என் மலர்
மேற்கு வங்காளம்
- ஹவாலா மூலமாக வெளிநாடுகளில் பா.ஜனதா பணத்தை பதுக்குகிறது.
- 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வெற்றிபெற விடமாட்டேன்.
கொல்கத்தா :
கொல்கத்தாவில், திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அணி பொதுக்கூட்டம் நடந்தது. அதில், அக்கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி பங்கேற்றார். அவர் பேசியதாவது:-
நான், பிர்ஹத் ஹக்கிம், அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீது பா.ஜனதா பொய் பிரசாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஒவ்வொருவரையும் 'திருடன்' என்று பா.ஜனதா முத்திரை குத்துகிறது.
நாங்கள் திருடர்கள், அவர்கள் புனிதமானவர்கள் என்பதுபோல் பிரசாரம் செய்கிறது. நான் மட்டும் அரசியலில் இல்லாமல் இருந்தால், பா.ஜனதாவினரின் நாக்கை அறுத்திருப்பேன். திரிணாமுல் காங்கிரசிடம் உள்ள பணத்தை பற்றி பா.ஜனதாவினர் பேசுகிறார்கள். அப்படியானால், மராட்டிய மாடல் பாணியில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை கவிழ்க்க பா.ஜனதாவுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?
ஹவாலா மூலமாக வெளிநாடுகளில் பா.ஜனதா பணத்தை பதுக்குகிறது. விசாரணை அமைப்புகளையும், கருப்பு பணத்தையும் பயனபடுத்தி, மாநில அரசுகளை கவிழ்க்கிறது. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வெற்றிபெற விடமாட்டேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கண்காட்சி அரங்குகள், உணவகம், சிறிய கூட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
- பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் சோதனை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 1944-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் டம்பர்டன் கப்பல் தளத்தில் உருவாக்கப்பட்ட நீராவி படகான பி.எஸ்.போபால், கொல்கத்தா துறைமுகத்தால் பயிற்சி கப்பலாக பயன்படுத்தப்பட்டு வந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு பயிற்சி நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு படகு இயக்கம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் பாரம்பரியமிக்க இந்த படகை புதுப்பித்து, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர கொல்கத்தா துறைமுகம் முடிவு செய்தது. இதையடுத்து மோசமாக சிதிலம் அடைந்த நிலையில் இருக்கும் இந்த படகை புதுப்பித்து நீண்ட கால ஒப்பந்தத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக கொல்கத்தா துறைமுக தலைவர் வினித் குமார் தெரிவித்தார்.

இதற்காக வெளிப்படையான ஏல முறையில் நீண்ட கால ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஒப்பந்தத்தின் படி, பி.எஸ்.போபால் படகில் கண்காட்சி அரங்குகள், உணவகம், சிறிய கூட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. அதன் அடிப்படை அமைப்பை மாற்றாமல், 1944-ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்ட போது இருந்த உணர்வை பயணிகளுக்கு வழங்கும் வகையில் படகு நகர்வதற்கு ஏதுவாக நவீன என்ஜின்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளன.
படகை புதுப்பிக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணிகள் சோதனை முயற்சியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுப்பிக்கப்பட்ட பி.எஸ்.போபால் படகை அடுத்த மாத துவக்கத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்திய துணை கண்டத்தில் இது முதன் முறையாக மேற்கொள்ளப்படுகிறது என்றும் வினித் குமார் தெரிவித்துள்ளார்.
- துர்கா பூஜைக்காக 3-வது ஆண்டாக நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.
- இந்த ஆண்டு அனைத்து துர்கா பூஜை குழுக்களும் ரூ.60 ஆயிரம் நிதி உதவி பெறுவார்கள்.
கொல்கத்தா:
துர்கா பூஜையை முன்னிட்டு கடந்த ஆண்டு அனைத்து பூஜை குழுவினருக்கும் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. அதற்கு முந்தின ஆண்டும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது.
