என் மலர்
கர்நாடகா தேர்தல்
- ஜெகதீஷ் ஷெட்டர் தார்வார்-உப்பள்ளி மத்திய தொகுதியில் தோல்வி தழுவினார்.
- லட்சுமண் சவதி வெற்றிக்கனியை ருசித்துள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் முக்கியமான 13 மந்திரிகள் மற்றும் சபாநாயகர் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளனர். அதாவது இளைஞர் நலன், விளையாட்டுத்துறை மந்திரி நாராயணகவுடா (கே.ஆர்.பேட்டை), நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் (முத்தோல்), சட்டத்துறை மந்திரி மாதுசாமி (சிக்கநாயக்கனஹள்ளி), தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி (பீலகி), நகராட்சி நிர்வாகத்துறை மந்திரி எம்.டி.பி.நாகராஜ் (ஒசக்கோட்டை), வீட்டு வசதி மந்திரி சோமண்ணா (சாம்ராஜ்நகர் மற்றும் வருணா), சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் (சிக்பள்ளாப்பூர்), விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் (ஹிரேகெரூர்), போக்குவரத்து மந்திரி ஸ்ரீராமுலு (பல்லாரி புறநகர்), பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் (திப்தூர்), சர்க்கரை மந்திரி சங்கர் பட்டீல் (நவலகுந்து), பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஹாலப்பா ஆச்சார் (எலபுர்கா), வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் (கனகபுரா) என மொத்தம் 13 மந்திரிகள் படுதோல்வி அடைந்துள்ளனர். இதில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட மந்திரி ஆர்.அசோக் பத்மநாபநகரில் மட்டும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பா.ஜனதாவில் டிக்கெட் கிடைக்காமல் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தார்வார்-உப்பள்ளி மத்திய தொகுதியில் தோல்வி தழுவினார். அதுபோல் பா.ஜனதாவில் இருந்து விலகி அதானி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட லட்சுமண் சவதி வெற்றிக்கனியை ருசித்துள்ளார்.
- தங்கள் தந்திரங்கள் இனி வேலைக்கு ஆகாது என்பதை பா.ஜ.க. உணர வேண்டும்.
- கர்நாடக மாநிலம், நம்பிக்கை சுடரை காட்டி உள்ளது.
புதுடெல்லி :
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அது வருமாறு:-
மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ் தலைவர், மேற்கு வங்காள முதல்-மந்திரி):- 2024 பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக, இது பா.ஜ.க. ஆட்சியின் முடிவுக்கான தொடக்கம் ஆகும். பா.ஜ.க.வின் ஆணவத்துக்கும், சகிப்புத்தன்மையற்ற தன்மைக்கும் எதிராக மக்கள் வாக்கு அளித்துள்ளனர். நடக்க உள்ள சத்தீஷ்கார் மற்றும் மத்தியபிரதேச மாநில சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.க. தோல்வி அடையும். கர்நாடக மாநிலத்தில் மாற்றத்துக்கு ஆதரவாக மக்கள் அளித்துள்ள உறுதியான தீர்ப்புக்கு என் வணக்கங்கள். மிருகத்தனமான சர்வாதிகார, பெரும்பான்மை அரசியல் தோற்றுள்ளது. மக்கள் பன்முகத்தன்மையும், ஜனநாயக சக்திகளும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகின்றனர்.
அரவிந்த் கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி கட்சித்தலைவர்):- கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்துகள். தங்கள் தந்திரங்கள் இனி வேலைக்கு ஆகாது என்பதை பா.ஜ.க. உணர வேண்டும்.
மாணிக் சகா (பா.ஜ.க. மூத்த தலைவர், திரிபுரா முதல்-மந்திரி):- வெற்றியும், தோல்வியும் ஜனநாயக செயல்பாட்டின் ஒரு அங்கம் ஆகும். ஆட்சி அதிகாரத்தில் இருந்து ஒரு கட்சி போய் மற்றொரு கட்சி மீண்டும் வரும்.
அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி கட்சித்தலைவர்):- கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவின் மூலம் அந்த மாநிலம் விடுத்துள்ள செய்தி, பா.ஜ.க.வின் எதிர்மறை, வெறுப்பு, வகுப்புவாத, ஊழல் மற்றும் பணக்காரர்களுக்கு ஆதரவான, பெண்களுக்கு எதிரான, இளைஞர்களுக்கு எதிரான, சமூகத்தை பிளவுபடுத்தும் பிரசாரம் முடிவுக்கு வந்துள்ளது, தனிமனிதனை மையமாகக் கொண்ட அரசியல் தொடங்கி உள்ளது என்பதாகும்.
