என் மலர்tooltip icon

    ஜார்கண்ட்

    • ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இருந்து வருகிறது.
    • ரெங்கரஹட்டி கிராமத்தில் சோதனை நடத்தி மாவோயிஸ்டு குழுவினர் கமாண்டர் ஜுடு கோடா, பிரிசிங் என்ற சோட்டா கோடா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இருந்து வருகிறது. அவர்களை பிடித்து போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஜார்க்கண்ட் மேற்கு பகுதியில் உள்ள சிங்பூம் மாவட்டத்தில் சில மாவோயிஸ்டுகள் தங்களது கமாண்டருக்கு வெடிமருந்துகளை வழங்க செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பாரிபோகாரி கிராமத்தில் சோதனை நடத்தி கிஷுன் ஹெம்ப்ராம் என்ற மாவோயிஸ்டை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடமிருந்து டெட்டனேட்டர் மற்றும் ஜெலட்டின் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான மாவோயிஸ்டு கொடுத்த தகவலின்பேரில் டோண்டோ போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மேலும் மூன்று மாவோயிஸ்டுகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் ரெங்கரஹட்டி கிராமத்தில் சோதனை நடத்தி மாவோயிஸ்டு குழுவினர் கமாண்டர் ஜுடு கோடா, பிரிசிங் என்ற சோட்டா கோடா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கடந்த 12-ந்தேதி சிறுகீகிர் கிராமத்தில் சாலை கட்டுமானப் பணியில் ஈடுபட்ட வாகனங்களுக்கு தீ வைத்ததை ஒப்புக் கொண்டனர். இவர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதம் தும்ஹாகா வனப்பகுதியில் நடந்த என்கவுண்டரிலும், 2021, 2022-ம் ஆகிய ஆண்டுகளில் நடந்த என்கவுண்டரிலும் தப்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சதார் மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
    • கால்நடை பராமரிப்புத் துறையினர், பறவைகள் இறந்து கிடப்பதைக் கண்டால், தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

    ஜார்கண்ட் மாநிலத்தில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பிப்ரவரி 2ம் தேதி பண்ணையில் பறவைகள் இறக்கத் தொடங்கியதை அடுத்து, அதன் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு விலங்கு நோய்களுக்கான தேசிய நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.

    இதுபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு நடத்தும் கோழி பண்ணையில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் எதிரொலியால், பொகாரோ மாவட்டத்தில் உள்ள பண்ணையில் கோழிகள் மற்றும் வாத்துகள் உள்பட கிட்டத்தட்ட 4,000 பறவைகளை கொன்று அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    லோஹாஞ்சலில் உள்ள பண்ணையில் புரதம் நிறைந்த கோழி இனமான கடக்நாத் இனத்தில் பறவைக் காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில், 800 பறவைகள் இறந்ததாகவும், 103 பறவைகள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து, ராஞ்சியில் உள்ள கால்நடை சுகாதாரம் மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பிபின் பிஹாரி மஹ்தா கூறுகையில், "பண்ணையின் ஒரு கி.மீ., சுற்றளவில் பாதிக்கப்பட்ட பகுதியில் கோழிகள் மற்றும் வாத்துகள் உட்பட மொத்தம் 3,856 பறவைகளை அழிக்கும் பணி நேற்று மாலை தொடங்கியது. இந்த நடவடிக்கை நீண்ட நேரம் எடுக்கும் என்பதால், ஞாயிற்றுக்கிழமையும் அழிப்பு பணி தொடரும்.

    கோழிகள் மற்றும் வாத்துகளை அழிக்கும் நபர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது" என்றார்.

    மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே பண்ணையிலிருந்து 1 கிமீ சுற்றளவில் உள்ள பகுதிகளை பாதிக்கப்பட்ட மண்டலமாகவும், 10 கிமீ சுற்றளவில் உள்ள பகுதிகள் கண்காணிப்பு மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் கோழி மற்றும் வாத்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மாநிலம் உஷார் நிலையில் இருப்பதாக கூடுதல் தலைமைச் செயலாளர் (சுகாதாரம்) அருண்குமார் சிங் முன்னதாக தெரிவித்தார்.

    மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளை கண்காணிக்கவும், பெரிய பண்ணைகளில் கோழி, வாத்து மாதிரிகளை எடுக்கவும் மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் மாதிரிகளை சேகரிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சதார் மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

    கடுமையான மேல் முதுகுவலி, காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல், சளி மற்றும் சளியில் இரத்தம் ஆகியவை மனிதர்களிடையே நோய்த்தொற்றின் அறிகுறிகளாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கால்நடை பராமரிப்புத் துறையினர், பறவைகள் இறந்து கிடப்பதைக் கண்டால், தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

    • காங்கிரஸ் தலைவர் ஒருவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.
    • இச்சம்பவம் ஜார்க்கண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கரில் காங்கிரஸ் தலைவர் ஒருவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காங்கிரஸ் தலைவர் பிட்கா பவாரி என்பவர் பார்ககோன் எம்எல்ஏ அம்பா பிரசாத்தின் உதவியாளராக இருந்து வந்தார்.

