என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • வார விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்.
    • சிறப்பு தரிசனத்திற்கு 5 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்ததாக தகவல்.

    திருமலை:

    கோடை விடுமுறையையொட்டி கடந்த மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் வருகை பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    கோடை விடுமுறை முடிவடைந்த நிலையிலும் ஏழுமலையானை தரிசிக்கும் பக்தரகளின் கூட்டம் குறையவில்லை. வார விடுமுறை  என்பதால் ஏழுமலையான் கோவிலில் நேற்றும் இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இலவச தரிசனத்திற்காக 15 மணி நேரமும் ,சிறப்பு தரிசனத்திற்காக 5 மணி நேரமும் பக்தர்கள் காத்திருந்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 88 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் உண்டியல் காணிக்கையாக நேற்று ஒரே நாளில் ரூ.4 கோடியே 34 லட்சம் கிடைக்கப் பெற்றதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • மாணவியிடம் அபிராமி ரெட்டி உன்னை 10-ம் வகுப்பில் தேர்ச்சி அடைய வைக்கிறேன் என ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் நெருக்கமாக பழகி வந்தார்.
    • அவரிடம் டியூசன் படிக்கும் மாணவர்கள் வீட்டிற்கு சென்ற பிறகு சிறுமியிடம் சிறப்பு வகுப்பு நடத்துகிறேன் எனக்கூறி சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ராய்சோட்டி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் அபிராம ரெட்டி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    அபிராம ரெட்டி ஒரு வீட்டை வாடகை எடுத்து அப்பகுதி மாணவர்களுக்கு டியூசன் நடத்தி வந்தார். அபிராம ரெட்டியிடம் 10-ம் வகுப்பு மாணவி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு டியூசன் சேர்ந்தார்.

    அப்போது மாணவியிடம் அபிராமி ரெட்டி உன்னை 10-ம் வகுப்பில் தேர்ச்சி அடைய வைக்கிறேன் என ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் நெருக்கமாக பழகி வந்தார்.

    அவரிடம் டியூசன் படிக்கும் மாணவர்கள் வீட்டிற்கு சென்ற பிறகு சிறுமியிடம் சிறப்பு வகுப்பு நடத்துகிறேன் எனக்கூறி சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதையடுத்து சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

    தொடர்ந்து 7 மாதங்களாக ஆசிரியர் மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்டார்.

    இதுகுறித்து வெளியில் யாரிடமாவது கூறினால் 10-ம் வகுப்பு தேர்வில் பெயில் ஆக்கி விடுவதாக மிரட்டினார். இதனால் பயந்துபோன மாணவி இதுகுறித்து வெளியில் யாரிடமும் கூறாமல் இருந்தார்.

    இந்த நிலையில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் மாணவி 2 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை.

    இதுகுறித்து சிறுமியிடம் அவரது பெற்றோர்கள் கேட்டபோது, டியூசன் நடத்தும் ஆசிரியர் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற வைப்பதாக கூறியதால் சரிவர படிக்கவில்லை என்றும் அவர் தொடர்ந்து பாலியில் தொல்லை கொடுத்ததால் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை என தெரிவித்தார்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் ராய்ச்சோட்டி போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சுதாகர்ரெட்டி வழக்கு பதிவு செய்து அபிராமரெட்டியை போக்சோ சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைத்தார்.

    • திருப்பதியில் 2 ஆண்டுக்கு பிறகு பிரம்மோற்சவ விழாவில் பக்தர்களுக்கு அனுமதி.
    • வி.ஐ.பி பிரேக் தரிசனம் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
    • 2-ந்தேதி தங்க தேரோட்டம் நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற செப்டம்பர் மாதம் 27-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது.

    செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கொடியேற்றம் நடக்கிறது. இதில் ஆந்திர மாநில முதல் அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்று ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்கிறார்.

    அக்டோபர் மாதம் 1-ந்தேதி கருட சேவை, 2-ந் தேதி தங்க தேரோட்டம், 4-ந்தேதி தேரோட்டம், 5-ந்தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வருடாந்திர பிரமோற்சவ விழாவில் பக்தர்களுக்கு அனுமதியின்றி கோவில் உள்ளே நடந்தது.

