என் மலர்tooltip icon

    மேற்கு வங்காளம்

    • மந்திரி பார்த்தா சட்டர்ஜியிடம் நேற்று 11 மணி நேரம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
    • இரண்டாவது நாளாக இன்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

    கொல்கத்தா:

    மேற்குவங்காள ஆசிரியர் நியமணம் மற்றும் அதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க சிபிஐக்கு கோர்ட் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் பணமோசடிகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.

    அந்த வகையில், வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பார்த்தா சாட்டர்ஜி, கல்வித்துறை மந்திரி பரீஷ் சந்திர அதிகாரி தொடர்புடைய இடங்கள் மற்றும் மாநில கல்வித்துறையில் முக்கிய பொறுப்புகளில் இருந்த அதிகாரிகளின் வீடுகள் என 13 இடங்களில் அமலாக்கத்துறையில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். மந்திரி பார்த்தா சட்டர்ஜியிடம் நேற்று 11 மணி நேரம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

    அமலாக்கத்துறை நடத்திய சோதனையின்போது, மந்திரி பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய உதவியாளர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக 20 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. 10 சொத்து ஆவணங்கள், ரூ.50 லட்சம் மதிப்பிலான நகைகள் ஆகியவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அர்பிதா பானர்ஜி வங்காளம், ஒடிசா ஆகிய மொழிப்படங்களில் நடித்துள்ளார்.

    நடிகை அர்பிதாவின் வீட்டில் இருந்து ரூ.21 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் மேற்குவங்காளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நடிகை அர்பிதாவின் வீட்டில் இரண்டாவது நாளாக இன்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

    இதுஒருபுறமிருக்க தீவிர விசாரணைக்குப் பிறகு மந்திரி பார்த்தா சட்டர்ஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். அவரை கொல்கத்தா பேங்ஷால் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர். இதேபோல் விசாரணை வளையத்தில் உள்ள அர்பிதாவையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மலை போல் குவிக்கப்பட்டிருந்த ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டு கட்டுக்கள்.
    • வங்கி ஊழியர்கள் உதவியுடன் ரு.20 கோடி பணத்தை எண்ணிய அதிகாரிகள்.

    திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்து வரும் மேற்கு வங்காள மாநிலத்தில் பள்ளி சேவை ஆணையம் மற்றும் தொடக்கக் கல்வி வாரியம் ஆகியவற்றில் ஆள் சேர்ப்பில் பெரும் அளவு மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது. திரிணாமுல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆரம்ப, தொடக்க மற்றும் இடைநிலை பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்தில் பெரும் ஊழல் நடைபெற்றதாக அம்மாநில பாஜகவும் குற்றம் சாட்டி இருந்தது. 


    இந்நிலையில் அம்மாநிலத்தின் தற்போதைய வர்த்தகத்துறை அமைச்சரும், முன்னாள் கல்வி அமைச்சருமான பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளரும், அவரது நெருங்கிய கூட்டாளியான அர்பிதா முகர்ஜி என்பவரது குடியிருப்பு வளாகத்தில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது அர்பிதா வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.500 மற்றும் 2000 ரூபாய் பணக்கட்டுக்களை அவர்கள் பறிமுதல் செய்தனர். அந்த பணம் மலை போல் குவிக்கப்பட்டிருந்தது. அவற்றை எண்ணுவதற்கு வங்கி ஊழியர்கள் உதவி நாடப்பட்டது. பணம் எண்ணும் எந்திரங்கள் மூலம் அந்த பணம் மொத்தம் 20 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டது. 


    அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆவணங்கள், பதிவுகள், சந்தேகத்திற்குரிய நிறுவனங்களின் விவரங்கள், மின்னணு சாதனங்கள், வெளிநாட்டு நாணயம் மற்றும் தங்கம் உள்ளிட்டவற்றையும் கைப்பற்றியதாக தகவல்கள் வெளியாகின.  அமைச்சர்கள் பார்த்தா சாட்டர்ஜி, பரேஷ் அதிகாரி ஆகியோரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

    பெரும் அளவில் லஞ்சப் பணம் கைப்பற்றப்பட்டது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அதன் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியது இந்த விசாரணையில் தொடர்புடையவர்களே என்றும் அவர் குறிப்பிடடுள்ளார்.