கொரோனா பெருந்தொற்றால் ஏற்படும் கூடுதல் செலவினங்களுக்காக இந்த தொகையை மம்தா பானர்ஜி ஒதுக்கீடு செய்துள்ளார். இலவச உரிமங்கள் மற்றும் 50 சதவீத மின் கட்டணத்தில் தள்ளுபடி உள்ளிட்டவையும் கடந்த ஆண்டு சலுகைகளாக அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 30-ம் தேதி முதல் அக்டோபர் 10-ம் தேதி வரை அரசு விடுமுறை நாட்களாக இருக்கும்.
3-வது ஆண்டாக நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, இந்த ஆண்டு அனைத்து துர்கா பூஜை குழுக்களும் ரூ.60 ஆயிரம் நிதி உதவி பெறுவார்கள் என அறிவித்துள்ளார்.
- மேற்கு வங்காளம் மாநிலம் அசன்சோல் பகுதியில் இன்று இடைத்தேர்தல் நடந்தது.
- அப்போது பா.ஜ.க. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் வெடித்தது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளம் மாநிலம் அசன்சோல் பகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.
அசன்சோல் நகராட்சியில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வாக்குச்சாவடிக்குள் பா.ஜ.க. ஆதரவாளர்களும், திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர்களும் மோதிக்கொண்டனர்.
வாக்காளர்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் திசைதிருப்ப முயற்சி செய்வதாகவும், தங்களை தாக்கியதாகவும் பா.ஜ.க. எம்.எல்.ஏ லட்சுமண் குற்றம் சாட்டினார்.
இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் சிலரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
- மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமான அனுப்ரதா மண்டல், அவரது தனி உதவியாளராகவும் இருந்தார்.
- சி.பி.ஐ. 10 முறை சம்மன் அனுப்பியும், உடல் நிலையை காரணம் காட்டி அனுப்ரதா மண்டல் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிர்பூம் மாவட்ட தலைவராக இருப்பவர் அனுப்ரதா மண்டல்.
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு மிகவும் நெருக்கமான அனுப்ரதா மண்டல், அவரது தனி உதவியாளராகவும் இருந்தார்.
இவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு கால்நடை கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணைக்கு ஆஜராகுமாறு அனுப்ரதா மண்டலுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. 10 முறை சம்மன் அனுப்பியும், உடல் நிலையை காரணம் காட்டி அனுப்ரதா மண்டல் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்த நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று காலை பிர்பூம் மாவட்டத்தில் உள்ள அனுப்ரதா மண்டல் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவரை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.
அனுப்ரதா மண்டல் வீட்டுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் வந்த தகவல் அறிந்ததும், அங்கு ஏராளமான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், அங்கிருந்து அனுப்ரதா மண்டலை சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் சுமார் 2 மணி நேரமாக விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்கு பின்னர் அவர் அசன்சோல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது.
மேற்கு வங்காளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஆசிரியர் வேலை நியமனத்தில் நடந்த ஊழல் தொடர்பாக மேற்கு வங்க மந்திரி பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டார்.
இந்த பரபரப்பு ஓயும் முன்பு இன்று முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் உதவியாளர் அனுப்ரதா மண்டல் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் மேற்கு வங்காள அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.
- உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி.
மேற்கு வங்காள மாநிலம் பீர்பூம் மாவட்ட மல்லர்பூர் காவல் நிலையப் பகுதியில் ஆட்டோ மீது பேருந்து ஒன்று நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்தனர்.
இந்த கோர விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் நடந்த ஒரு கோர விபத்தினால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் வேதனை அடைகிறேன். காயமடைந்தவர்கள் நலம் பெற பிரார்த்திக்கிறேன என்று தமது டுவிட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 ரூபாயும் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்றும் மோடி அறிவித்தார்.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, மேற்கு வங்காள மாநிலம் கூச் பெஹாரில் உள்ள ஜல்பேஷ் கோயிலுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பிக்கப் வேன்னில் மின்சாரம் தாக்கி 10 பேர் உயிரிழந்தனர். அந்த வேனில் இருந்த 27 பேரில் 16 பேர் சிகிச்சைக்காக ஜல்பைகுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
- மம்தா பானர்ஜி புதுமுகங்கள் சிலருக்கு மந்திரி பதவி கொடுக்க திட்டமிட்டு உள்ளார்.
