என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • தெலுங்கானா அமைச்சராக உள்ள மல்லா ரெட்டி வீடு, கல்வி நிறுவனங்கள் உட்பட 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
    • தெலுங்கானாவில் உள்ள போலீசார் ஆளுங்கட்சிக்கு கைப்பாவையாக செயல்பட்டு வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும், எதிர்கட்சியாக உள்ள பா.ஜ.க.வுக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. முதலமைச்சர் சந்திர சேகர ராவ் பா.ஜ.க.வையும், அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து பேசி வருகிறார்.

    இந்த நிலையில் டி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வுக்கு இழுப்பதற்காக தலா ரூ.100 கோடிக்கு பேரம் பேசியதாக கூறி 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் பா.ஜ.க.வை சேர்ந்த தருமபுரி அரவிந்த் எம்.பி முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதா காங்கிரஸில் சேர உள்ளதாக கூறிய சம்பவத்தில் டி.ஆர்.எஸ். கட்சி நிர்வாகிகள் அவரது வீட்டின் மீது கற்களை வீசி சரமாரியாக தாக்கினர்.

    இதில் தர்மபுரி அரவிந்தன் வீட்டு கதவு ஜன்னல்கள் உடைந்து சேதம் அடைந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தாக்குதல் சம்பவத்தை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததாக தர்மபுரி அரவிந்த் எம்.பி குற்றச்சாட்டு எழுப்பினார். இந்த நிலையில் தெலுங்கானா அமைச்சராக உள்ள மல்லா ரெட்டி வீடு, கல்வி நிறுவனங்கள் உட்பட 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை 5 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை அவசர அவசரமாக விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி செல்லும் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.

    தெலுங்கானாவில் உள்ள போலீசார் ஆளுங்கட்சிக்கு கைப்பாவையாக செயல்பட்டு வருகின்றனர். எனவே தெலுங்கானா அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்க சென்று உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனக்கு சொந்தமான நிலத்தில் சமாதி கட்டுவதற்கு குழி ஒன்றை தோண்டி அதன் அருகில், அவர் இறந்து விட்டது போன்ற பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார்.
    • நவீன யுகத்திலும் இதுபோன்ற மூடநம்பிக்கை உள்ளதா என்று அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தின் கண்ணவரம் அருகே கொல்லனபள்ளி சர்ச்சில் பாதிரியார் ஒருவர் திடீரென்று, நான் 10 நாளில் இறந்து விடுவேன், பின்னர் 3வது நாளில் மீண்டும் உயிர்த்தெழுவேன் என்று பேசத் தொடங்கியுள்ளார்.

    அத்துடன், தனக்கு சொந்தமான நிலத்தில் சமாதி கட்டுவதற்கு குழி ஒன்றை தோண்டி அதன் அருகில், அவர் இறந்து விட்டது போன்ற பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர், செய்வதறியாது தவிக்கின்றனர்.

    ஆனாலும் பாதிரியாரோ "இன்னும் 10 நாளில் இறந்து, அடுத்த 3வது நாளில் நான் உயிர்த்தெழுவேன்" என்று விடாப்பிடியாக கூறி வருகிறார்.

    இந்த நவீன யுகத்திலும் இதுபோன்ற மூடநம்பிக்கை உள்ளதா என்று அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

    • திருப்பதியில் பிறந்து வளர்ந்து கலைத்துறையில் சிறந்து விளங்கியதால், இன்று எனக்கு கலைத்துறையில் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
    • கலைத்துறைக்கு சேவை செய்யும் பாக்கியமும் கிடைத்துள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டியின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதியில் உள்ள மகதி கலையரங்கில் 3 நாட்கள் கலாசார நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி நாராயணசாமி பங்கேற்று குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஆந்திர மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா பங்கேற்றார். அவர் பேசுகையில்:-

    முதல்-அமைச்சர் ஒய்.எஸ். ஜெகன்மோகன்ரெட்டி பிறந்தநாளையொட்டி பல்வேறு கலைப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

    நான் திருப்பதியில் பிறந்து வளர்ந்து கலைத் துறையில் சிறந்து விளங்கியதால், இன்று எனக்கு கலைத்துறையில் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. கலைத்துறைக்கு சேவை செய்யும் பாக்கியமும் கிடைத்துள்ளது.

