என் மலர்tooltip icon

    அரியலூர்

    • அமுதம் அங்காடியில் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார்
    • பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் அமுதம் அங்காடி சில வருடங்களாக ஒரே இடத்தில் இயங்கி வருகிறது. இதில் 1160 குடும்ப அட்டைக்கு பொருள்கள் வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் மாதந்தோறும் அங்காடியில் பொருள்கள் தரமாக உள்ளதா, அனைத்து தர மக்களுக்கும் போய் சேருகிறதா பொதுமக்கள் வாங்குவதற்கு வருகிறார்களா என உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் திடீரென ஆய்வு செய்தார். அப்போது முருகன் வாங்க வந்த பொதுமக்களிடம் அனைத்து பொருட்களும் உங்களுக்கு மாதந்தோறும் கிடைக்கிறதா என விசாரித்தார். மேலும் அங்காடியில் அவர்கள் நடந்தால் உடனடியாக எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கூறி சென்றார்.

    • விவசாயியை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
    • நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன் விரோதம்

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே மணகெதி கிராமத்தை சேர்ந்தவர் தங்கையன்(வயது 58). விவசாயி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ரஜினி (43) என்பவருக்கும் நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று தெருவில் தங்கையன் நின்று கொண்டு இருந்தார். அப்போது ரஜினி. தங்கையனை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இது குறித்து தங்கையன் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் ரஜினி மீது போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 2 குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீசார் மீட்டனர்.
    • குடும்ப பிரச்சினையில் விபரீத முடிவு

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள நாச்சியார்பேட்டை கீழத்தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 39). தச்சு தொழிலாளியான இவருக்கும், சாத்தமங்கலம் கீழத்தெருவை சேர்ந்த கணேசனின் மகள் சுதாவுக்கும்(28) திருமணம் நடந்து, சுமார் 8 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர். பின்னர் இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. தற்போது அவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் வேல்முருகனுக்கும், சுதாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. நேற்று காலை வேல்முருகன், சமைப்பதற்காக இறைச்சி எடுத்து சுதாவிடம் கொடுத்துவிட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார்.

    குடும்ப பிரச்சினை காரணமாக மனவேதனையில் இருந்த சுதா, தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அணைக்கரை ராஜ வாய்க்கால் பகுதிக்கு சென்று, குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முயன்றார். இதுகுறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இளஞ்சியம் மற்றும் வீரமணி ஆகியோர் விரைந்து சென்று, அவர்களை மீட்டு அணைக்கரை சோதனை சாவடியில் வைத்து விசாரணை நடத்தினர். மேலும் இது பற்றி அவரது கணவர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு உள்ள நிலையில் அவர்கள் இருவரையும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு கவுன்சிலிங்குக்காக அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்த வேல்முருகன், சுதா ஆகிய ஆகியோரிடம் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் விசாரித்து, இருவருக்கும் அறிவுரை கூறினர். மேலும் குழந்தைகளை பார்த்துக் கொள்ளவும், சிறு சிறு பிரச்சினைகள் வந்தால் விட்டுக் கொடுத்து குடும்பம் நடத்தவும், இருவருக்கும் நீண்ட நேரமாக அறிவுரை கூறினர்.

    நீண்ட நேரம் பேச்சு வார்த்தைக்கு பிறகு கணவருடன் செல்வதாக சுதா ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் கணவன், மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 2 குழந்தைகளுடன் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது."

    • மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று கண்காணிக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லாத்தூர் பகுதியில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கே ஒருவர் மது விற்றது தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர், வெட்டியார்வெட்டு இந்திரா காலனியை சேர்ந்த கலியபெருமாள்(வயது 48) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவர் விற்பனைக்காக வைத்திருந்த 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

     இதேபோல் உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த ராஜேஸ்வரன்(55) என்பவர், அப்பகுதியில் மது பாட்டிகளை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து ராஜேஸ்வரனை கைது செய்து, அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • இரு தரப்பினர் மோதல் தொடர்பாக பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • ஆடுகள் மீது மோதிய விவகாரம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தேவமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம்(வயது 50). இவரது மனைவி கொளஞ்சியம்மாள். இவர்கள் தேவமங்கலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் அவர்களது ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தனர்.

    அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பழமலை(43) என்பவர், அவரது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து ஆடுகள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் கல்யாண சுந்தரம் தரப்பை சேர்ந்தவர்களுக்கும் பழமலை தரப்பை சேர்ந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

    இதில் கல்யாணசுந்தரம் மற்றும் அவரது மனைவி கொளஞ்சியம்மாள் ஆகியோர் காயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் தா.பழூர் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் கொளஞ்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பழமலை(43), அவரது மனைவி லதா(40), மகள் காந்தமணி ஆகியோர் மீதும், பழமலை கொடுத்த புகாரின் பேரில் கல்யாணசுந்தரம் (50), கொளஞ்சியம்மாள், அவர்களது மகன் சூர்யா ஆகியோர் மீதும் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • உரிமம் இன்றி விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில்

    அரியலூர்:

    அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உரிமம் இன்றி விற்பனை செய்தால் கடை உரிமையாளர் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் கோவிந்தராசு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில், தற்போது கார்த்திகை பட்ட நிலக்கடலை சாகுபடிதொடங்கிஉள்ளது. விளைச்சல் அதிகரித்து அதிக வருமான தருவதில் விதைகளின் பங்கு முக்கியமானது. தரமான விதைகளை சரியான விலையில் விவசாயிகளுக்கு கிடைத்திட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று துறை அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டவிவசாயிகள் நிலக்கடலை விதைகளை வாங்கும் போது தமிழ்நாடுஅரசால் விதை விற்பனை உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே தங்களுக்கு தேவையான நிலக்கடலை விதைகளை வாங்கவேண்டும். விவசாயிகள் தங்களுக்கு தேவையான உயர் விளைச்சல் ரக விதைகளை வாங்கும் போது விதைக்கான விற்பனை ரசீதை கேட்டுப் பெறவேண்டும்.

    மேலும், தாங்கள் வாங்கிய விற்பனை ரசீதை அறுவடை முடியும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். வியாபாரிகள் நிலக்கடலை விதைகளை விற்பனை செய்யும் போது விவசாயிகளுக்கு உரிய ரசீது வழங்கவேண்டும். விதை விற்பனை செய்யும் வியாபாரிகள் விதை இருப்பு பதிவேடு, விதை கொள்முதல் பட்டியல் ஆகியவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். விதை விற்பனை உரிமம் இன்றி விதைகளை விற்பனை செய்தாலோ, காலாவாதியான விதைகளை விற்பனை செய்தாலோ, ரசீதுவழங்காமல் விற்பனை செய்தாலோ விதை சட்டப்படி விற்பனையாளர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விதைகள் தொடர்பான ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் 0431 -2420587 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    • அரியலூர் ரெயில் நிலையத்தை தாண்டிய தூத்துக்குடி ரெயில் மருதையாற்று பாலத்தின் மீது சென்றபோது ரெயிலின் பாரம் தாங்காமல் அனைத்து பெட்டிகளும் ஆற்றில் கவிழ்ந்தன.
    • அதிகாலையில் பயணிகள் தூங்கிக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதால் பலர் தூக்கத்திலேயே இறந்து போயினர்.

    விபத்துகள் என்பது புதிதல்ல, பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு ரூபங்களில் அவை ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அவற்றில் சில, பல மனித உயிர்களை காவு கொண்டு, மக்கள் மனதில் என்றென்றும் அழியாத சுவடாக மாறிவிடுகிறது. உதாரணமாக கும்பகோணம் பள்ளி தீ விபத்து போன்றவற்றை கூறலாம். சமீபத்தில் குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே இருந்த 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தொங்கு பாலம் கடந்த 30-ந் தேதி அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சமீப காலத்தில் நாட்டில் நடந்த மோசமான விபத்தாக இதை கூறலாம்.

    ஆனால் கடந்த 66 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. அதாவது அரியலூரில் மிகப்பெரிய ரெயில் விபத்து நடந்த நாள் இன்று. அப்போது ரெயில் பெட்டிகளில் தூங்கிக்கொண்டிருந்த பலர் ஜலசமாதி அடைந்தது பெரும் சோகமாகும். அந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    கடந்த 1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் 23-ந் தேதி சென்னையில் இருந்து இரவு 9 மணிக்கு தூத்துக்குடி நோக்கி 12 பெட்டிகளுடன் ஒரு ரெயில் புறப்பட்டது. வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் அப்போதைய ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் மிக கனமழை பெய்துள்ளது.