    • மார்கரெட் ஆல்வா தேர்வில் தங்களை கலந்து ஆலோசிக்கவில்லை என திரிணாமுல் புகார்
    • குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிக்க திரிணாமுல் முடிவு

    கொல்கத்தா:

    குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியின் வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.

    இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மேற்கு வங்காள மாநில ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் சார்பில், காங்கிரஸ் கட்சியின் மார்கரெட் ஆல்வா களம் இறக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் மார்கரெட் ஆல்வா போட்டியிடுவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது. வேட்பாளர் தேர்வு தொடர்பாக தங்களை யாரும் கலந்து ஆலோசிக்கவில்லை என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. இதனால் இந்த தேர்தலில் பங்கேற்க போவதில்லை என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.

    திரிணாமுல் காங்கிரசின் முடிவு எதிர்க்கட்சிகளுக்கும் பின்னடைவாக கருதப்படும் நிலையில், இந்த தேர்தலில் பாஜகவுடன் மம்தா பானர்ஜி ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளதாவது:

    இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை ஏற்படும் போது அதை ஊக்கப்படுத்த வேண்டியது காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு. ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளை வழி நடத்த மம்தாபானர்ஜி விரும்பினார், அது நடக்காது என்று தெரிந்த உடன் ஓடிவிட்டார். அனால் காங்கிரஸ் பின்வாங்க வில்லை.

    குடியரசுத் தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு முதல்வர் மம்தா உதவவில்லை. அவர் பாஜகவுடன் எந்த மோதலையும் விரும்பவில்லை. அதனால்தான் தற்போது மார்கரெட் ஆல்வாவுக்கு வாக்களிக்காமல் புறக்கணிக்க விரும்புகிறார்கள்.

    பாஜகவிற்கும் திரிணாமுல் இடையே ஒரு புரிதல் உள்ளது. ஜெகதீப் தன்கர், அடிக்கடி மம்தா பானர்ஜியை சந்தித்தார். டார்ஜிலிங்கில் மம்தா பானர்ஜி மற்றும் அசாம் முதல்வர் சர்மாவை அவர் சந்தித்த பிறகே குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதாவது அவர்களிடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மேற்கு வங்காள தேர்தலின்போது பாஜக இந்துத்துவா அரசியலைத் திணிக்க முயன்றது.
    • காளி பக்தையாக காளியை எப்படி வழிபட வேண்டும் என்று எனக்குத் தெரியும்.

    கொல்கத்தா:

    ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை வெளியிட்ட'காளி' என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா காளி குறித்து கூறிய கருத்தும் புயலை கிளப்பியது.

    காளி தேவி இறைச்சி உண்ணும் மற்றும் மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வம் என்று கூறிய மஹுவா மொய்த்ரா, ஒவ்வொரு நபரும் தங்கள் சொந்த வழியில் கடவுளை வழிபட உரிமை உண்டு என்று தெரிவித்தார். மஹுவா மொய்த்ராவின் இந்த கருத்து கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் லீனா மணிமேகலையின் காளி போஸ்டருக்கு ஆதரிப்பதாக கூறி, பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். அவரது சொந்த கட்சியான திரிணாமுல் காங்கிரசும் கண்டனம் தெரிவித்தது.

    மத உணர்வுகளை புண்படுத்தியதாக, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ஜிதேன் சாட்டர்ஜி, காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தின் போபால் நகரிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பாஜகவின் விமர்சனங்களுக்கு மஹுவா மொய்த்ரா பதில் அளித்துள்ளார். பாஜக இந்து தெய்வங்களின் பாதுகாவலர் அல்ல, வங்காளிகளுக்கு தெய்வத்தை எப்படி வழிபட வேண்டும் என்று கற்பிக்கக் கூடாது, என்றார்.