    அது மட்டுமின்றி ஆந்திர அரசியலிலும் சிறப்பாக செயல்பட்டுவருகிறேன். அமைச்சராக உயர்ந்து மக்களுக்கு சேவை செய்து வருகிறேன், என்றார்.

    நிகழ்ச்சியில் பரதநாட்டியம் குச்சிப்புடி கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    விழாவில் கலந்து கொண்ட தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமைச்சர் ரோஜாவும் கலைக்குழுவினருடன் நடனமாடி அசத்தினார்.

    இதனைக் கண்ட கட்சி தொண்டர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

    • நான்கு மாடவீதிகளில் பிரம்மோற்சவ விழா வாகன சேவை நடக்கிறது.
    • கொடிமர பீடத்தில் விஷ்வக்சேனாராதனம் மற்றும் புண்யாஹவச்சனம் நடந்தது.

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாகத் தொடங்கியது. முதல் நாளான நேற்று காலை 9.45 மணிக்கு மிதுன லக்னத்தில் கங்கணப்பட்டர் மணிகண்ட பட்டர் தலைமையில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, பிரதான அர்ச்சகர்கள் தங்கக் கொடி மரத்தில் பிரம்மோற்சவ விழா கொடியை ஏற்றினர்.

    முன்னதாக கோவிலில் காலை மூலவர் பத்மாவதி தாயாருக்கு சுப்ரபாதம் நடந்தது. அதே சமயம் யாகசாலையில் சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது. அதையொட்டி ரக் ஷாபந்தனம், பிராணப்பிரதிஷ்டை, ஹோமம், பூர்ணாஹுதி ஆகியவை நடந்தது. கொடிமர பீடத்தில் விஷ்வக்சேனாராதனம் மற்றும் புண்யாஹவச்சனம் நடந்தது.

    நெய், பால், தயிர், தேன், மஞ்சள்நீர் ஆகியவற்றை பாத்திரங்களில் வைத்து, பரவாசுதேவர், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசா, பத்மநாபன், தாமோதரன் ஆகிய தெய்வங்கள் ஆவாஹனம் செய்யப்பட்டது. சதுர் வேதங்கள் பாராயணம் நடந்தது. தங்கக்கொடிமரத்துக்கு அபிஷேகம் செய்த பின் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த உற்சவர் பத்மாவதி தாயார் முன்னிலையில் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் அழைப்பு விடுக்கும் வகையில் கொடியேற்றப்பட்டது.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர், கொரோனா தொற்று பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலின் நான்கு மாடவீதிகளில் பிரம்மோற்சவ விழா வாகன சேவை நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய வரும் திரளான பக்தர்களுக்கு விரிவான வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் காலை, இரவு வேளையில் நடக்கும் வாகனச் சேவையில் பங்கேற்று தாயாரை தரிசனம் செய்யலாம், என்றார்.

    • தொழிற்சாலையில் கட்டுமான பணிகளுக்கு தேவையான இரும்பு கம்பிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
    • தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் சார்பில் விசாகா இரும்பு உருக்காலை உள்ளது.

    இந்த தொழிற்சாலையில் கட்டுமான பணிகளுக்கு தேவையான இரும்பு கம்பிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலையை தனியாருக்கு விற்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

    இதனைக் கண்டித்து தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இரும்பு உருக்குவதற்காக மூலப்பொருட்களை கொண்டு செல்லும் மத்திய பிளான்ட் ஒன்றை மத்திய அரசு ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு கொடுத்துள்ளது. நேற்று இந்தப் பகுதியில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர்.

    அப்போது மூலப் பொருட்களை கொண்டு செல்லும் 37 ஏ கன்வேயர் பெல்ட்டில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பற்றியது. இதையடுத்து ஓ எஸ்-1 கன்வேயர் பெல்டுக்கும் தீ பரவியது. இதனைக் கண்ட தொழிலாளர்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேறினார்.

    தீ விபத்து குறித்து தொழிற்சாலைக்குள் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் 37 ஏ கன்வேயர் பெல்ட் அறுந்து 80 மீட்டர் தூரத்திற்கும், ஓ.எஸ்-1 கன்வேயர் பெல்ட் 40 மீட்டர் தூரத்திற்கும் பறந்தது. அந்தப் பகுதியில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

    இது குறித்து தொழிற்சாலை அதிகாரிகள் கூறியதாவது:-

    மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் எவ்வளவு சேதம் அடைந்தது என்பது குறித்து ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும். இது ஒரு சிறிய தீ விபத்து தான்.