    இந்நிலையில், நேற்று மாலை சவுந்தா பஸ்தியில் உள்ள பெட்ரோல் பங்கில் பவாரி இருந்தபோது, பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் அவர்மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதன்பின் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

    துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த பவாரி உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவத்திற்கு எம்எல்ஏ அம்பா பிரசாத், முன்னாள் அமைச்சர் யோகேந்திர ஷா ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.

    • பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த 15-ம் தேதி சிபி ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்தார்.
    • ஜார்க்கண்ட்டின் 11வது கவர்னராக சிபி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

    ராஞ்சி:

    தமிழ்நாடு பாஜக மூத்த தலைவராக செயல்பட்டு வந்தவர் சிபி ராதாகிருஷ்ணன். இவரை ஜார்க்கண்ட்டின் புதிய கவர்னராக நியமித்து ஜனாதிபதி கடந்த 12-ம் தேதி உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த 15-ம் தேதி சிபி ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்தார். மேலும், அவர் கவர்னராக பொறுப்பேற்க ஜார்க்கண்ட் சென்றார். இந்நிலையில், ஜார்க்கண்டின் புதிய கவர்னராக சிபி ராதாகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

    ஜார்க்கண்ட்டின் 11வது கவர்னராக சிபி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு பொறுப்பு நீதிபதி பதவி பிரமானம் செய்து வைத்தார்.

    இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்-மந்திரி ஹெமந்த் சோரன், அமைச்சரவை மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உடன் இருந்தனர்.

    • யாராவது உண்மையைப் பேசினாலோ, அதைப் பற்றி எழுதினாலோ அவர்களை சிறைக்கு அனுப்புகிறார்கள்.
    • பிரதமர் அதானிக்காக பணியாற்றுகிறார், ஏழை மக்களுக்காக அல்ல என கார்கே விமர்சனம்

    ராஞ்சி:

    மத்திய அரசின் கொள்கைகள் மக்கள் விரோதமானவை என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது. இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் வீடு வீடாக சென்று மக்களிடையே எடுத்துரைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சாகேப்கஞ்ச் மாவட்டம் பாகூரில் காங்கிரஸ் கட்சியின் இந்த பிரசார பயணத்தை கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று தொடங்கி வைத்தார்.

    இக்கூட்டத்தில் பேசிய கார்கே, பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாக சாடியதுடன், நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லை என்று குற்றம் சாட்டினார். அவர் பேசியதாவது:-

    பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியிலும் பேச்சு சுதந்திரம் கிடையாது. யாராவது உண்மையைப் பேசினாலோ, அதைப் பற்றி எழுதினாலோ அவர்களை சிறைக்கு அனுப்புகிறார்கள்.

    பிரதமர் நரேந்திர மோடியின் நண்பரான அதானியின் சொத்து மதிப்பு 2019ல் ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது. இப்போது, 13 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பிரதமர் அதானிக்காக பணியாற்றுகிறார், ஏழை மக்களுக்காக அல்ல. அதானி குழுமத்திற்கு எல்ஐசி ரூ.16,000 கோடியும், பாரத ஸ்டேட் வங்கி ரூ.82,000 கோடியும் வழங்கி உள்ளது. இந்த விஷயத்தை ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் எழுப்பினார். அது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாக தகவல்
    • சிபு சோரன் மூன்று முறை ஜார்க்கண்ட் முதல்வராக பதவி வகித்துள்ளார்.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை உறுப்பினருமான சிபு சோரன் (வயது 79) உடல்நலக்குறைவு காரணமாக, ராஞ்சி நகரில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.

    மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாகவும், அவருக்கு தொடர்ந்து பரிசோதனை செய்யப்படுவதாகவும் மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறியிருக்கிறார்.

    சிபு சோரன் மூன்று முறை ஜார்க்கண்ட் முதல்வராக பதவி வகித்துள்ளார். 2005ல் 10 நாட்கள் மட்டுமே அவர் பதவி வகித்தார். அதன்பின்ன் கடந்த 2008 முதல் 2009 வரையிலும் பின்னர் 2009-2010 காலகட்டத்திலும் முதல்வராக பதவி வகித்து உள்ளார். மத்திய நிலக்கரித்துறை மந்திரியாகவும் பதவி வகித்து உள்ளார்.

    தற்போது அவரது மகனும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

    • ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டது.
    • தீ விபத்தில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட14 பேர் பலியாகினர்.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள ஜோராபடக் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதன் இரண்டாவது மாடியில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடினர்.

    இந்த தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட14 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின.

    கட்டடத்திற்குள் மேலும் பலர் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை கூடும் என அஞ்சப்படுகிறது. தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    தீவிபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு முதல் மந்திரி ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 14 பேர் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • இறந்தவர்களில் 4 பேர் அடையாளம் காணப்பட்டது. 5வது நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் பேங்க் மோரில் மருத்துவமனையுடன் கூடிய நர்சிங் ஹோம் பகுதி இருக்கிறது.

