என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் தலை குப்புற கவிழ்ந்தது.
    • அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு நோயாளி மற்றும் அவரது உறவினரை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் சென்றது. இதனை செந்தில் (38) என்பவர் ஓட்டி சென்றார். இவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. காரைக்கால் அருகே மேலகாசாக்குடி சாலை வளைவில் ஆம்புலன்ஸை திருப்பிய போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் தலை குப்புற கவிழ்ந்தது. மது போதையில் இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் செந்தில் அங்கிருந்து ஓடிவிட்டார்.

    அவ்வழியே சென்றவர்கள் ஆம்புலன்ஸ் உள்ளே இருந்த நோயாளியையும், அவரது உறவினரையும் மீட்டு, வேறொரு வாகனத்தில் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காரகை்கால் நகர போலீசார், ஆம்புலன்ஸ் டிரைவர் செந்திலை தேடி வருகின்றனர்.

    • 40 ஆண்டுகளுக்கு பிறகு புதுவை அமைச்சரவையில் இடம் பெற்ற பெண் என்ற பெருமையை சந்திர பிரியங்கா பெற்றார்.
    • சட்டசபையில் சந்திர பிரியங்காவின் அறையில் இருந்த பொருட்கள் காலி செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் இருந்து என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சந்திர பிரியங்கா.

    புதுவை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்களில் ஒரே பெண் எம்.எல்.ஏ. என்ற பெருமையைப் பெற்றவர். அவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.

    40 ஆண்டுகளுக்கு பிறகு புதுவை அமைச்சரவையில் இடம் பெற்ற பெண் என்ற பெருமையை சந்திர பிரியங்கா பெற்றார். ஆனால் அது நீடிக்கவில்லை. அவரது செயல்பாடுகளில் ஏற்பட்ட அதிருப்தியால் சந்திர பிரியங்காவை நீக்க கவர்னருக்கு முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரை செய்தார்.

    புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் பதவி நீக்கத்திற்கு உள்துறை அமைச்சகத்தின் வழியே ஜனாதிபதியின் அனுமதியை பெற வேண்டும்.

    வழக்கமாக நீக்கப்பட்ட அன்றே ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்து விடும். ஆனால் சந்திர பிரியங்கா நீக்கம் விவகாரத்தில் கடந்த 13 நாட்களாக இழுபறி ஏற்பட்டது.

    முடிவாக கடந்த 2-ந் தேதி சந்திர பிரியங்கா பதவி நீக்கத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இதற்கான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட புதுவை அரசிதழிலும் 21-ந் தேதியே வெளியிடப்பட்டது.

    இதையடுத்து சட்டசபையில் சந்திர பிரியங்காவின் அறையில் இருந்த பொருட்கள் காலி செய்யப்பட்டது. அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

    மேலும் அறைக்கு வெளியே இருந்த அமைச்சர் பெயர் பலகையும் அகற்றப்பட்டது. அறைக்கு வெளியே பூட்டில் சட்டமன்ற செயலர் தயாளன் என கையெழுத்திடப்பட்ட சீல் ஒட்டப்பட்டுள்ளது.

    அமைச்சரின் அறைக்குள் கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் மிஷின் உட்பட பல பொருட்கள் உள்ளன. இவற்றை அலுவலக ரீதியாக இன்னும் ஒப்படைக்காத காரணத்தினால் சீல் வைக்கப்பட்டதாக சட்டமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

    • அமைச்சர் பதவியில் இருந்து சந்திர பிரியங்கா உடனடியாக நீக்கம்.
    • ராஜினாமா கடிதத்தில் சாதி, பாலின தாக்குதலுக்கு உள்ளானதாக அவர் குற்றம்சாட்டினார்.

    புதுச்சேரி மாநில அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்காவை நீக்கக் கோரி முதலமைச்சர் ரங்கசாமி வழங்கிய அறிவுரையை ஏற்றுக் கொள்வதாக குடியரசு தலைவர் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பான அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரி அரசுக்கு அனுப்பி வைத்து இருக்கிறது.

