என் மலர்
மகாராஷ்டிரா
- தாவூத் இப்ராகிமுக்கு 2-வது மனைவி இருக்கிறார்.
- தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகிறார்.
மும்பை :
மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகிறார். அவர் நிழல் உலகில் இருந்தபடி உலகம் முழுவதும் சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு கீழ் செயல்படும் கும்பல் 'டி-கேங்' என அழைக்கப்படுகிறது.
தாவூத் இப்ராஹிம் இந்தியாவில் ஹவாலா பணம் மூலம் பயங்கரவாதம், குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக தாவூத் இப்ராஹிமின் தங்கை ஹசினா பார்கரின் மகன் அலிஷா பார்கரிடம் என்.ஐ.ஏ. வாக்குமூலம் பெற்று உள்ளது. அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலம் கடந்த ஆண்டு நவம்பரில் என்.ஐ.ஏ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இடம் பெற்று உள்ளது.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தாவூத் இப்ராஹிமின் மனைவி பெயர் மைசாபின். அவருக்கு மாருக், மெக்ரீன், மாசியா என்ற 3 பெண் பிள்ளைகள், மொகின் நவாஸ் என்ற மகன் உள்ளான். மாருக் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியான்தத்தின் மகன் ஜூனைத்தை திருமணம் செய்து உள்ளார். மெக்ரீனுக்கும், மகன் மொகின் நவாசுக்கும் திருமணமாகிவிட்டது. மாசியாவுக்கு திருமணம் நடைபெறவில்லை.
தாவூத் இப்ராகிமுக்கு 2-வது மனைவி இருக்கிறார். அவர் பாகிஸ்தானி பதான். தாவூத் இப்ராகிம் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக காட்டுகிறார். அது உண்மையில்லை. தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் கராச்சி பகுதியில் அப்துல்லா காஜி பாபா தர்க்கா பகுதிக்கு பின்னால் உள்ள அந்த நாட்டின் ராணுவ இடத்தில் வசித்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- மணிபர்சில் ரூ.12 ஆயிரம் பணம் மற்றும் ஆதார் கார்டு இருந்தது.
- மணிபர்சில் இருந்து ஒரு சிம் கார்டு கிடைத்தது.
மும்பை
மும்பை வடலாவில் மொபைல் கடை நடத்தி வருபவர் யூசுப் (வயது51). இவர் சம்பவத்தன்று மதியம் 12 மணியளவில் ஆர்.ஏ.கே.மார்க் பகுதியில் உள்ள தெருவில் சென்று கொண்டு இருந்தார். அப்போது ரோட்டில் ஒரு மணிபர்ஸ் கிடந்தது. யூசுப் மணிபர்ச்சை எடுத்து அருகில் உள்ள மசூதிக்கு சென்றாா். அங்கு யாராவது மணிபர்சை தொலைத்தார்களா என்று விசாரித்தார். ஆனால் யாரும் மணிபர்சை உரிமைகோரி வரவில்லை.
யூசுப் மணிபர்சை திறந்து பார்த்தார். அதில் ரூ.12 ஆயிரம் பணம் மற்றும் ஆதார் கார்டு இருந்தது. யூசுப் அந்த ஆதார் கார்டுடன் அருகில் இருந்த ஆதார் சேவை மையத்துக்கு சென்றார். அங்கு ஆதார் உரிமையாளரின் முகவரி உத்தரபிரதேச மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது.
இந்தநிலையில் மணிபர்சில் இருந்து ஒரு சிம் கார்டு கிடைத்தது. அந்த சிம் கார்டுடன் யூசுப் டெலிகாம் நிறுவன சேவை மையத்துக்கு சென்றார். அப்போது அந்த சிம் கார்டு செயல்பாட்டில் இல்லாமல் இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து நண்பர்கள் சிலர் மணிபர்சில் உள்ள பணத்தை விருந்து வைத்து கொண்டாடுமாறு தெரிவித்தனர். சிலர் ஏழைகளுக்கு தானமாக கொடுக்குமாறு அறிவுரை கூறினர். ஆனாலும் யூசுப் பணத்தை உரியவரிடம் ஒப்படைக்க விரும்பினார். பணத்தை தொலைத்தவர் எவ்வளவு கவலை அடைந்து இருப்பார் என யூசுப் வருத்தப்பட்டார்.