    இந்த தீ விபத்தில் யாருக்கும் காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை என தெரிவித்தனர்.

    • திருப்பதியில் கார்த்திகை தீப மகா உற்சவம்: 10 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தீபம் ஏற்றி வழிபாடு
    • அனைவருக்கும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் விளக்குகள் வழங்கப்பட்டன.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கார்த்திகை மாத அமாவாசையையொட்டி நேற்று இரவு மகா கார்த்திகை தீப உற்சவம் நடந்தது.

    திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் தர்மாரெட்டி தலைமை தாங்கினார். தீப உற்சவத்தையொட்டி ஸ்ரீ மகாலட்சுமி, ஏழுமலையான் சமேத ஸ்ரீதேவி பூதேவி, உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு மலர் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது.

    திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலர் சதா பார்கவி, வீர பிரம்மம் மற்றும் திருப்பதி மேயர் திரிஷா, கமிஷனர் அனுபமா அஞ்சலி, தேவஸ்தான ஊழியர்கள், மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தீபத் திருவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் விளக்குகள் வழங்கப்பட்டன. வேத பாடசாலையை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு வேத மந்திரங்களை ஓதினர்.

    தேவஸ்தான பிரதான அர்ச்சகர்கள் வேணுகோபால தீச்சிதர், கிருஷ்ண சேஷாசல தீச்சிதர்கள் கலந்து கொண்டு ஆகம விதிப்படி சாமிக்கு நட்சத்திர ஆர்த்தி கும்ப ஆர்த்தி மற்றும் தீபாரதனை செய்தனர். பூஜையில் கலந்து கொண்ட 10 ஆயிரம் பேரும் ஒரே நேரத்தில் சாமிக்கு தீபம் காட்டி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து எஸ்.வி இசை கல்லூரியை சேர்ந்த மாணவிகள் பக்தி பாடல்களுக்கு ஏற்றவாறு நடனமாடி பக்தர்களை பரவசமூட்டினர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 60,861 பேர் தரிசனம் செய்தனர். 28 519 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.53 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரெயில் வந்து கொண்டு இருந்தபோது ஜூலி குமாரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜூலி குமாரி மற்றும் குழந்தையை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    திருப்பதி:

    ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஜூலி குமாரி. நிறைமாத கர்ப்பிணியான இவர் ஜார்க்கண்ட்டில் இருந்து தன்பாத் அலுப்பி எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோவைக்கு வந்து கொண்டு இருந்தார்.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரெயில் வந்து கொண்டு இருந்தபோது ஜூலி குமாரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

    அலறி துடித்த ஜூலி குமாரி அங்கிருந்த கழிவறைக்கு சென்றார். ஜூலி குமாரி பிரசவ வலியால் துடிப்பதை கண்ட சக பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டது.

    இருப்பினும் கழிவறைக்குச் சென்ற ஜூலி குமாரிக்கு அங்கேயே ஆண் குழந்தை பிறந்தது.

    இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜூலி குமாரி மற்றும் குழந்தையை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு தாயும், குழந்தையும் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • அந்தந்தக் கோவில்களில் பாரம்பரிய பூஜை நிகழ்ச்சிகளை நடத்தலாம்.
    • பக்தர்களின் கூட்டத்துக்கு ஏற்றவாறு மற்ற ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலின் துணைக் கோவில்களான திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதி கோவிந்தராஜசாமி, கோதண்டராமசாமி கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில், அப்பலாயகுண்டா பிரசன்னவெங்கடேஸ்வரர் கோவில், கார்வேட்டிநகரம் வேணுகோபாலசாமி கோவில், நாகலாபுரம் வேதநாராயணசாமி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் வரும் ஜனவரி மாதம் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.

    அதற்கான ஏற்பாடுகளை செய்வது குறித்து திருமலை-திருமலை தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.

    கூட்டத்தில் இணை அதிகாரி வீரபிரம்மன் பேசியதாவது:-

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அந்தந்தக் கோவில்களில் பக்தர்கள் வழிபட அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஆகம பண்டிதர்கள் கூறி உள்ள நேரத்தை சரியாக பின்பற்ற வேண்டும். கோவில்களை மலர்களாலும், மின் விளக்குகளாலும் அழகாக அலங்கரிக்க வேண்டும்.