    அந்த அறிக்கையில், "புதுச்சேரி முதல்வரின் அறிவுரையை தொடர்ந்து புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து, அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவியில் இருந்து சந்திர பிரியங்கா உடனடியாக நீக்கம் செய்யப்படுகிறார்," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இதே அறிக்கையை குடியரசு தலைவரின் செயலாளர் ராஜீவ் வர்மா வெளியிட்டு உள்ளார். முன்னதாக புதுச்சேரி அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்காவை நீக்க வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர் அக்டோபர் 8-ம் தேதி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து இருந்தார்.

    இதைத் தொடர்ந்து அக்டோபர் 10-ம் தேதி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக சந்திர பிரியங்கா அறிவித்தார். தனது ராஜினாமா கடிதத்தில் சாதி, பாலின தாக்குதலுக்கு உள்ளானதாக அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

    • மீன் பிடிக்க வருமாறு சந்திரனை செல்போன் மூலம் கவுதமன் அழைத்துள்ளார்.
    • கவுதமன் மோட்டார் சைக்கிளில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றார்.

    புதுச்சேரி:

    நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தம்போட், அமிர்தா நகரை சேர்ந்தவர் கவுதமன் (வயது 42). அதே ஊரை சேர்ந்தவர் சந்திரன் (43), இருவரும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணிக்கு, மீன் பிடிக்க வருமாறு சந்திரனை செல்போன் மூலம் கவுதமன் அழைத்துள்ளார். அதற்கு சந்திரன் நீ முன்னே செல், நான் பின்னாடி வருகிறேன் என கூறியுள்ளார். இதனால், அதே ஊரைச் சேர்ந்த ராஜம் (38) என்பவரை அழைத்துகொண்டு, கவுதமன் மோட்டார் சைக்கிளில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றார். காரைக்கால்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை திரு.பட்டினம் பிராவிடையான் ஆறு அருகே, காலை 4.15 மணிக்கு சென்றபோது, எதிரே அதிவேகமாக வந்த பால் வாண்டி (மினிவேன்) மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில், இருவரும் சாலையில் தூக்கியெறியப்பட்டு, தலை, கை, கால் முகம் என படுகாயம் அடைந்தனர். சிறிது நேரம் கழித்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சந்திரன், இரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி கவுதமன் இறந்து போனார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜத்திற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை ஏற்படுத்திய, நன்னிலம் திருகொட்டாரம் கீழத்தெருவை சேர்ந்த ஜோதிபாசு (34) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • அமைச்சர் பதவி நீக்கத்திற்கான கோப்பு ஜனாதிபதியிடம் நிலுவையில் உள்ளது.
    • டெல்லிக்கு செல்லும்போதெல்லாம் மத்திய மந்திரிகளை, சந்திர பிரியங்கா சந்தித்து வந்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா கடந்த 8-ந் தேதி நீக்கப்பட்டார்.

    ஆனால் அவர் நீக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும், அரசாணையும் இன்று வரை வெளியிடப்படவில்லை. இதனால் புதுவையில் தொடர் குழப்பம் நீடித்து வருகிறது.

    சந்திர பிரியங்கா ஜாதி, பாலின ரீதியில் தாக்குதலுக்கு உள்ளாவதாக தெரிவித்திருந்தார்.

    இதனாலேயே பதவி நீக்க அறிவிப்பு வெளியாவது தாமதமாகிறது என கூறப்படுகிறது. இதனிடையே நேற்று முன்தினம் தனது தொகுதியில் நடந்த அரசு விழாவில் தேசியக்கொடி பொருத்திய காரில் வந்து சந்திர பிரியங்கா கலந்து கொண்டார்.

    இதனால் இன்னும் அமைச்சராக நீடிக்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அதேநேரத்தில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சந்திர பிரியங்கா எம்.எல்.ஏ. என்ற முறையில் தனது தொகுதியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்றார். அவர் இனி எம்.எல்.ஏ.வாக மட்டும் செயல்படுவார்.

    அமைச்சர் பதவி நீக்கத்திற்கான கோப்பு ஜனாதிபதியிடம் நிலுவையில் உள்ளது. அதற்கான அறிவிப்பு 2 நாளில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

    இதனிடையே சந்திர பிரியங்கா பதவி நீக்கத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் தர காலதாமதம் ஆவதற்கு மத்திய மந்திரி காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகனும் தனது பேட்டியில், சந்திர பிரியங்கா நீக்கத்தை மத்திய மந்திரி தடுப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்திருப்பதாக கூறினார்.