இந்தநிலையில் மணிபர்சில் தபால் வங்கி அட்டை இருந்தது. உடனடியாக யூசுப் அந்த அட்டையுடன் வடலா தபால் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு இருந்த ஊழியர்கள் உதவியுடன் தபால் வங்கி அட்டை பயனாளரின் செல்போன் எண் யூசுப்பிற்கு கிடைத்தது.
செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது பணத்தை தொலைத்தவர் ஓட்டல் ஊழியர் முஜீப் (21) என்பது தெரியவந்தது. முஜீப் அவரது ஒரு மாத சம்பவளத்தை சொந்த ஊரில் உள்ள குடும்பத்தினருக்கு அனுப்ப மணிபர்சில் வைத்து இருக்கிறார். அப்போது தான் அவர் மணிபர்சை தவறவிட்டு உள்ளார். யூசுப், முஜீப்பை ஆர்.ஏ.கே. மார்க் போலீஸ் நிலையத்துக்கு வர சொன்னார். அங்கு போலீசார் முன்னிலையில் முஜீப்பிடம் அவரது பணத்தை ஒப்படைத்தார்.
இதுபற்றி யூசுப் கூறுகையில், "பணத்தை தொலைத்தவரை கண்டுபிடிக்க எனக்கு 6 மணி நேரம் ஆனது. எனினும் பணத்தை உரியவரிடம் ஒப்படைக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது" என்றார்.
ரோட்டில் கிடந்த பணத்தை கண்டெடுத்த யூசுப், அதனை உரியவரிடம் ஒப்படைக்க நடத்திய போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரது நேர்மையை போலீசார் வெகுவாக பாராட்டினர்.
- பா.ஜனதா மூத்த தலைவர் நிதின் கட்காரி.
- நிதின் கட்காரியின் வீடு, அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மும்பை :
மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரியாக இருப்பவர் பா.ஜனதா மூத்த தலைவர் நிதின் கட்காரி. இவரது சொந்த ஊர் மராட்டிய மாநிலம் நாக்பூர் ஆகும். நாக்பூரில் அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளது.
இந்த நிலையில் 2 தடவை நாக்பூர் சவுக், காம்ளா பகுதியில் உள்ள நிதின் கட்காரியின் அலுவலகத்துக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். அவர் 2 முறை போன் செய்தபோதும் மத்திய மந்திரி நிதின் கட்காரியை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். மேலும் அலுவலகத்தை வெடிகுண்டு வைத்து தகர்ப்பேன் எனவும் மிரட்டினார்.
மிரட்டல் குறித்து அலுவலக ஊழியர்கள் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து நாக்பூரில் உள்ள நிதின் கட்காரியின் வீடு, அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நாக்பூரில் பரபரப்பு ஏற்பட்டது.
- சிவசேனாவில் தற்போது தீவிர மாற்றம் ஏற்பட்டுள்ளது.
- ஏக்நாத் ஷிண்டே அரசு ஒரு பெண்ணை கூட மந்திரி சபையில் சேர்க்கவில்லை.
தானே :
தானேயில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே பிரிவினர் ஏற்பாடு செய்திருந்த வேலைவாய்ப்பு கண்காட்சியில் முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மண்ணின் மைந்தர்களின் உரிமைக்காக போராட்டங்களை நடத்தி வந்த சிவசேனாவில் தற்போது தீவிர மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது மண்ணின் மைந்தர்களின் குறிப்பாக இளைஞர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக வேலைவாய்ப்பு கண்காட்சிகளை நடத்துகிறோம். இளைஞர்கள் இதன் ஒரு பகுதியாக மாறி உள்ளனர். இதனால் புதிய மற்றும் வலுவான சிவசேனா தற்போது உருவாகி வருகிறது.
