என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • மாதம் தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசனம் டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது.
    • டிசம்பர் மாதத்திற்கான 7.75 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான ரூ.300 கட்டண ஆன்லைன் தரிசன டிக்கெட் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு வரும் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக தேவஸ்தானம் சார்பில் மாதம் தோறும் ரூ.300 ஆன்லைன் தரிசனம் டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது.

    அதன்படி நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ரூ.300 கட்டண தரிசன டிக்கெட் வெளியிடப்படுகிறது.

    தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டிசம்பர் மாதத்திற்கான 7.75 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது.

    இதேபோல் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளதால் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து அவதி அடைந்து வந்தனர்.

    இதனால் இலவச தரிசனத்திலும் டைம் ஸ்லாட் முறையை அமல்படுத்த வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    பக்தர்களின் கோரிக்கையை ஏற்ற தேவஸ்தான அதிகாரிகள் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் தினமும் 25 ஆயிரம் பேரும் மற்ற நாட்களில் 15 ஆயிரம் பக்தர்களும் தரிசனம் செய்யும் வகையில் அலிப்பிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், ரெயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சாமி சத்திரம் மற்றும் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம் கெஸ்ட் ஹவுஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன நேர ஒதுக்கிட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இலவச தரிசனத்தில் நேர ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பக்தர்கள் சிரமமின்றி குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 66,946 பேர் தரிசனம் செய்தனர். 26,990 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.73 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • கரீம் நகரில் உள்ள அமைச்சரின் வீடு பூட்டி இருந்ததால் அதனை அதிகாரிகள் உடைத்து உள்ளே சோதனை நடத்தினர்.
    • ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த இந்த சோதனையால் தெலுங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநில உணவு, சமூக நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் கங்குல கமலாகர். இவர் கிரானைட் வியாபாரிகளுக்கு சட்டவிரோதமாக குவாரி லைசென்ஸ் வழங்கி உதவுவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதனையொட்டி ஐதராபாத், கரீம் நகர் ஆகிய பகுதிகளில் வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கப்பிரிவினர் 20 குழுக்களாக ஒரே நேரத்தில் அமைச்சருக்கு சொந்தமான வீடுகள், குடியிருப்பு பகுதிகள், குவாரிகள், கிரானைட் அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.

    கரீம் நகரில் உள்ள அமைச்சரின் வீடு பூட்டி இருந்ததால் அதனை அதிகாரிகள் உடைத்து உள்ளே சோதனை நடத்தினர்.

    மேலும் அவருக்கு நெருக்கமாக உள்ள பல கிரானைட் வியாபாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சரின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த இந்த சோதனையால் தெலுங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு நேற்று இரவு சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது.
    • ரெயில் பெட்டியில் இணைக்கப்பட்டிருந்த சக்கரம் தனியாக கழன்று ஓடியது.

    திருப்பதி:

    சென்னையில் இருந்து கொல்கத்தாவுக்கு நேற்று இரவு சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டு சென்றது.

    இன்று அதிகாலை விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா நோக்கி சென்று கொண்டு இருந்தது. ராஜமுந்திரி அடுத்த பாலாஜி பேட்டை என்ற இடத்தில் சென்றபோது சரக்கு ரெயிலில் இருந்த பெட்டி ஒன்று தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டது.

    அப்போது ரெயில் பெட்டியில் இணைக்கப்பட்டிருந்த சக்கரம் தனியாக கழன்று ஓடியது. இதனைக் கண்ட ரெயில் எஞ்சின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.

    இதுகுறித்து உடனடியாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடம் புரண்ட ரெயில் பெட்டியில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி விட்டு ரெயில் பெட்டியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சரக்கு ரெயில் பெட்டி தடம் புரண்டதால் அந்த வழியாக செல்லக்கூடிய விசாகப்பட்டினம்-விஜயவாடா பயணிகள் ரெயில், விஜயவாடா-விசாகப்பட்டினம், குண்டூர்-விசாகப்பட்டினம், காக்கிநாடா-விசாகப்பட்டினம் உள்ளிட்ட 9 பயணிகள் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகள் ரெயில் திடீரென ரத்து செய்யப்பட்டதால் இன்று காலை வேலைக்கு செல்பவர்கள், கல்லூரிக்கு செல்பவர்கள் ஏராளமானார் பாதிக்கப்பட்டனர்.

