என் மலர்tooltip icon

    தெலுங்கானா

    • பாரத் ரெயில் சேவை தொடக்க விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார்.
    • தெலுங்கானாவில் ரெயில்வே கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அரசு தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து வருவதாக மத்திய ரெயில்வே மந்திரி தெரிவித்தார்.

    ஐதராபாத்:

    செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் நேற்று நடந்த வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்க விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார்.

    பின்னர் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசும்போது, 'பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்திய ரெயில்வேத்துறை உலகத்தரம் வாய்ந்த நிலையங்கள், ரெயில்கள் மற்றும் புதிய பாதைகள், இரட்டிப்பு மற்றும் மின்மயமாக்கல் என புதிய திட்டங்களை முடிப்பதில் விரைவான முன்னேற்றத்துடன் அனைத்து வளர்ச்சியையும் கண்டு வருகிறது' என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

    கடந்த 9 ஆண்டுகளில் இந்திய ரெயில்வேத்துறையை பிரதமர் மோடி மாற்றி விட்டதாக கூறிய அஸ்வினி வைஷ்ணவ், தெலுங்கானாவில் ரெயில்வே கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அரசு தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

    • பிரதமர் மோடியை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
    • வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சுற்றுலாவை இணைக்கும் என பிரதமர் பேச்சு

    ஐதராபாத்:

    தெலுங்கானாவில் ரூ.11,300 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பு உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கான தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து பிரதமர் மோடி இன்று ஐதராபாத் வருகை தந்தார்.

    ஐதராபாத் நகரில் உள்ள பேகம்பட் விமான நிலையத்திற்கு சிறப்பு விமானத்தில் வந்திறங்கிறங்கிய அவரை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருடன் உயரதிகாரிகள், பிற முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    இதன்பின்னர் பிரதமர் மோடி செகந்திராபாத் ரெயில் நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து செகந்திராபாத் -திருப்பதி வந்தே பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நான் தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலானது நம்பிக்கை, நவீனத்துவம், தொழில் நுட்பம் மற்றும் சுற்றுலாவை இணைக்கும் என்றார். மேலும், ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை விமர்சித்தார். மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மாநில அரசு முட்டுக்கட்டை போடுவதாக கூறிய அவர், தெலுங்கானா மக்களுக்காக திட்டமிடப்பட்டுள்ள வளர்ச்சிப் பணிகளில் எந்த இடையூறும் ஏற்படக்கூடாது கேட்டுக்கொண்டார்.

    இந்த வந்தே பாரத் ரெயில் செகந்திராபாத் - திருப்பதி இடையே பயண நேரத்தை கிட்டத்தட்ட மூன்றரை மணிநேரம் குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கர்நாடக முதன்மை மாநகர சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் நரசிம்ம மூர்த்தி மேல்முறையீடு செய்தார்.
    • கர்நாடகா அரசு தரப்பில் வழக்கறிஞர் நியமிக்கப்பட்டதால், விரைவில் ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம்விட வாய்ப்பு உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன.

    பெங்களூர்:

    சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் கர்நாடகாவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

    கடந்த 27 ஆண்டுகளாக கர்நாடகா கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் 27 வகை பொருள்களை மட்டும் ஏலம்விட்டு அதில் வரும் தொகையை கொண்டு சொத்துக்குவிப்பு வழக்கிற்கு செலவிடப்பட்ட நிதியை வசூல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து கர்நாடக முதன்மை மாநகர சிவில் மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் நரசிம்ம மூர்த்தி மேல்முறையீடு செய்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமச்சந்திரா, சிறப்பு வழக்கறிஞரை நியமித்து ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களையும் ஏலம் விட்டு நடவடிக்கை எடுக்கும்படி கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டார். அதன்படி, ஜெயலலிதாவின் வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்கள், தங்க நகைகள், 700 கிலோ வெள்ளி பொருட்கள், 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த புடவைகள், 44 குளிர்சாதன இயந்திரங்கள், 91 கைக்கடிகாரங்கள், 27 சுவர் கடிகாரங்கள், 86 மின்விசிறிகள், 146 அலங்கார சேர்கள், 81 தொங்கு விளக்குகள், 20 சோபா செட்கள், 250 சால்வைகள், 12 குளிர்பதன பெட்டிகள், 10 தொலைக்காட்சி பெட்டிகள், 8 சிவிஆர் கருவிகள், 140 வீடியோ கேசட்டுகள் ஆகியவை ஏலத்தில் விற்கப்பட இருக்கின்றன.