    "கடந்த 2,000 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள பல்வேறு வழிபாட்டு முறைகளைக் கொண்ட நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் மீது, வட இந்தியாவில் தெய்வங்களை வழிபடும் முறைகளின் அடிப்படையில் பாஜக தனது சொந்த கருத்துக்களை திணிக்க முடியாது. அந்த முயற்சியை பாஜக நிறுத்த வேண்டும். இந்த விவகாரம் குறித்து பேசியதன் மூலம் நான் ஒரு முதிர்ந்த அரசியல்வாதியாக செயல்பட்டிருக்கிறேன்.

    ராமரோ, அனுமனோ பாஜகவைச் சேர்ந்தவர்கள் அல்ல. அந்த கட்சி இந்து தர்மத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறதா? மேற்கு வங்காள தேர்தலின்போது பாஜக இந்துத்துவா அரசியலைத் திணிக்க முயன்றது. ஆனால் வாக்காளர்களால் புறக்கணிக்கப்பட்டது. காளியை எப்படி வழிபட வேண்டும் என்பதை பாஜக கற்றுக் கொடுக்கக் கூடாது. காளி பக்தையாக காளியை எப்படி வழிபட வேண்டும் என்று எனக்குத் தெரியும். கடந்த 2,000 ஆண்டுகளாக இதே முறையில் அம்மனை வழிபட்டு வருகிறோம்" என்றும் மொய்த்ரா கூறினார்.

    • காளி தேவியை மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வமாக கற்பனை செய்வதற்கு எனக்கு முழு உரிமையும் இருக்கிறது.
    • மஹுவா மொய்த்ரா எம்.பி.க்கு அவரது சொந்த கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.

    கொல்கத்தா:

    ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை வெளியிட்ட'காளி' என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த போஸ்டரில் இந்து கடவுளான காளி வேடமணிந்த பெண் ஒருவர் வாயில் சிகரெட் வைத்துக்கொண்டு, கையில் ஓரினச்சேர்க்கையாளர்களின் கொடியைப் பிடித்திருப்பதாக இருந்தது. இதற்கு, பல்வேறு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். லீனா மணிமேகலையைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். அவருக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா கூறிய கருத்து, பிரச்சனையை மேலும் தீவிரமாக்கி உள்ளது.

    கொல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மஹுவா மொய்த்ரா பேசியதாவது:

    காளி தேவியை இறைச்சி உண்ணும் மற்றும் மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வமாக கற்பனை செய்வதற்கு எனக்கு முழு உரிமையும் இருக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு நபரும் தங்கள் சொந்த வழியில் கடவுளை வழிபட உரிமை உண்டு. உதாரணமாக, நீங்கள் சிக்கிம் சென்றால் அங்கே கடவுளுக்கு மதுவைப் பிரசாதமாக படைக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்துக்குச் சென்று, அங்கு மதுவை படைத்தீர்கள் என்றால், அவர்கள் அதை தெய்வநிந்தனை என்று கூறுவார்கள.

    என்னைப் பொறுத்தவரை, காளி தேவி இறைச்சி உண்ணும் மற்றும் மதுவை ஏற்றுக்கொள்ளும் தெய்வம். நீங்கள் தாராபித் (மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள ஒரு பெரிய சக்தி பீடம்) சென்றால், சாதுக்கள் புகைபிடிப்பதைக் காணலாம். அதுதான் அங்கு வழிபடும் முறை. நான் காளியை வழிபடும் இந்துவாக இருப்பதால், காளியை அப்படிக் கற்பனை செய்ய உரிமை உண்டு; அது என் சுதந்திரம்.

    உங்கள் கடவுளை சைவமாக வழிபட உங்களுக்கு எவ்வளவு சுதந்திரம் இருக்கிறதோ, அதே அளவுக்கு எனக்கும் சுதந்திரம் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.