    தலைநகர் ராஞ்சியில் இருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் இந்த பகுதி இருக்கிறது. இன்று அதிகாலை 2 மணியளவில் இங்குள்ள மருத்துவமனை குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஸ்டோர் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறினார்கள். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு வந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இந்த தீ விபத்தில் 2 மருத்துவர்கள் உள்பட 5 பேர் பலியானார்கள். மருந்து நிறுவன உரிமையாளர் மருத்துவர் விகாஸ் ஹஸ்ரா, அவரது மனைவி டாக்டர் பிரேமா, உரிமையாளரின் மருமகன் சோஹன் கமாரி, வீட்டு பெண் தாரா தேவி ஆகியோர் தீ விபத்தில் மூச்சு திணறி இறந்து உள்ளனர்.

    இறந்தவர்களில் 4 பேர் அடையாளம் காணப்பட்டது. 5வது நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது.
    • இரு அணிகளிடையிலான முதல் டி20 போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று நடக்கிறது.

    ராஞ்சி:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது.

    இந்நிலையில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 டி20 தொடரின் முதல் ஆட்டம் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று நடக்கிறது.

    இந்திய அணி சமீபத்தில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இதனால் நியூசிலாந்துக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாடும்.

    டி20 போட்டியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவ் ஜொலிக்கிறார். அவர் அதிரடியாக ஆட ஆரம்பித்தால் கட்டுப்படுத்துவது கடினம். ஷுப்மன் கில், இஷான் கிஷன், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, ருதுராஜ் கெய்க்வாட் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் உள்ளனர். உள்ளூர் போட்டியில் அசத்திய பிரித்விஷாவுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. பந்து வீச்சில் அர்தீப்சிங், சாஹல், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர் உள்ளனர்.

    நியூசிலாந்து டி20 அணிக்கு சான்ட்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் தொடரை மோசமாக இழந்த நியூசிலாந்து அணி அதற்கு டி20 தொடரில் பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கிறது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அந்த அணி சமபலத்துடன் திகழ்கிறது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், ராஞ்சியில் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி வீரர்களை முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி நேரில் சந்தித்து ஊக்கப்படுத்தினார்.

    இன்றைய ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • மேற்கு சிங்பும் மாவட்டத்தின் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் ஒழிப்பு வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
    • மத்திய ஆயுதப்படையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் காயம் அடைந்தார்.

    சைபாசா:

    ஜார்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பும் மாவட்டத்தின் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் ஒழிப்பு வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அன்ஜன்பேடா கிராம வனப்பகுதியில் அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தியபோது பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த நவீன வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறியது.

    இதில் மத்திய ஆயுதப்படையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் காயம் அடைந்தார். உடனடியாக அவர் ராஞ்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். காயம் அடைந்தவர், 197-வது பட்டாலியன் பிரிவில் பணியாற்றிய இன்சார் அலி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் மேலும் சில வெடிகுண்டுகள் கைப்பற்றட்டதாகவும், அவை செயலிழக்க வைக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    இதேபோல கோயில்கேரா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வனப்பகுதியில் நேற்று முன்தினம், 13 வயது சிறுவன் ஒருவன் நவீன வெடிபொருள் வெடித்ததில் படுகாயமடைந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. குமார் ஜெய்மங்கள் சிங் மீது பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்து இருந்தது.
    • மேற்கு வங்காளத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. குமார் ஜெய்மங்கள் சிங். இவர் மீது பண மோசடி வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்து இருந்தது. இந்த நிலையில் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். 9 மணி நேர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    மேற்கு வங்காளத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டது.

    • கணு முண்டா வீட்டில் தனியாக இருந்த போது அவரை சாகர் முண்டா தனது நண்பர்களுடன் கடத்தி சென்றார்.
    • கணுமுண்டாவின் தந்தை தசாய் முண்டா போலீசில் புகார் செய்தார்.

    ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டம் முர்கு பகுதியைச் சேர்ந்தவர் கணுமுண்டா (20). இவரது குடும்பத்துக்கும் உறவினர் சாகர் முண்டாவுக்கும் நிலத்தகராறு இருந்தது.

    இந்த நிலையில் கணுமுண்டா வீட்டில் தனியாக இருந்த போது அவரை சாகர் முண்டா தனது நண்பர்களுடன் கடத்தி சென்றார். இதுகுறித்து கணுமுண்டாவின் தந்தை தசாய் முண்டா போலீசில் புகார் செய்தார். சாகர் மற்றும் அவரது மனைவி, நண்பர்கள் 4 பேரை பிடித்து விசாரணை செய்த போது கணு முண்டாவை தலையை துண்டித்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

    குமாங்கோப்லா காட்டுப் பகுதியில் கணு முண்டாவின் துண்டிக்கப்பட்ட தலை, உடல் மீட்கப்பட்டது. குற்றவாளிகளின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் அவர்கள் துண்டிக்கப்பட்ட கணு முண்டாவின் தலையுடன் செல்வி எடுத்திருப்பது தெரிய வந்தது. மேலும் ரத்தக்கறை படிந்த ஆயுதங்கள், ஒரு கோடாரி, காரும் பறிமுதல் செய்யப்பட்டன.

    ×