    இதனால் அரியலூர்-சில்லக்குடி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மருதையாற்றில் அபாய அளவைத்தாண்டி தண்டவாளங்களை தொட்டபடி மழைநீர் சென்றது. அந்த வழியாக வந்த ரெயில் பாதை பாதுகாப்பு ஊழியர் (கேங்மேன்) இருளில் தண்ணீரின் அளவு தெரியாமல் பாலத்தின் மேலே நடந்து சென்றுள்ளார். அதனால் அவர் எந்தவிதமான எச்சரிக்கையையும் அரியலூர் ரெயில் நிலையத்திற்கு தெரிவிக்கவில்லை.

    இந்நிலையில் அரியலூர் ரெயில் நிலையத்தை தாண்டிய தூத்துக்குடி ரெயில் மருதையாற்று பாலத்தின் மீது சென்றபோது ரெயிலின் பாரம் தாங்காமல் அனைத்து பெட்டிகளும் ஆற்றில் கவிழ்ந்தன. இதற்கான காரணம், ரெயில் வந்த சமயத்தில் தண்டவாளங்கள் மட்டுமே அந்தரத்தில் தொங்கியிருக்கின்றன என்பது பின்பே தெரியவந்தது.

    அதிகாலையில் பயணிகள் தூங்கிக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதால் பலர் தூக்கத்திலேயே இறந்து போயினர். மழைநீர் வேகமாக சென்றதால் பலர் உடைந்த பெட்டிகளுடன் பல மைல் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டனர். ரெயில் விபத்து நடந்த தகவல் சூரிய உதயத்திற்குப் பிறகே தெரியவந்தது.

    அதிகாலையில் படுகாயமடைந்தவர்களின் அபயகுரலும், முனகல் சத்தங்களும், மரண ஓலமும் கேட்டுள்ளது. மேலும் பயங்கர சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து அருகில் உள்ள ராமலிங்கபுரம், ரசுலாபுரம், சில்லக்குடி, மேத்தால், அரியலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் விபத்து நடந்த இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிய சிலரை மீட்டனர்.

    மேலும் இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் அவசர கால மீட்பு படையினர் விரைந்து வந்து ரெயில் பெட்டிகளில் இடிபாடுகளில் சிக்கிய ஒரு சிலரை மீட்டதோடு, இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து நடந்த இடத்தை நேரில் பார்த்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்த சிலர் கூறியதாவது:-

    சம்பவத்தன்று மிக கனமழை பெய்தது. அப்போதெல்லாம் கிராமங்களில் மின்விளக்குகள், சாலைகள் கிடையாது. அன்று அதிகாலை பயங்கர சத்தம் கேட்டது. எங்கள் பகுதியை சேர்ந்த சிலர் கையில் தீப்பந்தம் ஏந்திச்சென்று யார் வீட்டு சுவரேனும் இடிந்துள்ளதா? என்று வீதிகள்தோறும் சென்று பார்த்தோம். அப்படி இல்லாத நிலையில் எல்லோரும் படுத்துவிட்டோம். சூரிய உதயத்திற்கு பிறகு எழுந்து பார்த்தபோது எங்கள் நிலத்திலேயே ரெயில் பெட்டிகள் கவிழ்ந்து கிடந்தன. பலர் இறந்து கிடந்தனர். அழுகுரலும், காப்பாற்றுங்கள் என்ற சத்தமும் கேட்டன.

    எங்கள் கிராமத்தில் இருந்தவர்கள் அனைவரும் அந்த இடத்திற்கு விரைந்து சென்று எங்களால் முடிந்த உதவிகளை செய்து, ஒரு சிலரை காப்பாற்றினோம். ஒரு சிலரின் உடல்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இருந்தது. பார்ப்பதற்கே மிகவும் சோகமாக இருந்தது. இந்த சம்பவத்தில் சுமார் 200 பேருக்கு மேல் இறந்துவிட்டனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த விபத்து நடந்து 66 ஆண்டுகள் ஆகியும் இந்த சம்பவம் அழியாத சுவடாக உள்ளது. இதேபோல் 1987-ம் ஆண்டு இதே இடத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து மலைக்கோட்டை விரைவு ரெயிலை தகர்த்ததில் 60 பேர் இறந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுங்கச்சாவடி காவலாளி கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மது அருந்திய போது சம்பவம் நடந்துள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடியில் இருந்து கீழராயம்புரம் செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சாலையோரம் வாலிபர் ஒருவர் கைகள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு, சட்டை எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் கொலை செய்யப்பட்ட வாலிபர் அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் வல்லரசு என்ற சுரேஷ்குமார்(வயது 23) என்பதும், இவர் கடந்த 10 நாட்களாக திருச்சி சிதம்பரம் சாலையின் மணகதி சுங்கச்சாவடியில் காவலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தார்கள் என்று வீடு மற்றும் சுங்கச்சாவடியிலும், அவரது செல்போனை வைத்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