மெகபூபா முப்தி (மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர்):- கர்நாடக மாநிலம், நம்பிக்கை சுடரை காட்டி உள்ளது. வகுப்புவாத அரசியலை பிற மாநிலங்களும் இனி நிராகரித்து விடும். வளர்ச்சிக்கும், வளத்துக்கும் மக்கள் வாக்கு அளிப்பார்கள். ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி அல்லது பிற காங்கிரஸ் தலைவர்கள் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் நலத்திட்டங்களைச் சுற்றி ஒரு பிரசாரத்தை மேற்கொண்டனர். அதற்கு மக்கள் வாக்கு அளித்துள்ளனர். இது ஒரு நல்ல செய்தி. ஏனென்றால் அடுத்த அண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தல் வருகிறது.
பூபேஷ் பாகல் (காங்கிரஸ் மூத்த தலைவர், சத்தீஷ்கார் முதல்-மந்திரி):- பா.ஜ.க. பிளவுபடுத்தும் முயற்சியில் இறங்கியபோது, கர்நாடக மாநில மக்கள் தங்கள் தீர்ப்பினை வழங்கி உள்ளனர். பா.ஜ.க.வால் மக்கள் அலுத்து விட்டனர். இமாசலபிரதேசத்தைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் கிடைத்துள்ள வெற்றி, காங்கிரஸ் தொண்டர்களின் மன உறுதியை அதிகரிக்கும். அவர்கள் நம்பிக்கையை வளர்க்கும். காங்கிரஸ் கட்சி எழுப்பிய பிரச்சினைகளை மக்கள் ஏற்றுக்கொண்டனர்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் (வைகோ):- கர்நாடகா மாநிலத்தில் பா.ஜ.க.வின் மிக மோசமான ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். ஒற்றுமையை வலியுறுத்தி நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்ட ராகுல்காந்தியின் பயணத்திற்கு கிடைத்த வெற்றி. 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கர்நாடகா தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கிறது. ராகுல்காந்தியின் அத்தியாயம் கர்நாடகத்தில் இருந்து தொடங்குகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்):- 'ராகுல்காந்திக்கு மனமார்ந்த வாழ்த்துகள். காந்தியை போலவே, நீங்கள் (ராகுல்காந்தி) மக்களின் இதயங்களில் நுழைந்தீர்கள். அவரைப் போலவே மென்மையான வழியில் உலகின் சக்திகளை - அன்புடனும், பணிவுடனும் அசைக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறீர்கள். பிரிவினைவாதத்தை நிராகரிக்க கர்நாடக மக்கள் கோரிக்கை விடுத்தனர். கர்நாடக மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒற்றுமையாக பதிலடி கொடுத்துள்ளனர். கர்நாடக வெற்றிக்கு மட்டுமல்ல, வெற்றி பெற்ற விதத்திற்கும் பாராட்டுக்கள்'.
தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த்):- 'கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உள்ள காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரை பாராட்டுகிறேன். கர்நாடக மக்களின் எதிர்பார்ப்புகளை காங்கிரஸ் கட்சி பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்'.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்):-'கர்நாடக தேர்தலில் பிரதமர், உள்துறை மந்திரி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் வரம்புமீறி அவதூறு பரப்புரை செய்தனர். ஊழலை ஒழிக்க உறுதி ஏற்றவர்கள் 40 சதவீதம் கமிஷன் ஆட்சி என்ற அவப்பெயரில் மூழ்கி போனார்கள். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் வஞ்சக சூழ்ச்சிகளை வாழ்க்கை அனுபவத்தில் உணர்ந்த கர்நாடக மக்கள் வகுப்புவாத சக்திகளை அதிகாரத்தில் இருந்து வெற்றிகரமாக வெளியேற்றி படுதோல்வி அடைய செய்திருப்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வாழ்த்துகிறது'.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றிக்கு கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், எதிர்க்கட்சியான காங்கிரசும் வாழ்த்து தெரிவித்துள்ளன. கர்நாடக சட்டசபை தேர்தலில் மக்கள் வாக்களித்துள்ள போக்கு, பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலையை காட்டுகிறது என அவை கூறின.
- மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்.
- எங்கள் கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபையில் ஏற்பட்ட தோல்வி குறித்து குமாரசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறேன். ஜனநாயகத்தில் மக்களின் முடிவே இறுதியானது. வெற்றி-தோல்வியை நான் சமமாக எடுத்து கொள்கிறேன். ஆனால் இந்த தோல்வி இறுதி அல்ல. எனது போராட்டம் இத்துடன் நின்றுவிடாது. நான் எப்போதும் மக்களுடன் இருப்பேன்.
எங்கள் கட்சிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். எனக்கும், எனது குடும்பத்திற்கும் வெற்றி-தோல்வி புதிது அல்ல. இதற்கு முன்பு தேவகவுடா, எனது சகோதரர் ரேவண்ணா, நான் ஆகியோர் தோல்வி அடைந்துள்ளோம். வரும் நாட்களில் ஜனதா தளம்(எஸ்) கட்சியை பலப்படுத்தும் பணியை மேற்கொள்வோம்.
கர்நாடகத்தில் அமைய உள்ள புதிய அரசுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும். இந்த தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு பணியாற்றிய தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன்.
இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.
- 56 புதுமுக வேட்பாளர்கள் தோல்வியை தழுவி இருக்கிறார்கள்.
- 19 வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலில் 136 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அதே நேரத்தில் இந்த தேர்தலில் வெறும் 65 தொகுதிகளில் மட்டுமே பா.ஜனதா வெற்றி பெற்று படுதோல்வி அடைந்துள்ளது. இதற்கு எடியூரப்பா, ஈசுவரப்பா உள்ளிட்ட தலைவர்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றது, மூத்த தலைவர்களான ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமண் சவதி உள்ளிட்டோர் பா.ஜனதாவில் இருந்து விலகியது ஆகியவை காரணமாக பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் குஜராத் மாதிரி கர்நாடக சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதாவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த குஜராத் மாதிரி வேட்பாளர்கள் நிறுத்தியது பா.ஜனதாவில் எடுபடாமல் தோல்வி அடைந்திருக்கிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் 75 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது.
அவர்களில் 56 புதுமுக வேட்பாளர்கள் தோல்வியை தழுவி இருக்கிறார்கள். 19 வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. அவர்களில் 35 பேர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- சில கருத்து கணிப்புகள் தொங்கு சட்டசபை அமையும் என்று கூறி இருந்தது.
- காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது. தேர்தலுக்கு பின்பு வெளியான 11 கருத்து கணிப்புகளில் 9 கணிப்புகள் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்றும், 120 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது.
சில கருத்து கணிப்புகள் தொங்கு சட்டசபை அமையும் என்று கூறி இருந்தது. ஆனால் அனைத்து கருத்து கணிப்புகளையும் மீறி 136 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூட 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று அறிவித்திருந்தார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவக்குமார் மட்டும் யார் என்ன சொன்னாலும், எந்த கருத்து கணிப்புகள் எப்படி கூறி இருந்தாலும், நாங்கள் 141 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று தேர்தல் முடிந்த பின்பும், நேற்று முன்தினம் வரையும், அதையே கூறி வந்திருந்தார்.
அவரது கருத்து கணிப்பே கடைசியில் இறுதியாகி உள்ளது. அவர் கூறியபடி 141 தொகுதிகளுக்கு பதில், 5 தொகுதிகள் மட்டும் குறைவாக 136 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. இதனால் தான் சொன்னபடி காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பதாக டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
- தனது மகனுக்காக இந்த தொகுதியை அனிதா குமாரசாமி விட்டு கொடுத்திருந்தார்
- 10,715 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி
பெங்களூரு
ஜனதாதளம் (எஸ்) கட்சி மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமார சாமியின் மகன் நிகில் குமாரசாமி. இவர் கன்னட திரையுலகின் இளம் நடிகராக உள்ளார். இவர் அக்கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் கோட்டையான கருதப்படும் ராமநகர் தொகுதியில் நிகில் குமாரசாமி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இக்பால் ஹுசைனும், பா.ஜனதா சார்பில் கவுதம் மரிலிங்கே கவுடாவும் போட்டியிட்டனர்.
இதில் தொடக்க முதலே நிகில் குமாரசாமிக்கும், இக்பால் ஹுசைனுக்கும் இடையே போட்டி நிலவியது. இருப்பினும் இக்பால் ஹுசைன் ஒவ்வொரு சுற்று முடிவிலும் முன்னிலை பெற்று வந்தார்.
