என் மலர்tooltip icon

    அரியலூர்

    • நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் பேசினார்
    • நுகர்வோர் பாதுகாப்பு என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதார உரிமை

    அரியலூர் :

    தமிழகத்திலேயே முதல்முறையாக உள்ளாட்சி தலைவர்கள், பிரிதிநிகளுக்கான நுகர்வோர் பாதுகாப்பு மாநாடு அரியலூரில் நடைபெற்றது. மாவட்ட வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் அணையத் தலைவர் ராமராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: நுகர்வோர் பாதுகாப்பு என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதார உரிமை. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தி விற்பனை மற்றும் சேவை துறைகள் எவ்வளவு மிக முக்கியமோ அதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தது நுகர்வோர் பாதுகாப்பு. அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் வழங்கும் கட்டணமில்லா சேவைகளில் ஏற்படும் குறைபாடுகளை தீர்க்கும் வகையில் சேவை உரிமை தீர்ப்பாயங்கள் சட்டத்திருத்தங்கள் மூலம் அமைக்கபடுவது அவசியம். அவை மக்கள் நலனுக்கான முக்கிய திருப்பமாக அமையும். தற்போதைய சூழலில் தேர்தல் ஆணையம் போல், நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கும் அரசியல் சட்ட அந்தஸ்து வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் மாநில அளவிலான திருத்தத்தை மேற்கொள்வதன் மூலம் மாநிலம் முழுவதும் ஊராட்சி மன்ற அளவிலான நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கலாம். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் கீழ் பணியாற்ற வழி செய்யலாம். இவ்வாறான மாற்றங்களை செய்வது மூலம் இந்தியாவிலேயே நுகர்வோர் பாதுகாப்பில் முன்னோடி மாநிலமாக தமிழகம் மாறும். இதற்கு மாநில அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியை அரசு வழக்குரைஞர் கதிரவன் மாநாட்டை தொடக்கி வைத்தார். முன்னதாக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் வரவேற்றார். முடிவில் ஊராட்சிகள் மற்றும் தணிக்கை துறை உதவி இயக்குநர் நன்றியுரை கூறினார். மாநாட்டில் ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாவட்ட மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.




    • கணித பாடத்தை சிறப்பாக கற்றுக் கொண்டால் அனைத்து சாதனைகளை நிகழ்த்த முடியும்
    • அரசு பள்ளியில் தேசிய கணித தின விழா நடைபெற்றது.

    அரியலூர் :

    அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய கணித தின விழா நடைபெற்றது. இதில் அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் ஜெயா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: இருக்கும் பாடங்களிலேயே எளிமையான பாடம் கணித பாடம். அதனை சிறப்பாக கற்றுக் கொண்டால் அனைத்து சாதனைகளையும் நிகழ்த்த முடியும். கணிதத்தை ஆர்வமுடன் கற்க வேண்டும் என்றார். தொடர்ந்து, கணிதத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பள்ளி சார்பில் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். அரியலூர் அரசு கலைக் கல்லூரி கணித பேராசிரியர் கண்ணன் பேசுகையில், தேசிய கணித தினமானது சீனிவாச ராமானுஜன் அவர்களின் பிறந்த தின விழா தேசிய கணித தினமாக கொண்டாடுகின்றோம். எந்தவித வசதிகளும் இல்லாத காலகட்டத்தில் ராமானுஜன் கணிதத்தின் மீது இருந்த ஆர்வத்தால் பல புதிய கண்டுப்பிடிப்புகளை கண்டறிந்தார். உலகிற்கு கணித பெருமைகளை விளக்கிய தமிழர் ஆவார். நீங்களும் அவரைப் போன்று கணிதத்தில் ஆர்வம் கொண்டு படித்து பல புதிய படைப்புகளை உருவாக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் அம்பிகா மாரிமுத்து, துணைத் தலைவர் பழனியம்மன் ராஜதுரை, பள்ளி மேலாண்மை குழு தலைவர் அகிலா, கல்வி ஆர்வலர் கருணாநிதி, பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தனலட்சுமி, ரமேஷ், பத்மாவதி, தங்கபாண்டி, கோகிலா மற்றும் இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.