    மாட வீதிகளில் வாகன சேவை நடக்கவில்லை. கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்திலேயே உற்சவர்களை அலங்காரம் செய்து ஒரு சில பக்தர்கள் வழிபாட்டுக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    ஆனால் இந்த ஆண்டு நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் கோவிலின் 4 மாட வீதிகளில் வாகன சேவை பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது.

    இந்த முறை அதிகளவில் பக்தர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதற்கு ஏற்ப பிரமாண்ட ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    பிரம்மோற்சவ விழா நாட்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கருட சேவை புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமை நடப்பதால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கேற்பார்கள். சாதாரண பக்தர்கள் அதிக நேரம் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

    வி.ஐ.பி பிரேக் தரிசனம் அனைத்தும் ரத்து செய்யப்படும். முக்கியமான வி.ஐ.பி.களுக்கு மட்டும் பிரேக் தரிசனம் வழங்கப்படும்.

    பிரம்மோற்சவ விழா நாட்களில் தூய்மையாக வைத்திருக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    கருட சேவை அன்று பக்தர்கள் இருசக்கர வாகனங்களில் திருமலைக்கு வர தடை விதிக்கப்படுகிறது. திருப்பதியில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் பக்தர்கள் தங்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டு அரசு பஸ்களில் திருமலைக்கு வரலாம்.

    கருட சேவைக்கு முன்தினமும், கருட சேவை அன்றும் கருட சேவைக்கு மறுநாளும் பக்தர்களுக்கு ஆன்லைனில் தங்கும் விடுதிகளில் அறைகள் ஒதுக்கப்பட மாட்டாது. மற்ற நாட்களில் 50 சதவீத அறைகள் பக்தர்களுக்கு நேரில் வழங்கப்படும்.

    பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். கேலரியில் அமர்ந்திருக்கும் பக்தர்களுக்கு உணவ கவுண்டர்கள் அமைத்து 3 வேளை உணவு, குடிநீர், மோர் ஆகியவை விநியோகம் செய்யப்படும்.

    திருமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க வரும் பக்தர்கள் கண்ணாடி அல்லது தாமிரம் அல்லது ஸ்டீல் குடிநீர் பாட்டில்களை கொண்டுவர வேண்டும்.

    இந்து தர்ம பிரச்சார பரிஷத் சார்பில் 9 நாட்களும் திருமலையில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பக்தி சேனல் மூலம் அனைத்து வாகன சேவைகளும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • டி.எஸ்-இஓ செயற்கைக் கோள் அனைத்து பருவ நிலைகளிலும் தெளிவான புகைப்படங்கள் எடுக்கும் தன்மை கொண்டது.
    • கல்வி சார்ந்த பணிகளுக்காக சிங்கப்பூர் மாணவர்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைக்கோளும் செலுத்தப்பட்டது

    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்தியாவில் தகவல் தொடர்பு, வழிகாட்டுதல் மற்றும் பல்வேறு தேவைகளுக்கான செயற்கை கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அத்துடன், வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கை கோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.

    அவ்வகையில் சிங்கப்பூருக்கு சொந்தமான டி.எஸ்-இஓ, நியூசர் உள்பட 3 செயற்கை கோள்கள் பி.எஸ்.எல்.வி-சி53 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவ முடிவு செய்யப்பட்டு, அதற்கான 25 மணி நேர கவுண்டவுன் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.

    ராக்கெட்டை ஏவுவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று மாலை சரியாக 6.02 மணிக்கு செயற்கைக் கோள்களை தாங்கிய பி.எஸ்.எல்.வி-சி53 ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.

    இந்த ராக்கெட்டில் முதன்மை செயற்கை கோளான டி.எஸ்-இஓ 365 கிலோ எடை கொண்டது. ஒரே நேரத்தில் பல கோணங்களில் பூமியை படம்பிடிக்கும் திறன் உடையது. மேலும் நியூசர் செயற்கை கோள் 155 கிலோ எடை கொண்டது. இது சிந்தடிக் அப்ரேச்சர்ரேடார் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. அனைத்து பருவ நிலைகளிலும் தெளிவான புகைப்படங்கள் எடுத்து வழங்கும் தன்மை கொண்டது.

    மேலும் இதனுடன் கல்வி சார்ந்த பணிகளுக்காக சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்த ஸ்கூப்-1 என்ற செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இது 2.8 கிலோ எடை கொண்டது. 