    சந்திர பிரியங்கா நீக்கத்தை தடுக்கும் மத்திய மந்திரி யார்? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

    புதுவையில் சட்டசபை தேர்தலின்போது மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், அமித்ஷா, அர்ஜூன் ராம்மெக்வால் உட்பட பல மத்திய மந்திரிகள் பிரசாரம் செய்தனர்.

    மத்திய மந்திரி அர்ஜூன்ராம்மெக்வால் புதுவையில் பல்வேறு தொகுதிகளுக்கு சென்று தேர்தல் பணியாற்றினார்.

    புதுவை பா.ஜனதா பொறுப்பாளராக இருந்த ராஜூ வர்மா தேர்தலுக்கு பிறகு மத்திய மந்திரியாகியுள்ளார்.

    தற்போது பாராளுமன்ற பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக மத்திய மந்திரி எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மாதத்திற்கு ஒரு முறையாவது புதுவைக்கு வந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    இதில் எந்த மத்திய மந்திரி, சந்திர பிரியங்கா நீக்கல் விவகாரத்தை தடுத்து வருகிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

    அமைச்சராக இருந்த சந்திர பிரியங்காவுக்கு அகில இந்திய பா.ஜனதாவின் நிர்வாகிகள், மத்திய மந்திரிகள் ஆகியோருடன் செல்வாக்கு இருந்துள்ளது.

    டெல்லிக்கு செல்லும்போதெல்லாம் மத்திய மந்திரிகளை, சந்திர பிரியங்கா சந்தித்து வந்துள்ளார்.

    மேலும் அவர்களோடு தொடர்ந்து நட்பில் இருந்து வந்துள்ளார். இதனால் சந்திர பிரியங்கா பதவி நீக்கல் காரணத்திற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

    அமைச்சர் பதவி நீக்கத்துக்கு விரைவில் ஒரு முற்றுப்புள்ளி வைத்தால் தான் புதுவையில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.

    • 3 நாட்கள்காளானில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கான பயிற்சி கடந்த 17 -ந் தேதி தொடங்கியது.
    • காளான் பவுடர் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் நுணுக்கங்கள் ஆகியவை எடுத்துரைக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதி உதவியுடன், அட்டவணை இன துணை திட்டத்தின் கீழ், வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் ஜெய்சங்கர் தலைமையில், அட்டவணை இன மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு, 3 நாட்கள்காளானில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கான பயிற்சி கடந்த 17 -ந் தேதி தொடங்கியது. இம்முகாம் நேற்று நிறைவு பெற்றது.

    3 நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில், காளானில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்களான காளான் சூப் பவுடர், காளான் ஜாம், காளான் ஊறுகாய், காளான் பாயாசம், சிறுதானிய காளான் பிஸ்கட், சிறுதானிய காளான் கேக் போன்றவை செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் காளான் அறுவடைக்குப் பின் பதப்படுத்துதல், உலர்ந்த காளான் மற்றும் காளான் பவுடர் தயாரித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் நுணுக்கங்கள் ஆகியவை எடுத்துரைக்கப்பட்டது. இப்பயிற்சியினை வேளாண் அறிவியல் நிலைய பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுநர் திவ்யா தொகுத்து வழங்கினார்.

    • எம்.எல்.ஏ. என்ற முறையிலேயே சந்திர பிரியங்கா அரசு விழாவில் பங்கேற்றார்.
    • சந்திர பிரியங்கா வகித்த துறைகளை முதலமைச்சர் கூடுதலாக கவனித்து வருகிறார்.

    புதுச்சேரி:

    சபாநாயகரிடம் அரசு விழாவில் சந்திர பிரியங்கா பங்கேற்றது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பதில் அளித்து கூறியதாவது:-

    அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சந்திர பிரியங்கா இனி எம்.எல்.ஏ.வாக மட்டுமே செயல்படுவார். எம்.எல்.ஏ. என்ற முறையிலேயே அரசு விழாவில் பங்கேற்றார். எம்.எல்.ஏ.வாக சந்திர பிரியங்கா செயல்பட எந்த தடையும் இல்லை.

    பதவி நீக்க கோப்பு உள்துறை ஒப்புதல் பெற்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்றுள்ளது. இன்று அல்லது நாளைக்குள் ஒப்புதல் கிடைக்கும். தொடர்ந்து அரசாணை வெளியாகும். மத்திய அரசு இதில் எந்த தயக்கமும் காட்டவில்லை.

