search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடக தேர்தல் முடிவு குறித்து தலைவர்கள் கருத்து: பா.ஜ.க. ஆட்சியின் முடிவுக்கான தொடக்கம் இது
    X

    கர்நாடக தேர்தல் முடிவு குறித்து தலைவர்கள் கருத்து: பா.ஜ.க. ஆட்சியின் முடிவுக்கான தொடக்கம் இது

    • தங்கள் தந்திரங்கள் இனி வேலைக்கு ஆகாது என்பதை பா.ஜ.க. உணர வேண்டும்.
    • கர்நாடக மாநிலம், நம்பிக்கை சுடரை காட்டி உள்ளது.

    புதுடெல்லி :

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அது வருமாறு:-

    மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ் தலைவர், மேற்கு வங்காள முதல்-மந்திரி):- 2024 பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு முன்பாக, இது பா.ஜ.க. ஆட்சியின் முடிவுக்கான தொடக்கம் ஆகும். பா.ஜ.க.வின் ஆணவத்துக்கும், சகிப்புத்தன்மையற்ற தன்மைக்கும் எதிராக மக்கள் வாக்கு அளித்துள்ளனர். நடக்க உள்ள சத்தீஷ்கார் மற்றும் மத்தியபிரதேச மாநில சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.க. தோல்வி அடையும். கர்நாடக மாநிலத்தில் மாற்றத்துக்கு ஆதரவாக மக்கள் அளித்துள்ள உறுதியான தீர்ப்புக்கு என் வணக்கங்கள். மிருகத்தனமான சர்வாதிகார, பெரும்பான்மை அரசியல் தோற்றுள்ளது. மக்கள் பன்முகத்தன்மையும், ஜனநாயக சக்திகளும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகின்றனர்.

    அரவிந்த் கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி கட்சித்தலைவர்):- கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள வெற்றிக்கு வாழ்த்துகள். தங்கள் தந்திரங்கள் இனி வேலைக்கு ஆகாது என்பதை பா.ஜ.க. உணர வேண்டும்.

    மாணிக் சகா (பா.ஜ.க. மூத்த தலைவர், திரிபுரா முதல்-மந்திரி):- வெற்றியும், தோல்வியும் ஜனநாயக செயல்பாட்டின் ஒரு அங்கம் ஆகும். ஆட்சி அதிகாரத்தில் இருந்து ஒரு கட்சி போய் மற்றொரு கட்சி மீண்டும் வரும்.

    அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி கட்சித்தலைவர்):- கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவின் மூலம் அந்த மாநிலம் விடுத்துள்ள செய்தி, பா.ஜ.க.வின் எதிர்மறை, வெறுப்பு, வகுப்புவாத, ஊழல் மற்றும் பணக்காரர்களுக்கு ஆதரவான, பெண்களுக்கு எதிரான, இளைஞர்களுக்கு எதிரான, சமூகத்தை பிளவுபடுத்தும் பிரசாரம் முடிவுக்கு வந்துள்ளது, தனிமனிதனை மையமாகக் கொண்ட அரசியல் தொடங்கி உள்ளது என்பதாகும்.

    மெகபூபா முப்தி (மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர்):- கர்நாடக மாநிலம், நம்பிக்கை சுடரை காட்டி உள்ளது. வகுப்புவாத அரசியலை பிற மாநிலங்களும் இனி நிராகரித்து விடும். வளர்ச்சிக்கும், வளத்துக்கும் மக்கள் வாக்கு அளிப்பார்கள். ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி அல்லது பிற காங்கிரஸ் தலைவர்கள் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் நலத்திட்டங்களைச் சுற்றி ஒரு பிரசாரத்தை மேற்கொண்டனர். அதற்கு மக்கள் வாக்கு அளித்துள்ளனர். இது ஒரு நல்ல செய்தி. ஏனென்றால் அடுத்த அண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தல் வருகிறது.

    பூபேஷ் பாகல் (காங்கிரஸ் மூத்த தலைவர், சத்தீஷ்கார் முதல்-மந்திரி):- பா.ஜ.க. பிளவுபடுத்தும் முயற்சியில் இறங்கியபோது, கர்நாடக மாநில மக்கள் தங்கள் தீர்ப்பினை வழங்கி உள்ளனர். பா.ஜ.க.வால் மக்கள் அலுத்து விட்டனர். இமாசலபிரதேசத்தைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் கிடைத்துள்ள வெற்றி, காங்கிரஸ் தொண்டர்களின் மன உறுதியை அதிகரிக்கும். அவர்கள் நம்பிக்கையை வளர்க்கும். காங்கிரஸ் கட்சி எழுப்பிய பிரச்சினைகளை மக்கள் ஏற்றுக்கொண்டனர்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் (வைகோ):- கர்நாடகா மாநிலத்தில் பா.ஜ.க.வின் மிக மோசமான ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். ஒற்றுமையை வலியுறுத்தி நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்ட ராகுல்காந்தியின் பயணத்திற்கு கிடைத்த வெற்றி. 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கர்நாடகா தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கிறது. ராகுல்காந்தியின் அத்தியாயம் கர்நாடகத்தில் இருந்து தொடங்குகிறது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்):- 'ராகுல்காந்திக்கு மனமார்ந்த வாழ்த்துகள். காந்தியை போலவே, நீங்கள் (ராகுல்காந்தி) மக்களின் இதயங்களில் நுழைந்தீர்கள். அவரைப் போலவே மென்மையான வழியில் உலகின் சக்திகளை - அன்புடனும், பணிவுடனும் அசைக்க முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறீர்கள். பிரிவினைவாதத்தை நிராகரிக்க கர்நாடக மக்கள் கோரிக்கை விடுத்தனர். கர்நாடக மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒற்றுமையாக பதிலடி கொடுத்துள்ளனர். கர்நாடக வெற்றிக்கு மட்டுமல்ல, வெற்றி பெற்ற விதத்திற்கும் பாராட்டுக்கள்'.

    தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த்):- 'கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உள்ள காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரை பாராட்டுகிறேன். கர்நாடக மக்களின் எதிர்பார்ப்புகளை காங்கிரஸ் கட்சி பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்'.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்):-'கர்நாடக தேர்தலில் பிரதமர், உள்துறை மந்திரி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் வரம்புமீறி அவதூறு பரப்புரை செய்தனர். ஊழலை ஒழிக்க உறுதி ஏற்றவர்கள் 40 சதவீதம் கமிஷன் ஆட்சி என்ற அவப்பெயரில் மூழ்கி போனார்கள். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் வஞ்சக சூழ்ச்சிகளை வாழ்க்கை அனுபவத்தில் உணர்ந்த கர்நாடக மக்கள் வகுப்புவாத சக்திகளை அதிகாரத்தில் இருந்து வெற்றிகரமாக வெளியேற்றி படுதோல்வி அடைய செய்திருப்பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வாழ்த்துகிறது'.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றிக்கு கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், எதிர்க்கட்சியான காங்கிரசும் வாழ்த்து தெரிவித்துள்ளன. கர்நாடக சட்டசபை தேர்தலில் மக்கள் வாக்களித்துள்ள போக்கு, பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலையை காட்டுகிறது என அவை கூறின.

    Next Story
    ×