    • ரேட்டல் எலி மருந்து விற்றால் கடை உரிமம் ரத்து செய்யப்படும்
    • ரேட்டல் எலி மருந்து பெரும்பாலும் தற்கொலைக்குப் பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது

    அரியலூர்:

    கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழக அரசு பூச்சிக்கொல்லிக்கான மோனோகுரோட்டோபாஸ், புரோபனபாஸ், அசிபேட், புரோப்பனபாஸ் பிளஸ் சைபர் மெத்திரின், குளோர்பைப்பாஸ் பிளஸ் சைபர்மெத்திரின், குளார்பைப்பாஸ் ஆகிய பூச்சிக்கொல்லிகள், ரேட்டல் என்ற பெயரில் விற்கப்படும் எலி மருந்தான 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் பசை ஆகியவற்றுக்கு ஆறுமாத காலம் தடை விதித்துள்ளது. உயிருக்கு கடும் அபாயகரமானதாக உள்ள இவை பெரும்பாலும் தற்கொலைக்குப் பயன்படுத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதால் உடனடியாக விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மொத்த மற்றும் சில்லரை கடைகள், சூப்பர் மார்க்கெட், பூச்சிக்கொல்லி விற்பனை நிலையங்களில் இவைகளை விற்பது தெரியவந்தால் உரிமம் ரத்து உள்ளிட்ட மிக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


    • கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
    • பக்ருதீனை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார்

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடிப்பள்ளத்தெருவைச் சேர்ந்த பஷீர் மகன் பக்ருதீன்(வயது22). தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த பக்ருதீனை ஜெயங்கொண்டம் காவல் துறையினர் கடந்த 2ந் தேதி கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில் பக்ருதீனை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் வழங்கினர்.




    • கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நடைபெற உள்ளது
    • விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நடைபெற உள்ளது. எனவே கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என்று கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
    • ஆற்றில் அரசு மருத்துவமனை மருந்து, மாத்திரைகள் கொட்டப்பட்டிருந்தன

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே மதனத்தூரில் கொள்ளிடம் ஆறு உள்ளது. அந்த பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடியில் இருந்து ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு செல்லும் பகுதியில் உள்ள பள்ளத்தில் மருந்து, மாத்திரைகள் குவியலாக கொட்டப்பட்டிருந்தன. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதைக்கண்டு மருந்து, மாத்திரைகளை எடுத்து பார்த்தபோது, மாத்திரைகளின் அட்டை மற்றும் மருந்துகளின் மூடி ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு என்று அச்சிடப்பட்டிருந்தது. இதையடுத்து அவை அரசு மருத்துவமனைகளில் வினியோகிக்கப்படும் மருந்து, மாத்திரைகள் என்பது தெரியவந்தது. இதில் சில மருந்துகள் கடந்த ஜூன் மாதத்துடன் காலாவதியாகி இருந்த நிலையில், பல மாத்திரை அட்டைகளில் அதன் காலாவதி ஆகும் காலம் 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அவற்றை கொள்ளிடம் ஆற்றில் கொண்டு வந்து கொட்டியது யார்? காலாவதியான மருந்து, மாத்திரைகளை அப்புறப்படுத்துவதற்கு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ள நிலையில் எந்த விதிமுறையும் பின்பற்றப்படாமல், அவற்றை தூக்கி வீசிச்சென்றது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ஆற்றில் அவை வீசப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் சிலர் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே ஆற்றில் கொட்டப்பட்டுள்ள மருந்து, மாத்திரைகளை அப்புறப்படுத்தி, அவற்றை அங்கு வீசிச்சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாவதி ஆகாத மாத்திரைகள், ஊசி மருந்து குப்பிகள் உள்ளிட்டவையும் அப்பகுதியில் வீசப்பட்டுள்ள நிலையில், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    • 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
    • கைதான ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த பஷீரின் மகன் பக்ருதீன் (வயது22). பிரபல ரவுடியான இவர் ஒரு பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்கு அந்த பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பக்ருதீன் அந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்துள்ளார். மேலும் அவர் கடந்த 2-ந்தேதி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று 2 இருசக்கர வாகனங்களை பெட்ரோல் ஊற்றி எரித்ததோடு மட்டுமின்றி, அந்த குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டியும், பெண்ணின் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்யவும் முயன்றுள்ளார். இதுகுறித்து அந்த பெண்ணின் தந்தை ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பக்ருதீனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். ஏற்கனவே பக்ருதீன் மீது போலீஸ் நிலையங்களில் 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் பக்ருதீன் சிறையில் இருந்து வெளியே வந்தால் பல்வேறு சமுதாய கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவார் என்பதால், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்று பக்ருதீனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். இதையடுத்து பக்ருதீனை குண்டர் சட்டத்தில் கைது செய்தற்கான உத்தரவின் நகலை ஜெயங்கொண்டம் போலீசார் சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.


