34), சோழங்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்த சின்னதுரை (52) ஆகியோர் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்த மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    • குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை ஊராட்சி மன்றம் பெற்றுக் கொண்டவுடன் வழக்கை தாக்கல் செய்தவர்களுக்கு நுகர்வோர் என்ற அந்தஸ்து ஏற்பட்டுவிட்டது.
    • வழக்கு தொடுத்துள்ளவர்கள் உட்பட 15 தனிநபர்களுக்கு வீட்டு குடிநீர் இணைப்பு உடனடியாக வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தும் நடவடிக்கை இல்லை.

    அரியலூர் ;

    அரியலூர் அடுத்த தேளூர் கிராமத்தைச் சேர்ந்த பொய்யாமொழி (54), வேல்விழி(43), கோவிந்தராஜ்(52), முருகேசன்(53), பாரிவள்ளல்(55), அம்பிகா(48), அருட்செல்வம்(49) உள்ளிட்ட 15 பேர் தங்களது வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கோரி கடந்த 2016 ஆம் ஆண்டு கிராம ஊராட்சியில் விண்ணப்பித்திருந்தனர்.இவர்களிடமிருந்து ஊராட்சி நிர்வாகம், குடிநீர் இணைப்புக்கான வைப்புத் தொகையை பெற்றுள்ளது.ஆனால் இதுவரை அவர்களது வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது.

    இது குறித்து, அவர்கள் அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனை விசாரித்து வந்த நீதிபதி வீ. ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.

    அந்த தீர்ப்பில், வழக்கு தாக்கல் செய்து செய்துள்ளவர்கள் எவ்வித சேவை கட்டணத்தையும் ஊராட்சி மன்றத்தில் செலுத்தவில்லை. இதனால் அவர்கள் நுகர்வோர் அல்ல என்பதால் நுகர்வோர் ஆணையம் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்ற அரசின் வாதம் ஏற்புடையதல்ல.

    குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை ஊராட்சி மன்றம் பெற்றுக் கொண்டவுடன் வழக்கை தாக்கல் செய்தவர்களுக்கு நுகர்வோர் என்ற அந்தஸ்து ஏற்பட்டுவிட்டது. வறட்சியின் காரணமாக தனிநபர் குடிநீர் இணைப்புகளை வழங்க முடியாது என்று அரசு தரப்பில் கூறப்படும் நிலையில் அவ்வாறு இருக்க ஏன் தனி நபரிடம் வைப்புத் தொகையை பெற்றுள்ளீர்கள் என்பதற்கான பதில் ஊராட்சி மன்றத்தின் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை .

    வழக்கு தொடுத்துள்ளவர்கள் உட்பட 15 தனிநபர்களுக்கு வீட்டு குடிநீர் இணைப்பு உடனடியாக வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தும் நடவடிக்கை இல்லை. எனவே குடிநீர் வழங்க வைப்புத் தொகை பெற்றுக் கொண்டு, ஆட்சியர் உத்தரவு பிறப்பித்த பின்பும் அதனை மதிக்காமல் குடிநீர் இணைப்பு வழங்காமல் உள்ள ஊராட்சி மன்ற சேவை குறைபாடு புரிந்துள்ளது என்பது நிரூப்பிக்கப்பட்டுள்ளது.

    எனவே வழக்கு தொடுத்துள்ள அனைவரது வீடுகளுக்கும் நான்கு வாரத்துக்குள் தேளூர் ஊராட்சி மன்றம் குடிநீர் வழங்க இணைப்பு வழங்க வேண்டும். இதனை அரியலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். இந்த உத்தரவை செயல்படுத்த தவறினால் வழக்கை தாக்கல் செய்துள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ 20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    • அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.
    • இவ்விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் 8 பேர், ஆசிரியர்கள் குறித்தும், அவர்களது தன்னலமற்ற சேவைகள் குறித்தும் சிறப்பாக பேசினர்.

    அரியலூர் ;

    அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் 8 பேர், ஆசிரியர்கள் குறித்தும், அவர்களது தன்னலமற்ற சேவைகள் குறித்தும் சிறப்பாக பேசினர்.