    இதனிடையே தீர்ப்பு வழங்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் சொத்துகளை ஏலம்விட வழக்கறிஞர் நியமிக்கப்படாததால் கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்ற சமூக ஆர்வலர் மீண்டும் மனுத் தாக்கல் செய்தார். மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இதுபற்றி விரைவில் விசாரிக்க உள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட சிறப்பு வழக்கறிஞராக கிரண் எஸ்.ஜாவலியை நியமித்து கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.

    ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விடுவது தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் இவர் மேற்கொள்வார் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. கர்நாடகா அரசு தரப்பில் வழக்கறிஞர் நியமிக்கப்பட்டதால், விரைவில் ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம்விட வாய்ப்பு உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன.

    • வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து ஹாலியாவை சேர்ந்த தர்மராஜ் குட்ரே என்பவரை கைது செய்தனர்.

    பெங்களூர்:

    கர்நாடகா மாநிலத்தில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தொடர்ந்து 13-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தேர்தல் பிரசாரமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

    இதேபோல் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பெலகாவி மாவட்டம், தேர்தலையொட்டி கானாபுரா தொகுதியில் உள்ள நந்தகாட் பகுதியில் இன்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் ரூ.19,08,420 மதிப்புள்ள 395.7 கிராம் தங்கம் மற்றும் 28.065 கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பது தெரியவந்தது. உடனே அதனை அனைத்தும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஹாலியாலில் இருந்து கக்கரைக்கு பில் இல்லாமல் நகைகளை கடத்தியது தெரியவந்தது. இந்த காரில் தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் ரூ.13 லட்சம் இருந்தது. 53,33,724 மதிப்புள்ள கார் உட்பட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து ஹாலியாவை சேர்ந்த தர்மராஜ் குட்ரே என்பவரை கைது செய்தனர்.

    • முதலில் ஆடிய ராஜஸ்தான் 203 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய ஐதராபாத் 131 ரன்னில் ஆல் அவுட்டானது.

    ஐதராபாத்:

    ஐதராபாத்தில் நேற்று மாலை நடந்த 4-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன்ரைசர்சும், ராஜஸ்தான் ராயல்சும் மல்லுக்கட்டின. டாஸ் ஜெயித்த ஐதராபாத் அணியின் பொறுப்பு கேப்டன் புவனேஷ்வர் குமார் முதலில் ராஜஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது. நடப்பு தொடரில் 200-ஐ கடந்த முதல் அணி என்ற பெருமையை ராஜஸ்தான் பெற்றது.

    ஜோஸ் பட்லர் 54 ரன்னில் அவுட்டானார்.ஜெய்ஸ்வால் 54 ரன்னில் அவுட்டானார். கேப்டன் சாம்சன் நிலைத்து நின்று அரைசதம் அடித்து 55 ரன் எடுத்தார். பவர்-பிளேயான முதல் 6 ஓவரில் ராஜஸ்தான் 85 ரன் திரட்டியது.

    இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 8 விக்கெட்டுக்கு 131 ரன் மட்டுமே எடுத்து தோற்றது. இதன்மூலம் ராஜஸ்தான் 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அப்துல் சமத் 32 ரன்களுடனும், உம்ரான் மாலிக் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    ராஜஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இந்நிலையில், ராஜஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஐதராபாத் வீரர் ஹாரி புரூக் விக்கெட்டை வீழ்த்தியபோது அது ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் அவரது 300-வது விக்கெட்டாக (265 ஆட்டம்) அமைந்தது. இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்தியர் என்ற சாதனையை சாஹல் படைத்தார்.

    அவர் நேற்று எடுத்த 4 விக்கெட்டையும் சேர்த்து ஐ.பி.எல்.-ல் இதுவரை 170 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். ஐ.பி.எல்.-ல் அதிக விக்கெட் எடுத்தவர்களின் வரிசையில் ஓய்வு பெற்ற வெய்ன் பிராவோ (183 விக்கெட்), மலிங்கா (170 விக்கெட்) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் சாஹல் உள்ளார்.

