என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பெயரும் உள்ளது.
    • 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், ஷிண்டே அரசு கவிழும் அபாயத்தை சந்திக்கும்.

    மும்பை :

    மகாராஷ்டிராவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

    இரு கட்சிகளும் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்-மந்திரி பதவியை தலா 2½ ஆண்டு காலம் சுழற்றி முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது. ஆனால் முதல்-மந்திரி பதவியை சிவசேனாவுக்கு 2½ ஆண்டு காலம் விட்டுக்கொடுக்க பா.ஜனதா மறுத்து விட்டது.

    இதனால் நீண்ட கால நட்பு கட்சிகளாக விளங்கிய பா.ஜனதா- சிவசேனா கூட்டணி எதிர்பாராத வகையில் உடைந்தது. சிவசேனா கட்சி தனது இந்துத்வா கொள்கைக்கு முரண்பட்ட தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கைகோர்த்து அதிரடியாக ஆட்சி அமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனார்.

    இந்த தடாலடி அரசியல் திருப்பத்தை எதிர்பார்க்காத பா.ஜனதா, உத்தவ் தாக்கரே அரசை கவிழ்க்க திரைமறைவில் காய்நகர்த்தி வந்தது. அந்த வலையில் சிவசேனாவின் மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே விழுந்தார். ஏக்நாத் ஷிண்டே கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் பலருடன் திடீரென மாயமானார். அவர்கள் குஜராத் மாநிலம் சூரத் சென்று, பின்னர் அசாம் தலைநகர் கவுகாத்தியில் முகாமிட்டனர்.

    சிவனோவின் 57 எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் ஷிண்டே பக்கம் சாய்ந்ததால், உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்தது. சிவசேனாவின் அதிருப்தி தலைவரான ஏக்நாத் ஷிண்டேக்கு முதல்-மந்திரி பதவியை வழங்கி பா.ஜனதா மற்றொரு அரசியல் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன்படி கடந்த ஆண்டு ஜூன் 30-ந் தேதி சிவசேனா அதிருப்தி அணி- பா.ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்றது.

    இந்த தருணங்களில் நடந்த அரசியல் நெருக்கடிகள் தொடர்பாக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இதில் முக்கியமாக ஷிண்டே தரப்பை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய உத்தவ் தாக்கரே அரசு எடுத்த நடவடிக்கை, கட்சி தாவல் விவகாரம், கவர்னர் மற்றும் சபாநாயகரின் அதிகாரத்தில் எழும் கேள்விகள் போன்ற விஷயங்களும் அடங்கும்.

    இந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வந்தது. கடந்த மார்ச் 16-ந் தேதி விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தீர்ப்பு இன்று (வியாழக்கிழமை) வெளியாக இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு நேற்று அறிவித்தது.

    தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் பட்டியலில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பெயரும் உள்ளது. இதனால் 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், ஷிண்டே அரசு கவிழும் அபாயத்தை சந்திக்கும்.

    எனவே சுப்ரீம் கோர்ட்டில் வெளியாகும் இன்றைய தீர்ப்பு மகாராஷ்டிரா அரசியலில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை எகிற செய்துள்ளது.

    இதற்கிடையே சிவசேனாவின் சின்னம் மற்றும் கட்சி பெயரை முதல்-மந்திரி ஷிண்டே வசம் தேர்தல் ஆணையம் ஒப்படைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • சிலர் எழுதியதற்கு நாங்கள் முக்கியதுவம் கொடுக்க மாட்டோம்.
    • நாங்கள் செய்வது எங்களுக்கு தெரியும்.

    மும்பை :

    உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில் சரத்பவார் அவரது அரசியல் வாரிசை உருவாக்க தவறிவிட்டதாக கூறப்பட்டு இருந்தது. மேலும் அதில், " சரத்பவார் தேசியவாத காங்கிரசின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உருவாக்கிய கமிட்டியில் ஆளும் பா.ஜனதா கட்சிக்கு தாவ விருப்பம் உள்ள தலைவர்களின் பெயர்களும் இடம் பெற்று இருந்தது.

