என் மலர்tooltip icon

    அரியலூர்

    • இருளரின மக்கள் போராட்டம் நடத்தினர்
    • சுடுகாடு வேண்டி நைடபெற்றது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே மணகெதி கிராமத்தில் இருளர் சமுதாயத்தை சேர்ந்த 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தனி சுடுகாடு, கோவில் மற்றும் குடியிருப்பு பாதை கேட்டு மணகெதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான காட்டில் இருளரின மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாநில இருளர் கூட்டமைப்பு தலைவர் இருளபூசெல்வகுமார் தலைமை தாங்கினார்.

    நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மதியம் வரை நீடித்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி ஜெயங்கொண்டம் தாசில்தார் துரை, உடையார்பாளையம் தனி தாசில்தார் கலைவாணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர்களின் கோரிக்கையை ஏற்று வருவாய்த்துறை மூலம் காட்டில் தேவையான இடத்தினை அளந்து திட்ட முன்மொழிவை தயாரித்து, மாவட்ட கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

    • பூச்சி மருந்துகள் விற்பனை கடையில் பணம் திருட்டுபோனது
    • போலீஸ் நிலையம் அருகே அமைந்துள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், செந்துறையில் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒன்றிய அலுவலகம் முன்பு செந்தூர்முருகன் என்ற பெயரில் விதைகள், உரம் மற்றும் பூச்சி மருந்துகள் விற்பனை கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த கடையில் வியாபாரம் முடிந்த பின்னர், அதன் உரிமையாளர் ஜெயா வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.

    இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் அவர் கடைக்கு வந்து பார்த்தபோது கல்லாவில் இருந்த ரூ.20 ஆயிரம் மற்றும் இணையதள 'மோடம்' திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் அந்த கடை உள்ள கட்டிடத்தின் சுற்றுச்சுவர் வழியாக மாடிக்கு சென்றுள்ளனர். பின்னர் மாடிப்படி கதவின் பூட்டை உடைத்து படிகள் வழியாக இறங்கிய மர்மநபர்கள், கடை முன்பிருந்த தடுப்பு கம்பிகளில் துளையிட்டு உள்ளே சென்று, பணம் மற்றும் மோடத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

    • வீரமாமுனிவரின் 342-வது பிறந்தநாள் கொண்டாட்டம்
    • அடைக்கல அன்னை ஆலயத்தில் நடந்தது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரமாமுனிவரால் கட்டப்பட்ட அருள்நிறை அடைக்கல அன்னை ஆலயத்தில் வீரமாமுனிவரின் 342 வது பிறந்தநாள் விழா, துணை பங்கு தந்தை ஞான அருள் தாஸ் தலைமையில் அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு பிறந்தநாள் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கும்பகோணம் மழை மாவட்ட மழை பணி இயக்குனர் மரியதாஸ் கோவண்டாகுறிச்சி பங்கு தந்தை மைக்கில் மற்றும் சின்னப்பராஜ் இறைவணக்க பாடல் மதலை ராஜ் அடைக்கல ராஜ், லெனின், ஸ்டாலின், ஆசைத்தம்பி, ஞான அருள் தாஸ், தங்கசாமி, சபரி ராஜன், நிக்கோலஸ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கார் மோதி மூதாட்டி பலியானார்.
    • சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார்.

    அரியலூர்:f

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தில் சென்னை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் நேற்று நள்ளிரவு சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது சுமார் 80 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். இதில் எதிர்பாராத விதமாக கார் மூதாட்டி மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு மூதாட்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த திருச்சி தில்லைநகரை சேர்ந்த பழனிவேல் மகன் விமல்(வயது 28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆண்டிமடம் ஒன்றிய குழு கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரவில்லை
    • நீண்டநேரம் காத்திருந்த தலைவர், உறுப்பினர்கள் வெளிநடப்பு

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஆண்டிமடம் ஒன்றிய குழு கூட்ட அரங்கில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக அனைத்து ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கும் காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறும் என வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா மற்றும் ஒன்றிய குழு தலைவர் மருதமுத்து ஆகியோர் கையொப்பமிட்ட அறிவிப்பு கடந்த 15 நாட்களுக்கு முன்பு அனுப்பப்பட்டது.

    அதைத்தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு ஒன்றிய குழு கூட்டம் தொடங்குவதாக இருந்தது. ஒன்றியக்குழு தலைவர் மருதமுத்து, துணைத் தலைவர் தேன்மொழி வைத்தி உள்ளிட்ட தி.மு.க., அ.தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்ட அரங்கில் நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, நாராயணன் உள்ளிட்ட எந்த துறையில் இருந்தும் அதிகாரியும் வரவில்லை.

