என் மலர்tooltip icon

    அரியலூர்

    • விழிப்புணர்வு பேரணி நடந்தது
    • உலக காசநோய் தினத்தை முன்னிட்டு

    அரியலூர்:

    உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, அரியலூரில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரியலூர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்ட பேரணியை ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தொடங்கி வைத்தார். இந்தப் பேரணி மார்க்கெட் தெரு, எம்.பி.கோயில் தெரு, திருச்சி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, ஒற்றுமைத்திடல் முன்பு நிறைவடைந்தது.

    பேரணியில் அரியலூர் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அ.முத்துகிருஷ்ணன், கோட்டாட்சியர் மு.ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • காவல் நிலையம் சார்பில் நடைபெற்றது

    அரியலூர்:

    உடையார்பாளையம் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. சப்இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் பேசும் போது, அரியலூர் மாவட்டத்தில் செந்துறை, கூவாகம் ஆண்டிமடம் காவல் நிலைய சரகங்களில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக இரவு நேரங்களில் திருட்டு, தூக்கத்தில் இருக்கும் பெண்களிடம் செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தாங்கள் தங்கள் கிராம மக்களிடம் இரவு நேரங்களில் கதவை திறந்து வைத்துக் கொண்டு தூங்க வேண்டாம் எனவும், சந்தேகப்படும்படியான வெளியூர் மற்றும் வெளி மாநில நபர்கள் தங்கள் கிராமத்தில் நடமாட்டம் இருந்தால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

    • வீட்டு பின்புறம் மது அருந்தி விட்டு கதவை உடைத்து கொள்ளை
    • துாங்கி கொண்டிருந்தவர் கழுத்தில் இருந்து சங்கில பறிப்பு

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் அருகே ஜெமீன் கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உலகநாதன் (50) இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.இவருக்கு ரேணுகா (40) என்ற மனைவியும் இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.ரேணுகா நேற்று இரவு வழக்கம் போல் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு சாப்பிட்டு இரவு வீட்டுக்குள் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 2 மணி அளவில் கழுத்தில் கிடந்த தாலி நகர்ந்து போவது போல் உணர்ந்த ரேணுகா திடுக்கிட்டு எழுந்துள்ளார் அப்போது மர்ம நபர்கள் கழுத்தில் கிடந்த தாலி செயினை அறுக்க முற்பட்ட போது தாலி செயினை பிடித்துக் கொண்டு அலறி கத்திய படி போராடி உள்ளார். அலறல் சத்தம் கேட்டு பின்பு யாரேனும் வந்துவிடுவார்களோ என்று மர்ம கொள்ளையர்கள் தாலி செயினின் பாதிப்பகுதியோடு பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்பு ரேணுகாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எழுந்து ஓடி வந்தனர். தாலி செயினை பறிப்பதற்கு முன்பாகவே பீரோவை உடைத்து உள்ளே இருந்த தோடு, சிமிக்கி, வெள்ளி பொருட்கள், 25 ஆயிரம் பணம் உள்ளிட்டவைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து வீட்டுக்கு வெளியே படுத்திருந்த வளர்ப்பு நாயை பார்த்த பொழுது அது மயக்க நிலையில் கிடந்துள்ளது. கொள்ளையர்கள் கொள்ளையடிப்பதற்கு முன்பே வீட்டுக்குப் பின்புறம் மது அருந்திவிட்டு வளர்ப்பு நாய்க்கு மயக்க பிஸ்கட் கொடுத்து மயக்கம் அடைய செய்து விட்டு சாவகாசமாக வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 4 பவுன் நகைகள், 3 பவுன் தாலிச் செயின், வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்துச் சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    அரியலூர், சிறுவாளூர் அரசு பள்ளியில் நடைபெற்றது

    அரியலூர்,

    அரியலூர் அருகே உள்ள சிறுவளூர் அரசு  உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உலக தண்ணீர் தின விழா பள்ளியின் தலை மையாசிரியர் சின்னதுரை தலைமையில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வையாளர் முருகானந்தம் பேசும் போது, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் நீர் மிகவும் அவசியமானது. உலகில் தற்பொழுது 40 சதவீத மக்களுக்கு குடிப்பதற்கு சுகாதாரமான தண்ணீர் கிடைப்பதில்லை . உணவு, உடையை கூட உற்பத்தி செய்யும் மனிதனால் நீரை உற்பத்தி செய்ய முடியாது. எனவே அடுத்த தலைமுறைக்கு நீரை விட்டுச் செல்ல நாம் மரங்களை வளர்க்க வேண்டும். மழை நீரை சேமிக்க வேண்டும்.  தண்ணீரை வீணாகாமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். ஆரம்பத்தில், குடிநீரை ஆறு, ஏரி, அருவி, குளம் போன்ற இடங்களில் எடுத்த மனிதன் இன்று பாட்டில்களிலும் தண்ணீர் கேன்களிலும் பெறுகிறான். அடுத்த தலைமுறைக்கு ஆறு , குளம் என்றால் என்னவென்று தெரியாத அளவுக்கு இன்று ஆறு குளங்கள் காணாமல் போய்விட்டன.நாகரிக மோகம், தொழிற்சாலைகள் அதிகப்படியான நீர் பயன்பாடு போன்றவற்றால் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழே சென்று விட்டது . எனவே அடுத்த தலைமுறைக்கு குடிநீரை விட்டு செல்ல வேண்டுமென்றால் மக்கள் ஒவ்வொருவரும் இணைந்து கண்ணில் படும் இடங்களில் எல்லாம் மரங்களை வளர்க்க வேண்டும். மழை நீரை சேமிக்க வேண்டும், நீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கூறினார்.

    • ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி நடைபெற்றது
    • மாணவர்கள் கற்று கொண்ட செயல்முறைகளை, தனித்தனியாக வெளிப்படுத்தினர்

    அரியலூர்,

    அரியலூர் அடுத்த அஸ்தினாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், எண்ணும் எழுத்தும் திட்டத்தின், ஓராண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.தமிழகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர்கள் இடைநிற்றலை தடுக்கவும், எழுதும் திறன், வாசித்தல் திறனை மேம்படுத்தவும், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் திறனை மேம்படுத்தவும், 'எண்ணும் எழுத்தும்' திட்டம் கொண்டுவரப்பட்டது.இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு கற்பித்தல் திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த திட்டம் கொண்டுவரப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, அரியலூர் அடுத்த அஸ்தினாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மாணவர்கள் செயல்பாடு என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அமுதா தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜேஸ்வரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள், தங்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில், எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் கற்று கொண்ட செயல்முறைகளை, தனித்தனியாக வெளிப்படுத்தினர். இதில் மாணவர்கள் வாசிக்கும் திறன், பாடல் பாடி ஒப்புவித்தல் போன்ற திறன்களை வெளிப்படுத்தினர். மேலும் இந்நிகழ்ச்சியில் கலைமணிகலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    • உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்றது
    • மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுக்கா இலையூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் அறிவழகன், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார், நிகழ்ச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் கிராம கால்நடை மருத்துவமனை மருத்துவர் ஆகியோர் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு உரை நிகழ்த்தினர்.

    • முனீஸ்வரன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு
    • எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, காட்டாகரம் ஊராட்சி, சுத்துக்குளம் கிராமத்தில் முனீஸ்வரர் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு விழாவை, எம்.எல்.ஏ.கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். விழாவில் சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு, காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா சோமசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மணிமாறன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் ரேவதி சௌந்தரராஜன், ஒப்பந்தக்காரர் துரைமாறன் மற்றும் கழக நிர்வாகிகள், நாட்டாண்மைகள், ஊர் பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.

    • சாணத்தை சாப்பிட சொல்லி கொடுமை படுத்தியதாக புகார்
    • மாமியார் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு

    ஜெயங்கொண்டம்,

    ஜெயங்கொண்டம் அருகே மனைவியை மூன்று நாட்கள் தனிமையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த கணவன் கைது செய்து உடந்தையாக இருந்த மாமியார் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி விசாரித்து வருகின்றனர்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள விழப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகள் சத்யா. (26) (டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்துள்ளார்.) இவரது கணவர் விஜயபாண்டியன். (30) டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார்.இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 7 வயதில் மோனிகா என்ற பெண் குழந்தையும், 5 வயதில் மிருதேஸ்வரன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. கணவர் விஜயபாண்டியன் மாமியார் மனோரஞ்சிதமும் சத்யாவை கொடுமைப்படுத்தியது சம்பந்தமாக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் 10 ஆம் தேதி இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.இதனால் ஆத்திரமடைந்த சத்யாவின் கணவர் விஜயபாண்டியன் அவரது தாயார் மனோரஞ்சிதம் ஆகியோர் சத்யாவை கடந்த மூன்று நாட்களாக தனிமையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளனர். இது குறித்து சத்யா ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில் 3 நாட்கள் என்னை தனிமையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்தனர் சாப்பாட்டிற்கு பதிலாக சாணத்தை சாப்பிட சொல்லி கொடுமை படுத்தினர். வேறு ஒருவரோடு தொடர்பில் இருப்பதாக கூறினாள் உன்னை விட்டு விடுவதாக அடித்து சித்திரவதை செய்ததால் தானும் அதற்கு ஒத்துக் கொள்வதை செல்போனில் பதிவு செய்துள்ளனர்.இதனை அடுத்து எனது கணவர் விஜயபாண்டியன் அவரது தாய்மாமன் பரமசிவம், தாயார் மனோரஞ்சிதம் மற்றும் தர்மலிங்கம் ஆகியோர் நீ வாழ வேண்டும் என்றால் 12 லட்சம் பணம் சிதம்பரத்தில் இருக்கும் வீடு மற்றும் 10 பவுன் நகையுடன் வந்தால் வாழலாம் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்தால் உனது வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டுகின்றனர்.மேலும் எனக்கு சொந்தமான 20 சவரன் நகையை கொடுக்காமல் என்னை சித்திரவதை செய்வதாக புகாரில் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி. வழக்கு பதிவு செய்து சத்யாவின் கணவர் விஜயபாண்டியனை கைது செய்து அவருக்கு உடந்தையாக இருந்த தாயார் மனோரஞ்சிதம் தாய்மாமன் பரமசிவம், தர்மலிங்கம் உள்ளிட்ட நான்கு பேரையும் தேடி விசாரித்து வருகின்றனர்.