பா.ஜனதா மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாலாசாகேப் பஞ்சி சிவசேனாவின் கூட்டணி அரசு மக்களை பிளவுபடுத்துவதை தவிர மராட்டியத்திற்கு வேறு எதுவும் செய்யவில்லை.
இந்த துரோகிகளின் அரசாங்கம் அடுத்த 2 மாதங்களில் கவிழ்ந்துவிடும். நம்மை விட்டு பிரிந்தவர்கள் துரோகிகள், எங்களுடன் கைகோர்த்து நிற்பவர்கள் உண்மையான சிவசேனா தொண்டர்கள்.
வேலையில்லா திண்டாட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் தொழில் திட்டங்களை பற்றி சிந்திக்காமல், எப்படி அரசியல் செய்யலாம் என்று யோசிப்பதிலேயே ஆளும்கட்சிகள் மும்முரமாக உள்ளன. இதுவரை ஏக்நாத் ஷிண்டே அரசு ஒரு பெண்ணை கூட மந்திரி சபையில் சேர்க்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சியை சேர்ந்த ராஜன் விச்சாரே, 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சி மீண்டும் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
- தொலைபேசி மூலம் மூன்று முறை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது
- மிரட்டல் விடுத்த நபரின் பேச்சு பகுப்பாய்வு செய்யப்பட்டு, அவரை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரின் காம்ரா சவுக் பகுதியில் மத்திய மந்திரி நிதின் கட்காரியின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு இன்று காலையில் தொலைபேசி மூலம் மூன்று முறை தொடர்பு கொண்டு பேசிய ஒரு நபர், மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஆபீசை குண்டு வைத்து தகர்க்கப்போவதாகவும் கூறி உள்ளார். இதனால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி நிதின் கட்காரியின் அலுவலகத்தில் இருந்து காவல்துறைக்கு புகார் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மிரட்டல் விடுத்த நபரின் பேச்சு பகுப்பாய்வு செய்யப்பட்டு, அவரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- தொடர்ந்து 4 நாட்கள் வங்கிச்சேவை பாதிக்கப்படும்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.
மும்பை :
வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பின் கூட்டம் மும்பையில் நடந்தது. அதில், இம்மாதம் 30 மற்றும் 31-ந் தேதிகளில் நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இம்மாதம் 28-ந் தேதி 4-வது சனிக்கிழமை என்பதாலும், 29-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் விடுமுறை நாட்கள் ஆகும். அதைத்தொடர்ந்து, 30, 31-ந் தேதிகளில் வேலைநிறுத்தம் நடப்பதால், தொடர்ந்து 4 நாட்கள் வங்கிச்சேவை பாதிக்கப்படும் என்று தெரிகிறது.
வேலைநிறுத்தம் குறித்து வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு துணை பொதுச்செயலாளர் நரேந்திர சவுகான் கூறியதாவது:-
சம்பள உயர்வு, வாரத்தில் 5 நாட்கள் வேலை, ஓய்வூதியத்தில் மாற்றம், தேசிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடுதல், புதிய ஊழியர்கள் தேர்வு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம்.
இந்த கோரிக்கைகளை இந்திய வங்கிகள் சங்கம் புறக்கணித்ததால், வேலைநிறுத்தத்தை தவிர வேறு வழி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
- இந்த தொடரில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இணைந்துள்ளனர்.
மும்பை:
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் (பிப். 9, பிப். 17, மார்ச் 1, மார்ச் 9) மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் (மார்ச் 17, மார்ச் 19, மார்ச் 22) விளையாடுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி விவரம் வருமாறு:
ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மான் கில், சிதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஆர்.அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், சூர்யகுமார் யாதவ்
- பத்தரே கிராமம் அருகே சின்னார் சீரடி நெடுஞ்சாலையில் பஸ் சென்ற போது லாரி மீது மோதியது. இதில் பஸ் கடுமையாக சேதமடைந்தது.
- விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
நாசிக்:
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் அம்பர்நாத்தில் இருந்து 50 பேருடன் சொகுசு பஸ் ஒன்று சீரடி நோக்கி சென்றது.
