என் மலர்tooltip icon

    அரியலூர்

    • வளர்மதி அணிந்திருந்த நகையை மர்ம நபர் பறித்து சென்றார்.
    • விசாரணையில் புரட்சி தமிழன் இடையக்குறிச்சி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருப்பதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பரணம் கிராமத்தைச் சேர்ந்தவர் வளர்மதி (வயது 55). இவர் தனக்கு சொந்தமான முந்திரி தோப்பில் மாடு மேய்த்துக் கொண்டு இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் மறைந்து வந்து அவரை தாக்கி வாயை துண்டால் கட்டிப்போட்டார். இதனை சற்றும் எதிர்பாராத வளர்மதி நிலைகுலைந்தார். மேலும் அவரால் உதவிக்கு யாரையும் அழைக்க முடியவில்லை.

    பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்று விட்டார். பின்னர் அங்கு வந்த சிலர் வளர்மதியை மீட்டனர். இதையடுத்து அவர் இரும்புலிக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையில் தனிப்படை போலீசாரும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் இடையக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த புரட்சி தமிழன் என்பதும் அவர் ஏற்கனவே பல்வேறு வழிப்பறி வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் தெரிந்தது.

    மேலும் அவர் மீது அரியலூர் மாவட்டம் முழுவதும் 11 திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இவர் வயதான மற்றும் கர்பிணி பெண்களை குறிவைத்து இதுபோன்ற தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அவரை பின்தொடர்ந்து சென்றனர்.

    அப்போது அவர் இடையக்குறிச்சி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருப்பதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர். அங்கு விரைந்து சென்ற போலீசார் திருடிய தாலிச் சங்கிலியை விற்பனை செய்ய கிளம்பியபோது கையும், களவுமாக பிடித்தனர். அதனை தொடர்ந்து இரும்புலிக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து புரட்சி தமிழனை கைது செய்ததோடு நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

    சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்ததோடு நகைகளையும் பறிமுதல் செய்த போலீசாரை பரணம் கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்
    • பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்

    அரியலூர்

    ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் நடைபெற்ற பேரிடர் கால பாதுகாப்பு ஒத்திகைக்கு ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் தாசில்தார் துரை முன்னிலை வகித்தார். மீட்பு பணி குழுவினர் வீடுகளில் தீப்பிடித்தால் அதனை எவ்வாறு அணைப்பது, தீயில் சிக்கிக் கொள்பவர்களை மாடி வீடுகளிலிருந்து கீழே இறக்குவது, அவர்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்வது மற்றும் எண்ணெயினால் ஏற்படும் தீயை தண்ணீரை ஊற்றி அணைப்பது, சமையல் எரிவாயு சிலிண்டர்களில் தீப்பிடித்தால் தீயை அணைப்பது எவ்வாறு என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    • மூதாட்டியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
    • முன் விரோதம் இருந்து வந்துள்ளது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கவடங்கநல்லூர் மேலத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி அஞ்சலை (வயது 65). இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (36) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு பாலமுருகன் மூதாட்டி அஞ்சலை வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • 53 தனிநபர் கழிவறைகள் திறக்கப்பட்டது
    • ராம்கோ சிமென்ட்ஸ் ஆலை சார்பில்

    அரியலூர்:

    ராம்கோ சிமெண்ட்ஸ், (கோவிந்தபுரம்), நிறுவனத்தின் நிறுவன சமூக பொறுப்பு செயல்பாட்டு துறையின் நிதியின் மூலம் ரெட்டிபாளையம் ஊராட்சி, மு.புத்தூர் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள 53 தனிநபர் கழிப்பறை மற்றும் குளியல் அறைவளாகங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, எம்.எல்.ஏ. சின்னப்பா மற்றும் கிராமாலயா நிறுவனத்தின் நிறுவனர், பத்மஸ்ரீ தாமோதரன், ராம்கோ சிமெண்ட்ஸ் அரியலூர் ஆலைத்தலைவர் மதுசூதன் குல்கர்னி, மூத்த துணைதலைவர் (நிர்வாகம்) ராம்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இது குறித்து ராம்கோ சிமென்ட்சின் அரியலூர் ஆலை தலைவர் மதுசூதன் குல்கர்னி கூறியதாவது:

    கடந்த நிதியாண்டின் (2020-21) ஆரம்பத்தில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் தனது ஆலை மற்றும் சுரங்கப்பகுதிகளை சுற்றியுள்ள அமீனாபாத், நல்லாம்பத்தை, சின்னநாகலூர் மற்றும் மு.புதூர் ஆகிய 4 கிராமங்களில் 100 தனி நபர் நவீன கழிப்பறைகளுடன் கூடிய குளியலறைகளை கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார்கள். மேலும், இந்த ஆண்டு கூடுதலாக 100 கழிவறைகளை மேற்கண்ட கிராமங்களில் கட்டிவருகிறது.