- மேற்கு வங்காள மாநிலத்தில் புதிதாக 7 மாவட்டங்கள் உருவாக்க அரசு முடிவு எடுத்துள்ளது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
இக்கட்சியை சேர்ந்த தொழில் துறை மந்திரி பார்தா சட்டர்ஜி ஆசிரியர் நியமன மோசடி தொடர்பாக கடந்த 23-ந்தேதி கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
மேலும் மந்திரி சபையில் இடம் பெற்று இருந்த திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சுப்ரதா முகர்ஜி, மற்றும் சதன் பாண்டே ஆகியோர் சமீபத்தில் மரணம் அடைந்துவிட்டனர்.
முறைகேடு தொடர்பாக கைதாகி உள்ள பார்த்தா சட்டர்ஜியிடம் 4 முக்கிய துறைகள் இருந்தது. அதே போல் மரணம் அடைந்த 2 மந்திரிகளும் முக்கிய துறைகளை தங்கள் வசம் வைத்து இருந்தனர். சில மந்திரிகளின் செயல்பாடுகளும் அவருக்கு திருப்தி அளிப்பதாக இல்லை. இதனால் 4 பேருக்கு அவர் கல்தா கொடுக்க திட்டமிட்டு உள்ளார் .
இதையடுத்து மந்திரி சபையை மாற்றி அமைக்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முடிவு செய்தார். புதுமுகங்கள் சிலருக்கு அவர் மந்திரி பதவி கொடுக்க திட்டமிட்டு உள்ளார்.
அதன்படி நாளை (3-ந் தேதி) மேற்கு வங்காளத்தில் மந்திரி சபை மாற்றி அமைக்கப்படுகிறது.
இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-
மந்திரி சபையில் தலைமை இல்லாத பல்வேறு துறைகள் உள்ளன. அர்ப்பணிப்பு இல்லாத மந்திரிகள் கொண்ட துறைகளும் உள்ளது. அனைத்து துறைகளையும் என்னால் மட்டும் சரியாக கவனிக்க முடியாது.
அதனால் அதன் பணிகளை பிரித்து கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி நாளை (புதன்கிழமை) மந்திரி சபை மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதில் புதிதாக 4 முதல் 5 பேர் வரை இடம் பெறுவார்கள்.
மேற்கு வங்காள மாநிலத்தில் புதிதாக 7 மாவட்டங்கள் உருவாக்க அரசு முடிவு எடுத்துள்ளது. இதனால் மாநிலத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 30 ஆக உயருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில் மேற்கு வங்காள மந்திரி பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
- மந்திரியின் உதவியாளரான நடிகையின் வீட்டில் ரூ.50 கோடி அளவுக்கு கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநில வணிகம் மற்றும் தொழில் துறை மந்திரியாக இருக்கும் பார்த்தா சட்டர்ஜி கடந்த 2014-ம் ஆண்டு வரை கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டார். அப்போது அவர் ஆசிரியர் பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு எழுந்ததால் அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. பார்த்தா சட்டர்ஜி, அவரது உதவியாளரும் நடிகையுமான அர்பிதா முகர்ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 22-ந்தேதி மந்திரி பார்த்தா சட்டர்ஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அர்பிதா முகர்ஜி வீட்டிலும் அடுத்தடுத்து சோதனை நடத்தினர். அர்பிதாவின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் 50 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 6 கிலோவுக்கு அதிகமான தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அர்பிதா முகர்ஜி வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணமும், கிலோ கணக்கில் தங்கமும் கைப்பற்றப்பட்டது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அமலாக்கத்துறையினர் அர்பிதா முகர்ஜி கைது செய்யப்பட்ட நாளில் இருந்து, கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் இருந்த 4 கார்களைக் காணவில்லை. இவ்வழக்கு தொடர்புடைய மேலும் கோடிக்கணக்கான பணம் அந்த கார்களில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆடி ஏ4, ஹோண்டா சிட்டி, ஹோண்டா சிஆர்வி மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய கார்களை அமலாக்கத்துறையினர் தேடி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. அர்பிதா முகர்ஜி கைது செய்யப்பட்டபோது, ஒரு வெள்ளை நிற மெர்சிடிஸ் காரை மட்டும் அமலாக்கத்துறை கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது.