    மேலும் இது தொடர்பாக அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், காமராஜ் ஆகிய 2 பேரையும் பிடித்து கைது செய்து, விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:-

    கொலை செய்யப்பட்ட காவலாளி சுரேஷ்குமார் மற்றும் மணிகண்டன், காமராஜ் ஆகிய 3 பேரும் நண்பர்கள். 9 மாதங்களுக்கு முன்பு மது குடிக்கும் போது காமராஜ் செல்போனை சுரேஷ்குமார் திருடி உள்ளார். இதனைக் கண்டு பிடித்து பலமுறை கேட்டு உள்ளனர். ஆனால் சுரேஷ்குமார் செல்போனை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் 3 பேரும் மது குடிக்க ஆனந்தவாடி டாஸ்மாக் கடைக்கு வந்து உள்ளனர்.

    சென்னிவனம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மது குடித்து உள்ளனர். அப்போது மது போதையில் மீண்டும் செல்போன் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், காமராஜ் ஆகியோர் கயிறால் சுரேஷ்குமார் கழுத்தை இறுக்கி அங்கிருந்த கொட்டகையில் தூக்கில் தொங்க விட்டு கொன்றனர். பின்னர் கைகளை கட்டி இருசக்கர வாகனத்தில் தூக்கி வந்து சாலையோரம் வீசிவிட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு சுரேஷ்குமாரிடம் இருந்த செல்போனை எடுத்து கொண்டு தப்பி சென்றனர்.

    இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்."

    • மனுதாரர்களுக்கு ரூ 3.50 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
    • தனியார் மருத்துவமனையில் சேவை குறைபாடு

    அரியலூர்:

    வெவ்வேறு வழக்குகளில் மனுதாரர்களுக்கு ரூ.3.50 லட்சம் இழப்பீடு வழங்க சென்னையிலுள்ள 3 தனியார் மருத்துவமனைகளுக்கு அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வளசரவாக்கம் பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் திலீப்குமார் மனைவி வசுந்தரா (37). இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை செய்து, தமது குடும்ப மருத்துவரிடம் காட்டியபோது கருமுட்டையில் நுண்ணுறைகள் வழக்கத்தைவிட பெரியதாக உள்ளது. இதனால் கேன்சர் வர வாய்ப்புகள் உள்ளது எனவும், வேறு ஸ்கேன் சென்டரில் மீண்டும் ஸ்கேன் எடுத்துவரும் படியும் கூறியுள்ளார். வேறு ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுத்தபோது, எந்த பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வசுந்தரா வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கு கடந்த ஜூலை மாதம் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த ஆணையத் தலைவர் வீ.ராமராஜ் தலைமையிலான அமர்வு முதலாவது ஸ்கேன் சென்டர் தவறான அறிக்கையை வழங்கியுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதால், அந்த ஸ்கேன் சென்டர், ஸ்கேன் செய்வதற்கு செலுத்திய ரூ.4,400, சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் புகார்தாரருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

    அதேபோல், சென்னை வடபழனியை சேர்ந்த வாசுதேவன் மகன் விபின்தேவ் (33), தலையில் வழுக்கை ஏற்பட்டதை சரிசெய்ய சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் அழகு (காஸ்மோடிக்) மருத்துவமனையில் தலையில் முடி நடும் சிகிச்சைக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ.60,000 செலுத்தி சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால், முன்பை விட சிகிச்சைக்கு பிறகு முடி உதிர்வு அதிகமானதோடு, தொடர் சிகிச்சைக்கு பணம் செலுத்த மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், ஒப்பந்தத்துக்கு மாறாக தனியார் அழகு மருத்துவமனை செயல்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மருத்துவமனையின் சேவை குறைபாட்டுக்காக புகார்தாரருக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    அதேபோல், சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த பொற்பதம் மனைவி கீதா லட்சுமி (32). சென்னை நந்தனத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் 2017 ஆம் ஆண்டு பிரசவத்துக்கு சேர்ந்தார். சிகிச்சை, அறை வாடகை, மருந்து என அனைத்து கட்டணமும் ரூ.60,000மருத்துவமனை நிர்வாகம் கேட்டுள்ளது. அதற்கு முன்பணமாக ரூ.46,405, மருத்துவ காப்பீட்டு நிறுவனம் மூலம் ரூ.48,000 செலுத்தப்பட்ட நிலையில், சிகிச்சை முடிவடைந்த பின்னர் கூடுதலாக செலுத்தப்பட்ட ரூ.34,405 கேட்டுள்ளார். மருத்துவமனை நிர்வாகம் மீதத்தொகையை திரும்பத்தரவில்லை.

