என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • 15 நிமிடத்தில் அடுத்தடுத்து 3 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
    • வருவாய்த்துறையினர் மற்றும் அதிகாரிகள் நிலநடுக்கம் ஏற்பட்ட கிராமங்களுக்கு சென்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்காவரம் அருகே உள்ள கிராமங்களில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

    வீட்டில் இருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தது. டி.வி, பிரிட்ஜ், கட்டில் லேசாக ஆடியது. அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கிராம மக்கள் அலறி எழுந்தனர்.

    அவர்கள் உயிருக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே ஓடிவந்து தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.

    15 நிமிடத்தில் அடுத்தடுத்து 3 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

    வருவாய்த்துறையினர் மற்றும் அதிகாரிகள் நிலநடுக்கம் ஏற்பட்ட கிராமங்களுக்கு சென்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றனர்.

    மேலும் நிலநடுக்கத்தை பதிவு செய்யும் கருவியை அந்தந்த கிராமங்களில் பொருத்திவிட்டு வந்தனர்.

    இன்று அதிகாலை நிகழ்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் எவ்வளவு பதிவாகி உள்ளது என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஏற்கனவே சித்தூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    தற்போது மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

    • திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
    • 10 மணியளவில் டிக்கெட்டுகள் வெளியீடு.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (டிசம்பர்) பக்தர்கள் ஆர்ஜித சேவையில் பங்கேற்று வழிபட நாளை (புதன்கிழமை) காலை 10 மணியளவில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    பக்தர்கள் தங்களுக்கு தேவையான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரமாகிறது.
    • இலவச தரிசனத்திற்கு 24 அறைகளிலும் பக்தர்கள் காத்துள்ளனர்.

    ஏழுமலையான் கோவிலில் கடந்த 3 நாட்களாக பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    இதனால் வைகுந்தம் காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து 40 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்தனர். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் முடிந்தும் திருப்பதியில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரமாகிறது. ‌இன்று காலை தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் அலிப்பிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீநிவாசம் கெஸ்ட் ஹவுஸ் மற்றும் ரெயில் நிலையம் அருகில் உள்ள கோவிந்தராஜ சாமி சத்திரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள டைம் ஸ்லாட் கவுண்டர்களில் டோக்கன் பெற்று சென்றனர்.

    அவர்களுக்கு 10 மணி நேரத்தில் தரிசன நேரம் ஒதுக்கப்பட்டது.

    இலவச தரிசனத்திற்கு 24 அறைகளிலும் பக்தர்கள் காத்துள்ளனர்.

    திருப்பதியில் பரவலாக மழை பெய்து கடும் குளிர் வீசுகிறது. குளிரை பொருட்படுத்தாமல் பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 73,323 பேர் தரிசனம் செய்தனர். 29,464 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.85 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • கைது செய்யப்பட்ட மீனவர்கள் 11 பேரும் நாளை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்
    • பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 500 கிலோ மீன்களை கடற்படை போலீசார் ஏலம் விட்டனர்.

    காக்கிநாடா:

    ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே, இலங்கை மீனவர்கள் 11 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்தனர். இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்த அவர்களை 2 மீன்பிடி படகுகளுடன் கைது செய்த கடற்படையினர், அவர்களை காக்கிநாடா காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். வானிலை மற்றும் காற்றின் வேகம் காரணமாக எல்லை தாண்டியதாக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட மீனவர்கள் 11 பேரும் நாளை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும், மீனவர்கள் கைது தொடர்பாக வெளியுறவுத்துறை மூலமாக இலங்கை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கூறினார்.

    இலங்கை மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளில் இருந்த சுமார் 500 கிலோ மீன்களை கடற்படை போலீசார் ஏலம் விட்டனர்.