காணாமல் போன கார்களை தேடும் பணி நடைபெறுகிறது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தியும் அந்த கார்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் சிக்கிய அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை பதவியில் இருந்தும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பார்த்தா சாட்டர்ஜி, அர்பிதா முகர்ஜி ஆகிய இருவரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் காவலில் வைத்து விசாரணை நடத்திவருகின்றனர். ஆகஸ்ட் 3ம் தேதி வரை அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
- 2016-ம் ஆண்டு பெங்காலி நடிகர் மூலம் மந்திரி பார்த்தா சட்டர்ஜி எனக்கு அறிமுகமானார்.
- எனது வீட்டையும், இன்னொரு பெண்ணின் வீட்டையும் மந்திரி பார்த்தா சட்டர்ஜி மினி வங்கி போல பயன்படுத்தி வந்தார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநில வணிகம் மற்றும் தொழில் துறை மந்திரியாக இருக்கும் பார்த்தா சட்டர்ஜி கடந்த 2014-ம் ஆண்டு வரை கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டார்.
அப்போது அவர் ஆசிரியர் பணி நியமன முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் குற்றச்சாட்டு எழுந்ததால் அமலாக்கத்துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறது.
கடந்த 22-ந்தேதி மந்திரி பார்த்தா சட்டர்ஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அதேபோல் தெற்கு கொல்கத்தாவில் அவரது உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜி வீட்டிலும் சோதனை நடத்தினர்.
அங்கு ரூ.2 ஆயிரம், ரூ.500 என ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக மலைபோல குவிந்து கிடந்தது. அர்பிதா முகர்ஜி வீட்டில் ரூ.20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்கிடையே மந்திரி பார்த்தா சட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜியை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.
இதையடுத்து கொல்கத்தா அமலாக்கத்துறை அலுவலகத்தில் மந்திரி பார்த்தா சட்டர்ஜி, அர்பிதா முகர்ஜி ஆகியோரிடம் நேற்று முன் தினம் விசாரணையை தொடங்கினர்.
இந்த சிலையில் நடிகை அர்பிதா முகர்ஜியின் இன்னொரு வீட்டில் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். கொல்கத்தாவில் பெல்காரியா பகுதியில் உள்ள அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான வீட்டை அதிகாரிகள் திறந்து ஒவ்வொரு அறையாக சோதனை செய்தனர்.
அங்கும் கட்டுக்கட்டாக பணம் குவிந்து கிடந்தது. ஏற்கனவே ரூ.20 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வீட்டில் இருந்தது போலவே இந்த வீட்டிலும் 2000, 500 ரூபாய் நோட்டுகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. மேலும் தங்க கட்டிகளும் இந்தது.
இதையடுத்து பணம் எண்ணும் எந்திரங்களை எடுத்து வருமாறு வங்கி அதிகாரிகளை கேட்டுக்கொண்டனர். பின்னர் வீட்டில் இருந்த பணத்தை எண்ணும் பணி தொடங்கியது. இப்பணி விடிய விடிய நடந்தது.
இதில் சுமார் ரூ.29 கோடி இருப்பது தெரிய வந்தது. இந்த பணத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 5 கிலோ தங்க நகைகளும் சிக்கியது.
சுமார் 18 மணிநேரம் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ரூ.29 கோடி பணம் 10 பெட்டிகளில் வைக்கப்பட்டன. அந்த பெட்டிகளுடன் இன்று அதிகாலை அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.
தங்க நகைகளும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. ஏற்கனவே நடந்த சோதனையில் ரூ.21 கோடி சிக்கியபோது அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் தற்போது மேலும் ரூ.29 கோடி பணம் குவிக்கப்பட்டு இருப்பதை கண்டு திகைத்துவிட்டனர்.