    பின்னர் தடம் புரண்ட ரெயில் பெட்டி சரி செய்யப்பட்டு மீண்டும் வழக்கம்போல் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    • கண்டெய்னர் லாரியின் பூட்டை உடைத்து அதிலிருந்து செல்போன் லேப்டாப் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை தாங்கள் கொண்டு வந்த கார்களில் ஏற்றிக்கொண்டு தப்பிச் சென்றனர்.
    • தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளை நடந்தபோது லாரி டிரைவர் ஜுபேரும் உடன் இருந்தது தெரிய வந்தது.

    திருப்பதி:

    அரியானா மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து தனியார் கொரியர் நிறுவனத்தின் கண்டெய்னர் லாரியில் சுமார் 2 கோடி மதிப்பிலான லேப்டாப், செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்தது. லாரியை ஜுபேர் என்பவர் ஓட்டி வந்தார்.

    லாரி ஆந்திர மாநிலம் கடப்பா ஒய்.எஸ்.ஆர் மாவட்டம், குடிப்பாடு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது தன்னுடைய லாரியில் விலை உயர்ந்த லேப்டாப் செல்போன் உள்ளிட்டவை எடுத்து வருவதாக பெங்களூருவை சேர்ந்த சல்மான் அகமது, முகமது ரஹ்மான் ஷெரிப் ஆகியோருக்கு லாரி டிரைவர் ஜுபேர் தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து அவர்கள் 2 பேரும் 2 கார்களில் தங்களது நண்பர்களை அழைத்துக்கொண்டு கண்டெய்னர் லாரி இருந்த இடத்திற்கு வந்தனர். அப்போது கண்டெய்னர் லாரியின் பூட்டை உடைத்து அதிலிருந்து செல்போன் லேப்டாப் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை தாங்கள் கொண்டு வந்த கார்களில் ஏற்றிக்கொண்டு தப்பிச் சென்றனர்.

    லாரி டிரைவர் ஜுபேர் தேசிய நெடுஞ்சாலையில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கிக்கொண்டு இருந்தபோது மர்ம நபர்கள் லாரியில் இருந்த பொருட்களை திருடி சென்றதாக கடப்பா போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடப்பா டிஎஸ்பி வெங்கடேஷ் சிவா ரெட்டி தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளை நடந்தபோது லாரி டிரைவர் ஜுபேரும் உடன் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து லாரி டிரைவர் ஜுபேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.

    ஜுபேர் நண்பர்களின் செல்போன் எண்ணை சோதனை செய்தபோது அவர்கள் காரில் ஐதராபாத் நோக்கி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து ஐதராபாத் அருகே உள்ள சோதனை சாவடியில் போலீசார் சோதனையை தீவிரப்படுத்தினர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி நிறுத்தினர். போலீசாரை கண்டதும் காரில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டி சென்று 2 பேரை மட்டும் மடக்கி பிடித்தனர். மற்ற 4 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

