search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்-  பாஜகவுடன் மம்தா பானர்ஜி ரகசிய ஒப்பந்தம் என காங்கிரஸ் குற்றச்சாட்டு
    X

    மம்தா பானர்ஜி    ஆதிர் ரஞ்சன் சவுத்ரி

    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்- பாஜகவுடன் மம்தா பானர்ஜி ரகசிய ஒப்பந்தம் என காங்கிரஸ் குற்றச்சாட்டு

    • மார்கரெட் ஆல்வா தேர்வில் தங்களை கலந்து ஆலோசிக்கவில்லை என திரிணாமுல் புகார்
    • குடியரசு துணைத் தலைவர் தேர்தலை புறக்கணிக்க திரிணாமுல் முடிவு

    கொல்கத்தா:

    குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியின் வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.

    இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மேற்கு வங்காள மாநில ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகளின் சார்பில், காங்கிரஸ் கட்சியின் மார்கரெட் ஆல்வா களம் இறக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் மார்கரெட் ஆல்வா போட்டியிடுவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் அதிருப்தி தெரிவித்துள்ளது. வேட்பாளர் தேர்வு தொடர்பாக தங்களை யாரும் கலந்து ஆலோசிக்கவில்லை என அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. இதனால் இந்த தேர்தலில் பங்கேற்க போவதில்லை என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.

    திரிணாமுல் காங்கிரசின் முடிவு எதிர்க்கட்சிகளுக்கும் பின்னடைவாக கருதப்படும் நிலையில், இந்த தேர்தலில் பாஜகவுடன் மம்தா பானர்ஜி ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.

    இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்காள மாநில காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளதாவது:

    இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை ஏற்படும் போது அதை ஊக்கப்படுத்த வேண்டியது காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு. ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளை வழி நடத்த மம்தாபானர்ஜி விரும்பினார், அது நடக்காது என்று தெரிந்த உடன் ஓடிவிட்டார். அனால் காங்கிரஸ் பின்வாங்க வில்லை.

    குடியரசுத் தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு முதல்வர் மம்தா உதவவில்லை. அவர் பாஜகவுடன் எந்த மோதலையும் விரும்பவில்லை. அதனால்தான் தற்போது மார்கரெட் ஆல்வாவுக்கு வாக்களிக்காமல் புறக்கணிக்க விரும்புகிறார்கள்.

    பாஜகவிற்கும் திரிணாமுல் இடையே ஒரு புரிதல் உள்ளது. ஜெகதீப் தன்கர், அடிக்கடி மம்தா பானர்ஜியை சந்தித்தார். டார்ஜிலிங்கில் மம்தா பானர்ஜி மற்றும் அசாம் முதல்வர் சர்மாவை அவர் சந்தித்த பிறகே குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதாவது அவர்களிடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×