    கட்சியினர் கொடுத்த அழுத்தம் காரணமாக அந்த தலைவர்கள் சரத்பவார் தலைவர் பதவியில் தொடர வேண்டும் என்ற முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்" என கூறப்பட்டு இருந்தது.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் சரத்பவார் கூறியதாவது:-

    நாங்கள் புதிய தலைமையை உருவாக்கினோமா இல்லையா என்பது குறித்து சிலர் எழுதியதற்கு நாங்கள் முக்கியதுவம் கொடுக்க மாட்டோம். அது அவர்களின் எழுத்து. அதை நாங்கள் நிராகரிக்கிறோம். நாங்கள் செய்வது எங்களுக்கு தெரியும். அது எங்களுக்கு திருப்தியாக உள்ளது.

    நான் இணை மந்திரியாக இருந்து பின்னர் கேபினட் மந்திரியானேன். ஆனால் 1999-ம் ஆண்டு காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்த போது நான் இளைஞர்களாக இருந்த ஜெயந்த் பாட்டீல், அஜித் பவார், திலீப் வால்சே பாட்டீல், ஆர்.ஆர். பாட்டீலை கேபினட் மந்திகளாக ஆக்கினேன். அவர்களின் பணியை ஒட்டுமொத்த மராட்டியமும் பார்த்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த படத்துக்கு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா ஆதரவு தெரிவித்துள்ளன.
    • ‘தி கேரளா ஸ்டோரி' படம் மும்பையில் வசூலை குவித்து வருகிறது.

    மும்பை :

    இந்தியில் வெளியான 'தி கேரளா ஸ்டோரி' படம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், சுதீப்தோ சென் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் நடிகைகள் அடா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர்.

    கேரளாவில் மாயமான பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேருவது போல படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் இந்த சினிமா திரையிடுவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த படத்துக்கு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா ஆதரவு தெரிவித்துள்ளன. மும்பையில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தை பொதுமக்கள், தொண்டர்கள் இலவசமாக பார்க்க பா.ஜனதா தலைவர்கள் டிக்கெட் எடுத்து கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக மும்பையை சேர்ந்த பா.ஜனதா மந்திரிகள் மங்கல் பிரதாப் லோதா, அதுல் பத்கால்கர், எம்.எல்.ஏ.க்கள் சுனில் ரானே, பரக் ஷா ஆகியோர் தொண்டர்கள் இலவசமாக படம் பார்க்க ஏற்பாடு செய்தனர். இதன் காரணமாக 'தி கேரளா ஸ்டோரி' படம் மும்பையில் வசூலை குவித்து வருகிறது.

    இந்தநிலையில் 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த படத்தின் தயாரிப்பாளரை பொது வெளியில் தூக்கில் போட வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஜிதேந்திர அவாத் ஆவேசமாக கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "அவர்கள் கேரளாவின் பெயரை மட்டும் கெடுக்கவில்லை, அந்த மாநிலத்தின் பெண்களை அவமதித்து உள்ளனர். அவர்கள் 32 ஆயிரம் கேரள பெண்கள் மாயமாகி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக கூறுகின்றனர். ஆனால் உண்மையில் சேர்ந்தவர்கள் 3 பேர் தான். அந்த படத்தின் தயாரிப்பாளரை பொதுவெளியில் தூக்கில் போட வேண்டும்" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சகிப்பு தன்மை மற்றும் மதச்சார்பின்மை தான் நமது நாட்டின் ஆன்மா
    • பா.ஜனதா மத குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.

    மும்பை

    மராட்டியத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாவுராவ் பாட்டீலின் 64-வது நினைவு நாளையொட்டி சத்தாராவில் உள்ள அவரது கல்லறையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சகிப்பு தன்மை மற்றும் மதச்சார்பின்மை தான் நமது நாட்டின் ஆன்மா. ஆனால் ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் இதை அழிக்கும் நிலைப்பாட்டை பா.ஜனதா எடுத்து உள்ளது. 'ஆபரேஷன் தாமரை' நாட்டின் ஆன்மாவை அழிக்கிறது. பா.ஜனதா மத குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.

    ஆட்சி அதிகாரம் கிடைக்கவில்லை எனில் அதற்காக எதையும் செய்யும் பா.ஜனதாவின் கொள்கை ஆபத்தானது. அது அதிகார மோதலை அதிகரிக்கிறது. பா.ஜனதா மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை உடைத்து மராட்டியம், கர்நாடகா, மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைத்து உள்ளது.