    • ஆட்டோ மீது மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்தது.
    • போலீசார் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆந்திரா மாநிலம் ஸ்ரீசத்யசாய் மாவட்டத்தில் விவசாய பணிக்காக 8 பேர் ஆட்டோவில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, தாடிமரி மண்டலம் கொண்டம்பள்ளி அருகே ஆட்டோ மீது உயர்மின் அழுத்தம் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதில், ஆட்டோ மீது மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்தது.

    ஆட்டோவிற்குள் இருந்து 8 பேரும் மின்சாரம் பாய்ந்து, தீயில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததை அடுத்து, போலீசார் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், மின்கம்பி அறுந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த வாரம் கர்னூல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
    • வானத்தில் இருந்து வைரக்கற்கள் விவசாய நிலத்தில் விழுந்து மண்ணில் புதைந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் துக்கிலியை சேர்ந்த விவசாயி ஒருவர் நேற்று முன்தினம் தனது நிலத்தை உழுது கொண்டு இருந்தார். அப்போது நிலத்தில் புதைந்து இருந்த வைரக்கல் ஒன்று மேலே வந்து ஜொலித்தது.

    இதனைக் கண்டு ஆச்சரியமடைந்த விவசாயி நகைக் கடைக்கு வைரக் கல்லை எடுத்துச் சென்று விசாரித்தார். அப்போது நகை வியாபாரி ரூ 2 லட்சத்திற்கு விலை போகும் என தெரிவித்தார்.

    அதற்கு விவசாயி ரூ.5 லட்சம் கொடுத்தால் வைரக்கல்லை விற்பனை செய்வதாக தெரிவித்துவிட்டு வைரக்கல்லை வீட்டிற்கு கொண்டு வந்தார்.

    இதுகுறித்து மற்றவர்களிடம் விவசாயி தெரிவித்தார். ‌ பக்கத்து நிலத்தை சேர்ந்த விவசாயிகளும் தங்களது நிலத்தை உழுதனர். அப்போது மேலும் 2 விவசாயிகளுக்கு வைரக்கல் கிடைத்தது.

    விவசாய நிலத்தில் வைரக்கல் கிடைத்த தகவல் ஊர் முழுவதும் பரவியது. இதனால் நிலம் வைத்திருந்த அனைத்து விவசாயிகளும் தங்களது விவசாய நிலங்களை உழுது வருகின்றனர்.

    கடந்த வாரம் கர்னூல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    அப்போது வானத்தில் இருந்து வைரக்கற்கள் விவசாய நிலத்தில் விழுந்து மண்ணில் புதைந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

    விவசாய நிலத்தில் வைரக்கல் கிடைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • விண்வெளி சுற்றுலா பயணத்தை இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு முதல் பலரும் பாராட்டியுள்ளனர்.
    • ராக்கெட் வெற்றிகரமாகப் பூமிக்குத் திரும்பியவுடன் இந்தியர்கள் சமூக ஊடகங்கள் மூலம் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்தவர் சிரிஷா பண்ட்லா (வயது 34). இவர் தற்போது அமேரிக்காவில் வசித்து வருகிறார்.

    பிரிட்டன் கோடீஸ்வரர் சர் ரிச்சர்ட் பிரான்சலுடன் விர்ஜின் கேலக்டிக் ராக்கெட் விமானத்தில், விண்வெளிக்குச் சென்று திரும்பிய சிரிஷா பண்ட்லாவை இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    கல்பன சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் வரிசையில் தற்போது விண்வெளிக்குச் சென்று திரும்பிய இந்திய வம்சாவளி வீராங்கனையாக சிரிஷா பண்ட்லா திகழ்கிறார்.

    இவரது விண்வெளி சுற்றுலா பயணத்தை இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு முதல் பலரும் பாராட்டியுள்ளனர்.

    இவர்களில் கல்பனா சாவ்லா இந்தியாவின் ஹரியானாவிலும், சிரிஷா ஆந்திர மாநிலத்தின் குண்டூரிலும் பிறந்திருந்தாலும், அமெரிக்காவில் குடியேறி அந்நாட்டு குடியுரிமையை பெற்றவர்கள்.

    சுனிதாவின் ஆணிவேர் இந்தியாவில் இருந்தாலும் அவர் அமெரிக்காவிலேயே பிறந்தவர்.

    அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் இருந்து விண்வெளிக்குப் பறந்த ராக்கெட், ஒரு மணி நேரத்தில் பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்குத் திரும்பியது.