    • பி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. உள்ளிட்ட ராக்கெட்டுகள் மூலம் செயற்கை கோள் ஏவப்படுகிறது.
    • தன்னியக்க தரையிறங்கும் திறன் கொண்ட, மீண்டும் பயன் படுத்தக்கூடிய ராக்கெட் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக செய்துள்ளது.

    பெங்களூர்:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, ராக்கெட் மூலம் செயற்கை கோள்களை விண்ணில் ஏவி வருகிறது.

    பி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி. உள்ளிட்ட ராக்கெட்டுகள் மூலம் செயற்கை கோள் ஏவப்படுகிறது.

    இந்த நிலையில் தன்னியக்க தரையிறங்கும் திறன் கொண்ட, மீண்டும் பயன் படுத்தக்கூடிய ராக்கெட் சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக செய்துள்ளது.

    செயற்கைகோளை விண்ணில் நிலை நிறுத்த கொண்டு செல்லும் ராக்கெட்டின் பாகம் விண்வெளியில் சுற்றும் அல்லது கடலில் விழும். மேலும் வெடித்து சிதறும் வாய்ப்பும் உள்ளது.

    செயற்கைகோளை சுமந்து செல்லும் ராக்கெட்டை மீண்டும் பூமியில் தரையிறங்கும் ஆய்வில் இஸ்ரோ ஈடுபட்டது. 10 ஆண்டுகளாக இந்த ஆய்வு நடந்து வந்த நிலையில் விண்ணில் இருந்து ராக்கெட் பூமியில் தானாக தரையிறங்கும் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    இஸ்ரோ, இந்திய பாதுகாப்புத்துறை, இந்திய விமானப்படை ஆகியவை இணைந்து இச்சோதனையை கர்நாடக மாநிலம் சித்ர துர்காவில் உள்ள ஏரோ நாட்டிகல் டெஸ்ட் ரேஞ்ச் மையத்தில் நடத்தப்பட்டு இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரில் இணைக்கப்பட்ட ராக்கெட், 4.5 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து தரையிறக்கப்பட்டது.

    ஹெலிகாப்டரில் இருந்து விடுவிக்கப்பட்ட ராக்கெட் ஓடுபாதையில் வெற்றிகரமாக தரையிறக்கியது. விஞ்ஞானிகள் நிர்ணயித்த இலக்கின் படி ராக்கெட் தரையிறக்கியது. இதன் மூலம் இச்சோதனை வெற்றி பெற்றது.

    செயற்கைக் கோள்களை புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்திய பின் ராக்கெட்டை பூமியில் தரையிறக்கும் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவும் இணைந்து உள்ளது.

    மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் மூலம் செலவு குறையும். கால விரயம் தடுக்கப்படும். மறு பயன்பாட்டு ஏவுகணை திட்டத்தில் இஸ்ரோ முந்திய மைக்கல்லை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    இதுகுறித்து இஸ்ரோ கூறும்போது, மீண்டும் பயன்படுத்தக்கூடிய தன்னியக்க ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. மறுபயன்பாட்டு ஏவுகணை வாகனம் என்ற கனவு யதார்த்தத்திற்கு இந்தியா ஒரு படி நெருக்கமாக வருகிறது.

    மீண்டும் பயன்படுத்தும் வகையிலான ஏவுகணைகளை தயாரிப்பது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது என்று தெரிவித்து உள்ளது.

    சோதனை முடிந்த பிறகு மென்பொருள் தரையிறங்கும் கருவி சரிபார்ப்பு, ஓடு பாதையில் உள்ள உத்தேச இடத்துக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான சென்சார் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    • வாகனங்கள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
    • தேர்தல் நெருங்கும் வேளையில் இன்னும் கூடுதலாக சோதனை சாவடிகள் அமைக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. பெங்களூருவில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

    வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க பெங்களூருவுக்கு வரும் வாகனங்கள், பெங்களூருவை விட்டு வெளியே செல்லும் வாகனங்களை போலீசார் தீவிரமாக பரிசோதனை நடத்தி வருகின்றனர்.