நாசிக்கில் உள்ள பத்தரே கிராமம் அருகே சின்னார் சீரடி நெடுஞ்சாலையில் பஸ் சென்ற போது லாரி மீது மோதியது. இதில் பஸ் கடுமையாக சேதமடைந்தது.
இந்த விபத்தில் 7 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட 10 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
- பாடலுக்கு ஏற்ப சைக்கிள் ஓட்டியபடியே அந்த இளம்பெண் கைகளால் நடனம் ஆடுகிறார்
- மஞ்சள் நிறத்தில் குர்தா அணிந்தபடி சைக்கிள் ஓட்டியவாறு அந்த பெண் கைகளை அசைத்து நடனம் ஆடுவது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மும்பை:
இந்தியில் பிரபலமான 'ஆப்கா அனா' என்ற பாடலுக்கு இளம்பெண் ஒருவர் சைக்கிள் ஓட்டியபடி நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பெண்ணின் பெயர் பஸ்ரா. இவர் சாலையில் கையை விட்டபடி சைக்கிள் ஓட்டி வருகிறார். அப்போது 'ஆப்கா அனா' என்ற பாடல் ஒலிக்கிறது.
இந்த பாடலுக்கு ஏற்ப சைக்கிள் ஓட்டியபடியே அந்த இளம்பெண் கைகளால் நடனம் ஆடுகிறார். மஞ்சள் நிறத்தில் குர்தா அணிந்தபடி சைக்கிள் ஓட்டியவாறு அந்த பெண் கைகளை அசைத்து நடனம் ஆடுவது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
- அவரது மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
- மத்திய அரசு பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளன.
மும்பை :
மனிதர்களின் உள் உறுப்புகள் பாதிக்கப்படும் போது, உடலை அறுக்காமல் சிறு துளையிட்டு கணினி மூலம் திரையில் பார்த்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இது 'லேப்ராஸ்கோபிக்' அல்லது சாவி துளை அறுவை சிகிச்சை என அழைக்கப்படுகிறது.
இந்த அறுவை சிகிச்சையை இந்தியாவில் முதல் முறையாக நடத்தியவர் டாக்டர் டெம்டன் எரிக் உத்வாடியா. இதன் காரணமாக அவர், 'லேப்ராஸ்கோபிக்' அறுவை சிகிச்சையின் இந்திய தந்தை என்று அழைக்கப்படுகிறார். 88 வயதான இவர் கடந்த சில மாதங்களாக வயது முதிர்வு பிரச்சினையால் பாதிக்கப்பட்டார். மும்பையில் உள்ள பிரீச் கேண்டி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.
மரணம் அடைந்த டெம்டன் எரிக் மும்பையில் பிறந்தவர். பார்சி மதத்தை சேர்ந்தவர்.
டாக்டர் டெம்டன் எரிக்கின் சிறந்த மருத்துவ சேவைக்காக அவருக்கு, மத்திய அரசு பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளன.
டாக்டர் டெம்டன் எரிக்கின் முன்னாள் மாணவரும், மும்பை ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றுபவருமான டாக்டர் தீப்ராஜ் பண்டார்கர் கூறியதாவது:-
இந்தியாவிலேயே முதல் முறையாக மும்பை ஜே.ஜே. மருத்துவமனையில் கடந்த 1990-ம் ஆண்டு மே 31-ந் தேதி லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையை டாக்டர் டெம்டன் எரிக் மேற்கொண்டார். இதுதான் ஆசியாவிலேயே முதல் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை. அவரின் புதிய முயற்சிக்கு எதிர்ப்புகள் கிளம்பின. எனினும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த அவர், நாடு முழுவதும் பயணம் செய்து மருத்துவ துறையினரை சந்தித்து லேப்ராஸ்கோபிக் சிகிச்சை முறையை பிரபலப்படுத்தினார். அதை ஒரு இயக்கமாகவே நடத்தி வெற்றி பெற்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
டாக்டர் டெம்டன் எரிக் மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்க பதிவில், ''மருத்துவ துறையில் அழிக்க முடியாத தடயத்தை டாக்டர் டெம்டன் எரிக் பதிவு செய்து சென்றிருக்கிறார். சிகிச்சை அளிக்கும் முறையில் அவரது புதுமையின் காரணமாக பரவலாக அறியப்பட்டுள்ளார். அவரது மறைவு மிகுந்த வேதனையை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், மருத்துவ துறையினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
- இந்திய ஒற்றுமை பயணத்தில் ராகுல் காந்தி டி ஷர்ட் அணிந்து செல்கிறார்.