    வரலாற்று பூர்வ பயணத்தில் சிரிஷா பண்ட்லா இடம்பெற்றது இந்தியாவில், குறிப்பாக அவர் பிறந்த ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ராக்கெட் வெற்றிகரமாகப் பூமிக்குத் திரும்பியவுடன் இந்தியர்கள் சமூக ஊடகங்கள் மூலம் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

    ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் ஒரு சிறுமியாக வளர்ந்து வந்தேன். "எனது ஆரம்பகால நினைவுகளில் ஒன்று மின்வெட்டு, மின்தடை. என் தாத்தா பாட்டியின் கூரையில் தூங்கியது எனக்கு நினைவிருக்கிறது.

    இந்தியாவில் நட்சத்திரங்கள் மிகவும் பிரகாசமாக இருப்பதைப் பார்த்தது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. அங்கே என்ன இருக்கிறது? என்று பார்க்க ஆசைப்பட்டேன்.

    பார்வைக் குறைபாடு காரணமாக நாசா விண்வெளி வீராங்கனையாக என்னால் இருக்க முடியவில்லை அதற்குப் பதிலாக என்ஜினீயர் வழியைப் பயன்படுத்தினேன்.

    கடந்த ஜூலை மாதம் கோடீஸ்வரர் விர்ஜின் கேலக்டிக்கின் முதல் விண்வெளி விமானத்தில் சர் ரிச்சர்ட் பிரான்சனுடன் சென்ற குழுவில் இளம் விண்வெளி பொறியாளராக பணியாற்றினேன்.

    பூமிக்கு மேலே ஏறக்குறைய 90 கிலோ மீட்டர் வரை பயணம் செய்தது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. "பூமியைப் பார்த்ததும், வளிமண்டலத்தின் மெல்லிய நீலக் கோட்டைப் பார்ப்பதும், உண்மையில் நாம் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று நினைக்க தோன்றியது.

    நான் சிறு வயதிலிருந்தே விண்வெளி வீரர்கள். சந்திரனில் காலடி எடுத்து வைத்தவர்களின் வாழ்க்கையைப் படித்துள்ளேன். அவர்களை நான் மதிக்கிறேன்.

    அவர்களின் பயணத்துடன் நான் என்னை இணைக்கவில்லை. எனது பயணத்தில் மிகவும் வித்தியாசமாக இதனை உணர்ந்தேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கொரோனா சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளதால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அவரவர் வீடுகளிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • எனவே கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த ஆந்திர மாநில சுகாதாரத்துறைக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திரா கொரோனா 2-வது அலையால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. கொரோனா தொற்று பாதித்த ஏராளமானோர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் முதல்முறையாக முழுமையாக தரிசனம் ரத்து செய்யப்பட்டு கோவில் மூடப்பட்டது. உண்டியல் வருமானமும் பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஆந்திராவில் அதிகபட்சமாக விசாகப்பட்டினம் மாவட்டத்தில் 500 பேரும், கிருஷ்ணா மாவட்டத்தில் 150 பேரும், குண்டூர் மாவட்டத்தில் 60 பேரும், பிரகாசம் 30 பேர், சித்தூர் மாவட்டத்தில் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளதால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அவரவர் வீடுகளிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த ஆந்திர மாநில சுகாதாரத்துறைக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    மேலும் கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைக்குமாறு கூறியுள்ளனர். ஆந்திராவில் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருவதால் அம்மாநில மக்கள் மிகவும் அச்சம் அடைந்து உள்ளனர்.

    • ஏழுமலையான் கோவிலை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி உள்ளதால் அங்கு யானை, சிறுத்தை, கரடி, மான், பாம்பு உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.
    • வனப்பகுதியில் இருக்கும் வன விலங்குகள் அடிக்கடி மக்கள் நடமாட்டம் உள்ள மலை சாலைக்கு வருகின்றன.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் கார் பஸ் வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

    ஏழுமலையான் கோவிலை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி உள்ளதால் அங்கு யானை, சிறுத்தை, கரடி, மான், பாம்பு உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன.

    அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் வன விலங்குகள் அடிக்கடி மக்கள் நடமாட்டம் உள்ள மலை சாலைக்கு வருகின்றன.