    போலீசார் காரில் சோதனை செய்தபோது கண்டெய்னர் லாரியில் கொள்ளையடிக்கப்பட்ட செல்போன், லேப்டாப் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து டிரைவர் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் காருடன் கொள்ளைபோன பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    • ஆந்திர மாநிலம், சத்திய சாய் மாவட்டம், அனந்தபுரம் ராம் நகரை சேர்ந்தவர் மல்லிகார்ஜுன் ரெட்டி.
    • மாதவ் எம்.பி, மல்லிகார்ஜுன் ரெட்டி 10 பேருடன் தனது வீட்டிற்கு வந்து என்னை தாக்க முயன்றதாக என போலீசில் புகார் செய்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சத்திய சாய் மாவட்டம், அனந்தபுரம் ராம் நகரை சேர்ந்தவர் மல்லிகார்ஜுன் ரெட்டி. இவர் அங்குள்ள 80 அடி சாலையில் 2 அடுக்கு மாடி வீடு கட்டி குடியிருந்து வந்தார்.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் இந்துபுரம் தொகுதி எம்.பியாக இருப்பவர் கோரண்ட்லா மாதவ். மல்லிகார்ஜுன் வீட்டிற்குச் சென்ற கோரண்ட்லா மாதவ் எம்.பி தன்னை சந்திக்க கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தினமும் அதிக அளவில் வருவார்கள். எனவே உங்களது வீட்டை எனக்கு வாடகைக்கு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    அவரது கோரிக்கையை ஏற்ற மல்லிகார்ஜுன் ரெட்டி தனது வீட்டை வேறு இடத்திற்கு மாற்றிக் கொண்டு எம்.பிக்கு தனது வீட்டை வாடகைக்கு கொடுத்தார். வாடகைக்கு வந்தது முதல் கடந்த 3 ஆண்டுகளாக அவர் வீட்டு வாடகை, மின்சார கட்டணம் செலுத்தவில்லை. மல்லிகார்ஜுன் ரெட்டி எம்.பி.யிடம் சென்று வாடகை பாக்கி கேட்கும் போது எல்லாம் பின்னர் தருவதாக காலம் தாழ்த்தி வந்தார்.

    இது குறித்து மல்லிகார்ஜுன் ரெட்டி போலீசில் புகார் செய்தார். புகாரில் கடந்த 3 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வரும் மாதவ் எம்.பி வாடகையாக ரூ.13 லட்சமும், மின்சார கட்டணமாக ரூ 2,50,413 கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக புகாரில் கூறியிருந்தார்.போலீசார் அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து தனக்கு வேண்டப்பட்ட 10 பேருடன் மீண்டும் மாதவ் எம்.பி.யிடம் சென்று வாடகை பாக்கி தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மாதவ் எம்.பி, மல்லிகார்ஜுன் ரெட்டி 10 பேருடன் தனது வீட்டிற்கு வந்து என்னை தாக்க முயன்றதாக என போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவ ராமலு, ஜாகிர் உசேன் ஆகியோர் மல்லிகார்ஜுன் ரெட்டி எம்.பி.யை தாக்க முயன்றதாக மிரட்டல் வழக்கு பதிவு செய்தனர். மாதவ் எம்.பி ஏற்கனவே ஒரு பெண்ணிற்கு வீடியோ காலில் நிர்வாணமாக நின்று பேசியதாக சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு கிரகண சாந்தி அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
    • பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ஆந்திர மாநிலத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் நடை சாத்தப்பட்டது. ஆனால் சிவ ஷேத்திரமான ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் மட்டும் சந்திர கிரகண சமயத்தில் நடை சாத்தப்படாமல் சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

    பிற்பகல் 2.39 மணி முதல் மாலை 6.19 மணிவரை சந்திர கிரகணம் இருந்தது. இந்த கிரகண நேரத்தில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் ஞான பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு கிரகண சாந்தி அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. மூலவரான ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கு நவகிரக கவசம் அலங்கரிக்கப்படுவதால் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மீது கிரகண கால சமயத்தில் எந்தவித தாக்கமும் ஏற்படாது என்ற காரணத்தினால் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை, பூஜைகள் நடத்துவதாக கோவில் வேதப்பண்டிதர்கள் தெரிவித்தனர்.

    மேலும் சந்திரகிரகண சமயத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் மற்றும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரை தரிசனம் செய்தால் அனைத்து விதமான தோஷங்கள் நிவர்த்தி அடையும் என்பதால் சந்திரகிரகணமான நேற்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    சந்திர கிரகண சமயத்தில் பரணி போன்ற நட்சத்திரம் கொண்டவர்கள் சந்திர கிரகண சமயத்தில் சந்திரனை பார்க்க கூடாது என்றும், இதனால் தீயவை நிகழும் என்பவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்து கொண்டால் அனைத்தும் நல்லதாக நடக்கும் என்றும், தோஷம் நீங்கும் என்றும் கோவில் வேத பண்டிதர் அர்த்தகிரி சுவாமி தெரிவித்தார்.