     சந்திர பிரியங்கா வகித்த துறைகளை முதலமைச்சர் கூடுதலாக கவனித்து வருகிறார்.

    இவ்வாறு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறினார்.

    • சந்திர பிரியங்கா தங்கியுள்ள அரசு இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு இன்று வரை தொடர்கிறது.
    • வழக்கமாக அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டால் அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசாணையில் உடனுக்குடன் வெளியிடப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அமைச்சரவையில் இடம் பெற்ற என்ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா கடந்த 10-ந் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    அவர் தனது ராஜினாமா கடிதத்தில் சாதி, பாலின தாக்குதலுக்கு உள்ளானதாக பரபரப்பு குற்றச்சாட்டும் கூறியிருந்தார். ஆனால் அவர் ராஜினாமா செய்யும் முன்பே பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கவர்னர் தமிழிசையும், சபாநாயகர் ஏம்பலம் செல்வமும் தெரிவித்தனர்.

    மேலும் அவரது பணி திருப்தி அளிக்காததால் முதலமைச்சர் ரங்கசாமி பதவி நீக்கத்துக்கு பரிந்துரை செய்தார் என்றும் கவர்னர் தெரிவித்திருந்தார்.

    வழக்கமாக அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டால் அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசாணையில் உடனுக்குடன் வெளியிடப்படும்

    ஆனால் சந்திர பிரியங்கா விவகாரத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாகியும் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பும் அவர் வகித்து வந்த துறைகள் யாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்ற விவரமும் வெளியிடப்படவில்லை.

    அதோடு புதுவை கடற்கரை சாலையையொட்டி சந்திர பிரியங்கா தங்கியுள்ள அரசு இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு இன்று வரை தொடர்கிறது.

    இதனால் சந்திர பிரியங்கா பதவி நீக்கத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த நிலையில் 10 நாட்களுக்கு பிறகு நேற்றைய தினம் தனது தொகுதியில் நடந்த அரசு விழாவில் சந்திர பிரியங்கா பங்கேற்றார். காரைக்கால் பஞ்சாட்சபுரம் கிராமத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் குரும்பகரம் பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பு சார்பில் நடந்த மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி பொருட்காட்சி நடந்தது.

    இதன் தொடக்க விழாவில் சந்திர பிரியங்கா கலந்து கொண்டார். அவரை அரசு அதிகாரிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் சந்திர பிரியங்கா வழங்கினார். விழாவுக்கு அவர் தேசிய கொடி கட்டிய காரில் வந்தார்.

    மேலும் அந்த அரசு விழா குறித்த சந்திர பிரியங்காவின் செய்தி தொடர்பு வாட்ஸ்-அப் குழுவில் புதுவை போக்குவரத்து துறை அமைச்சர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    கவர்னர், சபாநாயகர் நீக்கப்பட்டதாக அறிவித்த பின்னும் அரசு விழாவில் சந்திர பிரியங்கா பங்கேற்றது புதுவை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது. 

    • பல் மருத்துவ படிப்புகளுக்கு அக்டோபர் 15-ந் தேதியுடன் சேர்க்கையை முடிக்க வேண்டும்.
    • புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டு முதல்முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என மருத்துவ கலந்தாய்வு கமிட்டி உத்தரவிட்டது. புதுவையில் 3 கட்ட கலந்தாய்வுதான் நடந்துள்ளது.

    பல் மருத்துவ படிப்புகளுக்கு அக்டோபர் 15-ந் தேதியுடன் சேர்க்கையை முடிக்க வேண்டும். இந்த உத்தரவுக்கான காலக்கெடுவும் முடிந்துள்ளது. இறுதி காலக்கெடுவுக்கு பின்னரும் சென்டாக் நிர்வாகம் மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்த்து ஆணை வழங்கி வருகிறது.

    இந்த மாணவர் சேர்க்கை ஆணை சட்டப்படி செல்லுமா? என பெற்றோர், மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதால் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தள்ளிப்போனது.