    இதனால் பக்தர்கள் அச்சத்துடனே பயணம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மாலை வனப்பகுதியில் இருந்த 12 பெரிய யானைகள் மற்றும் 2 குட்டி யானைகள் திருமலையிலிருந்து அலிபிரி செல்லும் 7-வது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்தது.

    அப்போது யானைகள் கூட்டம் பிளிறியபடி ஆக்ரோஷத்துடன் மரக்கிளைகளை தும்பிக்கையால் உடைத்து வீசி எறிந்தது. இதையடுத்து சாலைக்கு வந்த யானை கூட்டம் சாலையில் கும்பலாக நின்று கொண்டிருந்தது.

    இதனை கண்ட வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பட்டாசு வெடித்து யானைக் கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் சுமார் 2 மணி நேரம் மலைப்பாதையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யானைக்கூட்டம் வனப்பகுதிக்கு சென்ற பிறகு அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

    • பக்தர்கள் வழக்கம்போல் இன்று மாலை 4 மணி முதல் 29ம் தேதிவரை ஆன்லைனின் முன்பதிவு செய்யலாம்.
    • சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை போன்றவற்றுக்கான டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் தரிசனம் செய்யாததால் தற்போது ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். இதனால் தரிசனத்திற்கு நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய நிலை உள்ளது. பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், காப்பி உள்ளிட்டவைகளை இலவசமாக அதிகாரிகள் தன்னார்வலர்கள் மூலமாக வழங்கி வருகின்றனர்.

    ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் தீர்ந்த நிலையில், செப்டம்பர் மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் (ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள்) இன்று மாலை 4 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் வழக்கம்போல் இன்று மாலை 4 மணி முதல் 29ம் தேதிவரை ஆன்லைனின் முன்பதிவு செய்யலாம். மொத்தம் உள்ள 46470 ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளில் 8070 டிக்கெட்டுகள் குலுக்கல் முறை தேர்வுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 38400 டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் முன்பதிவுக்காக ஒதுக்கப்படுகிறது.

    சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை போன்றவற்றுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட பக்தர்களுக்கு, அதுபற்றிய தகவல் அவர்களுடைய செல்போன்களுக்கு குறுஞ்செய்தியாக வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கல்லூரிகளில் ராக்கிங் செய்வது நாடு முழுவதிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
    • காக்கிநாடா என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை தொடர்ந்து ராக்கிங் செய்து வந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். வெளியூர் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ராக்கிங் செய்வதால் மன உளைச்சலுக்கு ஆளாகி சிலர் தற்கொலைக்கு ஆளாகின்றனர்.

    எனவே கல்லூரிகளில் ராக்கிங் செய்வது நாடு முழுவதிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் காக்கிநாடா என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை தொடர்ந்து ராக்கிங் செய்து வந்தனர். இதனால் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் ஜூனியர் மாணவர்கள் புகார் செய்தனர்.

    இதையடுத்து ராக்கிங்கில் ஈடுபட்ட 11 மாணவர்களை 15 நாட்களுக்கு சஸ்பெண்டு செய்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார். மேலும் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • திருமலை முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
    • சாமானிய பக்தர்களும் தரிசனம் செய்வதற்காக விஐபி பிரேக் தரிசனம் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்து வருகின்றனர்.

    திருமலை முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர்.

    தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் ஒருவரை ஒருவர் முந்தி செல்ல முயலும்போது பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசார் திணறி வருகின்றனர்.

    இலவச தரிசன வரிசையில் சுமார் 3 கிலோமீட்டர் வரை தரிசனத்துக்காக இரவு பகல் பாராமல் வரிசையில் பக்தர்கள் காத்து நிற்கின்றனர்.

    சாமானிய பக்தர்களும் தரிசனம் செய்வதற்காக விஐபி பிரேக் தரிசனம் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், காப்பி உள்ளிட்டவைகளை இலவசமாக அதிகாரிகள் தன்னார்வலர்கள் மூலமாக வழங்கி வருகின்றனர். மேலும் லட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பக்தர் ஒருவருக்கு இலவச லட்டு டன் ரூ.50 விலையில் 2 லட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் ரூ.300 டிக்கெட்டில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களும் சுமார் 8 மணி நேரம் வரை தரிசனத்திற்கு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை நிலவி வருகிறது.

    திருப்பதியில் நேற்று 94,411 பேர் தரிசனம் செய்தனர். 46,283 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.41 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    ×