    • இளைஞர் திறன் திருவிழா நாளை நடக்கிறது.
    • ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது

    அரியலூர் :

    அரியலூர் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இளைஞர் திறன் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் 5-ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் படித்த வேலைவாய்ப்பற்ற 18 முதல் 45 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பினை பெற்று பயனடையலாம். மேலும், இதில் 20-க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மற்றும் ஊரக சுய வேலை வாய்ப்பு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவை கலந்து கொண்டு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பினை வழங்க உள்ளார்கள். வருகை தரும் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். அத்துடன் தங்களது சுய விவர குறிப்பு, ஆதார் அட்டை நகல், கல்வி சான்றிதழ் நகல்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.


    • பணியை பாராட்டி 15 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
    • அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் திருச்சி சரக டி.ஐ.ஜி. வருடாந்திர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் காவல் துறை திருச்சி சரக துணை தலைவர் சரவணசுந்தர் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டார். அப்போது காவல் துறை வாகனங்கள், காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தும், கொலை, கொள்ளை வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினரின் பணியை பாராட்டி 15 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.




    • மேற்பார்வையாளர் அலுவலகம் அமைக்க வலியுறுத்தல்
    • மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது

    அரியலூர்:

    அரியலூரில் மின்சார வாரிய மேற்பொறியாளர் அலுவலகம் அமைக்க வேண்டும் என்றும் மாவட்ட வளர்ச்சிக் குழுத் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அரியலூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மின்நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் அவர் அளித்த மனுவில் கூறியிருப்பது: அரியலூர் மாவட்டத்தில் அதிகப்படியான மின் இணைப்புகளும், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டத்தில் மின் வாரிய கோட்ட அலுவலகம் உள்ளதால், இம்மாவட்டத்தில் மேற்பார்வையாளர் அலுவலகம் அமைக்க வேண்டும்.அரியலூரிலுள்ள மின்சார வாரிய ஊழியர்கள் குடியிருப்பு பழுதடைந்து வருவதால், அவர்களுக்கு புதியதாக குடியிருப்புகளை கட்டிக் கொடுக்க வேண்டும். ரசலாபுரம் கம்பப் பெருமாள் கோயிலுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து சோதனை செய்தனர்
    • கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்

    அரியலூர்:

    உடையார்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருவேங்கடம் தலைமையிலான காவலர்கள் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது வாணத்திரையான் பட்டினம் முருகன் கோயில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் 1 கிலோ 900 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து விசாரணை மேற்கொண்டதில் அவர் திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி தைலாகுளம் தெருவைச் சேர்ந்த கருப்பையா மகன் கார்த்திக்(26) என்பதும், இப்பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்ததையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

    • நீதிமன்ற தீர்ப்பை தமிழில் வெளியிட வேண்டும்
    • பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும்

    அரியலூர்:

    நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் வெளியிட வேண்டும் என்று உடையார்பாளையம் வட்டார அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.ஜெயங்கொ ண்டத்திலுள்ள ஒரு தனியார் கூட்டரங்கங்கில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும்,வழக்கு மன்றங்களில் தமிழில் தீர்ப்பு வெளியிடப்பட வேண்டும், அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயமாக கற்பிக்க வேண்டும், காலியாக உள்ள அனைத்து அரசு பணியிடங்களையும் முழுமையாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்துக்கு அச்சங்கத்தின் வட்டாரத் தலைவர் சுந்தரேசன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் சிவசிதம்பரம் முன்னிலை வகித்தார்.செயலர் கலியமூர்த்தி அறிக்கை வாசித்தார். பொருளாளர் ராமூர்த்தி வரவு செலவு கணக்குகளை சமர்பித்தார். முன்னதாக சங்க நிர்வாகி வரவேற்றார். முடிவில் ராமையன் நன்றி தெரிவித்தார்.




    ×