    சுமார் இரண்டு மணி நேரம் கூட்ட அரங்கில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் காத்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் வராததால் அனைத்து ஒன்றியக் குழு உறுப்பினர்களும் அதற்கு கண்டனம் தெரிவித்து பேசினர். அப்போது தி.மு.க. உறுப்பினர் பேசுகையில், தமிழக அரசு நிதியிலிருந்து வரப்பட்டுள்ள எந்த நிதியையும் பொதுமக்களுக்கு கொண்டு போய் சேர்க்காமல் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா பல்வேறு காரணங்களை சொல்லி பதில் அளித்து வருவதாக தெரிவித்தார்.

    இதனால் பொதுமக்களுக்கு இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை குறைந்து வருகிறது என்றார். பின்னர் வருகை பதிவேடு கொண்டுவரப்பட்டு அதில் அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்களும் தங்களது வருகையை பதிவு செய்தனர். அதிகாரிகள் கூட்டத்திற்கு வராததால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. ஒன்றிய குழு உறுப்பினர்கள் அதிகாரிகள் மீது சரமாரியாக புகார்களை தெரிவித்து பேசினர்.

    இறுதியாக பேசிய ஒன்றிய குழு தலைவர் மருதமுத்து ஒன்றிய குழு கூட்டத்தை அதிகாரிகள் புறக்கணித்து அவைக்கு வர மறுத்து விட்டதால் கூட்டத்தை மறு தேதிக்கு மாற்றி, அனைத்து துறை அலுவலர்களும் மறு கூட்டத்திற்கு ஒப்புதல் அளித்த பின்பு தான் கூட்டத்தை நடத்த முடியும் என தெரிவித்தார். மேலும் ஒன்றிய குழு கூட்டத்தை ஒத்திவைத்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து கூட்ட அரங்கில் இருந்த அனைத்து ஒன்றிய குழு உறுப்பினர்களும் அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு கூட்ட அரங்கத்தை விட்டு வெளியேறினர். இதனால் ஆண்டிமடம் ஒன்றிய குழு கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் ஒன்றிய குழு தலைவர் மருதமுத்து நிருபர்களிடம் கூறுகையில், கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, நாராயணன் ஆகியோர் கலந்து கொள்ளாததை கண்டித்ததோடு நிர்வாக ரீதியாக ஆண்டிமடம் ஒன்றியத்தின் வளர்ச்சி பணிகளுக்கு அதிகாரிகள் முட்டுக்கட்டையாக இருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் மாவட்ட கலெக்டரும், தமிழக அரசும் ஆண்டிமடம் ஒன்றியத்தில் பல்வேறு நிர்வாக சீர்கேடுகளை செய்து வரும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    மேலும் இதுபற்றி கவுன்சிலர் சண்முகம் கூறுகையில், நமக்கு நாமே திட்டத்தில் எந்த ஒரு பணியும் இல்லை என்று அதிகாரிகள் கூறி வந்த நிலையில் ரூ.32 லட்சத்து 49 ஆயிரத்துக்கு தேவனூர், சூரக்குழி, பெரியகிருஷ்ணாபுரம், பூவாணிபட்டு, அய்யூர், கொடுக்கூர், குவாகம், மருதூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதமே வேலை ஆரம்பிக்கப்பட்டதாகவும் இதைப்பற்றிய எந்த முழு விவரமும் கவுன்சிலரிடம் தெரிவிக்கவில்லை என்றார்.

    அலுவலக கழிவறையில் பராமரிப்பு செலவு என ரூ.11 ஆயிரம் மன்ற பொருள் வைத்துள்ள நிலையில் கழிப்பறை மிகவும் மோசமாக இருப்பதாக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டினர். ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ஒன்றிய கவுன்சிலர்களுக்கு எந்த நிதியும் ஒதுக்காமல் டெண்டரை ஒத்தி வைத்ததாகவும், கவுன்சிலர்கள் யாருக்கும் தகவல் தெரிவிக்காமலும் தன்னிச்சையாக வட்டார வளர்ச்சி அலுவலர் செயல்படுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

    கூட்டத்திற்கு அதிகாரிகள் வராதது குறித்து அலுவலகத்தில் கேட்டபோது திங்கள் தோறும் நடைபெறும் மாவட்ட கலெக்டர் கூட்டத்திற்கு சென்றதாகவும், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மற்றும் மேலாளர் உட்பட சென்னை சென்றுள்ளதாகவும் அதனால் கூட்டத்திற்கு கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். கூட்டத்திற்கு தேதி அறிவித்து கையப்பமிட்டு கூட்டம் நடத்த தபால் கொடுத்துவிட்டு கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிகளால், கவுன்சிலர்கள் மிகுந்த வேதனையும் ஆவேசமும் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • உறவுகாரர் போல் பேசி மர்ம நபர் கைவரிசை

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவர் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் சுரேஷ் குமார் தத்தனூர் தனியார் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டார். இதனை அறிந்த மர்ம நபர், ஆசிரியர் வீட்டிற்கு வந்து, ஆசிரியர் மனைவி எழிலரசியிடம் , உறவுக்காரர் போல் பேசியுள்ளார்.