    கர்நாடகத்தில் தேசியவாத காங்கிரஸ் குறைந்த தொகுதிகளில் தான் போட்டியிடுகிறது. காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தான் போட்டியிடுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலில் ஆடிய பெங்களூரு 199 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய மும்பை 200 ரன்கள் எடுத்து வென்றது.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 68 ரன்களும், டூ பிளசிஸ் 41 பந்துகளில் 65 ரன்களும் விளாசினர். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 120 ரன்கள் சேர்த்தது.

    மும்பை அணி சார்பில் ஜேசன் பெஹ்ரண்டாப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கேமரான் கிரீன், கிறிஸ் ஜோர்டான், குமார் கார்த்திகேயா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா 7 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இஷான் கிஷன் 21 பந்தில் 42 ரன்கள் சேர்த்தார்.

    3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ், நேஹால் வதேரா ஜோடி சிக்சர், பவுனட்ரிகளாக விளாசியது. இந்த ஜோடி 140 ரன்கள் சேர்த்தது. சூர்யகுமார் யாதவ் 35 பந்தில் 6 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் குவித்தார்.

    இறுதியில், மும்பை அணி 16.3 ஓவரில் 200 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. வதேரா 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதன்மூலம் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 3ம் இடத்துக்கு முன்னேறியது.

    • மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 68 ரன்களும், டூ பிளெசிஸ் 41 பந்துகளில் 65 ரன்களும் விளாசினர்.
    • 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.

    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.

    துவக்க வீரர் விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து சில நிமிடங்களில் அனுஜ் ராவத் 6 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் கேப்டன் டூ பிளெசிஸ்-கிளென் மேக்ஸ்வெல் ஜோடி அபாரமாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது. மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 68 ரன்களும், டூ பிளெசிஸ் 41 பந்துகளில் 65 ரன்களும் விளாசினர். மூன்றாவது விக்கெட்டுக்கு இவர்கள் 120 ரன்கள் சேர்த்தனர்.

    இதேபோல் அதிரடி காட்டிய தினேஷ் கார்த்திக் 30 ரன்கள் குவிக்க, பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் சேர்த்தது.

    மும்பை அணி தரப்பில் ஜேசன் பெஹ்ரண்டாப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கேமரான் கிரீன், கிறிஸ் ஜோர்டான், குமார் கார்த்திகேயா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது.

    • மேலும் தகவல்களை பெறவேண்டியிருப்பதால் காவலை நீட்டிக்கும்படி ஏடிஎஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
    • பாகிஸ்தான் உளவுத்துறை விரித்த மோக வலையில் அவர் சிக்கினாரா? என்பது விசாரணையின் முடிவில் தெரிய வரும்.

    புனே:

    புனேயில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) பணியாற்றி வரும் விஞ்ஞானி பிரதீப் குருல்கர் (வயது 59), நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தான் ஏஜெண்டுகளுக்கு பகிர்ந்ததாக கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

    குருல்கர் பாகிஸ்தான் உளவுத்துறையினருடன் தொடர்பில் இருந்தபோது, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசியங்கள் மற்றும் சில முக்கிய விஷயங்களை வாட்ஸ் ஆப் மெசேஜ், வாய்ஸ் கால், வீடியோ கால் மூலமாக பாகிஸ்தான் உளவுத் துறையினருடன் பகிர்ந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மகாராஷ்டிர மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் (ஏடிஎஸ்) தெரிவித்துள்ளனர்.

    மே 3ம் தேதி கைது செய்யப்பட்ட குருல்கர் முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு மே 4ம் தேதி புனே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை செவ்வாய்க்கிழமை வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி ஏடிஎஸ் அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

    பாகிஸ்தான் உளவுத் துறையினர் விரித்த மோக வலையில் (ஹனிட்ராப்) குருல்கர் சிக்கி அதன்மூலம் தகவல்களை தெரிவித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாகிஸ்தான் உளவுத்துறை விரித்த மோக வலையில் அவர் சிக்கினாரா? என்பது விசாரணையின் முடிவில் தெரிய வரும்.

    விசாரணைக் காவல் முடிவடைந்த நிலையில, இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் மேலும் விசாரித்து தகவல்களை பெறவேண்டியிருப்பதால் காவலை நீட்டிக்கும்படி ஏடிஎஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி, மே 15ம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார். 