    • உள்ளூர் மக்கள் சிலர் அங்கு சென்று, பெண்கள் மீது கொட்டப்பட்ட மண்ணை அகற்றி, இருவரையும் மீட்டனர்.
    • குடும்பச் சொத்தில் உரிய பங்கை கேட்டதால கொல்ல முயன்றதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர்

    ஆந்திராவில் சொத்து பிரச்சனை தொடர்பாக போராட்டம் நடத்திய பெண்களை உயிரோடு புதைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்ரீகாகுளம் மாவட்டம் ஹரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த தாளம்மா மற்றும் அவரது மகள் சாவித்ரி ஆகியோருக்கும், அவர்களின் உறவினர்களான ஆனந்தராவ், பிரகாஷ் ராவ், ராமராவ் ஆகிருக்குமிடையே பூர்வீக நிலத்தின் உரிமை தொடர்பாக தகராறு உள்ளது. குடும்ப சொத்தில் தங்களுக்கு உரிய பங்கை தரக்கோரி இரண்டு பெண்களும் 2019ம் ஆண்டு முதல் போராடிவந்துள்ளனர்.

    இந்நிலையில், நேற்று இரண்டு பெண்களும் போராட்டம் நடத்தும்போது, டிராக்டரில் வந்த ராமராவ் மண்ணைக் கொட்டி உயிருடன் புதைத்து கொலை செய்ய முயன்றுள்ளனர். இதைப் பார்த்த உள்ளூர் மக்கள் சிலர் அங்கு சென்று, பெண்கள் மீது கொட்டப்பட்ட மண்ணை அகற்றி, இருவரையும் மீட்டனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    குடும்பச் சொத்தில் தங்களுக்கு உரிய பங்கைக் கேட்டபோது தங்கள் மீது மண்ணைக் கொட்டி கொல்ல முயன்றதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டினர்.

    பிரச்சனைக்குரிய நிலத்தில் ராமராவ், கட்டிடம் கட்டுவதற்காக மண் மற்றும் கிராவலை கொட்டி உள்ளார். இதைப் பார்த்த தாளம்மா மற்றும் அவரது மகள் சாவித்ரி இருவரும் அங்கு சென்று அந்த இடத்தில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக கூறி, மண் கொட்டுவதை தடுத்துள்ளனர். எனினும் ராமராவ் மண்ணை கொட்டியுள்ளார். அப்போது பெண்கள் இருவரும் அங்கு அமர்ந்து தர்ணா செய்துள்ளனர். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாத ராமராவ், அவர்கள் மீது மண்ணை கொட்டி உள்ளார்.

    தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து வாக்குமூலம் பெற்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • நாடு முழுவதும் இந்தக் கோவிலுக்கு 960 சொத்துக்கள் உள்ளன.
    • திருப்பதி கோவிலில் 2022-23 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் ரூ.3,100 கோடி ஆகும்.

    திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உலகப்புகழ் பெற்றது. தினந்தோறும் உலகமெங்கும் இருந்து இங்கு பக்தர்கள் வந்து வழிபட்டுச்செல்கிறார்கள்.

    இங்கு மக்கள் காணிக்கைகளை குவிக்கிறார்கள்.

    உலகப்புகழ் பெற்ற திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு ரூ.2½ லட்சம் கோடி (சுமார் 30 பில்லியன் டாலர்) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி கோவில் 1933-ம் ஆண்டு உருவான காலம்தொட்டு இப்போதுதான் முதல் முறையாக அதன் சொத்து மதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இது பிரபல தகவல் சேவை நிறுவனமான விப்ரோ (இதன் சொத்து மதிப்பு ரூ.2.14 லட்சம் கோடி), உணவு மற்றும் குளிர்பான நிறுவனமான நெஸ்லே (இதன் மதிப்பு ரூ.1.96 லட்சம் கோடி) மற்றும் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களான ஓஎன்ஜிசி மற்றும் ஐஓசி ஆகியவற்றின் சந்தை மூலதனத்தை விட அதிகம்.