    மஹுவா மொய்த்ராவின் இந்த கருத்து கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் லீனா மணிமேகலையின் காளி போஸ்டருக்கு ஆதரிப்பதாக கூறி, பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்துக் கடவுள்களை அவமதிப்பது மேற்கு வங்காள ஆளும் கட்சியின் (திரிணாமுல் காங்கிரஸ்) அதிகாரப்பூர்வ நிலைப்பாடா? என்றும் பாஜக கேள்வி எழுப்பியது.

    இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் உடனடியாக விளக்கம் அளித்ததுடன், மஹுவா மொய்த்ராவுக்கு கண்டனமும் தெரிவித்தது. "மஹுவா மொய்த்ரா கூறிய கருத்து அவரது தனிப்பட்ட கருத்து. அதற்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று திரிணாமுல் காங்கிரஸ் பதிவிட்டது.

    இதற்கிடையே தனது கருத்து குறித்து தெளிவுபடுத்திய மஹுவா மொய்த்ரா, தான் எந்தப் படத்திற்கோ அல்லது போஸ்டருக்கோ ஆதரவளிக்கவில்லை என்றும், புகைபிடிக்கும் வார்த்தையை குறிப்பிடவில்லை என்றும் கூறினார்.

    மத உணர்வுகளை புண்படுத்தியதாக, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ஜிதேன் சாட்டர்ஜி, காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பாஜக ஆளும் மத்திய பிரதேசத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போபால் நகரில் உள்ள டீ விற்பனையாளர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

    • சேவையை மாநில போக்குவரத்து அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம் சந்திப்பு பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்தார்.
    • மேற்கு வங்க அரசு சிலிகுரியில் இருந்து பங்களாதேஷுக்கு பேருந்து சேவையையும் திட்டமிடப்பட்டுள்ளது.

    வட மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரி மற்றும் நேபாளத்தின் காத்மாண்டு இடையே பேருந்து சேவை கொடியசைத்து தொடங்கப்பட்டது. வாழ்வாதாரத்திற்காக சிலிகுரி, டார்ஜிலிங் மற்றும் அண்டை நாடான சிக்கிம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான நேபாள மக்களுக்கு இந்த சேவை பயனளிக்கும் என்றும் இது இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்தச் சேவையை மாநில போக்குவரத்து அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம், சந்திப்பு பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்தார்.

    வடக்கு வங்காள மாநில போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான இந்த பேருந்து சேவை தனியார் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. டிக்கெட்டுகளின் விலை ரூ.1,500 மற்றும் நகரத்தில் உள்ள டென்சிங் நோர்கே பஸ் டெர்மினஸில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.

    40 இருக்கைகள் கொண்ட இந்த பேருந்து சிலிகுரியில் இருந்து திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் என்றும் மாலை 3 மணிக்கு புறப்படும் என்றும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

    மேலும், மேற்கு வங்க அரசு சிலிகுரியில் இருந்து பங்களாதேஷுக்கு பேருந்து சேவையையும் திட்டமிட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

    • பாஜக சமூகவலைதளங்களை தவறாக பயன்படுத்துகிறது.
    • நூபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய பேச்சு எனது நாட்டை பிளவுபடுத்துகிறது.

    கொல்கத்தா :

    நூபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்து பாஜகவின் பிளவுப்படுத்தும் கொள்கையை மேலும் மேம்படுத்துவதற்கான சதி என மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சுமத்தினார். கொல்கத்தாவில் தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் பேசினார்.அதில் அவர் கூறியதாவது,

    "நூபுர் சர்மா சர்ச்சை முற்றிலும் ஒரு சதி...வெறுப்பு மற்றும் பாஜகவின் பிளவுபடுத்தும் கொள்கை. நூபுர் சர்மா ஏன் கைது செய்யப்படவில்லை. நூபுர் சர்மாவை கைது செய்யுங்கள் ஏனென்றால் உங்களால் நெருப்புடன் விளையாட முடியாது.

    நமது நாட்டில் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். நீங்கள் மக்களை நம்பவில்லை என்றால், உங்களை எப்படி நம்புவீர்கள்? நான் இந்துக்கள், முஸ்லிம்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்கள் என அனைத்து சமூகத்தினருக்காகவும் இருக்கிறேன்.