    பக்தர்களின் கூட்டத்துக்கு ஏற்றவாறு மற்ற ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கோவில்களில் தூய்மை மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர், தங்குமிடம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதற்காக கோவில் அதிகாரிகள் உள்ளூர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்து கொள்ளலாம்.

    அந்தந்தக் கோவில்களில் பாரம்பரிய பூஜை நிகழ்ச்சிகளை நடத்தலாம். பக்தர்களின் வசதிக்காக உதவி மையங்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்காக உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பக்தர்களுக்கு சேவை வழங்க மருத்துவ முகாம்களை அமைத்துக் கொள்ளலாம்.

    சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து அங்குள்ள கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ளலாம். பக்தர்களை கவரும் வகையில் ஆன்மிக மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கோட்டைய்யா தினமும் குடித்துவிட்டு வந்து சுவாதியிடம் தகராறில் ஈடுபட்டார்.
    • மது போதையில் இருந்த கோட்டைய்யா சுவாதி நடத்தி வரும் பியூட்டி பார்லருக்கு சென்றார்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் தெனாலி மாவட்டம், நாசூர் பேட்டையை சேர்ந்தவர் வெங்கட கோட்டைய்யா.

    இவர் சொந்தமாக லாரிகள் வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி சுவாதி (வயது 35). சுவாதி தெனாலி, காந்திநகர் பகுதியில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கோட்டைய்யாவுக்கு, சுவாதியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் பியூட்டி பார்லரை மூடி விட்டு வீட்டிலேயே இருக்க வேண்டும் என கோட்டைய்யா சுவாதிக்கு கட்டளையிட்டார்.

    ஆனால் கணவரின் கட்டளையை மீறி சுவாதி தொடர்ந்து பியூட்டி பார்லரை நடத்தி வந்தார். இதனால் கோட்டைய்யா தினமும் குடித்துவிட்டு வந்து சுவாதியிடம் தகராறில் ஈடுபட்டார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் மது போதையில் இருந்த கோட்டைய்யா சுவாதி நடத்தி வரும் பியூட்டி பார்லருக்கு சென்றார். அப்போது பியூட்டி பார்லரில் இருந்த 2 பெண்களை வெளியே அனுப்பிவிட்டு கதவை உள் பக்கமாக தாழிட்டுக் கொண்டார்.

    பின்னர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சுவாதியை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த சுவாதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து தான் கொண்டு வந்த பூமாலையை மனைவியின் உடலில் மீது வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் மனைவியை கொலை செய்த கத்தியுடன் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக ஆனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
    • ஆந்திர மாநிலம் கூடூர் ரெயில் நிலையத்தில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அகமதாபாத்தில் இருந்து சென்னை வரக்கூடிய நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு புறப்பட்டு வந்தது. ஆந்திர மாநிலம் கூடூர் ரெயில் நிலையம் அருகே இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. ரெயிலில் சமையலறை உள்ள பெட்டியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    அதிக தீப்பற்றி எரிந்ததால் அந்த பெட்டியில் இருந்து புகைமண்டலம் எழுந்தது. அதன் அருகே உள்ள மற்ற பெட்டிகளுக்கும் புகை பரவியது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சில பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு பயணிகள் தகவல் தெரிவித்தனர். தண்டவாள கண்காணிப்பில் ஈடுபட்ட ஊழியர்கள் தீ விபத்தை கண்டு அலாரம் எழுப்பினர். அதற்குள் ரெயில் கூடூர் ரெயில் நிலையத்திற்கு வந்தது.

    ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. புகை வந்ததால் மற்ற பெட்டியில் இருந்த பயணிகள் கீழே பதறியடித்தபடி இறங்கினர். ரெயில்வே ஊழியர்கள் தீயணைப்பான்கள் மற்றும் தண்ணீர் கொண்டு ரெயில் பெட்டியில் பற்றி எரிந்த தீயை அணைக்க போராடினர்.