    இதை காரணம் காட்டி தலைமை செயலர் ராஜீவ் வர்மா, சுகாதாரத்துறை செயலர் முத்தம்மா ஆகியோர் தனித்தனியே மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினர். ஆனால் இந்த 2 கடிதங்களுக்கும் மத்திய அரசு இதுவரை பதிலளிக்கவில்லை.

     

    இந்த நிலையில் புதுவையில் மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி கேட்டு முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டு முதல்முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி கிடைப்பது தள்ளிப்போனதால் புதுவையில் மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு தள்ளிப்போனது.

    எனவே புதுவையில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    • பணம், காணிக்கை போன்றவை, 3 மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம்.
    • 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சிவிழா நடைபெற உள்ளது.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகபுகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும், பணம், காணிக்கை போன்றவை, 3 மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற டிசம்பர் 20-ந் தேதி மாலை 5.20 மணிக்கு, 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சிவிழா நடைபெற உள்ளது. அதுசமயம், சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்க உள்ளார். கடைசியாக 2014, 2017, 2020 என தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.

    இந்த ஆண்டும், தொடர்ச்சியாக 4-வது முறையாக, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. சனிபெயர்ச்சி விழாவிற்கு முன்னதாக உண்டியலை எண்ண, மாவட்ட கலெக்டரும், கோவில் தனி அதிகாரியுமான குலோத்துங்கன் உத்தரவின் பேரில், கோவில் நிர்வாகம் முடிவு செய்து, திருநள்ளாறு தர்ப்பாராண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அனைத்து கோவில்களின் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட கோவில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர். உண்டியல் எண்ணும் பணியை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரனை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் ஆய்வு செய்து வரு கின்றனர். 

    • ஆரோக்கியசாமி மயிலாடுதுறை மாவட்டம் பாலையூரில் உள்ள மின்துறையில் ஒயர்மேனாக வேலை செய்து வருகிறார்.
    • காரைக்காலை அடுத்த தருமபுரத்தில் டைல்ஸ் வேலை செய்துவந்தார்.

    புதுச்சேரி:

    தஞ்சாவூர் திருவிடைமருதூர், புதூர் வடக்கு மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் மயிலாடுதுறை மாவட்டம் பாலையூரில் உள்ள மின்துறையில் ஒயர்மேனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெனிடா உஷாரானி. இவர்களுக்கு ஸ்ரீவாக் (வயது 24), கிலாடிஸ் (22), மார்க்வாக் (20) என்ற 3 மகன்கள் உள்ளனர். இதில் ஸ்ரீவாக் என்ஜினியரிங் முடிததுவிட்டு கிடைக்கும் வேலைகளை செய்துவந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக, காரைக்காலை அடுத்த தருமபுரத்தில் டைல்ஸ் வேலை செய்துவந்தார். வழக்கம் போல் நேற்று வேலை செய்து கொண்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி தூக்கிவீச ப்பட்டார்,

    காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைகாக சேர்த்து இருப்பதாக, ஆரோக்கி யசாமியின் நண்பர் சிவக்குமார் என்பவர் ஆரோக்கியசாமிக்கு தகவல் கூறியுள்ளார். உடனே ஆரோக்கியசாமி காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தபோது, ஸ்ரீவாக் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து, ஆரோக்கியசாமி, காரைக்கால் நகர போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கடலும் ஆறும் கலக்கும் கழிமுக பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர்.
    • ஏனாமில் இன்று பொன்னாட வரதம் என்பவர் மீனவர் வலையில் 20 கிலோ எடையுள்ள பாண்டு கப்பா மீன் சிக்கியது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் ஏனாம் பிராந்தியம் கோதாவரி ஆற்றுப்படுகையில் உள்ளது.

    இங்கு கடலும் ஆறும் கலக்கும் கழிமுக பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். இந்த பகுதியில் பாண்டுகப்பா என்ற அரிய வகை மீன் எப்போதாவது வலையில் சிக்கும். இந்த வகை மீனுக்கு ஆந்திர மாநில மக்களிடையே அதிக கிராக்கி உள்ளது.

    ஏனாமில் இன்று பொன்னாட வரதம் என்பவர் மீனவர் வலையில் 20 கிலோ எடையுள்ள பாண்டு கப்பா மீன் சிக்கியது. இந்த மீன் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

    இதனை ரத்தினம் என்பவர் ரூ.12 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்து வாங்கி சென்றார். 

    ×