அர்பிதா முகர்ஜியின் இரண்டு வீட்டில் இருந்தும் ரூ.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் அர்பிதா முகர்ஜி வீட்டில் நடந்த சோதனையில் டைரி ஒன்று சிக்கியது. அதில் முக்கிய தகவல்கள் உள்ளது என்றும் அதன் மூலம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப் படுகிறது.
இதற்கிடையே அமலாக்கத்துறை விசாரணையில் நடிகை அர்பிதா முகர்ஜி பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அவர் அதிகாரிகளிடம் கூறியதாவது:-
2016-ம் ஆண்டு பெங்காலி நடிகர் மூலம் மந்திரி பார்த்தா சட்டர்ஜி எனக்கு அறிமுகமானார். எனது வீட்டிலுள்ள அறையில் அவர் பணத்தை பதுக்கி வைத்து இருந்தார். இது அவர் வாங்கிய லஞ்ச பணமாக இருக்கலாம். அவர் நேரடியாக அந்த பணத்தை வாங்கவில்லை. உதவியாளர்கள் மூலம் அந்த பணத்தை அவர் பெற்றார் என கருதுகிறேன்.
சட்ட விரோதமாக பெறப்பட்ட பணத்தை அவர் எனது வீட்டில் வைத்து இருந்தார். அந்த அறையில் எவ்வளவு பணம் இருந்தது என்று எனக்கு தெரியாது. வாரத்துக்கு ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை அவர் எனது வீட்டுக்கு வருவார்.
அவருக்கு நெருக்கமான பெண் ஒருவரும் வருவார். மேலும் மந்திரிக்கு நெருக்கமானவர்களும் வருவார்கள். அந்த அறையில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியாது எனது வீட்டையும், இன்னொரு பெண்ணின் வீட்டையும் மந்திரி பார்த்தா சட்டர்ஜி மினி வங்கி போல பயன்படுத்தி வந்தார்.
பணத்தை எப்போதும் மற்றவர்கள் தான் கொண்டு வருவார்கள். அந்த அறைகளில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது குறித்து மந்திரி ஒரு போதும் என்னிடம் கூறியது இல்லை.
இவ்வாறு அர்பிதா முகர்ஜி வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக தெரிகிறது.
- ஒருவர் குற்றம் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் கோர்ட்டு கண்டிப்பாக தண்டிக்கட்டும்.
- மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
கொல்கத்தா :
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அங்கு அவரது மந்திரிசபையில் இடம்பெற்றிருக்கிற மூத்த மந்திரி பார்த்தா சாட்டர்ஜி ஊழல் வழக்கில் சிக்கி கைதாகி இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
எனது கட்சிக்கு எதிராக தீய நோக்கத்துடன் பிரசாரம் செய்யப்படுகிறது. ஒருவர் குற்றம் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் கோர்ட்டு கண்டிப்பாக தண்டிக்கட்டும். ஆனால் புலனாய்வு அமைப்புகள், அரசியல் கட்சிகளுக்கு அவப்பெயர் ஏற்படுத்த பயன்படுத்தப்படக்கூடாது.
நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தை நடத்துகிறபோது, அதில் தவறுகள் நடக்கலாம். யாராவது ஏதாவது தவறு செய்துவிட்டால் அது சட்டப்படி நிரூபிக்கப்பட்டால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
ஆனால் தீய நோக்கத்துடனான பிரசாரத்தை நான் எதிர்க்கிறேன். மத்தியில் ஆளும் பா.ஜ.க.வால் எதிர்க்கட்சி தலைவர்களுடன், தொழில் அதிபர்களும் விசாரணை அமைப்புகளால் அச்சுறுத்தப்படுகிறார்கள்.
விசாரணை அமைப்புகள் ஒரு சார்பின்றி நடந்து கொண்டால் எனக்கு அதில் பிரச்சினை இல்லை.
இந்த நாட்களில், நீங்கள் ஏதாவது ஒன்றுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் இடைநீக்கம் செய்து விடுகிறார்கள். (நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளில் விவாதம் நடத்தக்கோரி பதாகைகளுடன் போராடிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை இப்படி அவர் சாடினார்.)