    புகை வெளியேற 3 ஜன்னல்கள் உடைக்கப்பட்டன. ஏ.சி. சப்ளையும் துண்டிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஹீட்டர் ஒன்று அணைக்கப்படாமல் எரிந்ததால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

    இதனால் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் 22 நிமிடங்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

    தீ விபத்து ஏற்பட்ட சமையலறை இருந்த பெட்டி (பேண்ட்ரி கார்) பிரிக்கப்பட்டது. அதற்கு பிறகு ரெயில் சென்னை புறப்பட்டது. இந்த சம்பவத்தால் கூடூர் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆந்திராவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • அனைத்து அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் விறுவிறுப்பாக தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கி உள்ளன.

    தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் ஜனசேனா கட்சித் தலைவர்கள் பொதுக்கூட்டம் நடைபயணம், ரோடு ஷோ நடத்தி வருகின்றனர்.

    ஆந்திராவில் எதிர்க்கட்சியாக உள்ள சந்திரபாபு நாயுடு வரும் தேர்தலில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக மாநிலம் முழுவதும் ரோடு ஷோ நடத்தி வருகிறார். இதேபோல், அவரது மகன் நாரா லோகேஷ் வரும் ஜனவரி மாதம் முதல் ஆந்திரா முழுவதும் 400 நாட்கள் நடை பயணம் செல்ல பயணம் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆந்திர மாநிலம் கர்னூலில் சந்திரபாபு நாயுடு திறந்தவேனில் ரோடு ஷோ நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:

    ஆந்திராவில் ஜெகன்மோகன் ஆட்சியில் அநியாயங்கள் பெருகிவிட்டன. மளிகை பொருட்கள், காய்கறிகள், பெட்ரோல் டீசல் விலை உயர்வு விண்ணைத் தொட்டுக் கொண்டுள்ளது. சாலைகள் குண்டும் குழியுமாக சீரமைக்கப்படாமல் உள்ளது. ரோடுகளை கூட சீரமைக்க முடியாத இவரால் எப்படி 3 தலைநகரங்களை அமைக்க முடியும்.

    இவரது ஆட்சியில் ஏழைகள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். என்னுடைய 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் என்னை அவமதிக்கவோ அல்லது அவமதிக்க யாரும் முயற்சி செய்யவில்லை. ஆனால் என்னையும் எனது மனைவி புவனேஸ்வரியும் ஜெகன்மோகன் ரெட்டி அவமதித்து பேசினார்.

    எனக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஒரே வயது. ஜெகன்மோகன் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் அவமதித்துவிட்டார்.

    வரும் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைக்க அதிகாரம் கொடுத்தால் மட்டுமே சட்டசபைக்குள் வருவேன்.இல்லை என்றால் இதுவே எனது கடைசி தேர்தலாக இருக்கும். நான் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவிலேயே ஆந்திராவை முதல் மாநிலமாக மாற்றிக் காட்டுவேன்.

    தெலுங்கு தேசம் ஆட்சி அமைத்த பிறகு ஜெகன்மோகன் செய்த பல்வேறு குற்றங்களுக்காக சிறை செல்வது நிச்சயம். எனக்கு நேர்ந்த கொடுமைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால் மீண்டும் தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வர வேண்டும் என தெரிவித்தார். 

    • விளைநிலத்திற்குள் புகுந்த யானை ஒன்று அங்குள்ள விவசாய தரை கிணற்றில் தவறி விழுந்தது.
    • யானையால் வெளியே வரமுடியாமல் தண்ணீரில் தத்தளித்தப்படி பிளிறியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம் மொகிலி ஊராட்சிக்குட்பட்ட காண்டப்பள்ளியில் உள்ள விவசாய நிலங்களில் நள்ளிரவில் யானை கூட்டம் புகுந்து அங்குள்ள விவசாய பயிர்களை நாசம் செய்து வந்தது.

    நேற்று இரவு விளைநிலத்திற்குள் புகுந்த யானை ஒன்று அங்குள்ள விவசாய தரை கிணற்றில் தவறி விழுந்தது.

    யானையால் வெளியே வரமுடியாமல் தண்ணீரில் தத்தளித்தப்படி பிளிறியது. யானையின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கு சென்ற பொதுமக்கள் யானை கிணற்றுக்குள் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள், தாசில்தார் மற்றும் கிராம மக்கள் விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் மூலம் கிணற்றிலிருந்து யானை வெளியேறி வருவதற்காக நிலத்தை வெட்டி சமன் செய்தனர்.

    இதையடுத்து யானை கிணற்றிலிருந்து மேலே வந்தது. யானையை மீட்ட வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று அதனை விட்டனர்.

    ×