    • கர்நாடகாவில் 10-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • நாட்டின் ஒட்டுமொத்த வரைபடத்தை பார்த்தால் 5 முதல் 6 மாநிலங்களில் மட்டுமே பா.ஜனதா ஆட்சியில் உள்ளது.

    மும்பை :

    கர்நாடகாவில் வருகிற 10-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எனக்கு கிடைத்த தகவலின்படி கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும். நாம் கேரளாவில் இருந்து தொடங்குவோம்.

    கேரளாவில் பா.ஜனதா ஆட்சியில் இருக்கிறதா? தமிழ்நாட்டில்? கர்நாடகாவை பற்றி தற்போது சொல்லி இருக்கிறேன். தெலுங்கானாவில் பா.ஜனதா இருக்கிறதா? ஆந்திராவில்? ஏக்நாத் ஷிண்டேவின் புத்திசாலித்தனத்தால் அவர்களால் மராட்டியத்தில் ஆட்சியை பிடிக்க முடிந்தது.

    மத்தியபிரதேசத்தில் கமல்நாத் முதல்-மந்திரியாக இருந்தபோது சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விலைக்கு வாங்கப்பட்டதால் அங்கு பா.ஜனதா ஆட்சிக்கு வந்தது.

    ராஜஸ்தான், அரியானா, டெல்லி, பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா இல்லை. நாட்டின் ஒட்டுமொத்த வரைபடத்தை பார்த்தால் 5 முதல் 6 மாநிலங்களில் மட்டுமே பா.ஜனதா ஆட்சியில் உள்ளது. மீதமுள்ள மாநிலங்களில் பா.ஜனதா அல்லாத அரசு தான் உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் என்ன நடக்கும் என்று கணிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உயர்மட்டக்குழு கூட்டத்தில், சரத்பவார் ராஜினாமாவை ஏற்க முடியாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • அடுத்த தலைவர் தேர்வு குறித்த எந்த திட்டமும் இன்றைய கூட்டத்தில் முன்வைக்கப்படவில்லை.

    மும்பை:

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் (வயது 82) பதவி விலக விரும்புவதாக சமீபத்தில் அறிவித்தார். அவரது அறிவிப்பு கட்சி தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீடிக்க சரத்பவார் வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சரத் பவார் பதவியில் நீடிக்க வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவமும் அரங்கேறியது.

    கட்சியின் சூழல் குறித்து மூத்த தலைவர்கள் அவரிடம் எடுத்துரைத்தனர். இதையடுத்து தனது முடிவை மறுபரிசீலனை செய்ய உள்ளதாகவும், அதற்கு சிறிது கால அவகாசம் வேண்டும் எனவும் சரத்பவார் கூறியிருந்தார்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சரத்பவார் ராஜினாமாவை ஏற்க முடியாது என்றும், தேசியவாத காங்கிரஸ் தலைவராக சரத்பவாரே தொடர வேண்டும் என வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சரத் பவார் பதவி விலகுவதை யாருமே விரும்பவில்லை என்பதால், அடுத்த தலைவர் தேர்வு குறித்த எந்த திட்டமும் இன்றைய கூட்டத்தில் முன்வைக்கப்படவில்லை.

    தனது முடிவை உயர்மட்டக்குழு நிராகரித்த நிலையில், இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த சரத் பவார், தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை திரும்ப பெற்றதாக அறிவித்தார். புதிய உற்சாகத்துடன் கட்சிக்காக பணியாற்ற உள்ளதாகவும் கூறினார். 

    • சரத் பவார் பதவியில் நீடிக்க வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அரங்கேறியது.
    • அடுத்த தலைவர் தேர்வு குறித்த எந்த திட்டமும் இன்றைய கூட்டத்தில் முன்வைக்கப்படவில்லை.

    மும்பை:

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் (வயது 82) பதவி விலக விரும்புவதாக அறிவித்தார். அவரது அறிவிப்பு கட்சி தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத் பவார் நீடிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.  சரத் பவார் பதவியில் நீடிக்க வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவமும் அரங்கேறியது.