2024-ம் ஆண்டு நடக்க உள்ள தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடையும். நான் எண்ணிக்கை பற்றி கூற முடியும். அவர்கள் எங்கிருந்து வருவார்கள் என சொல்ல முடியும். ஆனால், பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதை உறுதியாக சொல்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜனாதிபதி தேர்தலில் யஷ்வந்த் சின்கா தோல்வியைத் தழுவினார்.
- யஷ்வந்த் சின்கா மீண்டும் அரசியலில் ஈடுபடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொல்கத்தா :
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா (வயது 84) தோல்வியைத் தழுவினார்.
இந்த நிலையில் அடுத்து அவர் மீண்டும் அரசியலில் ஈடுபடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு கொல்கத்தாவில் நேற்று அவர் பதில் அளித்தார். அப்போது அவர், " நான் எந்தவொரு அரசியல் கட்சியிலும் சேர மாட்டேன். பொதுவாழ்வில் என்ன பங்களிப்பு செய்வது என்பது பற்றி இனிதான் முடிவு எடுக்க வேண்டும்" என கூறினார்.
"திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமையுடன் தொடர்பு கொண்டீர்களா?" என்ற கேள்விக்கு அவர் "இல்லை" என பதில் அளித்தார்.
மேலும், " யாரும் என்னுடன் பேசவில்லை. நானும் யாருடனும் பேசவில்லை. தனிப்பட்ட முறையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவருடன் பேசினேன்" என குறிப்பிட்டார்.
- மந்திரி பார்த்தா சாட்டர்ஜியிடம் அமலாக்கத்துறையினர் 11 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
- தீவிர விசாரணைக்குப் பிறகு மந்திரி பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத் துறை கைது செய்தது.
கொல்கத்தா:
மேற்கு வங்காள ஆசிரியர் நியமனம் மற்றும் அதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க சி.பி.ஐ.க்கு கோர்ட் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் பணமோசடிகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.
இதற்கிடையே, வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பார்த்தா சாட்டர்ஜி, கல்வித்துறை மந்திரி பரீஷ் சந்திர அதிகாரி தொடர்புடைய இடங்கள் மற்றும் மாநில கல்வித்துறையில் முக்கிய பொறுப்புகளில் இருந்த அதிகாரிகளின் வீடுகள் என 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
அமலாக்கத்துறை நடத்திய சோதனையின்போது, மந்திரி பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய உதவியாளர் அர்பிதா முகர்ஜி வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக ரூ.20 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. 10 சொத்து ஆவணங்கள், ரூ.50 லட்சம் மதிப்பிலான நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு மந்திரி பார்த்தா சட்டர்ஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் மேற்குவங்காளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நான் ஊழலை ஆதரிக்க மாட்டேன் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், நீதித்துறை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. உண்மை மற்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவருவதற்கு ஒரு காலக்கெடு இருக்க வேண்டும். யாரேனும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் தண்டிக்கப்பட வேண்டும். கட்சியும் நடவடிக்கை எடுக்கும். ஆனால், எனக்கு எதிரான தவறான பிரச்சாரத்தை நான் கண்டிக்கிறேன். அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து ரூ. 22 கோடி ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் பேசும் வீடியோவை பா.ஜ.க. பகிர்ந்துள்ளது.
ஆனால் திரிணாமுல் காங்கிரசுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்தப் பெண்ணுடன் கட்சிக்கு எந்தத் தொடர்பும் இல்லை. எனக்கும் அவளைத் தெரியாது. நான் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறேன், யாராவது என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டால் அது என் தவறா? மத்திய புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி திரிணாமுல் காங்கிரசை உடைக்க முடியும் என்று பா.ஜ.க. நினைத்தால் அது தவறு. இந்த விசாரணை என் கட்சியையும் என்னையும் இழிவுபடுத்துவதற்கான ஒரு பொறியா என்பதைப் பார்க்க வேண்டும். நான் ஊழலை ஆதரிக்கவில்லை என தெரிவித்தார்.






