search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நான் ஊழலை ஆதரிக்க மாட்டேன் - மம்தா பானர்ஜி
    X

    மம்தா பானர்ஜி

    நான் ஊழலை ஆதரிக்க மாட்டேன் - மம்தா பானர்ஜி

    • மந்திரி பார்த்தா சாட்டர்ஜியிடம் அமலாக்கத்துறையினர் 11 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
    • தீவிர விசாரணைக்குப் பிறகு மந்திரி பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத் துறை கைது செய்தது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள ஆசிரியர் நியமனம் மற்றும் அதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க சி.பி.ஐ.க்கு கோர்ட் உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் பணமோசடிகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.

    இதற்கிடையே, வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பார்த்தா சாட்டர்ஜி, கல்வித்துறை மந்திரி பரீஷ் சந்திர அதிகாரி தொடர்புடைய இடங்கள் மற்றும் மாநில கல்வித்துறையில் முக்கிய பொறுப்புகளில் இருந்த அதிகாரிகளின் வீடுகள் என 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    அமலாக்கத்துறை நடத்திய சோதனையின்போது, மந்திரி பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய உதவியாளர் அர்பிதா முகர்ஜி வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக ரூ.20 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. 10 சொத்து ஆவணங்கள், ரூ.50 லட்சம் மதிப்பிலான நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு மந்திரி பார்த்தா சட்டர்ஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் மேற்குவங்காளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், நான் ஊழலை ஆதரிக்க மாட்டேன் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், நீதித்துறை மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. உண்மை மற்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவருவதற்கு ஒரு காலக்கெடு இருக்க வேண்டும். யாரேனும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் தண்டிக்கப்பட வேண்டும். கட்சியும் நடவடிக்கை எடுக்கும். ஆனால், எனக்கு எதிரான தவறான பிரச்சாரத்தை நான் கண்டிக்கிறேன். அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து ரூ. 22 கோடி ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் பேசும் வீடியோவை பா.ஜ.க. பகிர்ந்துள்ளது.

    ஆனால் திரிணாமுல் காங்கிரசுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அந்தப் பெண்ணுடன் கட்சிக்கு எந்தத் தொடர்பும் இல்லை. எனக்கும் அவளைத் தெரியாது. நான் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறேன், யாராவது என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டால் அது என் தவறா? மத்திய புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தி திரிணாமுல் காங்கிரசை உடைக்க முடியும் என்று பா.ஜ.க. நினைத்தால் அது தவறு. இந்த விசாரணை என் கட்சியையும் என்னையும் இழிவுபடுத்துவதற்கான ஒரு பொறியா என்பதைப் பார்க்க வேண்டும். நான் ஊழலை ஆதரிக்கவில்லை என தெரிவித்தார்.

    Next Story
    ×