- பா.ஜ.க.வினர் தொடர்ந்து அவரது டி-ஷர்ட் தொடர்பான விவாதத்தை உருவாக்கி வருகின்றனர்.
புதுடெல்லி:
வட இந்தியாவில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு அதிகமான உறைய வைக்கும் கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் நிலவி வருகிறது. தலைநகர் டெல்லியின் பல இடங்கள் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குச் சென்றுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஒற்றுமை பயணம் மேற்கொண்டு வருகிறார். கடும் குளிரிலும் டி- ஷர்ட் அணிந்து நடந்து செல்கிறார் என்று பலரால் வியப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஆனால் பா.ஜ.க.வினர் தொடர்ந்து அவரது டி-ஷர்ட் தொடர்பான விவாதத்தை உருவாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், தான் டி ஷர்ட் அணிவது ஏன் என்பது குறித்து ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக ராகுல் காந்தி கூறுகையில், மத்தியப்பிரதேசத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை பயணம் மேற்கொண்ட போது 3 ஏழைச் சிறுமிகள் கந்தலான ஆடை அணிந்து என்னிடம் ஓடி வந்தனர். நான் அந்தச் சிறுமிகளை தொட்டபோது கடும் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். நானும் அப்படி குளிரில் நடுங்கும் வரை டி ஷர்ட் மட்டுமே அணிவேன் என அந்நாளில் முடிவு செய்தேன். அன்றிலிருந்து டி ஷர்ட்டில் பாதயாத்திரை செல்கிறேன். டி ஷர்ட் மூலமாக அந்த வலியை வெளிப்படுத்துகிறேன் என தெரிவித்தார்.
- எல்லை பிரச்சினை தற்போது சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது.
- குடியரசு கட்சி மற்றும் சில கட்சிகளும் சோ்க்கப்படும்.
மும்பை :
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாக சென்றதால் மகாவிகாஸ் ஆட்சி கவிழ்ந்தது. தற்போது மகாராஷ்டிராவில் பா.ஜனதா ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
இந்தநிலையில் அடுத்து நடைபெற உள்ள பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மகாவிகாஸ் கூட்டணி தொடரும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
இது குறித்து நேற்று கோலாப்பூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:-
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் பால்தாக்கரே சிவசேனா வருகிற பாராளுமன்ற, சட்டமன்ற தோ்தலை ஒன்றாக சந்திக்க வேண்டும் என்ற புரிதல் உள்ளது. குடியரசு கட்சி மற்றும் சில கட்சிகளும் சோ்க்கப்படும்.
இதுதொடர்பான ஆலோசனைகள் நடந்து வருகிறது. பல விவகாரங்களில் நாங்கள் சேர்ந்து முடிவு எடுத்து உள்ளோம். எனவே எந்த பிரச்சினையும் இல்லை.
சிவசேனா உடைந்து உள்ள போதும், பெரும்பான்மையான தொண்டர்கள் உத்தவ் தாக்கரேக்கு ஆதரவாக உள்ளனர். பிளவின் போது எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஷிண்டே அணிக்கு சென்று இருக்கலாம். ஆனால் தேர்தல் வரும் போது மக்களின் மனநிலையை அவர்கள் புரிந்து கொள்வார்கள். மகாராஷ்டிரா-கர்நாடக எல்லை பிரச்சினை தொடர்பாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.
எல்லை பிரச்சினை தற்போது சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. அந்த வழக்கை மூத்த சட்ட வல்லுநர்களை வைத்து நமது தரப்பு வாதத்தை பலமாக முன்வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