    கட்சியின் சூழல் குறித்து மூத்த தலைவர்கள் அவரிடம் எடுத்துரைத்தனர். இதையடுத்து தனது முடிவை மறுபரிசீலனை செய்ய உள்ளதாகவும், அதற்கு சிறிது கால அவகாசம் வேண்டும் எனவும் சரத்பவார் கூறியிருக்கிறார்.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் தலைமையிலான இந்த கூட்டத்தில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே, அண்ணன் மகன் அஜித் பவார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், சரத்பவாரின் ராஜினாமாவை ஏற்க முடியாது என்றும், தேசியவாத காங்கிரஸ் தலைவராக சரத் பவாரே தொடர வேண்டும் என வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    சரத் பவார் பதவி விலகுவதை யாருமே விரும்பவில்லை என்பதால், அடுத்த தலைவர் தேர்வு குறித்த எந்த திட்டமும் இன்றைய கூட்டத்தில் முன்வைக்கப்படவில்லை.

    இன்றைய தீர்மானம், கட்சியில் சரத் பவாரின் ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இதையடுத்து கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜெண்டுடன் தொடர்பில் இருந்ததாக தகவல்.
    • தனது பதவியை தவறாக பயன்படுத்தி உள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

    புனே:

    புனேயில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) பணியாற்றி வரும் விஞ்ஞானி பிரதீப் குருல்கர், பாகிஸ்தான் ஏஜெண்டுகளுக்கு முக்கிய தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அவர் பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜெண்டுடன், வாட்ஸ்அப் மற்றும் வீடியோ கால் மூலம் தொடர்பில் இருந்திருக்கலாம் என பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    தன்னிடம் உள்ள ரகசியங்கள் எதிரி நாட்டுக்கு கிடைத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிந்திருந்தும், அந்த விஞ்ஞானி, தனது பதவியை தவறாக பயன்படுத்தி, தகவல்களை எதிரி நாட்டுக்கு வழங்கி உள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

    மும்பை காலாசவுகியில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில், அந்த விஞ்ஞானி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

    • புதிய தலைவரை தேர்வு செய்ய கமிட்டி கூட்டம் இன்று நடக்கிறது.
    • சுப்ரியா சுலே தலைவர் பதவிக்கு தேர்வு ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    மும்பை :

    82 வயதான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடந்த செவ்வாய்க்கிழமை மும்பை ஒய்.பி. சவான் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டு பேசுகையில், தான் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தடாலடி அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அங்கு கூடியிருந்த கட்சி தலைவர்கள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முடிவை திரும்ப பெற வேண்டும் என்று கோஷமிட்டு வலியுறுத்தினர்.

    கட்சி தொண்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்றும் ஒய்.பி. சவான் அரங்கு முன் திரண்டு தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.

    அப்போது, சரத்பவார் கட்சி தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும், தேவைப்பட்டால் செயல் தலைவரை நியமிக்க வேண்டும் என்று தொண்டர்கள் வலியுறுத்தினர். அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற மற்றும் மராட்டிய சட்டமன்ற தேர்தல் வரையாவது சரத்பவார் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று மேலும் பல தொண்டர்கள் வலியுறுத்தி கோஷம் போட்டனர்.

    அப்போது அங்கு வந்த சரத்பவார் தொண்டர்களை சமரசப்படுத்தும் விதமாக அவர்கள் மத்தியில் பேசியதாவது:-

    உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். எனது முடிவை எடுக்கும் முன் நான் உங்களின் நம்பிக்கையை பெற்று இருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்திருந்தால், எனது முடிவை நீங்கள் அனுமதித்து இருக்க மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும்.

    கட்சியின் எதிர்காலத்திற்காகவும், புதிய தலைமையை உருவாக்குவதற்காகவும் நான் ராஜினாமா முடிவை எடுத்தேன். இன்னும் ஓரிரு நாட்களில் எனது இறுதி முடிவை அறிவிப்பேன். நீங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தேசியவாத காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய சரத்பவாரால் நியமிக்கப்பட்ட கமிட்டி கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதில் சரத்பவார் பதவி நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என கட்சியின் செய்தி தொடர்பாளர் மகேஷ் தபசே கூறினார்.

    சரத்பவார் பதவி விலகல் முடிவை திரும்ப பெற சம்மதிக்காவிட்டால், புதிய தலைவர் தேர்வு பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி. அந்த பதவிக்கு தேர்வு ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சரத்பவாரின் அண்ணன் மகனும், மராட்டிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் மற்றும் சரத்பவாரின் குடும்பம் சாராத சிலரும் கட்சி தலைவர் போட்டியில் உள்ளனர்.

    ×