    • இந்தியா பல துறைகளில் புதிய மைல்கற்களை அடைந்து வரலாற்று படைக்கிறது.
    • பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த பொருளாதார வழித்தடமானது, ரூ.3,778 கோடி செலவில் அமைகிறது

    விசாகப்பட்டினம்:

    தென் மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று ஆந்திராவில் ரூ.15233 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். ஆந்திர பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசரண், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மாநில அமைசச்க்ள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர்.

    விழாவில் பேசிய பிரதமர் மோடி, 'இன்று உலகம் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கும்போது, இந்தியா பல துறைகளில் புதிய மைல்கற்களை அடைந்து வரலாற்று படைக்கிறது. நமது வளர்ச்சியை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. அரசின் அனைத்துக் கொள்கைகளும் சாமானிய மக்களின் நலனையே மையமாகக் கொண்டுள்ளன.

    இன்று தொடங்கப்படும் பொருளாதார வழித்தடம், ஆந்திராவில் வர்த்தகம் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் இணைப்பை மேம்படுத்தும். இந்த புதிய உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களால், ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகள் விரைவாக வளர்ச்சிபெறும். உலக நாடுகளின் விருப்பத்தேர்வின் மையப் புள்ளியாக இந்தியா மாறியுள்ளது. பிரதமரின் கதி சக்தி போன்ற திட்டங்கள் நாட்டிற்கு அதிக அந்நிய முதலீடுகளை கொண்டு வந்துள்ளன. கதி சக்தி திட்டமானது, உள்கட்டமைப்பு வளர்ச்சியை விரைவுபடுத்தியது மட்டுமின்றி, செலவுகளைக் குறைக்கவும் உதவியுள்ளது.' என்றார்.

    பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த பொருளாதார வழித்தடமானது, ரூ.3,778 கோடி செலவில் ஆறு வழிச்சாலையாக அமைக்கப்பட உள்ளது. ராய்ப்பூர்-விசாகப்பட்டினம் வழித்தடத்தில் ஆந்திர பகுதியில் 100 கிமீ நீளத்திற்கு அமைய உள்ளது. 

    • 15-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.
    • 19-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா 20-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.

    15-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணியும், 19-ந்தேதி மாலை அங்குரார்ப்பணமும் நடக்கிறது.

    பிரம்மோற்சவ விழா வாகன சேவை விவரங்கள் வருமாறு:-

    20-ந்தேதி காலை கொடியேற்றம், இரவு சிறிய சேஷ வாகன வீதிஉலா, 21-ந்தேதி காலை பெரிய சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 22-ந்தேதி காலை முத்து பந்தல் வாகன வீதிஉலா, இரவு சிம்ம வாகன வீதிஉலா, 23-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு அனுமன் வாகன வீதிஉலா, 24 -ந்தேதி காலை பல்லக்கு உற்சவம், இரவு கஜ வாகன வீதிஉலா.

    25-ந்தேதி காலை சர்வ பூபால வாகன வீதிஉலா, மாலை தங்கத்தேரோட்டம், இரவு கருட வாகன வீதிஉலா, 26-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 27-ந்தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வாகன வீதிஉலா, 28-ந்தேதி காலை பஞ்சமி தீர்த்தம் எனப்படும் சக்கர ஸ்நானம், இரவு கொடியிறக்கம் நடக்கிறது. இத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    மேற்கண்ட வாகன வீதிஉலா தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரையிலும் நடக்கிறது. வாகனங்களில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    கொரோனா பரவலால் கோவில் உள்ளே நடந்த வாகனச் சேவை, 2 ஆண்டுகளுக்கு பிறகு நான்கு மாடவீதிகளில் நடப்பதால் பக்தர்களிடையே அதிக எதிர்பார்ப்பாக உள்ளது.

    • பிரதமர் மோடியை காண்பதற்காக ஆந்திரா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் திரளானோர் சாலை ஓரங்களில் திரண்டிருந்தனர்.
    • பவன் கல்யாண் சந்திப்பு மூலம் பா.ஜ.க., ஜனசேனா, தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    திருப்பதி:

    பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு வந்தார்.