    இது குறித்து தொடரப்பட்ட வழக்கில், தனியார் மருத்துவமனை கூடுதல் கட்டணம் பெற்றுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதால், கூடுதலாக பெற்ற ரூ.34,405, சேவை குறைபாடு மற்றும் வாடிக்கையாளருக்கு கொடுத்த சிரமங்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

    • வார சந்தை சீரமைப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்
    • சேரும் சகதியுமாக இருந்தது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட வார சந்தை நீண்ட நாட்களுக்கு பிறகு நகராட்சி மூலமாக ஏலம் தனிநபருக்கு விடப்பட்டுள்ளது. மேலும் சந்தை முழுவதும் சேரும் சகதியுமாக கிடந்த நிலையில் பொதுமக்கள் மழைக்காலங்களில் காய்கறி வாங்க வருபவர்கள் மிக சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

    இந்நிலையில் ஏலம் எடுத்த குத்தகைக்காரர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் சகதி மற்றும் நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத இடங்களை சரி செய்து வியாபாரிகள் அமர்வதற்கான ஏற்பாடுகள் செய்து மழை காலங்களில் பொதுமக்கள் நடந்து வருவதற்கு சிரமம் இல்லாமல் காய்கறிகள் வாங்கி செல்வதற்கு நடைபாதை முழுவதும் மண் அடித்து சரி செய்து உள்ளனர்.

    இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் மிக ஆர்வமாக சந்தைக்கு வந்து காய்கறிகள் வாங்கிச் செல்கின்றனர். சந்தையை சீரமைத்ததால் 50க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் கடை போடுவதற்கு வாய்ப்பு உள்ளதால் வியாபாரிகள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். மேலும் சந்தைக்கு வரும் பொது மக்களுக்கு பாதுகாப்பாக கேமராக்கள் பொருத்தப்படுவதாக தெரிவித்தனர்.

    • லாரி மோதி பட்டு நூல் வியாபாரி பலியானார்
    • இருசக்கர வாகனத்தில் சென்ற போது சம்பவம்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஆண்டிமடம் விளந்தை கிராமம் தியாகராஜ நகரை சேர்ந்த பக்தவச்சலம் (வயது 68). பட்டு நூல் வியாபாரியான இவர், கல்லாத்தூர் மெயின் ரோட்டில் தனது இருசக்கர வாகனத்தில் பட்டு நூல் கொடுத்தவர்களிடம் பணம் வசூல் செய்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வந்து ெகாண்டிருந்தார்.

    ஜெயங் கொண்டத்திலிருந்து விருத்தாச்சலம் நோக்கி வந்த லாரி இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பக்தவசலம் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாசோமசுந்தரம் தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் உள்ளிட்ட போலீசார் பக்தவச்சலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில லாரி டிரைவர் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்தது தெரிய வந்தது.இதை அடுத்து லாரியை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஆம் ஆத்மி கட்சி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
    • நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையார் பாளையத்தில் கண்ணனூர் மாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஆம் ஆத்மி கட்சியின் அரியலூர் மாவட்ட பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் திருமுருகன் முன்னிலை வகித்தார். நகரத் தலைவர் சண்முகம் வரவேற்புரை நிகழ்த்தினார். மண்டல தலைவர் தேவகுமார் கட்சியின் கொள்கை பற்றியும் செயல்பாடு பற்றியும் கட்சி தொண்டர்களிடம் விளக்கிப் பேசினார்.

    இதில் ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளராக மகாராஜனும் தாப்பழுர் ஒன்றிய செயலாளர் சின்னத்துரை மற்றும் செல்வராஜ் செந்துறை ஒன்றிய செயலாளராக உத்தமசோழன் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட பொருளாளராக சுப்ரமணியன் தேர்வு செய்யப்பட்டார். மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட துணை தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    ×