search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாகிஸ்தானுடன் தொடர்பு.. மோக வலையில் சிக்கியதாக சந்தேகம்.. டிஆர்டிஓ விஞ்ஞானியின் காவல் நீட்டிப்பு
    X

    பாகிஸ்தானுடன் தொடர்பு.. மோக வலையில் சிக்கியதாக சந்தேகம்.. டிஆர்டிஓ விஞ்ஞானியின் காவல் நீட்டிப்பு

    • மேலும் தகவல்களை பெறவேண்டியிருப்பதால் காவலை நீட்டிக்கும்படி ஏடிஎஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
    • பாகிஸ்தான் உளவுத்துறை விரித்த மோக வலையில் அவர் சிக்கினாரா? என்பது விசாரணையின் முடிவில் தெரிய வரும்.

    புனே:

    புனேயில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) பணியாற்றி வரும் விஞ்ஞானி பிரதீப் குருல்கர் (வயது 59), நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தான் ஏஜெண்டுகளுக்கு பகிர்ந்ததாக கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

    குருல்கர் பாகிஸ்தான் உளவுத்துறையினருடன் தொடர்பில் இருந்தபோது, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசியங்கள் மற்றும் சில முக்கிய விஷயங்களை வாட்ஸ் ஆப் மெசேஜ், வாய்ஸ் கால், வீடியோ கால் மூலமாக பாகிஸ்தான் உளவுத் துறையினருடன் பகிர்ந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மகாராஷ்டிர மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் (ஏடிஎஸ்) தெரிவித்துள்ளனர்.

    மே 3ம் தேதி கைது செய்யப்பட்ட குருல்கர் முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு மே 4ம் தேதி புனே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை செவ்வாய்க்கிழமை வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி ஏடிஎஸ் அதிகாரிகள் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

    பாகிஸ்தான் உளவுத் துறையினர் விரித்த மோக வலையில் (ஹனிட்ராப்) குருல்கர் சிக்கி அதன்மூலம் தகவல்களை தெரிவித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாகிஸ்தான் உளவுத்துறை விரித்த மோக வலையில் அவர் சிக்கினாரா? என்பது விசாரணையின் முடிவில் தெரிய வரும்.

    விசாரணைக் காவல் முடிவடைந்த நிலையில, இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் மேலும் விசாரித்து தகவல்களை பெறவேண்டியிருப்பதால் காவலை நீட்டிக்கும்படி ஏடிஎஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி, மே 15ம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

    Next Story
    ×