    திருப்பதி கோவிலுக்கு சொந்தமான 10¼ டன் தங்கம், 2½ டன் தங்க நகைகள் பல்வேறு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. வங்கிகளில் சுமார் ரூ.16 ஆயிரம் கோடி டெபாசிட்டுகள் இருக்கின்றன. நாடு முழுவதும் இந்தக் கோவிலுக்கு 960 சொத்துக்கள் உள்ளன.

    திருப்பதி கோவிலை விட அதிக சொத்து 2 டஜன் கம்பெனிகளுக்கு மட்டுமே இருக்கின்றன.

    இவற்றில் முக்கியமானவை, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ரூ.17.53 லட்சம் கோடி), டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (ரூ.11.76 லட்சம் கோடி), எச்.டி.எப்.சி. வங்கி (ரூ.8.34 லட்சம் கோடி), இன்போசிஸ் ( ரூ.6.37 லட்சம் கோடி), ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி (ரூ.6.31 லட்சம் கோடி), இந்துஸ்தான் யூனிலிவர் (ரூ.5.92 லட்சம் கோடி), பாரத ஸ்டேட் வங்கி (ரூ.5.29 லட்சம் கோடி), பார்திஏர்டெல் ( ரூ.4.54 லட்சம் கோடி), ஐ.டி.சி. (ரூ.4.38 லட்சம் கோடி) ஆகும்.

    திருப்பதி கோவிலின் மூத்த அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில், " திருப்பதி தேவஸ்தானம் பக்தர்கள் காணிக்கையாக தருகிற ரொக்கம், தங்கம் ஆகியவை அதிகரித்து வருகின்றன. வங்கி டெபாசிட்டுகளுக்கான வட்டி வருமானமும் அதிகரித்து வருகிறது. இதனால் தேவஸ்தானத்தின் செல்வம் தொடர்ந்து பெருகி வருகிறது" என தெரிவித்தார்.

    திருப்பதி கோவிலில் நடப்பு 2022-23 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் ரூ.3,100 கோடி ஆகும். இந்த நிதி ஆண்டில் வங்கி வட்டியாக ரூ.668 கோடி வருமானம் எதிர்பார்க்கப்படுவதாகவும், சுமார் 2½ கோடி பக்தர்கள் மூலம் உண்டியல் காணிக்கை வடிவில் ரூ.1,000 கோடி வருவாய் எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    திருப்பதி கோவில் சார்பில் ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஒடிசா, அரியானா, மராட்டியம், டெல்லி மாநிலங்களில் நிறைய கோவில்கள் நிர்வகிக்கப்படுகின்றன.

    • இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • ரூ.300 தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சந்திர கிரகணம் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2.39 மணியில் இருந்து மாலை 6.29 மணிவரை நிகழ்கிறது. அதையொட்டி இன்று காலை 8.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை 11 மணி நேரம் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரதான கதவுகள் மூடப்படுகின்றன.

    அந்த நேரத்தில் கோவிலில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தரிசன டிக்கெட்டுக்கான பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கிய பக்தர்களுக்கான தரிசனம், ரூ.300 தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    சந்திர கிரகணம் முடிந்ததும் இரவு 7.30 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. அதன்பிறகு கைங்கர்யம், நிவேதனம் முடிந்ததும் பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று வழிபட கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலின் துணைக் கோவில்களான திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில், கபிலேஸ்வரர் கோவில், கோதண்டராமசாமி கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு கோவில்கள் மூடப்படுகின்றன. முன்னதாக துணைக் கோவில்களில் காலை 7.30 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று வழிபடலாம்.

    சந்திர கிரகணம் முடிந்ததும் இரவு 7.30 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்பட்டு, சுத்தம் செய்து கைங்கர்யங்கள் நடக்கும். இதைப் பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • அமித்ஷாவை கவர்னர் தமிழிசை சந்தித்து பேசியது தெலுங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • வழக்கமான சந்திப்பு தான் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

    திருப்பதி:

    தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். 15 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது.

    தெலுங்கானா சட்டசபையில் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.

    தெலுங்கானா மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கான ஆட்சேர்ப்பு மற்றும் பல்கலைக்கழகங்களில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதை கருத்தில் கொண்டு ஆட்சேர்ப்பு வாரியம் குறித்த மசோதா உருவாக்கப்பட்டது.