    • திருமானூர் மேலவரப்பன்குறிச்சி மணிமேகலை பள்ளியில் நடைபெற்றது
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கிரீடம் சூட்டப்பட்டது

    திருமானூர்,

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலவரப்பன்குறிச்சி மணிமேகலை மான்ய தொடக்கப் பள்ளியில் எண்ணும், எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் என்ற கண்காட்சி விழா நடைபெற்றது.நிகழ்ச்சியில் வட்டார கல்விஅலுவளர் பரிமளம் தலைமை வகித்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கல்வியின் பற்றிய முக்கியத்துவத்தை கூறினார். மேலாண்மை நிர்வாகி காந்திமதி முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அழகிய மணவாளன் ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலு கலந்து கொண்டார். நிகழ்ச்சி ஏற்பாடுகளையும் பள்ளி தலைமைஆசிரியை மெரீனா செல்வராணி செய்திருந்தார். ஆசிரியர் மணிகண்டன் சிறப்புரையாற்றினார். மேலும் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கிடையே படைப்புகள் செய்தல், பாடல்கள் கதை கூறுதல், விலங்குகள் போல் ஒலி எழுப்புதல், ஆங்கிலம் வாசித்தல்போ ன்ற போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அப்போது பரிசு பெற்றவர்களுக்கு கீரிடம் சூட்டப்பட்டது. நிறைவில் ஆசிரியை துர்கா தேவி நன்றி உரை நிகழ்த்தினார்.


    • விழிப்புணர்வு வாசகங்கள் கைகளில் ஏந்தி பேரணி நடைபெற்றது
    • பதுவனேரியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் உலக வனம் நாள் விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஷாம் கர்ணல் அனைவரையும் வரவேற்றார். ஜெயங்கொண்டம் ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் காஞ்சனா சரவணன் தலைமை தாங்கினார். பரப்ரம்மம் ஃபவுண்டேஷன் நிறுவனரும் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களின் தாளாளருமான முத்துக்குமரன் பேரணியை துவக்கி வைத்து விளக்க உரையாற்றினார்.பேரணியில் நகராட்சி ஊழியர்கள் நர்சிங் மாணவிகள் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தி கோசமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பேரணியானது ஜூப்லி ரோடு, நான்கு ரோடு, பேருந்து நிலைய சாலை வழியாகச் சென்று செந்துறை ரோடு, ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களில் பேரணி நிறைவுற்றது.பேரணியில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் ரமேஷ், ஏசிஏ சர்ச் ஜோஸ்வா, டெங்கு ஒழிப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், தூய்மை பணி மேற்பார்வையாளர் வெங்கடேசன், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் இறுதியில் ஜூபிலி ரோடு பதுவனேரியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    • தமிழக பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்று எதிர்ப்பு


    திருமானூர், அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் அலுவலகத்தின் அரசு ஊழியர்கள், தமிழக அரசு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளான பழைய ஓய்வுதி திட்டம், நிலுவைத் தொகை, சரண்டர் தொகை போன்றவற்றில் எந்த கோரிக்கைகளையும் அறிவிக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜெயராஜ் தலைமையேற்று அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தார். தமிழ்நாடு ஊழியர் சங்கம் மாவட்ட இணை செயலாளர் காமராஜ் வரவேற்புரை நிகழ்த்தி உடனடியாக அரசு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஆனந்த், தமிழக பட்ஜெட் மிகவும் வேதனை அளிக்கிறது. எனவே சென்னையில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்த அனைத்து அரசு ஊழியர்களும் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்




    • அரியலூர் மாவட்டத்தில் இ-சேவை மையம் தொடங்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
    • மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி அறிக்கை

    அரியலூர்,

    தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு மகளிர்நல மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை, கிராமப்புறதொழில் முனைவோர்கள் ஆகிய நிறுவனங்களின் மூலம் இ-சேவை மையங்களை செயல்படுத்தி மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பி டத்திற்கு அருகாமையிலேயே வழங்கி வருகின்றது.மேலும், அரசின் இணையதள சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகின்றது. இதனை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது, அனைவருக்கும் இ-சேவைமையம் திட்டத்தின் மூலம் அனைத்து குடிமக்களும் இசேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்தி ட்டத்தின் நோக்கமானது, அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இசேவை மையங்களை ஏற்படுத்திடவும், மாவட்டங்களில் இசேவை மையங்களின் எண்ணி க்கையினை அதிகரித்து இசேவை மையங்களில் பொதுமக்கள் காத்திருக்கும் நேரத்தினை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதாகும்.எனவே, அரியலூர் மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவைமையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க ப்படுகின்றன. இணையமுறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.





    ×