    பாஜக சமூகவலைதளங்களை தவறாக பயன்படுத்துகிறது. அவர்கள் போலியான செய்திகள் மற்றும் வகுப்புவாத வீடியோக்களை பரப்பி விட பணம் கொடுக்கிறார்கள். அவ்வாறு பணம் பெறும் பல ஊடகங்கள் உள்ளன. நூபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய பேச்சு எனது நாட்டை பிளவுபடுத்துகிறது மற்றும் எங்கள் நாட்டின் நற்பெயரை பாதிக்கிறது.

    ஒரு குறிப்பிட்ட கட்சிக்காக எனது நாடு மற்றவர்களுக்கு பணிந்து செல்வதை என்னால் பார்க்க முடியவில்லை. மேலும், சில நாடுகள் நமது பொருட்களை புறக்கணித்துள்ளன. இது வெட்கக்கேடான விஷயம்"

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பலமுறை காவல்துறை வலியுறுத்தியும் நூபுர் சர்மா விசாரணைக்கு ஆஜராகவில்லை.
    • அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற உச்சநீதிமன்றத்தில் நூபுர் சர்மா மனு.

    கொல்கத்தா:

    தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய டெல்லி பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா இறைதூதர் முகமது நபி பற்றி தெரிவித்த கருத்துக்கள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. கட்சி பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்ட நிலையில், நூபுர் சர்மா மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு மாநிலங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஆம்ஹெர்ஸ்ட் மற்றும் நர்கெல்டங்கா காவல் நிலையங்களில் நூபுர் சர்மா மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். அவருக்கு பலமுறை காவல்துறை சார்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் விசாரணைக்கு ஆஜராகாததால், அவருக்கு எதிராக கொல்கத்தா காவல்துறை சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    குற்ற வழக்கில் தேடப்படும் நபர், வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் காவல்துறையினரால் சுற்றறிக்கை வெளியிடுவது வழக்கம். அதன் அடிப்படையில் நூபுர் சர்மாவுக்கு எதிராக கொல்கத்தா காவல்துறை லுக் அவுட்  சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

    முன்னதாக தம் மீது பல்வேறு மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் டெல்லிக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று நூபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் தேவை.
    • இந்தியாவில் சகிப்புத்தன்மை கொண்ட ஒரு உள்ளார்ந்த கலாச்சாரம் உள்ளது.

    கொல்கத்தா :

    நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் அமைந்துள்ள அமர்த்தியா சென் ஆய்வு மையத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது அவர் பேசியதாவது;-

    "யாரேனும் என்னிடம் நீங்கள் பயப்படுகிறீர்களா என இப்போது கேட்டால், அதற்கு துளி கூட யோசிக்காமல் ஆமாம் என சொல்வேன். நான் அச்சம் கொள்வதற்கு காரணம் உள்ளது. நாட்டின் தற்போதைய நிலை தான் நான் அச்சம் கொண்டுள்ளதற்கு காரணம். நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். எனக்கு அது போதும்.

    வரலாற்று ரீதியாக ஒன்றுபட்ட நம் நாட்டில் பிளவு ஏற்படுவதை நான் விரும்பவில்லை. இந்தியாவிற்கு தற்போது ஒற்றுமை மிகவும் தேவை. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். வேதங்கள் பற்றிய பொருள் மற்றும் கருத்து விளக்கம் அடங்கிய உபநிடதங்களை உலகிற்கு தெரிய செய்தவர் ஒரு இஸ்லாமிய இளவரசர் தான்.

    முகலாய மன்னர் ஷாஜகானின் மகன் தாரா ஷூகோ, சமஸ்கிருதம் கற்று உபநிடதங்களை பாரசீக மொழியில் மொழிபெயர்த்தார். இந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் தேவை. இந்தியாவில் சகிப்புத்தன்மை கொண்ட ஒரு உள்ளார்ந்த கலாச்சாரம் உள்ளது. இந்தியாவில் பல யுகங்களாக யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பார்சிகள் ஒருங்கிணைந்து வாழ்கின்றனர். இந்த பிணைப்பை இந்தியாவின் சகிப்புத்தன்மை கலாச்சாரத்திற்கு உதாரணமாக சொல்ல முடியும்."