மொத்தம் 20 சுற்றுகள் ஓட்டு எண்ணிக்கை நடந்த நிலையில், 12, 13, 14 சுற்றுக்களில் காங்கிரஸ் வேட்பாளரை விட நிகில் கூடுதல் வாக்குகளை பெற்றார். இருப்பினும் முடிவில் 10 ஆயிரத்து 715 ஓட்டுகள் வித்தியாசத்தில் நிகில் குமாரசாமி தோல்வி அடைந்தார்.
ஏற்கனவே நிகில் குமாரசாமி கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கிய மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவியும், நடிகையுமான சுமலதாவிடம் தோல்வி அடைந்திருந்தார். இந்த நிலையில், சட்டசபை தேர்தலிலும் நிகில் குமாரசாமி தோல்வியை சந்தித்து இருப்பது அக்கட்சி தலைவர்களான தேவகவுடா, குமாரசாமி ஆகியோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராமநகர் மற்றும் சென்னப்பட்டணா தொகுதிகளில் குமாரசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். பின்னர் ராமநகர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனால் இந்த தொகுதி இடைத்தேர்தலை சந்தித்தது. இதில் குமாரசாமியின் மனைவி அனிதா போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
தற்போது தனது மகனுக்காக இந்த தொகுதியை அனிதா குமாரசாமி விட்டு கொடுத்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. இந்த தொகுதி 2004-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை ஜனதாதளம் (எஸ்) கட்சி தொடர்ச்சியாக பெற்ற வெற்றிக்கு காங்கிரஸ் இந்த முறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ராமநகர் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம்:-
இக்பால் ஹுசைன் (காங்.) - 87,690
நிகில் குமாரசாமி (ஜனதாதளம்(எஸ்))-76,975
கவுதம் மரிலிங்கேகவுடா (பா.ஜனதா)- 12,912
நோட்டா- 880
- பா.ஜனதா தோல்வியை சந்தித்துள்ளது.
- காங்கிரஸ் அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறது.
பெங்களூரு
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. மாநிலத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ள பா.ஜனதா தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்திருந்தார்கள்.
ஆனாலும் பா.ஜனதா தோல்வியை சந்தித்துள்ளது. இதன்மூலம் கர்நாடகத்தில் 1985-ம் ஆண்டுக்கு பின்பு ஆட்சியில் இருக்கும் கட்சி, தொடர்ந்து வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்ததில்லை என்ற வரலாறு தொடருகிறது. அதாவது 1985-ம் ஆண்டுக்கு பின்பு ஒவ்வொரு கட்சியும் மாறி, மாறி வெற்றி பெற்று தான் ஆட்சியை பிடித்திருந்தது.
அதன்படி, தற்போதும் ஆட்சியில் இருந்த பா.ஜனதாவால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாமல், காங்கிரஸ் அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறது. கர்நாடக அரசியலில் கடந்த 38 ஆண்டு வரலாற்றில் தொடர்ந்து இருமுறை எந்த கட்சியும் ஆட்சியை தக்க வைத்து கொண்டதில்லை என்பது நேற்று நடந்த தேர்தல் முடிவுகள் மூலமாக உறுதியாகி இருக்கிறது.
- கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது.
- அதில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
கொல்கத்தா:
கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 10-ம் தேதி நிறைவடைந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. 137 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. பா.ஜ.க. 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியது. இதனால் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது.
இதனை தொடர்ந்து, கர்நாடக முதல் மந்திரி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவரான பசவராஜ் பொம்மை, ராஜ் பவனில் கவர்னர் தாவர் சந்த் கெலாட்டை இன்று நேரில் சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தினை வழங்கினார்.
இந்நிலையில், கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, தென்மாநில தேர்தல் முடிவுகள் 2024 பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வின் வீழ்ச்சி ஆரம்பமாகி உள்ளது. கர்நாடக மக்களுக்கும், அனைத்து வாக்காளர்களுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன் என தெரிவித்தார்.
- மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என பா.ஜ.க. வேட்பாளர் ராமமூர்த்தி முறையிட்டுள்ளார்.
- ஜெயா நகர் தொகுதியில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
பெங்களூரு:
ஜெயாநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சௌமியா ரெட்டி மற்றும் பா.ஜ.க. சார்பில் சி.கே. ராமமூர்த்தி ஆகியோர் போட்டியிட்டனர்.
முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் சௌமியா ரெட்டி 294 வாக்குகள் வித்தியாசத்தில் மொத்தமாக 57 ஆயிரத்து 591 வாக்குகளை பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ராமமூர்த்தி 57 ஆயிரத்து 297 வாக்குகளை பெற்றிருந்தார்.
இதற்கிடையே, மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என பா.ஜ.க. வேட்பாளர் ராமமூர்த்தி முறையிட்டுள்ளார். இதையடுத்து, தேர்தல் அதிகாரி தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வலியுறுத்தி இருக்கிறார்.
தேர்தல் அலுவலரின் உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் மற்றும் செயல் தலைவர் ராமலிங்கா ரெட்டி மற்றும் இதர நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஜெயா நகரில் பா.ஜ.க. வேட்பாளர் ராமமூர்த்தி 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
- கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது.
- இதனால் ஆளுநரிடம் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை ராஜினாமா கடிதம் வழங்கினார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 10-ம் தேதி நிறைவடைந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. அதன் முடிவில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, 137 தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது. பா.ஜ.க. 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றியது. இதனால் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில், கர்நாடக முதல் மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான பசவராஜ் பொம்மை, ராஜ்பவனில் ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டை இன்று நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தினை வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநரிடம் எனது ராஜினாமா கடிதம் வழங்கினேன். அது ஏற்கப்பட்டு விட்டது என தெரிவித்தார்.
ஆளுநரை சந்திக்கும் முன் அவர் கூறுகையில், பா.ஜ.க.வின் இந்த தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இந்தத் தோல்விக்கு பல காரணங்கள் உள்ளன. ஒரு தேசிய கட்சியாக ஒவ்வொரு விஷயங்களைப் பற்றியும் நாங்கள் ஆய்வு செய்வோம். எங்களுடைய அனைத்து தவறுகளையும் நாங்கள் ஆய்வுசெய்து பாராளுமன்ற தேர்தலில் மீண்டெழுந்து வருவோம் என கூறியுள்ளார்.
- மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று பாஜக வேட்பாளர் ராமமூர்த்தி முறையிட்டுள்ளார்.
- தேர்தல் அலுவலரின் உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்.
பெங்களூருவின் ஜெயாநகர் தொகுதியில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. ஜெயாநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சௌமியா ரெட்டி மற்றும் பாஜக சார்பில் சி.கே. ராமமூர்த்தி ஆகியோர் களத்தில் உள்ளனர்.
முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையில் சௌமியா ரெட்டி 294 வாக்குகள் வித்தியாசத்தில் மொத்தமாக 57 ஆயிரத்து 591 வாக்குகளை பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ராமமூர்த்தி 57 ஆயிரத்து 297 வாக்குகளை பெற்றிருந்தார். இந்த நிலையில், மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று பாஜக வேட்பாளர் ராமமூர்த்தி முறையிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து தான் தேர்தல் அதிகாரி தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வலியுறுத்தி இருக்கிறார். தேர்தல் அலுவலரின் உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் டிகே சிவகுமார் மற்றும் செயல் தலைவர் ராமலிங்கா ரெட்டி மற்றும் இதர நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 224 தொகுதிகள் அடங்கிய கர்நாடக சட்டமன்றத்தில் ஜெயாநகரில் மட்டும் இன்னும் முடிவு தெரியாமல் உள்ளது.
- காங்கிரஸ் கட்சி மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது.
- ஆட்சி அமைக்க தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 6 மையங்களிலும், மற்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள 30 வாக்கு எண்ணும் மையங்களிலும் நடைபெற்று வருகிறது.
ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் கட்சி மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது.

மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தற்போது வரை 134 தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. மேலும் இரண்டு தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களை விட அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் படி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். எனினும், கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முதல்வரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நாளை மாலை 5.30 மணிக்கு பெங்களூருவில் நடைபெற இருக்கிறது.
இந்த கூட்டத்தை நடத்துவதற்காக அகில இந்திய காங்கிரஸ் பார்வையாளர்கள் பெங்களூரு வருகின்றனர். முதல்வரை தேர்வு செய்த பின் அடுத்த வாரத்தில் புதிய முதல்வர் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருப்பது, அம்மாநிலம் மட்டுமின்றி நாடு முழுக்க காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.