    மேலும் புதுமனை விழாவிற்க்கு மா இலை வேண்டும் கொஞ்சம் ஒடித்து கொடுங்கள் என்று கேட்டுள்ளார். ஆசிரியர் மனைவி எழிலரசி எதிர் வீட்டில் மா இலை பறித்து வந்து கொடுத்த நிலையில் மர்ம நபர் வாங்கி கொண்டு சென்றுள்ளார்.

    சிறிது நேரம் சென்ற எழிலரசி வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைந்து இருந்தது. அதில் இருந்த சுமார் 1.60 லட்சம் மதிப்பிலான 8 பவுன் நகையை திருடு போயிருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் உடையார்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தாத்தாவை கொலை செய்த பேரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது
    • சொத்துக்காக நடந்த சம்பவம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையப்பாளையம் அருகே காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அய்யாறு, இவரது பேரன் மணிகண்டன். இவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன், ஆதலால் எனக்கு வீடு கட்ட ஒரு பகுதியை எழுதிக் கொடுக்க கேட்டுள்ளார், அய்யாறு எழுதி கொடுத்து விட்டார், இதை கேள்விப்பட்ட மற்றொரு பேரனான அசோக் ஆத்திரத்தில் சொத்து கேட்டு தகராறு செய்து, அய்யாருவின் கை கட்டைவிரலை வெட்டிவிட்டு உருட்டு கட்டையால் தாக்கியதும் பலத்த காயமடைந்த, அய்யாறு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி கொளஞ்சிநாதன் கொடுத்த புகாரின் பேரில், உடையார்பாளையம் போலீசார் அசோக்கை கைது செய்தனர், இந்த வழக்கின் விசாரணை அரியலூர் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்றது. அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் சின்னத்தம்பி ஆஜராகி வாதாடினார், இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட நீதிபதி மகாலட்சுமி சொத்துக்காக தாத்தாவையே கொலை செய்த குற்றத்திற்காக அசோக்கிற்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார். இதை அடுத்து திருச்சி மத்திய சிறையில் அசோக்கை அடைத்தனர்.

    • கல்வி கட்டணத்தை தவிர ரூ.66 ஆயிரத்தை வழங்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
    • கல்லூரியை விட்டு விலகிய மாணவிக்கு

    அரியலூர்:

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், மேலூர் சாலையில் வசிப்பவர் பாலசுப்ரமணியன் (வயது52). இவரது மகளுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வில் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சுயநிதி பிரிவில் இடம் கிடைத்துள்ளது. இந்த கல்லூரியில் சேர்ந்து சுமார் ஒரு மாதம் கழித்து, இந்த மாணவிக்கு மருத்துவ இயக்குனரகம் நடத்திய கலந்தாய்வில் பல் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதனால் அவர் பொறியியல் கல்லூரியில் செலுத்திய பணம் ரூ 2, 26,000 மற்றும் மாற்று சான்றிதழ் ஆகியவற்றை கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.

    மாற்று சான்றிதழை மட்டும் கொடுத்த கல்லூரி நிர்வாகம் செலுத்திய தொகையை தரவில்லை. இதையடுத்து அந்த மாணவியின் தந்தை பாலசுப்ரமணியன், சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த ஜூலை மாதம் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்து வந்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.

    தீர்ப்பின் விவரம்: மாணவி உணவு விடுதிக்கு செலுத்திய பணம் ரூ 53 ஆயிரத்தில் அவர் விடுதியில் தங்கியிருந்த காலத்துக்கான கட்டணம் ரூ 10,000 பிடித்துக்கொண்டு ரூ.43 ஆயிரத்தை கல்லூரி நிர்வாகம் மாணவியின் தந்தையிடம் வழங்க வேண்டும்.