    இதையடுத்து, அவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்(பொறுப்பு)சரவணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கும், அவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியை கனகலட்சுமிக்கும் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் ரவி, ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • சிவாலயத்தில் ஆவணி பிட்டு திருவிழா நடைபெற்றது
    • வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக நடைபெற்றது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் சிவாலயத்தில் ஆவணி மூலத் திருவிழா நடைபெற்றது. பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிப்பட்ட சிவனின் கதையை போற்றும் விதமாக மதுரை உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் ஆவணி பிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி அரியலூர் மாவட்டம் தா.பழூரில் எழுந்தருளி அருள் பாலிக்கும் விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாத சுவாமி கோவிலில் ஆவணி மூல பிட்டு திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அதன்படி சுவாமி மற்றும் அம்பாளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சுவாமி, அம்பாள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு மங்கள ஆரத்தி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தேவார திருமுறைகள் மற்றும் வேத மந்திரங்கள் முழங்க சுவாமி கோவில் பிரகார உலா நடைபெற்றது. இதில் தா.பழூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • 2-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது

    அரியலூர்:'

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற உக்கிர மகா காளியம்மன் கோவில் உள்ளது. பல ஆண்டுகளாக இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் கும்பாபிஷேக விழா நடத்துவதற்காக ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்தனர். அதன்படி கடந்த 2-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி தொடர்ந்து பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா நேற்று காலை நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று கோவில் கலசத்திற்கு புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்றினர். அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர். அதனை தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் உக்கிர மகா காளியம்மன் கோவிலில் அமைந்துள்ள விநாயகர் மற்றும் கருப்புசாமி கோவிலுக்கும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோடாலிகருப்பூர் பொதுமக்கள் மற்றும் திருப்பணி குழுவினர் செய்து இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கோடாலிகருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்."

    • பெண்ணை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
    • டீக்கடை நடத்தி வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் கிராமத்தில் வசித்து வருபவர் வெற்றிச்செல்வன் மனைவி ரேணுகாதேவி(வயது 50). கணவன்-மனைவி இருவருமாக இணைந்து டீக்கடை நடத்தி வருகின்றனர். அந்த கடை அருகிலேயே ரேணுகா தேவியின் கணவர் வெற்றிச்செல்வனின் தம்பி தமிழ்ச்செல்வன் (53) டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வடை சுடுவதற்கு மாவு வாங்கி வந்த வெற்றிச்செல்வனை பார்த்து தமிழ்ச்செல்வன் இவனால் தான் தனக்கு வியாபாரம் நடக்கவில்லை என்று கூறி தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனை தட்டி கேட்ட ரேணுகா தேவியையும் தகாத வார்த்தைகளால் திட்டி இரும்பு பைபால் அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் தடுத்தபோது கொல்லாமல் விடமாட்டேன் என்று மிரட்டி சென்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சம்பவத்தில் காயமடைந்த ரேணுகாதேவி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து ரேணுகாதேவி தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிந்து தமிழ்ச்செல்வனை கைது செய்து ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்ச்செல்வனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்."

    • ஆபத்தான கோவில் சுவற்றை அகற்றக்கோரி மனு அளிக்கப்பட்டது.
    • மாவட்ட வருவாய் அதிகாரியிடம் அளித்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் மாவட்ட வருவாய் அதிகாரி கலைவாணியிடம் அளித்தனர். இதில் உடையார்பாளையம் தாலுகா காசான்கோட்டை கிராம மக்கள் அளித்த மனுவில், காசான்கோட்டை கிராமத்தில் 3 தலைமுறைகள் கடந்து சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் முன் பக்கம் கட்டிடத்தின் சுவர் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் கோவிலுக்கு செல்லவே பொதுமக்கள் பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே கிராம பொதுமக்கள் சார்பாக இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிராம பொதுமக்கள் நன்கொடை மூலமாக புதிய சுவர் வைத்து கட்டிடம் கட்ட அனுமதி கேட்டிருந்தோம். இதுவரை அனுமதி வழங்கவில்லை. ஆனால் தற்போது இடிந்து விடும் நிலையில் உள்ள சுவற்றின் மீது விரிசலோடு மேற்கூரை ஓடு போட வேலை நடைபெற்று வருகிறது. அவற்றை தடுத்து நிறுத்தி இடிந்து விழும் நிலையில் உள்ள சுவற்றை அப்புறப்படுத்தி கான்கிரீட் கட்டிடமாக கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    ×