    அவருக்கு ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கவர்னர் விஸ்வ பூஷன் அரிச்சந்தன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முக்கிய பிரமுகர்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

    இதையடுத்து விசாகப்பட்டினத்தில் உள்ள மாருதி சர்க்கிளில் இருந்து 15 கி.மீ தூரத்திற்கு ரோடு ஷோ நடந்தது. பிரதமர் மோடியை காண்பதற்காக ஆந்திரா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் திரளானோர் சாலை ஓரங்களில் திரண்டிருந்தனர். அவர்கள் பிரதமரை வாழ்த்தி கோஷமிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பிரதமர் மோடி காரில் இருந்தபடியே கை அசைத்தபடி சென்றார்.

    ரோடு ஷோ முடிந்தவுடன் ஆந்திரா பிரபல நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் பிரதமர் மோடியை சந்தித்து 5 பக்கங்கள் கொண்ட கடிதத்தை அளித்தார்.

    அந்த கடிதத்தில் ஆந்திராவில் நிலவி வரும் அவலங்கள் குறித்து குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த சந்திப்பு ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பவன் கல்யாண் சந்திப்பு மூலம் பா.ஜ.க., ஜனசேனா, தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து பிரதமர் மோடி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கினார்.

    இன்று காலை 8 மணிக்கு விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர பல்கலைக்கழக மைதானத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

    நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ரூ.15,300 கோடியில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.

    முதல்-அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தெலுங்கானா சென்றார்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி விசாகப்பட்டினத்தில் 8,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பெங்களூரு திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த பால் டேங்கர் லாரியின் பின்புறம் கார் பயங்கரமாக மோதியது.
    • சித்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லாரிக்கு அடியில் சிக்கிய காரை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நாகுல பலப்பாடு மண்டலம் முப்பல்ல கிராமத்தை சேர்ந்தவர் அசோக் பாபு (வயது 33). இவரது மனைவி மோனிகா (29), 3 மாத மகன் பிரபவ்.

    அசோக் பாபு பெங்களூரு ஹோடி பகுதியில் வீடு வாடகை எடுத்து தங்கியிருந்து அங்குள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை தனது மனைவி மகனுடன் காரில் சித்தூர் நோக்கி வந்து கொண்டு இருந்தார். பெங்களூரு திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சித்தூர் அடுத்த சீராளா கே பட்டினம் அருகே வந்தபோது சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த பால் டேங்கர் லாரியின் பின்புறம் கார் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் டேங்கர் லாரிக்குள் புகுந்தது.

    கார் நொறுங்கி அதிலிருந்த அசோக் பாபு அவரது மனைவி மோனிகா மகன் பிரபு ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து இறந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சித்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லாரிக்கு அடியில் சிக்கிய காரை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர்.

    மேலும் காரில் இருந்த 3 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் கணவன், மனைவி உள்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • டிசம்பர் மாதம் சாமி தரிசனம் செய்ய டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
    • டிசம்பர் 31-ந்தேதிக்கான ரூ.300 டிக்கெட்டுகள் வெளியிடவில்லை.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நேற்று ஆன்லைன் மூலம் ரூ.300 சிறப்பு தரிசனத்துக்கான டிக்கெட்டுகளை காலை 10 மணிக்கு வெளியிட்டனர்.

    ஏற்கெனவே இதுகுறித்த அறிவிப்புகள் வெளி வந்ததால், 10 மணிக்கு தயாராக இருந்த பக்தர்கள் ரூ.300 சிறப்பு தரிசனத்தை விரைந்து முன்பதிவு செய்துள்ளனர்.