    இந்நிலையில், மு.புதூர் கிராமத்தில் மட்டும் இரண்டாண்டுகளில் 53 தனிநபர் கழிப்பறைகளை கட்டிமுடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்துள்ளனர். நமது இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டுள்ள ஸ்வச் பாரத் இயக்கத்தில், தி ராம்கோ சிமெண்ட்ஸ், கோவிந்தபுரம், அரியலூர் ஆலையின் "நிறுவன சமூக பொறுப்பு செயல்பாட்டு துறை"-யின் மூலம் தனிப்பட்ட வீடுகளுக்கு நவீன கழிவறை கட்டிக் கொடுத்து வருகிறது.

    இவ்விழாவில், கிராம ஊராட்சி மன்ற தலைவர், பிரதிநிதிகள், அரசு அலுவலாக் ள், ராம்கோ சிமெண்ட்ஸ் அலுவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • உண்ணாவிரதம் இருந்த முதியவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்
    • பள்ளி வளாகத்தில் ஊராட்சி அலுவலகம் திறப்பதை கண்டித்து

    அரியலூர்:

    அரியலூர் அடுத்த தாமரைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில், ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழா காணாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.

    இந்நிலையில், அந்த ஊராட்சி அலுவலக கட்டடத்தை பள்ளிக்கே வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பலமுறை அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன் பாடு ஏற்படவில்லை.

    இந்நிலையில், இந்த ஊராட்சி அலுவலகம் நேற்று திறக்கப்படவுள்ளதாக அறிவித்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 80 வயது முதியவர் தமிழ்மணி மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி அலுவலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

    இவருக்கு ஆதரவாக முன்னாள் மாணவர் சங்க தலைவர் தமிழ்களம் இளவரசன், செயலர் நீலமேகம் மற்றும் ஆ.ராஜா, ராஜேந்திரன், வடிவேல், பாரிவள்ளல் ஆகியோரும் உண்ணாவிரதம் இருந்தனர்.

    தகவலறிந்து வந்த அரியலூர் காவல் துறையினர், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக மேற்கண்ட 7 பேரையும் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    • வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது
    • பாலியல் வன்கொடுமை வழக்கில்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே பார்வையற்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்து.

    ஆண்டிமடம் அடுத்த சின்ன கிருஷ்ணாபுரம், கீழத்தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ராஜ்மோகன்(வயது30). இவர், அதே பகுதியை சேர்ந்த பார்வையற்ற 36 வயதுடைய பெண்ணை கடந்த 02.04.2021 அன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து அப்பெண்ணின் உறவினர் அளித்த புகாரின் பேரில், ஜயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து ராஜ்மோகனை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றவாளி ராஜமோகனுக்கு ஆயுள்சிறையும், ரூ.60ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் ம.ராஜா ஆஜராகினார்.

    • ஓய்வூதியர்கள் மனு அளிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது
    • குறைதீர்க்கும் கூட்டத்திற்கு முன்பாக

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதி காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது. எனவே, ஓய்வூதியர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) கலெக்டர் அலுவலகத்தில் 2 பிரதிகளுடன் விண்ணப்பித்து, குறை தீர்க்கும் கூட்டத்திலும் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது."

    • மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கிராம நிர்வாக அலுவலர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடி கிராம நிர்வாக அலுவலர் அறிவழகன் சுத்தமல்லி நீர்த்தேக்கம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது 4 மாட்டு வண்டிகளில் அரசு அனுமதி இல்லாமல் ஆற்று மணல் எடுத்து வந்தது தெரிய வந்தது. இது குறித்து தா.பழூர் போலீசாருக்கு கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த தகவலின் பேரில் மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த உடையார்பாளையம் அருகே உள்ள ஒக்கநத்தம் மேலத்தெருவை சேர்ந்த கருப்பையன் (வயது 43), வீரமணி (49), வாத்திகுடிகாடு பகுதியை சேர்ந்த மணியார் (37), உடையார்பாளையம் தெற்கு புது காலனி தெருவை சேர்ந்த சங்கர் (37) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் ஏற்றி வந்த 4 மாட்டுவண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • தொழிலாளியை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் உதயநத்தம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது32), கூலிதொழிலாளி. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் கார்த்திக் (32), கூலி தொழிலாளி. சம்பவத்தன்று மழை பெய்த போது கார்த்திக்கின் மனைவி லட்சுமி வீட்டின் முன்பு தேங்கி இருந்த மழை நீரை வடிகட்டுவதற்கு மண்ணை வெட்டி பக்கத்து வீட்டில் கொட்டி வைத்திருந்த கருங்கல் ஜல்லி மீது போட்டதாக கூறப்படுகிறது. இதனால் ராஜாவுக்கும், லட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    பின்னர் இரவு வேலை முடிந்த பின்னர் வீடு திரும்பிய கார்த்திக், ராஜாவை தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த அரிவாளால் ராஜாவின் தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த ராஜா ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் தா.பழூர் போலீசில் புகார் கொடுத்தனர். ராஜா கொடுத்த புகாரின் பேரில் கார்த்திக், அவரது மனைவி லட்சுமி, கார்த்திக்கின் தந்தை சீனிவாசன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகை கைது செய்தனர். லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லூரி வளாகத்தில் பனை விதைகள் நடவு நடைபெற்றது.
    • மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், விளாங்குடி அருகே உள்ள அரியலூர் அண்ணா பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் கல்லூரி வளாகத்தில் பனைவிதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியை கல்லூரி புல முதல்வர் செந்தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கி, பனை விதைகளை நடவு செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் மாணவர்கள் தங்கும் விடுதி, கேண்டீன் வளாகம், விளையாட்டு மைதானத்தை சுற்றி பல்வேறு இடங்களில் நாட்டு நலப்பணித் திட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மற்றும் இளைஞர்கள் சேர்ந்து 700-க்கும் மேற்பட்ட பனை விதைகளை நடவு செய்தனர்.

    • 100 அடி கிணற்றில் இளம்பெண் தவறி விழுந்து உயிரிழந்தார்
    • பூ பறிக்க சென்றபோது விபரீதம்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் கோக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் லாரன்ஸ். இவருடைய மகள் ஹெல்வினா சைனி ( வயது 18 ).

    இவர் நேற்று முன்தினம் அங்குள்ள வீட்டு தோட்டத்தில் பூ மற்றும் கத்தரிக்காய் பறிக்க சென்றார். பின்னர் வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லாரன்ஸ் தோட்டத்து கிணற்றில் சென்று பார்த்த போது கிணற்றுக்குள் மகளின் காலணி மற்றும் துப்பட்டா மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இது பற்றி கீழப்பழுவூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். மேலும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.

    இந்த கிணறு சுமார் 100 அடி ஆழத்தில் உள்ளது. கிணற்றின் பாதி தூரத்திற்கு கீழ் புதர் மண்டி கிடப்பதால் தீயணைப்பு துறையினர் உடனடியாக இறங்க முடியவில்லை.

    அதைத் தொடர்ந்து மணப்பாறையில் இருந்து நீருக்குள் மூழ்கும் கேமரா வரவழைக்கப்பட்டது.

    பின்னர் அதனை தண்ணீரில் இறக்கி சோதித்த போது கிணற்றுக்குள் சைனி பிணமாக கிடப்பது உறுதி செய்யப்பட்டது. பூப்பறிக்க சென்றபோது அவர் தவறி கிணற்றுக்குள் விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    அதன் பின்னர் உடலை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் களமிறங்கியுள்ளனர். சுமார் 31 மணி நேரத்தை கடந்தும் இளம் பெண் உடலை மீட்க தீயணைப்புத் துறையினர் பல வகைகளில் முயற்சி செய்து வருகின்றனர். இந்த தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் மேற்கண்ட பகுதியில் திரண்டனர்.

    • கோவில் அருகே முதியவர் பிணமாக கிடந்தார்.
    • கிராம நிர்வாக அலுவலர் தகவல் கொடுத்தார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சியில் கலியுக வரதராஜ பெருமாள் கோவில் அருகே உள்ள மண்டபம் முன்பு 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக, கல்லங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் சாந்தி, கயர்லாபாத் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் ஆகியோர் முதியவர் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×