    இதற்காக பெங்களூரு நகர் முழுவதும் 100 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சோதனை சாவடிகளிலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 2 போலீஸ்காரர்கள் உள்பட 3 போலீசார் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    8 மணிநேரத்திற்கு ஒரு ஷிப்ட் என்ற அடிப்படையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாருடன் சேர்ந்து தேர்தல் அதிகாரிகளும் சோதனை சாவடிகளில் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    அந்த சோதனை சாவடிகள் வழியாக வரும் அனைத்து விதமான வாகனங்களும் முழுமையாக பரிசோதனை செய்யப்படுவதுடன், அங்கு வரும் வாகனங்கள் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக வடக்கு மண்டலத்தில் 28, தெற்கு மண்டலத்தில் 26, ஒயிட்பீல்டு மண்டலத்தில் 10, வடகிழக்கு மண்டலத்தில் 3, மேற்கு மண்டலத்தில் 19, மத்திய மண்டலத்தில் 16, தென்கிழக்கு மண்டலத்தில் 3, கிழக்கு மண்டலத்தில் 16 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் நெருங்கும் வேளையில் இன்னும் கூடுதலாக சோதனை சாவடிகள் அமைக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சதீஷ் தனது குடும்பத்தோடு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சதீஷ். இவர் அங்குள்ள குஷிகுடா பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு வேதா என்ற மனைவியும், நிஷிகேத் (வயது 9), நிஹல் (5) ஆகிய இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் சதீஷ் தனது குடும்பத்தோடு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இரண்டு குழந்தைகளும் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், சிகிச்சை அளித்தும் குணமாகாததால் சதீஷ் தனது குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    • தானிய ஆலை ஊழியர்கள் அபூர்வ வகை பாம்பை அதிசயத்துடன் பார்த்தனர்.
    • போலீஸ் நிலையத்தில் இருந்த காவலர் ஒருவர் பாம்பு பிடிக்கும் பழக்கம் இருந்ததால் சம்பவ இடத்திற்கு வந்து அரிய வகை வெள்ளை நிற நாக பாம்பை பிடித்தார்.

    தெலுங்கானா மாநிலம் ஜெய்சங்கர் பூபால பள்ளி மாவட்ட எல்லையான மகாராஷ்டிரா மாநிலம் கட்சி ரோலி மாவட்டம் சரோஞ்சாவில் உள்ள தானிய ஆலையில் நேற்று காலை வெள்ளை நிறத்திலான அபூர்வ வகை நாகப்பாம்பு ஒன்று சுற்றி கொண்டு இருந்தது.

    இதனை கண்ட தானிய ஆலை ஊழியர்கள் அபூர்வ வகை பாம்பை அதிசயத்துடன் பார்த்தனர்.

    அப்போது பாம்பு அங்கிருந்த ஒரு அறைக்குள் சென்று பதுங்கிக் கொண்டது.

    இந்த தகவல் கிராமம் முழுவதும் வேகமாக பரவியது. கிராம மக்கள் திரளானோர் வந்து வெள்ளை நிற பாம்பை பார்த்தனர். மேலும் இது குறித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீஸ் நிலையத்தில் இருந்த காவலர் ஒருவர் பாம்பு பிடிக்கும் பழக்கம் இருந்ததால் சம்பவ இடத்திற்கு வந்து அரிய வகை வெள்ளை நிற நாக பாம்பை பிடித்தார். பின்னர் அதனை வனப்பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டார்.

    • கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
    • காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை அவர் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

    பெங்களூர்:

    கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

    ஏற்கனவே பா.ஜ.க. சார்பில் விஜய சங்கல்ப யாத்திரை நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் சார்பில் மக்கள் குரல் என்ற பெயரில் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி தலைவர்கள் சட்டசபை தொகுதி வாரியாக சென்று பொதுக்கூட்டங்களில் பேசி ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சட்டசபை தேர்தல் நேரத்தில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முதல் முறையாக இன்று (திங்கட்கிழமை) கர்நாடக  மாநிலத்திற்கு வந்துள்ளார். பெலகாவியில் காங்கிரசின் இளைஞர் புரட்சி மாநாடு இன்று நடக்கிறது. இந்த மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதன் மூலம் ராகுல் காந்தி கர்நாடக சட்டசபை தேர்தல் களத்தில் பா.ஜ.க.வுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார். கூட்டத்தில் அவர் வேலையில்லா திண்டாட்டம், அதானி விவகாரம் போன்ற விஷயங்கள் குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ராகுல் காந்தியின் மாநாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை அவர் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

    ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு பெலகாவியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கர்நாடகாவில் 224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் குறைந்தபட்சம் 150 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது. பெலகாவி நிகழ்ச்சிக்கு பின்னர் பெங்களூரு வரும் ராகுல் காந்தி, கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    இதையடுத்து, மைசூர் செல்லும் ராகுல் காந்தி, கர்நாடக காங்கிரசின் செயல் தலைவராக இருந்து மறைந்த துருவநாராயணின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார். ராகுல் காந்தியின் வருகை கர்நாடக காங்கிரஸ் கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.
    • பிரதமர் மோடி அதிரடி வியூகங்கள் அமைத்து செயல்பட்டு வருகிறார்.

    பெங்களூர்:

    கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பிரதமர் மோடி அதிரடி வியூகங்கள் அமைத்து செயல்பட்டு வருகிறார்.

    ஏற்கனவே பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பிற மத்திய மந்திரிகள், பா. ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் அடிக்கடி கர்நாடகம் வந்து மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 மாதத்தில் 6 முறை கர்நாடகத்திற்கு வருகை தந்துள்ளார்.

    தற்போது 7-வது முறையாக அவர் மீண்டும் கர்நாடகா வர உள்ளார். சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்காக விஜய சங்கல்ப யாத்திரையை பா.ஜனதா நடத்தி வருகிறது. இந்த யாத்திரை வருகிற 25-ந் தேதி தாவணகெரே மாவட்டத்தில் நிறைவு பெற உள்ளது. இதற்காக தாவணகெரேயில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு பா.ஜனதா ஏற்பாடு செய்துள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேச உள்ளார்.

    இதற்காக பிரதமர் மோடி வருகிற 25-ந் தேதி மீண்டும் கர்நாடகம் வருகிறார். அன்று காலையில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பெங்களூருவுக்கு வரும் பிரமதமர் பெங்களூரு கே.ஆர்.புரம் மற்றும் ஒயிட்பீல்டு இடையே புதிதாக மெட்ரோ ரெயில் ரெயில் சேவையை தொடங்கி தொடங்கி வைக்கிறார்.

    அதற்கு முன்பாக மகாதேவபுரா தொகுதியில் இருக்கும் சத்யசாய் ஆசிரமத்தில் இருந்து ஒயிட்பீல்டு மெட்ரோ ரெயில் நிலையம் வரை 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரதமர் மோடி ரோடு ஷோவாக ஊர்வலம் செல்ல இருக்கிறார். மேலும் கே.ஆர்.புரம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து ஒயிட்பீல்டு வரை அவர் மெட்ரோ ரெயிலிலேயே பயணம் செய்யவும் இருக்கிறார்.

    அதன்பிறகு, பெங்களூருவில் இருந்து சிக்பள்ளாப்பூர் மாவட்டத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கு மருத்துவ கல்லூரியை அவர் திறந்து வைக்க உள்ளார். பின்னர் அங்கிருந்து தாவணகெரே மாவட்டத்திற்கு சென்று பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேச இருக்கிறார். இந்த பொதுக்கூட்டத்திற்கு 10 லட்சம் பேரை திரட்ட பா.ஜனதாவினர் திட்டமிட்டுள்ளனர்.

    பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ள கே.ஆர்.புரம்-ஒயிட்பீல்டு இடையே 13.75 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.

    வழக்கமாக கே.ஆர்.புரத்தில் இருந்து ஒயிட்பீல்டுக்கு சொந்த வாகனத்தில் செல்ல ஒரு மணிநேரம் ஆகும். ஆனால் மெட்ரோ ரெயிலில் வெறும் 24 நிமிடத்தில் சென்று விடலாம் என்று மெட்ரோ ரெயில் நிாவாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கர்நாடக மாநிலம் மங்களூருக்கு இன்று காலை வந்த விமான பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
    • குழந்தையின் டயபருக்குள் தங்கம் கடத்தப்பட்டது தெரிய வந்தது.

    கர்நாடக மாநிலம் மங்களூருக்கு இன்று காலை வந்த விமான பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது குழந்தையுடன் வந்த ஒரு பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த குழந்தையை வாங்கி பரிசோதித்தனர். அப்போது குழந்தையின் டயபருக்குள் தங்கம் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பயணியை அதிகாரிகள் கைது செய்தனர்.

    ×