    இதனால் 40 நிமிடங்களிலேயே டிசம்பர் மாதத்தில் உள்ள 31 நாட்களுக்கான அனைத்து சிறப்பு தரிசன டிக்கெட்டுகளும் தீர்ந்து போனது. இதனால் பல பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    தொடக்கம் முதலே முன்பதிவு செய்ய தொடங்கினாலும், அனைவரும் ஒரே சமயத்தில் முன்பதிவு செய்வதால் 'சர்வர்' பிரச்சினையால் பலருக்கு டிக்கெட் கிடைக்க வில்லை என மனவருத்தத்துடன் தெரிவித்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை மாதத்தையொட்டி நாளை திருமலையில் கோகார்பம் அணை அருகில் உள்ள பார்வேடு மண்டபத்தில் கார்த்திகை வனபோஜனம் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதையொட்டி நாளை காலை 8.30 மணிக்கு உற்சவர் ஏழுமலையான் கோவிலில் இருந்து சிறிய கஜ வாகனத்திலும், உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி பல்லக்கிலும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மேல தாளம், மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலில் இருந்து ஊர்வலமாக பார்வேடு மண்டபத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

    அங்கு பகல் 11 மணியிலிருந்து மதியம் 12 மணிக்குள் ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.மதியம் 1 மணியிலிருந்து 2 மணி வரை கார்த்திகை வனபோஜனம் நிகழ்ச்சி நடக்கிறது.

    திருப்பதியில் நேற்று 57, 104 பேர் தரிசனம் செய்தனர். 32 351 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.66 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.

    • திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன
    • லட்டு வாங்க சென்ற பக்தர் ஒருவர் லட்டின் எடையை சரிபார்த்தபோது 108, 93 கிராம் என்ற அளவில் மட்டுமே இருந்தது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 160 கிராம் முதல் 180 கிராம் எடையுள்ள சிறிய வகை லட்டுகள் ரூ.50க்கும், பெரிய வகை லட்டுகள் ரூ.200க்கும், வடை ஒன்று 100-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுகளில் முந்திரி, திராட்சை, கற்கண்டு உள்ளிட்டவைகளை சேர்த்து தயாரிப்பதால் விற்பனை செய்யப்படும் விலையை விட கூடுதல் செலவு ஆகிறது. இருப்பினும் பக்தர்களுக்கு குறைந்த விலையில் லட்டு வழங்கப்பட்டு வருவதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் லட்டு வாங்க சென்ற பக்தர் ஒருவர் லட்டின் எடையை சரிபார்த்த போது 108, 93 கிராம் என்ற அளவில் மட்டுமே இருந்தது. இதனால் லட்டு வாங்க சென்ற பக்தர்களுக்கும் லட்டு கவுண்டரில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதனை வீடியோவாக செல்போனில் பதிவு செய்த பக்தர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

    லட்டு கவுண்டர்களில் வைக்கப்பட்டுள்ள எலக்ட்ரானிக் எடை மெஷின்கள் மைனஸ் ஜீரோவில் உள்ளது. இதனால் எடை குறைவாக காண்பிக்கிறது. அங்குள்ள எலக்ட்ரானிக் எடை மெஷின் சரிவர வேலை செய்யவில்லை. ஆனால் நாங்கள் வழங்கப்படும் லட்டு 160 முதல் 180 கிராம் வரை உள்ளது என தெரிவித்தனர்.

    இதற்கு தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 61,306 பேர் தரிசனம் செய்தனர். 30,133 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.46 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
    • முன்பதிவு செய்த நாளில் ஏழுமலையானை சுலபமாக தரிசனம் செய்யலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ரூ.300 டிக்கெட் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

    எனவே பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை சுலபமாக தரிசனம் செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
    • விபத்து ஏற்பட்டபோது ஆலைக்குள் சுமார் 10 பேர் இருந்ததாக போலீஸ் அதிகாரி தகவல்

    அமராவதி:

    ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கடியாட்டா என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் இன்று இரவு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அப்போது குண்டுவெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டது. இந்த சத்தம் வெகு தூரம் வரை கேட்டதால், அருகில் உள்ள கிராம மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

    இந்த வெடிவிபத்து பற்றி தகவல் அறித்த தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். சிலர் காயமடைந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

    பட்டாசு விபத்து ஏற்பட்டபோது ஆலைக்குள் சுமார் 10 பேர் இருந்ததாகவும், எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

    ×