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • எப்போதுமே கருத்தொற்றுமையுடன் வேட்பாளரை நிறுத்துவது நல்லது.
    • எதிர்க்கட்சிகளுடன் பா.ஜனதா ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் ஒரு ரதயாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு பா.ஜனதா கூட்டணியின் ஓட்டு பலம் அதிகரித்துள்ளது. அதனால், ஜனாதிபதி தேர்தலில் அக்கூட்டணியின் வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றிபெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

    அவரது பெயரை அறிவிப்பதற்கு முன்பு, எதிர்க்கட்சிகளுடன் பா.ஜனதா ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், பொதுநலனை கருதி, அவரை ஆதரிப்பது பற்றி பரிசீலித்து இருப்போம்.

    எப்போதுமே கருத்தொற்றுமையுடன் வேட்பாளரை நிறுத்துவது நல்லது. ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் எடுக்கும் முடிவை நான் பின்பற்றுவேன் என்று அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொடூர கொலையால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க ராஜஸ்தான் முழுவதும் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • சட்டம் நடவடிக்கை எடுப்பதால், அனைவரையும் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று மம்தா தெரிவித்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை நடத்தி வந்த கண்கையா லால் கடைக்கு வந்த இரண்டு பேர் அவரிடம் ஆடை தைக்க வேண்டும் என்று பேசியபடி வலுக்கட்டாயமாக அவரை இழுத்துச்சென்று, தலையை துண்டித்தனர்.

    சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க. முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவிற்கு ஆதரவாக கண்கையா லால் கருத்து தெரிவித்ததால் படுகொலை செய்ததாகவும் அவர்கள் தெரிவிருந்தனர். இது குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்டதால் உதய்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து நிகழ்ந்த வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் 24 மணி நேரத்திற்கு அப்பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டது. ராஜ்சமந்த் மாவட்டம் பீம் பகுதியில் இருந்து இரண்டு குற்றவாளிகள் கவுஸ் முகமது மற்றும் ரியாஸ் அகமது பிடிபட்டதாகவும், காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த கொடூர கொலையால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க ராஜஸ்தான் முழுவதும் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அப்போது, வன்முறை மற்றும் தீவிரவாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், " எதுவாக இருந்தாலும் வன்முறையும், பயங்கரவாதமும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. உதய்பூரில் நடந்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன். சட்டம் நடவடிக்கை எடுப்பதால், அனைவரையும் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

    • சிவசேனா செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத்தை நாளை நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
    • இதுதான் ஜனநாயகத்தை நடத்துவதற்கான வழியா என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.

    கொல்கத்தா:

    மகாராஷ்டிரா மாநில எம்.பி.யும், சிவசேனா செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத், நிலமோசடி வழக்கில் விசாரணைக்கு நாளை நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

    இந்நிலையில், உண்மையைப் பேசுபவர்களுக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துகிறது என மம்தா பானர்ஜி தொிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் கூறியதாவது:

    இன்று மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவா் சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத் துறையால் சம்மன் அனுப்பபட்டுள்ளது.

    பா.ஜ.க. ஏன் சாதாரண மக்களை இப்படி துன்புறுத்துகிறது. இதுதான் ஜனநாயகத்தை நடத்துவதற்கான வழியா?

    பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு உண்மையைப் பேசும் மக்களுக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை போன்ற மத்திய அமைப்புகளை பயன்படுத்துகிறது.

    இதனால் கடந்த சில ஆண்டுகளில் தொழிலதிபா்கள் உள்ளிட்ட பல லட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனா். இதனை பாஸ்போா்ட் மற்றும் விசா அலுவலகங்களில் இதை சரிபாா்க்கலாம் என தொிவித்தாா்.

    ×