    மேலும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிக்காக கல்லூரியின் இணை நிறுவனமாக செயல்படும் எஸ்.ஆர்.எம் ஆக்சிஸ் என்ற நிறுவனத்தில் மாணவிக்கு செலுத்திய ரூ 25 ஆயிரத்தில் நிர்வாக செலவுகளுக்காக 2 ஆயிரம் பிடித்தம் செய்து கொண்டு மீதித் தொகை 23 ஆயிரத்தையும் அவருக்கு வழங்க வேண்டும். நான்கு வார காலத்திற்குள் வழங்காவிட்டால் அதற்கு வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்றும் இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், பொறியியல் கல்லூரியில் கலந்தாய்வு முடிவடைந்து சேர்க்கை கல்லூரிகளில் சேர்க்கை இறுதி செய்யப்பட்ட பின்பு மாணவி கல்லூரியை விட்டு விலகி உள்ள காரணத்தால் அவர் கல்லூரியில் கல்விக் கட்டணமாக செலுத்திய தொகையை திருப்பி வழங்க உத்தரவிட முடியாது என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    • தோட்டக்கலைத்துறை இயக்குனர் ஆய்வு செய்தார்
    • விவசாயிகளை சந்தித்து பேசினார்.

     அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை தோட்டக்கலைத்துறை இயக்குனர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலில் அவர் கீழப்பழுவூர் அரசு தோட்டக்கலை பண்ணையினை ஆய்வு செய்தார். பின்னர் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் காவனூர் கிராம குழுக்களை ஆய்வு செய்து விவசாயிகளை சந்தித்து பேசினார். தொடர்ந்து தோட்டக்கலை துறை அலுவலர்களுடான நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    • சேதமடைந்த பாலம் மழையால் இடிந்து விழுந்தது.
    • போக்குவரத்து துண்டிக்கப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் ஊராட்சியில் வக்கரமாரி காலனி உள்ளது. இப்பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதேபோல் அந்த பகுதிக்கு அருகில் கோடாலிகருப்பூர் காலனி விரிவுபடுத்தப்பட்ட பகுதியில் சுமார் 130 குடும்பத்தினர் உள்ளனர். இந்த பகுதியில் அணைக்குடம்-அணைக்கரை சாலையில் இருந்து வக்கரமாரி காலனி பகுதிக்கு செல்வதற்கு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சாலையின் குறுக்கே பொன்னார் பிரதான வாய்க்காலில் இருந்து பிரிந்து வரும் 4-ம் எண் பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலை கடந்து குடியிருப்பு பகுதிக்கு செல்லும் வகையில் 4-ம் எண் வாய்க்காலின் மீது சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சிறு பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்தநிலையில், தற்போது பெய்த மழையின் காரணமாக அந்த பாலம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அந்த பாலத்தின் வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    • பாட்டு பாடி விவசாய நடவுப்பணியில் பெண்கள் ஈடுபட்டனர்.
    • சம்பா நடவுப்பணி தீவிரமடைந்துள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் டெல்டா பகுதிகளில் சம்பா நடவுப்பணி தீவிரமடைந்துள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களில் தூய மல்லி, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவனி, ஆத்தூர் கிச்சலி சம்பா உள்ளிட்ட பல்வேறு நெல் ரகங்களை இந்தாண்டு தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் குட்டை ரகங்களில் ஐ.ஆர். 20, 1009, கோ 43 வெள்ளைப் பொன்னி போன்ற ரகங்களும் பரவலாக நடவு செய்யப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் கொட்டும் மழையிலும் விவசாய கூலித்தொழிலாளர்கள் நடவுப் பணிகளில் ஈடுபடும் போது வயல்வெளியில் நல்ல விளைச்சல் தர வேண்டும் என நாட்டுப்புற பாடல்களை பாடுவது வழக்கம். அண்மை காலமாக அருகி வந்த நிலையில் பாடல்களை பாடி நடவுப் பணிகளில் ஈடுபடுவது வருங்கால தலைமுறைக்கு வியப்பான ஒன்றாக உள்ளது. விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் செடி கொடிகளுக்கு இசையை உணரும் தன்மையும், நல்ல காய், கனிகளை தருகிறதை உறுதி செய்துள்ள நிலையில் கிராமப்புறத்தில் தொன்று தொட்டு நடவுப்பணியில் பாடல் பாடி வருவது நம் முன்னோர்கள் தங்களது விவசாய தொழிலை நேசித்தது தெளிவாக விளங்குகிறது என நடவுப்பணியில் ஈடுபட்ட பெண்கள் கூறினர்.

    • பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • கீழப்பழுவூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி கீழப்பழூவூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் கீழப்பழூவூர், மேலப்பழூவூர், கோக்குடி, பூண்டி, வைப்பம், கருவடச்சேரி, கல்லக்குடி, அருங்கால், பொய்யூர், கீழவண்ணம் உள்ளிட்ட கிராமங்களில் காலை 9.30 மணிமுதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்வினியோகம் இருக்காது என திருமானூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

    ×