    இதற்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சில ஆட்சேபனைகள் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மசோதாக்கள் இன்னும் கவர்னர் ஒப்புதலைப் பெறவில்லை.

    ஆட்சேர்ப்பு வாரியத்தின் மசோதா ஏற்கத்தக்கதா என்பதை தெளிவுபடுத்துவதற்காக, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில கல்வி அமைச்சர் பி.சபிதா இந்திரா ரெட்டிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    வாரியத்தின் ஆட்சேர்ப்பு ஏற்கத்தக்கதா என்பதை பல்கலைக்கழக யுஜிசியிடம் கேட்டறிந்தார். பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பதாம் பலமுறை அறிவுறுத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை என அவர் வேதனை தெரிவித்தார். விதி நிலை குறித்து பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் தனி கடிதம் அனுப்பப்பட்டது.

    இந்த நிலையில் மத்திய மந்திரி அமித்ஷாவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசியது தெலுங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆனால் இந்த சந்திப்பு வழக்கமான சந்திப்பு தான் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

    • சேலத்தை சேர்ந்தவர் கோபால் தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்தார்.
    • வரிசையில் நின்று கொண்டிருந்த போது, ​​திடீரென சுருண்டு விழுந்தார்.

    திருப்பதி:

    சேலத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 58) நேற்று தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்தார்.

    சாமி தரிசனம் செய்த பின் லட்டு வாங்குவதற்காக கோவில் வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள லட்டு கவுண்டருக்கு சென்றார். அங்கு கூட்டமாக இருந்தது.

    வரிசையில் நின்று கொண்டிருந்த போது, ​​திடீரென சுருண்டு விழுந்தார்.

    தேவஸ்தான ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு அஸ்வினி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதைக் கேட்டதும் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    அவரது உடலை அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல தேவஸ்தானம் இலவச போக்குவரத்து ஏற்பாடு செய்தது. இதைத் தொடர்ந்து கோபால் உடல் சேலம் அனுப்பி வைக்கப்பட்டது.

    • 8-ந்தேதி அன்னாபிஷேகம் நடக்கிறது.
    • 8-ந்தேதி அன்று சந்திர கிரகணமும் நிகழ்கிறது.

    திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் 8-ந்தேதி தெலுங்கு கார்த்திகை பவுர்ணமி உற்சவம் நடக்கிறது. அன்றே கோவிலில் அன்னாபிஷேகமும் நடக்கிறது. 8-ந்தேதி அன்று சந்திர கிரகணமும் நிகழ்கிறது. இதனால் 8-ந்தேதி காலை 8.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை 11 மணிநேரம் கபிலேஸ்வரர் கோவில் கதவுகள் மூடப்படுகின்றன.

    முன்னதாக 8-ந்தேதி அதிகாலை 3 மணியில் இருந்து அதிகாலை 3.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக அபிஷேகம், அதிகாலை 3.30 மணியில் இருந்து அதிகாலை 5.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக அன்னாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 7.30 மணி வரை பக்தர்களுக்கு அன்னலிங்க தரிசனம், காலை 7.30 மணியில் இருந்து காலை 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக அன்னலிங்க உத்வாசனம் நடக்கிறது. அதன்பிறகு கோவில் சுத்தம் செய்யப்பட்டு காலை 8 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை ஏகாந்தமாக சுகந்த திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து காலை 8.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை சந்திர கிரகணத்தால் 11 மணிநேரம் கோவில் கதவுகள் மூடப்படுகின்றன. இரவு 7.30 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை கோவில் சுத்தம் செய்யப்படுகிறது.

    அதன்பிறகு பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று சாமியை வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். இரவு 8 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை அபிஷேகம், இரவு 8.30 மணியில் இருந்து இரவு 10 மணி வரை அலங்காரம், சஹஸ்ரநார்ச்சனை, நிவேதனம், தீபாராதனை, இரவு 10 மணியில் இருந்து இரவு 10.15 மணி வரை ஏகாந்த சேவை நடக்கிறது.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    ×